Skip to main content

அப்பா என்னும் நண்பன்

முன் குறிப்பு: சற்றே பெரிய கட்டுரை

போன மாதம் திருச்சி விஜயத்தின் போது ’புத்தூர் நால்’ ரோடு பக்கம் என் அப்பாவுடன் கூட வேலை
செய்த நண்பர் ஷஃபியை அகஸ்மாத்தாகச் சந்தித்தேன்.

“என்ன சார் எப்படி இருக்கீங்க ?” என்று கேட்டவுடன் “அட என்னப்பா தேசிகன்” என்று என்னை அடையாளம் கண்டுகொண்டார்.

“எங்கே இருக்க, என்ன செய்யற” என்ற சுருக்கமான நலம் விசாரிப்புக்குப் பின் அவர் சொன்னது இது
தான்...

“ரிடையர் ஆகிட்டேன்.  இப்ப நிம்மதியா இருக்கேன், காரணம் உங்க அப்பா தான். இன்னிக்கும்
அலுவலக நண்பர்கள் ஒன்னா சேர்ந்தா உங்க அப்பா பத்தி பேசாம இருக்க மாட்டோம்.”
சமீபத்தில் என் முகநூல் பக்கத்தில் வேறு ஒரு நண்பர் இவ்வாறு கமெண்ட் செய்திருந்தார் ”Your
father used to tell me… now I am very happy to be in Srirangam”

எனக்கு முகநூலில் நண்பராக அறிமுகமான ரிஷபன் அவர்களும் என் அப்பாவுடன் கூட வேலை
செய்தவர்.

“உங்க அப்பாவுக்கு என் மீது தனி பிரியம். இன்றும் வீரபாஹுவை சந்தித்தால் உங்க அப்பாவைப் பத்தித் தான் பேசுவார்” என்றார்.  “வீரபாஹு என் அப்பாவிடம் ஈர்க்கப்பட்டு ஆழ்வார் பாசுரங்களைக்
கற்றுக்கொண்டு அதை உங்க  அப்பாவிடம் பாடி காண்பித்தார்.”

என் அப்பாவைப் பிடிக்காதவர்கள் அல்லது அவருக்கு எதிரி என்று எனக்குத் தெரிந்து யாரும் இல்லை.

என் அப்பா திருச்சியில் BHELலில் முதன்மை மேலாளராகப் பணிபுரிந்த போது, அதே அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக இருந்த ஒருவருக்கு ஏனோ என் அப்பாவைக் கண்டால்
பிடிக்காது. பெரியார் கட்சிக்காரர்.

அப்பாவையும், அவர் நெற்றியில் இட்டுக்கொள்ளும் ஸ்ரீசூர்ணத்தையும் கேலியும் கிண்டலும் செய்வார்.
ஸெராக்ஸ் எடுத்துக்கொண்டு வருவது போன்ற சின்ன வேலைகள் கொடுத்தால்கூட இழுத்தடிப்பார்.
அப்பா  அவர் மீது புகார் எதுவும் கொடுக்கவில்லை, அதே சமயம் அவர் மீது வருத்தமோ கோபமோ படவில்லை.

எங்கள் வீட்டு விஷேசம் ஒன்றுக்கு  அவரையும் எங்கள் அப்பா அழைத்திருந்தார். சாப்பிட உட்கார்ந்த நேரத்தில் முக்கியமாக அவரைத் தன் பக்கத்தில் கூப்பிட்டு உட்காரச் சொல்லி அவருடன் சாப்பிட்டார்.
அலுவலகத்திலிருந்து வந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். சில நாள்கள் கழித்து, அவர் என் அப்பாவிடம் வந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு என் அப்பாவின் பரம பக்தராகிவிட்டார்.

சக அலுவலரிடம் அவர் வைத்திருந்த நம்பிக்கை அபரிமிதமானது. ”அவன் தப்பு செய்ய மாட்டான்”என்று எல்லோரையும் நம்பினார்.

“கையெழுத்துதானே... எங்கே போடணும்?” என்பார் அசால்ட்டாய்... “ஸார் அது என்னன்னு
பார்த்துட்டு...” என்றால் “நம்பிக்கை தான்” என்பார்.

