Skip to main content

கேமரா கனவுகள்

அப்பாவின் திருமண ஆல்பத்தை நான் பார்த்ததில்லை. காசி யாத்திரை மை கன்னத்துடன் எப்படி இருந்திருப்பார் என்று யோசித்ததுண்டு.

“கல்யாணத்தின்போது ஏதோ சச்சரவு. அதனால் புகைப்படம் ஒன்று கூடக் கிடையாது” என்றார். ஒரே ஒரு புகைப்படம் பீரோவில் இருந்தது. அதில் அப்பாவின் முதுகு மட்டும் தெரிந்தது. அம்மாவை முழுசாக யாரோ மறைத்துக்கொண்டு இருந்தார்கள்.

இதனாலோ என்னவோ, அப்பாவிற்கு கேமராவில் படம் எடுப்பதும், போட்டோவிற்கு போஸ் கொடுப்பதும் மிகவும் விருப்பம். எங்களைத் தன் கேமராவில் படங்களாக எடுத்துத் தள்ளினார். என்னுடைய சிறுவயதுப் படங்கள் கருப்பு வெள்ளையில் எல்லாம் கொள்ளை அழகு. பொதுவாகக் குழந்தைகள் அழகாக இருக்கும்.

கடந்த நாற்பது வருடங்களாகப் பல கேமராக்கள் என்னுடன் பயணம் செய்திருக்கின்றன. நான் முதன்முதலில் உபயோகித்த கேமராவை இன்று செல்ஃபி எடுக்கும் கேமராவுடன் ஒப்பிட்டால் அது சரியான  ‘டப்பா கேமரா’ என்றுதான் சொல்ல வேண்டும். நிஜமாகவே ‘டப்பா கேமரா’தான்.

பள்ளியில் அறிவியல் பாடம் படிக்கும்போது ஊசித்துளைக் கேமரா (Pinhole Camera) செய்து, அதில் தலைகீழாக மரங்களைப் பார்த்திருக்கிறேன். என் அப்பாவுடன் இருந்த கேமராவும் அதேபோலத்தான் இருக்கும். அதன் பெயர் ‘Brownie Hawkeye Flash Model Camera’. 1950ல் கோடாக் நிறுவனம் இந்த கேமராவை அறிமுகம் செய்தது. விலை அதிகம் என்று அப்பா ஃபிளாஷ் வாங்கவில்லை. ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில் பிளாஷ் அடித்து அந்த பல்பிலிருந்து புகை வந்த போது பிளாஷ் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்தேன்.

அந்த கேமராவில் படம் எடுக்க நிறைய பிரயத்தனம் செய்ய வேண்டும். ஃபிலிம் சுருளைப் பொருத்த திருச்சி மேலபுலிவார் சாலையில் (West Boulevard Road என்பதின் தமிழாக்கமே மேலபுலிவார் சாலை!) இருக்கும்

OR
WO

என்று பெரிதாக எழுதியிருக்கும் கடையில் கொடுத்தால், இருட்டு அறையில் ஃபிலிமை பொருத்தித் தருவார்கள்.

கேமரா பின்புறம் சின்ன துவாரத்தில் சிகப்பாக ‘1’ என்று முதல் படம் எடுக்கத் தயாராகும். மொத்தமே 12 படம்தான் எடுக்க முடியும். ஒவ்வொரு படமும் யோசித்து எடுக்கவேண்டும்.

ஒரு படம் எடுத்த பின் ஸ்லோ மோஷனில் மெதுவாக கேமரா சைடில் இருக்கும் சக்கரத்தை பின்புறம் ‘2’ என்ற எண் வரும் வரை சுற்ற வேண்டும். அதிகமாகச் சுற்றினால் ‘3’ வந்துவிடும். இது ஒன்வே டிராபிக் மாதிரி. மீண்டும் ‘2’ கொண்டு வர முடியாது.

அது மட்டும் இல்லை, படம் எடுக்க நல்ல வெயில் இருக்க வேண்டும். நல்ல வெயில் என்றால் காலை அல்லது மாலை வெயில். உச்சி வெயில் எல்லாம் சரிப்படாது.

