Skip to main content

அடியேன் ராமானுஜ தாஸன் !

திருநகரிக்கு வந்த அன்று துவாதசி. திருமங்கை அழகனை சேவிக்க சென்றேன். அர்ச்சகர் ஸ்வாமி வர கொஞ்சம் நேரம் ஆகும் என்றார்கள். கோயிலைச் சுற்றி வந்தேன்.

கோயில் உள்ள கிணற்றில் ஒரு வயதான பெண்மணி தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தார்.
தண்ணீரை குடித்துப் பார்க்கலாம் என்று
“பாட்டி குடிக்க கொஞ்சம் தண்ணீர் ” என்றேன்.
என்னைப் பார்த்த பாட்டி பத்து அடி ஒதுங்கி “சாமி எவ்வளவு வேணுமுனாலும் எடுத்துக்கோங்க” என்றாள்.

தண்ணீர் கல்கண்டு. இது மாதிரி தண்ணீர் குடித்ததே இல்லை. விசாரித்ததில் இந்தத் தண்ணீர் தான் மடப்பள்ளியிலும், சன்னதி தெரு முழுக்க தளிகைக்கு உபயோகிப்பார்கள் என்று தெரிந்துக்கொண்டேன்.
அடுத்த முறை சென்றால் நிச்சயம் பருகிவிடுங்கள்.

“பாட்டி ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன்” என்றவுடன்
பாட்டி தன் இரு கையால் முகத்தை வெட்கத்துடன் மூடிக்கொண்டாள்.

பிறகு சன்னதிக்கு சென்ற போது துளசி கொடுத்தார்கள்.
பாட்டி கொடுத்த தண்ணீரும் பெருமாள் அருளிய துளசியும் ’துவாதசி பாராயணம்’ ஆயிற்று.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை பெற்றார்கள் என்றும், எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் பெரும் பேற்றை அடைந்தார்கள் என்று கூறுவதுண்டு. ஆனால் உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதியாக நம்பினார்!

ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்திலும் "மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்று அமுதனார் தெரிவிக்கிறார். முக்குறும்பு என்பது கல்வி செருக்கு ( அதிகம் படித்தவன் என்ற எண்ணம் ); செல்வ செருக்கு ( அதிக பணம் இருக்கிறது என்ற எண்ணம் ); குலச் செருக்கு ( உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம் ).

இதில் கடைசியில் குலச் செருக்கு அடியேன் உட்பட பலரிடமும் இருக்கிறது. சிறந்த பாகவதர்களை கோயிலில் பார்க்கும் போது அவர் உடம்பில் பூணூல் இருக்கிறதா என்று நம்மை அறியாமல் பார்க்கிறோம். இல்லை என்றால் நம்மை விடத் சற்று தாழ்ந்தவன் என்று நம்மை அறியாமல் நினைத்துவிடுகிறோம்.

கோயிலில் அந்தப் பாட்டி என்னுடைய பூணூல், திருமண்ணை பார்த்து மரியாதை தந்தாள். இருவருக்கும் பார்வை ஒன்று தான் பார்க்கும் விதம் தான் வேறுபடுகிறது!

அடுத்த முறை ”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்ற பகுதியை இரண்டு முறை சேவிக்கும் போது ஒரு முறையாவது பாட்டியை நினைத்துக்கொண்டு குலசெருக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் ”அடியேன் ராமானுஜ தாஸன்” என்று சொல்லுவதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். 

Comments

  1. நெகிழ வைத்த பதிவு. எழுதியிருப்பது உண்மை. 'நாங்க மடம். நீங்க ஆண்டவா' என்ற பேதப் பேச்சுக்களும் நிறைய இருக்கின்றன. முதல் முதலில் பௌண்டரீகபுரம் ஆண்டவனை சேவிக்கச் செல்லும்போதே', 'போவது முறையோ' என்று மனதில் தோன்றியது. இதன் காரணம் சிறு வயதிலிருந்தே கேட்பதும் காண்பதும்தான்.

    'இன்புற்ற சீலத்து ராமானுசா... உன் தொண்டருக்கே அன்புற்றிருக்கும்படி என்னை...'

    இது வாய்ப்பதற்கே பல பிறப்பு செல்லும்போல் தோன்றுகிறது. சமயப் பெரியவர்கள் சிறு வயதிலிருந்தே இதனைத் தங்கள் குழந்தைகளிடம் விதைக்கவேண்டும்.

    உங்கள் எழுத்துக்களை ரசிக்கிறேன்.

    ReplyDelete
  2. Good article. A person of your caliber need to write more of this kind ( socio -spiritual base articles ) in the future. This is my humble request only.

    ReplyDelete

Post a Comment