அப்படி கையெழுத்துப் போட்டு ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டார்.  அலுவலகக் கோப்புகளையும் கூடவே காசோலைகளையும் சினிமாவில் வருவது மாதிரி பேப்பர்களைத் திருப்பி திருப்பிக் காட்டி ஒருவர் கையெழுத்து வாங்கிவிட்டார். அப்படி கையெழுத்து வாங்கியதில், அவர் பெயரிலும் ஒரு காசோலை இருந்திருக்கிறது!.

சில மாதம் கழித்து அலுவலகப் பணம் கையாடல் செய்யப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டபோது கையெழுத்து வாங்கியவர் மாட்டிக்கொண்டார். கூடவே அவருக்கு உடந்தை என்று என் அப்பாவும்.
விசாரணை நடந்தது. குற்றம் செய்தவர் “நான் தான் ஏமாற்றி கையெழுத்து வாங்கினேன்” என்று ஒப்புக்கொண்டார். மேலதிகாரிகள் என் அப்பாவிடம் நீங்கள் எதுவும் தப்பு செய்யவில்லை.
எல்லாவற்றிருக்கும் அவர் தான் காரணம் என்று ஒரு கடிதம் எழுதித் தரச் சொன்னார்கள். என் அப்பாவோ ”நானும் மேலாளார் என்ற முறையில் சரிபார்த்திருக்க வேண்டும் அதனால் அவரை மட்டுமே குற்றம் சாட்ட முடியாது. அந்த மாதிரி கடிதம் எழுதித் தர முடியாது” என்று
சொல்லிவிட்டார்.

“என்ன சார் புரியாம பேசறீங்க... உங்க பிரமோஷன் எல்லாம் அடிபடும்.. பேசாம கடிதம் எழுதிக் கொடுங்க” என்று சொல்ல, “என்  பிரமோஷன் எல்லாம் ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ராமானுஜர், ஆழ்வார்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று சொல்லிவிட்டார். கடைசியில் அவர் எழுதிக் கொடுத்தது
மன்னிப்புக் கடிதம்.

“என்னப்பா இதனால் உனக்கு பிரமோஷன் போய்விட்டதே”

“பிரமோஷன் கிடைத்தால் சில ஆயிரம் அதிகமாகக் கிடைக்கும். டிரான்ஸ்ஃபர் செய்திருப்பார்கள். திருச்சி, ஸ்ரீரங்கம் விட்டு எங்கோ போயிருப்பேன்…பெருமாளா பாத்து எனக்கு நல்லது செய்திருக்கார்”
என்றார்.

என் அப்பா எனக்கு கடைசி வரை ’வாடா, போடா’ என்று கூப்பிடாத நண்பனாகவே இருந்தார். காலேஜ் படிக்கும் போது, தில்லைநகரில் இருக்கும் 'சிப்பி' தியேட்டரில் ஆங்கிலப்படம் திரையிடுவார்கள். வெள்ளிக்கிழமை புதுப் படம் திரைக்கு வரும். காலேஜ் 'கட்' அடித்துவிட்டு 'மாட்னி'
காட்சிக்குச் செல்வது வழக்கம். ஒரு முறை 'டை ஹார்ட்' ( Die Hard) என்று நினைக்கிறேன், பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த போது, அப்பா "எங்கடா போயிட்டு வர ?" என்றார். திடீர் என்று கேட்டதால் பொய் சொல்ல வரவில்லை. மாட்னி ஷோ என்று உண்மையைச் சொல்லிவிட்டேன். "உன் பர்ஸ் எங்கே?'" என்றார். பேண்ட் பாக்கெட்டில் தேடிப் பார்த்தேன். அங்கு இல்லை. முழித்தேன். இதோ இங்கே இருக்கு பார் என்று கொடுத்தார். தியேட்டரில் என் பாக்கெட்டிலிருந்து நழுவியதை என் பக்கத்து சீட்டுக்காரரோ பின்சீட்டுக்காரரோ அதில் இருக்கும் அட்ரஸைப் பார்த்துவிட்டு என் வீட்டுக்கு
நான் வருவதற்கு முன்னே வந்து கொடுத்துள்ளார். அப்பா தொடர்ந்தார் "இனிமே மாட்னி போகாதே, நைட் ஷோ போ, நானும் வரேன்!" என்றார்.