“வாடா வெயில் போய்விடப் போகிறது” என்று எங்களை நிற்கவைத்து பின்னாடி பெட்ஷீட் கொண்டு பேக்ரவுண்ட் அமைத்து, கொஞ்சம் ரைட்... கொஞ்சம் லெப்ட்” என்று கார் பார்க்கிங் செய்வது போல அப்பா கேமராவை வயிற்றுக்குக் கீழே வைத்து அதன் தலைப்பகுதியில் இருக்கும் ‘சோடா புட்டி’ கண்ணாடியில் நாங்கள் முழுசாகத் தெரிந்த பின்னர், “கண்ணை மூடாதே... 1...2...3” என்று, மெதுவடையை மெதுவாக எண்ணெய்யில் போட்டுக் கையை எடுப்பது மாதிரி, கிளிக் செய்து மெதுவாகக் கையை எடுப்பார்.

படம் எடுத்த பின் கேமரா மேலபுலிவார் சாலையில் இருக்கும் கடையில் மீண்டும் டார்க் ரூம் செல்லும். பிரசவ வார்ட் முன் காத்திருப்பது போலக் காத்திருக்க வேண்டும். வெளியே வந்து “ஒரு வாரம் ஆகும்” என்பார்கள்.

ஒரு வாரம் சஸ்பென்ஸுக்குப் பின் 12 படத்தில் ஐந்து அல்லது ஆறு படங்கள் நன்றாக வந்திருக்கும். கூடவே நெகட்டிவ் என்ற ஒரு வஸ்துவை கவரில் கொடுப்பார். (பிலிம் சுற்றப்பட்ட குழலை நான் வாங்கிக்கொண்டு வந்து பட்டம் விடும் நூல் சுற்ற உபயோகித்தேன் என்பது கொசுறு தகவல்.)

“ஏன் மற்ற படங்கள் சரியாக வரலை? இத்தனக்கும் வெயில் கூட நல்லாதான் இருந்தது” என்ற கேள்விக்கு “ஓவர் எக்ஸ்போஸ் ரொம்ப வெயில்” என்பது பதிலாக இருக்கும்.

இந்த கேமராவை வைத்துக்கொண்டு நிறைய விளையாடியிருக்கிறேன். படம் எப்படி டெவலப் செய்கிறார்கள் என்று பார்க்க வாயில் நுழையாத hydroquinone போன்ற சில ரசாயன கலவைகளை வாங்கி, மாடி அறையை இருட்டாக்கி, சிகப்பு பல்ப் ஒளிர, கொடி ஒன்றில் கிளிப்பில் சில படங்கள் தொங்க, தமிழ் சினிமாவில் ரகசியமாக விஜயகாந்த் டெவலப் செய்வது போலச் செய்து பார்த்திருக்கிறேன். பல முறை முயன்றும் எனக்குச் சரியாக வந்ததில்லை. ஒரே ஒருமுறை கலவையில் பிலிம் கலங்கலாக, பிறகு அதிலிருந்து படம் வந்ததைப் பார்த்து ஏதோ பெரிய சாதனையாக எண்ணினேன். படிப்பு சரியாக வரவில்லை என்றால் கேமரா மேன் ஆகிவிடலாம். பலருக்கு பிலிம் பிரிண்ட் போட்டுச் சம்பாதித்துவிடலாம் என்ற திட்டம் கூட இருந்தது.

பள்ளியில் மார்ச் மாதம் வருடாந்திரத் தேர்வுக்கு முன்பு முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பிளேட் எடுத்துவிட்டு திரும்பப் போட்டுவிடும் பெரிய கேமராக்களிலும், டெல்லி அப்பளம் விற்கும் கண்காட்சிகளில் தாஜ் மஹால் ஸ்கிரீன் முன்பும் படம் எடுத்துக்கொண்டவை எல்லாம் எப்படி அழகாக வருகின்றன என்று யோசித்திருக்கிறேன்.