என் நண்பர்களுடன் ஏதாவது சினிமா சென்றால் என் அப்பாவும் அந்த டிமில் இருப்பார். பள்ளியில் சாதாரண வகுப்புத் தேர்வில்  காப்பியடித்து மாட்டிக்கொண்டேன். ஒரே ஆறுதல் என் கூட இன்னும் ஐந்து ஆறு பேர் மாட்டிக்கொண்டார்கள். பிரின்சிபல் ரொம்ப நல்லவர். எல்லோரும் அடுத்த
நாளிலிருந்து ஸ்கூலுக்கு வர வேண்டாம். வருவதாக இருந்தால் அப்பாவுடன் வர வேண்டும், நோ அம்மாக்கள் என்று சொல்லிவிட்டார்.

இரண்டு மூன்று நாள் வீட்டில் இருந்தேன்.  ”ஏதோ காரணம் சொல்லி ஸ்கூலுக்குப் போகாமல் இருந்தேன்”

“ஏண்டா நீ மட்டும் போல” என்று அம்மா கண்டுபிடித்தபின் போட்டு உடைத்தேன். ”சரி அப்பா வந்தா சொல்லிடு”

 “காப்பியடித்து மாட்டிக்கொண்டேன்…” என்று தயங்கி அப்பாவிடம் சொன்னேன்.
“நான் என்ன செய்யணும்”

“பிரின்சிபலைப் பார்க்கணும்” என்றவுடன் மறுநாள் என்னுடன் வந்து பிரச்சினையை அழகாகக் கையாண்டு தீர்த்து வைத்தார்.

“பிரின்சிபலைப் பார்க்கும் போது மூஞ்சியை கொஞ்சம் சோகமாக வைத்துக்கொள்ளேன்” என்று ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் செய்தார்.  என் நண்பர்கள் எல்லோரும் தங்கள் அப்பாவிடம் திட்டும் அடியும் வாங்க, என் அப்பா என்னைத் திட்டவோ, அடிக்கவோ செய்யாதது ஆச்சரியமாக இருந்தது.
ஏதாவது தப்பு செய்தால் என் அப்பா சொல்லும் ஒரே வாக்கியம் ”நாளைக்கு அடி வாங்க போற” என்பது தான்.  இதை சொல்லி என் அப்பாவை நாங்கள் கிண்டல் கூட செய்வோம்.

ஒருநாள் இரவு எங்கள் வீட்டு சோபா செட்டை யாரோ வந்து களவாடிப் போனார்கள். 100 அடி தூரத்தில் இருந்த கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷனின் எஸ்.ஐ ஆச்சரியப்பட்டு, "எப்படி சார்
இவ்வளவு பெரிய சோபா செட்டை எடுத்துக்கொண்டு போனான், வீட்டில நீங்க என்ன சார் பண்ணிக்கிட்டு இருந்தீங்க” என்றார்.

“இத்தனைக்கும் வீட்டுப்பக்கம் போலீஸ் ஸ்டேஷன் வேற இருக்கு” என்றார் என் அப்பா. போலீஸ் புரிந்துக்கொண்டு  திருடனை ஒரு வாரத்தில் பிடித்தார்கள். 3+2 சோபா செட் 0+1ஆகக் கிடைத்தது. போலீஸ் ஸ்டேஷன் சென்ற என் அப்பா லாக்கப்பில் அடைபட்டிருந்த கைதியிடம் ”ஏன் இப்படி செய்தே”  என்று நலம் விசாரித்துவிட்டு,  போலீஸிடம் “அவனை விட்டுவிடுங்க பாவம்” என்று சொல்லிவிட்டார்.