சில வருடங்களுக்குப் பிறகு 1985ல் ‘Hot shot 110s' என்று பென்சில் பாக்ஸ் சைசில் கேமரா புரட்சி நடந்தது. 350 ரூபாய்க்கு வாங்கினேன். பின்புறம் திறந்து காட்ரிட்ஜ் உருவில் இருக்கும் பிலிமை நாமே பொருத்தலாம். முக்கியமான விஷயம் கலர் படம்!

படம் எடுத்தபின்தான் அடுத்த படத்துக்கு ‘சர சர’ என்று நகர்த்தலாம். இந்த கேமரா வந்த சமயம் சக்கூரா, கோனிக்கா (சக்கூரா, கோனிக்கா என்று வாய்விட்டு மூன்று நான்கு மாத்திரைகளாக இழுத்து சத்தமாகச் சொன்னால் பழைய விளம்பரம் ஞாபகத்துக்கு வரலாம்), கோடாக், ஃபூஜி என்று பல விதமான பிலிம் சுருள்கள் வந்தன. இந்து, அக்ஃபா போன்றவை காணாமல் போயின. பல இடங்களில் கலர் லேப் முளைக்கத் தொடங்கியது. லாட்டரிச் சீட்டுக் கடையில் ரஜினி படம் மாதிரி கலர் லேப்களில் வானவில் படங்களுடன் கட்சி தந்தது.

ஹாட் ஸ்பாட் கேமரா கொண்டு படம் எடுப்பது மிகச் சுலபமாக இருந்தது. படம் எடுத்த பின் ஜங்ஷனில் இருக்கும் சித்ரா கலர் லேப்பில் இருந்த பெரிய வெள்ளை ஜெராக்ஸ் மிஷின் போன்ற ஒன்று, சில மணிநேரத்தில் சொரசொரப்பான மேட் அல்லது பளபளக்கும் கிளாஸி ஃபினிஷ் என்று படங்களைத் துப்பியது. இலவசமாக பிளாஸ்டிக் ஆல்பத்துடன் படங்கள் எல்லாம் சுடச்சுட ஜில்லென்று இருக்கும்.

நிலாவைக் கையில் பிடிப்பது போல, கைமேல் நிற்பது போல என்று பல டிரிக் ஷாட் எடுத்திருக்கிறேன். இந்த கேமராவிலும் சில பிரச்சினைகள் இருந்தன. படம் நன்றாக இருக்கும், ஆனால் ஓரத்தில் இருந்தவர் அதில் இருக்க மாட்டார் . நடுவில் இருந்தவருக்குத் தலை இருக்காது. ஃபோகல் லென்த் பற்றி எதுவும் தெரியாத அந்தக் காலத்தில் எடுத்த பூ, பூச்சி எல்லாம் குத்துமதிப்பாக விழுந்தன.

சில வருடங்களில் இந்த காமரா போய் 35mm கேமரா வந்தது. வெளிநாடு சென்று வந்த என் உறவினர் ஒருவர் எங்களுக்கு வாங்கி வந்தார். ‘மேட் இன் ஜப்பான்’ - யாஷிக்கா ஆட்டோ ஃபோகஸ் கேமரா.

கேமரா முகப்பில் சிவனுக்கு இருப்பது போல மூன்று கண்களுடன் சென்சார் சமாசாரமும். உள்ளே ஃபிலிம் சுருளை தட்டையாக வைக்க வேண்டும் குறிப்புடன் கேமரா வித்தியாசமாக இருந்தது.

பிலிம் சுருளை உள்ளே வைத்து மூடியவுடன் சமத்தாக ‘கிர்’ என்ற சத்ததுடன் தானாகச் சுற்றிக்கொள்ளும்போது ஜப்பான்காரன் மீது காதலே வந்தது.