ஏன் என்று கேட்டால். உனக்கு இப்ப புரியாது, அவன் நிலமையில நாம இருந்தா தான் அவன் கஷ்டம் தெரியும் என்றார்.

என் அப்பாவுடன் காய்கறி மார்கெட் செல்வது ஒரு இனிய அனுபவம். மார்கெட் போனவுடன் வியாபாரிகள் சூழ்ந்துக்கொண்டுவிடுவார்கள். என் அப்பாவிடம் பையை வாங்கிக்கொண்டு ”சாமி நீங்க இருங்க” என்று சொல்லிவிட்டு பை நிறைய “நல்ல கத்திரி, புடலங்காய், வெண்டை…” என்று
நிரப்பிவிடுவார்கள். எடை போட மாட்டார்கள், எவ்வளவு என்று சொல்ல மாட்டார்கள். என் அப்பா அவர்களுக்கு அதிகமாகவே பணம் கொடுத்துவிட்டு வருவார். எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்வு நடத்துகிறார்கள் என்று அவர்கள் மீது மிகுந்த அன்பாக இருப்பார்.

எனக்கு சுஜாதா மாதிரி என் அப்பாவிற்கு ராஜாஜி.. அவர் மீது ஒரு அசுரத்தனமான பக்தி இருந்தது. ஆனால் ராஜாஜியை நேரில் சந்தித்ததில்லை.

சம்பளம் வந்தவுடன், அந்தக் காலத்திலேயே ராஜாஜியின் 'சுதந்திரா கட்சி'க்கு ’ஐந்து ரூபாய் மணி ஆர்டர்’ செய்த ரசீதுகள் நிறையப் பார்த்திருக்கிறேன். இதைத் தவிர ராஜாஜி எழுதிய வள்ளுவர் வாசகம், ஆத்ம சிந்தனை போன்ற பல புத்தகங்கள் அவரிடம் இருந்தன. ராஜாஜி பற்றி பெரிய தீபாவளி மலர் சைஸ் புத்தகம் ஒன்று பார்த்திருக்கிறேன் ( இது இப்போது இல்லை என்பது வருத்தமான விஷயம்).

அவர் மேடைப் பேச்சை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒரு டைரியில் குறிப்புக்களுடன் எழுதிவைத்திருந்தார். நடுநடுவே அவருக்குப் பிடித்ததை அடிக்கோடுகளுடன்.  இதைத் தவிர ராஜாஜிக்கு அவர் நிறைய கடிதங்கள் எழுதியிருந்தார். அவர் ராஜாஜிக்கு எழுதியவை பெரும்பாலும் ஸ்ரீவைஷ்ணவம் சம்மந்தப்பட்டவை - ஆழ்வார், திவ்யப்பிரபந்தம், வேதாந்த தேசிகன் நூல்கள்.
பலவற்றுக்கு ராஜாஜி பதிலும் போட்டிருந்தார்!.



ஒரு கடிதத்துக்கு மட்டும் ராஜாஜி கொஞ்சம் கோபமாக என் அப்பாவிற்கு எழுதிய ஒரு பக்கக் கடிதம் இன்னும் நினைவில் இருக்கிறது. அந்தக் கடிதத்தின் சாரம் இது தான்... “நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி. ஆனால் நீங்கள் இது மாதிரி செய்திருக்கக்
கூடாது....”என்று என்று ஏகப்பட்ட அறிவுரைகளுடன் கைப்பட எழுதிய பெரிய கடிதம். என் அப்பாவிடம் இதைப் பற்றி கேட்டதற்கு, பூனாவில் அவர் தங்கியிருந்த வீட்டுப் பக்கத்தில் இருக்கும் பூங்காவை ராஜாஜியின் பெயருக்கு மாற்றச் சொல்லி அந்த ஊர் மேயருக்குக் கடிதம் அனுப்ப, அவரும் மேலிடத்தில் அதற்கு அனுமதி வாங்க, அந்தப் பூங்காவிற்கு ‘ராஜாஜி பூங்கா’ என்று
நாமகரணம் செய்யப்பட்டது.

ஏதாவது நல்ல படம் பார்த்தர் என்றால் அதை எனக்காக மெனகட்டு கொண்டு வருவார். அல்லது ஸிராக்ஸ் எடுத்துக்கொண்டு வருவார்.

ஏதோ புதுவருட கேலண்டரில் வந்த படத்தை காண்பித்து “இதை வரைந்து பாரு” என்றார் அப்பா.

வாட்டர் கலரில் வரைந்த படம் இது ( பார்க்க படம் )

ஒரு முறை அப்பாவிடம் வெளிநாட்டு வாட்டர் கலர் பென்சில் வேண்டும் என்று கேட்டேன். எவ்வளவு என்று கூட கேட்காமல் “பீரோவில் பணம் இருக்கு ...போய் வாங்கிக்கோ” என்றார்.

என் முதல் சம்பளம் வந்த போது “உன்னுடைய முதல் சம்பளம், நான் ரிடையர் ஆகும் போது வாங்கிய கடைசி சம்பளம்” என்றார். அவர் வாங்கிக்கொண்டுத்த அந்த கலர் பென்சிலின் விலை கிட்டத்தட்ட அவர் சம்பளத்தில் 15%.

என் ஓவியங்களை வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமையாக காண்பிப்பார். என் ஓவியங்களுக்குக் கடைசிவரை ரசிகராக இருந்தவர் அவர்தான்!.  ( இதைப் பற்றியும் தனியாக கட்டுரை எழுதியிருக்கிறேன் )
திருச்சியில் நாங்கள் இருந்த போது, அப்பா ஒரு முக்கியமான முடிவை எடுத்தார் அது டிவி வாங்க கூடாது என்பதுதான். பல முறை நானும் என் தம்பிகளும், அம்மாவும் சண்டை போட்டிருக்கிறோம். பக்கத்து வீட்டில் ஏதாவது ஒரு முக்கிய நிகழ்ச்சி பார்க்கலாம் ஆனால் அப்போது எல்லா நிகழ்ச்சிகளும் முக்கியமாக இருந்தது!

வீட்டுக்கு வருபவர்கள் "என்ன! வீட்டில் டிவி கிடையாதா?... சும்மா ஜோக் அடிக்காதீங்க சார்" என்று எங்கள் வீட்டை ஏதோ மியூசியம் போல் பார்த்தார்கள். 

"என்ன பையனை ஐஐடி அனுப்பவதாக உத்தேசமா ?" 

"ஏன் சார் டிவி வாங்கவில்லை" 

போன்ற கேள்விகளுக்கு அப்பாவின் பதில் சின்னதாக ஒரு சிரிப்போ அல்லது "காபி சாப்பிடுகிறீர்களா?" என்பதாகத்தான் இருக்கும். 

விருந்தாளி காபி குடித்துவிட்டு, "என்ன தான் சார் காரணம்?" என்று திரும்பக் கேட்டால், "நீங்களே காரணம் சொல்லுங்களேன்" என்று அவர்கள் எந்தக் காரணம் சொன்னாலும் அதுதான் என்பார். 

கொஞ்ச நாள் கழித்து நாங்கள் டிவி பற்றிய பேச்சை விட்டுவிட்டோம் . டிவி இல்லாமல் பழக்கமாகி, "இன்னிக்கு சாயங்காலம் உத்தம புத்திரன்", "விடிகார்த்தால மூன்று மணிக்கு கிரிக்கெட் மேட்ச்", "புதுசா சன் டிவி ஆரம்பித்திருக்கிறார்கள்"... என்று எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம். 

நான் காலேஜ் படிக்கும் போது அப்பா என்னுடன் நைட் ஷோ படம் பார்க்க வந்தார். ஆனால் கடைசி வரை டிவி மட்டும் வாங்கவில்லை. 

சென்னையில் வேலைக்குச் சேர்ந்து ஒரு முறை விடுப்பில் திருச்சிக்கு சென்றிருந்த போது, அப்பாவுடனான பேச்சில் டிவி பற்றியும் வந்தது. 

"நான் ஏன் டிவி வாங்கலை தெரியுமா?" 