படம் எடுத்த பிறகு அடுத்த படத்துக்கு அதுவே சென்றுவிடும். ‘செல்ப் டைமர்’ என்ற ஓர் ஆச்சரியம்தான். முதல் செல்ஃபி இங்கிருந்துதான் ஆரம்பம். சின்னதாக ஒரு சிகப்பு லைட் 10 முறை கண்சிமிட்டிப் படம் எடுப்பதற்குள் ஓடிச்சென்று மற்றவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம். எடுக்கும் தேதி, நேரம் எடுக்கும் படத்திலேயும் பிரிண்ட் ஆகும் அதிசயமும் நடந்தது.

இதில் எடுத்த படங்கள் எல்லாம் மிக அருமையாக வந்தன. குறிப்பாக இயற்கைக் காட்சிகள். அதுவே ஏதோ கலர் எல்லாம் கொடுத்து வித்தை காண்பித்தது. திருச்சி மலைக்கோட்டை, காவிரி, ஸ்ரீரங்கம் என்று பல இடங்களுக்கு இதனுடன் சுற்றியிருக்கிறேன். அப்பாவுடன் ஒருமுறை மும்பைக்குச் சென்றபோது தாஜ் ஹோட்டலைப் படம் எடுத்தேன். அதை பிரிண்ட் செய்த போது ‘போஸ்ட் கார்ட் மாதிரியே இருக்கு’ என்று பலர் பாராட்டினார்கள். ஒரே பிரச்சினை இதன் பேட்டரிதான். 2CR5 என்று ஒட்டிப் பிறந்த குழந்தை மாதிரி இருக்கும். சுலபத்தில் கிடைக்காது. பர்மா பஜார் போன்ற கடைகளில் சொல்லிவைத்து வாங்கவேண்டும். விலையும் மிக அதிகம். 35mm பிலிம் இருக்கும் சின்ன பிளாஸ்டிக் டப்பா ஸ்ரீசூர்ணம் போட்டு வைத்துக்கொள்ளப் பயன்பட்டது.

வேலைக்குச் சேர்ந்து அமெரிக்கா சென்றபோது அங்கேயும் கேமரா ஆசை விடவில்லை. டாலரில் சேமித்த பணத்தைக் கொண்டு கேனன் எஸ்.எல்.ஆர். ஒன்று வாங்கினேன். எல்லோரையும் போல பக்கத்துவீட்டுச் சிகப்பு கார் முன்பு படம் எடுத்துக்கொண்டு மீண்டும் இந்தியா வந்த பிறகு அதை எடுத்துக்கொண்டு பல ஊர்களுக்குச் சென்று படங்கள் எடுத்தேன். படங்கள் சுமாராக வந்தபோது கலர் லேப் சரியில்லை, பிலிம் டூபிளிகேட் என்றேன். நன்றாக வந்தபோது எடுத்த விதம் அப்படி என்றேன்.

எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்குப் படம் வரைய திட்டமிட்டபோது ஸ்ரீரங்கம் கோபுரங்களையும், தெருக்களையும் இந்த கேமராதான் கவர்ந்தது. எல்லாவற்றையும் பிரிண்ட் போட்டுப் பார்த்தபோது ‘அட வெயில் இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லா இருக்குமே’ என்று மீண்டும் மீண்டும் ஸ்ரீரங்கம் சென்று மேலும் மேலும் பல படங்களை எடுத்தேன்.

பானரோமிக் ஷாட் போன்றவை இந்த கேமராவில் இல்லை. அதனால் ஒரு சாக்பீஸில் சாலையில் கோடு போட்டு அந்தக் கோட்டில் நின்றுகொண்டு வரிசையாக மூன்று நான்கு படங்கள் எடுத்து அதை ஒன்றாகத் தைத்தேன்.

அப்போது ஸ்ரீரங்கத்துக் கதைகளில் வரும் ரங்கு கடையைப் படம்பிடித்தபோது, கடைக்கு உள்ளே இருந்தவர் என்னிடம், “உங்களைச் சுஜாதாதானே அனுப்பினார்?” என்று கேட்டார்.

“எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“இந்தக் கடையை மெனக்கெட்டு வேற யார் சார் படம் எடுக்கப் போறாங்க?” என்றார்.