"எங்க படிப்புக்காக..."

"இல்லை... டிவி இருந்தாலும் நீங்க படிச்சிருப்பீங்க. டிவி வாங்கியிருந்தா வேற என்ன நடந்திருக்கும்னு யோசிச்சுப் பார்.. உங்களோட எல்லாம் இவ்வளவு பேசியிருக்க முடியுமா? வீட்டில் ஏதோ ஒன்னை இழந்திருப்போம்" என்றார். 

இந்த விஷயத்தைப் பற்றி சுஜாதாவிடம் ஒரு முறை பேசிக்கொண்டு இருந்தேன். அவர் தன்னுடைய 'அப்பாவின் ஆஸ்டின்' என்ற கதையை நினைவுகூர்ந்தார். 'அப்பாவின் ஆஸ்டின்' என்ற சுஜாதாவின் சிறுகதையைப் படித்திருப்பீர்கள். அதில் சுஜாதாவின் அப்பா அழுக்கு கலரில் ஒரு ஆஸ்டின் கார் வாங்குவார். குடும்பத்தில் எல்லோரும் அதன் கலரை மாற்றச் சொல்லியும் மாற்றாமல் இருப்பார். பிறகு ரிடையர் ஆன பிறகு விற்றுவிடுவார். அவர் ஏன் நாங்கள் எல்லோரும் சொல்லியும் கலர் மற்றவில்லை என்று எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் பிறகு "He had a message for us" என்றார். 

டிவி இல்லாத அந்த நாள்களில் என்ன செய்தேன் என்று யோசிக்கும் போது, சிவகாமியின் செல்வன், பொன்னியின் செல்வன் மற்றும் பல புத்தகங்கள், பத்திரிகைகள் படித்தேன். ஓவியம் வரைந்தேன். புத்தகங்களை நானே பைண்ட் செய்தேன். சைக்கிளை பள பள என்று துடைத்தேன் அப்பாவுடன் கேரம் போர்டு, ரம்மி விளையாடினேன். கோயிலுக்குச் சென்றோம்.. முக்கியமாக நிறைய நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

என் அப்பா தான் எனக்கு சுஜாதாவின் கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். (இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்). குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் சுஜாதாவின் தொடர்கதைகளை மிகவும் விரும்பிப் படித்து என்னிடம் அதைப் பற்றி சிலாகித்துப் பேசுவார்.
“கடங்காரன் எப்படி எழுதறான்” என்பார் செல்லமாக. “என்னிக்காவது ஒரு நாள் நேரில் சந்திக்க வேண்டும்” என்பார்.  ஒரு நாள் சுஜாதா கதை ஒன்றை படித்து அதன் மீது ஈர்க்கப்பட்டு பிறகு நடந்தது உங்களுக்கே தெரியும். (விரிவாக வேறு ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன் )
ஒரு முறை சுஜாதா திருச்சிக்கு வந்த போது “சார் வீட்டுக்கு வரணும்... என் அப்பா உங்களைப்
பார்த்தால் சந்தோஷப்படுவார்” என்றேன்.

“அதுக்கு என்ன வரேன்” என்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அப்பாவிடம் பிரபந்தத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

“உங்கள் அப்பாவுடன் பேசியது மிக்க மனநிறைவு தந்தது” என்று என்னிடம் சொன்னார். சுஜாதா மாதிரி எனக்கு ஆழ்வார், பிரபந்தம் முதலியவற்றில் ஈடுபாடு வந்ததற்குக் காரணமும் என் அப்பா தான்.

சிறுவயது முதல் ஆழ்வார்களை அறிமுகம் செய்தார். அப்பாவுடன் சைக்கிளின் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் போது, திருப்பாவை, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவர்களுடைய அவதார ஸ்தலம், அவர்களைப் பற்றிய கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வருவார்.

ஒரு முறை ஸ்ரீநாதமுனிகளுக்கு நாலாயிரத்தோடு நம்மாழ்வார் விக்ரகம் கிடைத்த கதை, 16 வருடம் நம்மாழ்வார் தவம் செய்த புளியமரம் (உறங்கா புளி ) கதைகளைச்  சொன்னார்.

“அதே விக்ரகமும், புளியமரமும் இன்றும் ஆழ்வார் திருநகரியில் இருக்கிறது” என்றார். 
“ஒரு முறை பார்க்க வேண்டும்” என்றேன்.

“சரி வா ஆழ்வார் திருநகரிக்கு  போய் நம்மாழ்வாரை சேவித்துவிட்டு வந்துவிடலாம் ” என்று உடனே புறப்பட்டுவிட்டார்.

நாங்கள் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றிருந்த சமயம், அன்று ஏதோ ஸ்பெஷல் திருமஞ்சனம் முடிந்து, கதவை சாத்தியிருந்தார்கள். இனி மறுநாள் தான் சேவை என்று சொல்லிவிட்டார்கள்.  எங்களுக்கு ஏமாற்றம்.

“என்னப்பா இப்படி ஆயிடுத்து”

“இருடா நம்மாழ்வார் ஏதாவது வழி காண்பிப்பார்” என்றார் நம்பிக்கையுடன்.

அப்போது யாரோ ஒருவர் எங்களிடம் வந்து விசாரித்தார். “திருச்சியிலிருந்து நம்மாழ்வாரை சேவிக்க வந்திருக்கிறோம்…” என்றோம்.

அவருக்கு என்ன தோன்றியதோ ”வாரும் என்னுடன்” என்று அழைத்துக்கொண்டு போனார். ”கதவை திறக்க முடியாது ஆனா எனக்கு ஒரு ஓட்டை இருப்பது தெரியும் அது வழியா சேவிக்கலாம்”

ஓட்டை பெரியதாகவே இருந்தது. முதல் முறையாக நம்மாழ்வாரை  புகை மண்டலத்துடன் ஒரே ஒரு சின்ன மல்லிகை பூ மாலையுடன் பார்த்தது இன்றும் நினைவு இருக்கிறது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எவ்வளவு முறை அப்பாவுடன் சென்றிருக்கிறேன் என்று தெரியாது. ஸ்ரீபராசர பட்டர் ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கும் தூண்கள், சிற்பங்கள் நித்தியவாசம் செய்ய முடிகிறது, நம்மால் முடியவில்லையே என்று  ஏக்கத்துடன் பார்ப்பாராம்.

அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக்கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது "இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்" என்பார்.

அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும்வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாது சிலசமயம் நடந்து செல்வார். " ஏம்ப்பா வெயில்ல போற?"
என்று கேட்டால், "யாருக்குத் தெரியும்?  இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா?" என்பார்.
அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ( ரங்கராஜனும், ரங்கநாதரும் என்ற என் கட்டுரையில் இதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளேன் ).

“திருவரங்கத்தமுதனார் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதியில் எங்கோ ஒரு மூலையில் யாரும் கவனிக்கப்படாமல் இருக்கு, அதை ராமானுஜர் சன்னதியில வைப்பது தான் சரியாக இருக்கும்” என்று என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். ஒரு முறை “எப்பவாவது உனக்கு டைம் கிடைச்சா
அவரைப் பத்தி எழுது” என்றார். சுஜாதாவின் தம்பியுடன் இதைப் பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கைபட அமுதனார் பற்றி நான்கு பக்கம் எழுதி கூடவே ஒரு சின்ன திருவரங்கத்து அமுதனார் பற்றிய வாழ்க்கை குறிப்புப் புத்தகமும் எனக்கு தபாலில் அனுப்பி
வைத்தார்.