டிஜிட்டல் கேமரா கொஞ்சம் விலை குறைவான பிறகு அதற்குத் தாவினேன். ஃபிலிம் இல்லாமல், எடுத்த படம் உடனேயே தெரிய அதன் வசீகரம் எல்லோரையும் போல என்னையும் கவர்ந்தது. எடுத்துவிட்டு, தேவையில்லை என்றால் அழிக்கலாம், திரும்ப எடுக்கலாம், ஒரு நொடியில் பட பட என்று பத்து படங்களை க்ளிக்கலாம், கம்யூட்டரில் ஏற்றி கலர் மாற்றலாம் என்று எல்லா ஜாலங்களையும் செய்ய முடிந்தது.

சுஜாதாவுடன் அவர் தம்பியையும் இந்த கேமராவில் படம் எடுத்தேன். ஒரு காப்பி வேண்டும் என்றார். அனுப்பினேன். எனக்கு அவர் அனுப்பிய பெரிய கடிதத்தில் நடுவே “delightful” “relive that moment” என்ற வார்த்தைகள் மறக்கமுடியாதவை.

சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் சென்றபோது, மேட்டு அழகியசிங்கர் சன்னதிக்கு அவரால் ஏற முடியாதபோது மேலே சென்று அங்கே இருக்கும் சுவர்ச் சித்திரங்களைப் படம் எடுத்து அவருக்குக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு சந்தோஷமாக விகடனிலும் எழுதினார்.

சமீபத்தில் நிலவைக் கையில் பிடிக்க நிக்கான் கேமராவை வாங்கினேன். படம் எடுத்தபோது நிலவில் இருக்கும் ஓட்டைகளும், பள்ளங்களும் தெரிந்தன. அது கேமராவா அல்லது டெலஸ்கோப்பா என்று சந்தேகமாக இருக்கிறது.

இன்று எல்லோர் கையிலும் பல ‘மெகா பிக்சல்’ கேமரா, மொபைல் ரூபத்தில் வந்துவிட்டது. பார்த்தவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். பெருமாள் புறப்பாட்டில் பெருமாளுக்கு முன்னாடி திவ்யப்பிரபந்தமும், அதற்கு முன்பாக மொபைல் கேமரா இல்லாமல் இன்று புறப்பாடு இல்லை.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் எடுத்ததை லைவாகப் பார்க்க முடிகிறது. எந்த நிகழ்வாக இருந்தாலும் நான் நீ என்று டிவிட்டரிலும், முகநூலிலும் திகட்ட திகட்டப் போட்டுவிடுகிறார்கள். நம்மை நாமே செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். பல படங்களை எடுத்தாலும் அன்று நானே எடுத்துக் கலவையில் கழுவியபோது தெரிந்த படம்தான் இன்னும் நினைவில் இருக்கிறது.

நன்றி: வலம் இதழ்
மார்ச் 2017 பிரசுரமான கட்டுரை.


Comments

  1. உங்கள் கேமரா வரலாறு - பெற்றதும் இழந்ததும் கட்டுரை மாதிரி இருக்கிறது.

    இதே கேமராவை, வாழ்வியலிலும் ஒப்பு நோக்கினால், 30 வருடங்களுக்கு முன் விசேஷ தினங்களில் சாப்பிட்ட பட்சணங்களுக்கும், ஹோட்டலில் சாப்பிட்ட பேப்பர் தோசைக்கும், இப்போதைய காலங்களில் எப்போதும் தின்னும் ஹோட்டல் உணவுக்கும், அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் வகைவகையான பட்சண வகைகளுக்கும் உள்ள வித்தியாசம், இழந்த மகிழ்ச்சி, ஆர்வம் நமக்குப் புலப்படும்.

    ReplyDelete
  2. அருமை.

    ReplyDelete
  3. Super...unga katturai padithathum enga anna ennai photoes niraya eduthu photography pazhaginathuthan niyabagam varudu!!!!

    ReplyDelete

Post a Comment