அப்பா ஆசாரியன் திருவடியடைந்து பத்து வருடங்கள் கழித்து அவருடைய ஆசையை என்னால் நிறைவேற்ற முடிந்தது அப்போது போனஸாக ஒரு படிப்பினையும் கிடைத்தது.  ( இதைப் பற்றி தனி கட்டுரை எழுதியிருக்கிறேன் ) 

“டைம் கிடைத்தால் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டு வா” என்று வருடா வருடம் ஆழ்வார், ஆசாரியர்களின் திருநட்சத்திரங்களை ஒரு பேப்பரில் எழுதி எனக்குக் கொடுத்துவிடுவார்.  ( பார்க்க படம் )

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.
- நம்மாழ்வார் திருவாய்மொழி

அடிக்கடி கேட்ட பாசுரம் தான். சிம்பிளான விளக்கம் - உயர்வுகளுக்கெல்லாம் உயர்வானவன் அவன். அறிவின்மை யாவும் அழியும்படி ஞானத்தையும் பக்தியையும் அடியோனுக்கு அருளினான் அவன். தேவர்கள் முதலிய நித்திய சூரிகளின் தலைவன் அவன். எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற
அவனின் திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலிலிருந்து கரை ஏறுவாய் என் மனமே.

உடலை ஒழுங்காக வைத்திருந்தால், மனம் ஒழுங்காக இருக்கும் என்று ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசத்தில் கேட்டிருக்கிறேன். மனம் நன்றாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும் என்பது இன்னொரு சித்தாந்தம் ! இரண்டாவது என் தந்தை கடைப்பிடித்தது.

பயம் கலந்த உயிராசை எல்லோருக்கும் இருக்கிறது. சின்ன தலைவலி, கால் குடைச்சல், முகத்தில் பரு என்று எந்த உபாதை வந்தாலும் உடனே டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடுகிறோம். பூரான் வீட்டுக்குள் நுழைந்தால் உடனே அடித்துவிடுகிறோம். கொசு கடித்தால் உடனே நசுக்கி வேட்டியில் சின்ன ரத்த கறையாக்குகிறோம். நல்ல ஆரோக்கியத்துக்கு அருகம் புல் ஜூஸ், அலோவேரா பேஸ்ட் என்று எதைவாவது குடிக்கிறோம் அல்லது தடவிக்கொள்கிறோம்.

மருத்துவப் பரிசோதனையில் ஏதாவது எண்ணிக்கை அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் பயந்துவிடுகிறோம். அந்த பயம் என் அப்பாவிடம் கிஞ்சித்தும் இருந்ததில்லை. எல்லாவற்றிற்கும் ஒரே பதில் தான்...

“அவன் பார்த்துக்கொள்வான்” என்று ஒற்றை வரியில் எல்லாவற்றையும் அடக்கிவிடுவார். பெருமாள் சேவை, அலுவலகத்தில் பிரச்சனை, கல்லூரியில் சீட்.... என்று எல்லாம் ”அவன்” செயல். மதிப்பெண் குறைவாக வாங்கினால் “அடுத்த முறை நன்றாகப் படி...” என்று சொல்லிவிடுவார். மதிப்பெண்
குறைவாகவோ அதிகமாகவோ வாங்குவது கூட ”அவன்” செயல்.

எனக்கு +2 மார்க் கம்மியாக வந்த போது திட்டவில்லை, முதுகலையில் யூனிவர்சிட்டி முதல் ராங்க், தங்க பதக்கம் வாங்கியபோது முதுகில் தட்டிக்கொடுக்கவில்லை. என் வாழ்கையில் ஒரே ஒரு முறை
தான் என்னை முதுகில் அவர் தட்டிக்கொடுத்தார் – அது என் பெண்ணின் பெயரை ஆண்டாள் என்று வைத்ததற்கு!.

வாழ்க்கையில் இப்படி எல்லாம் அவன் செயல் என்று இருந்துவிடுவது கஷ்டமான காரியம். மிகுந்த மனோதிடம் வேண்டும். ஏதாவது வியாதி வந்துவிட்டால், பெருமாள் பார்த்துக்கொள்வார் என்று டாக்டரிடம் போகாமல் இருக்க முடியுமா ? டாக்டரிடம் போகும் பிரமேயமே அவருக்கு ஏற்பட்டதில்லை.  சரி கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்வாரா என்றால் கோயிலுக்குச் செல்வார் ஆனால் பெருமாளிடம் வேண்டிக்கொள்ள மாட்டார்.

“ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கிய அவனுக்கு எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா ? ” என்பார்.

வேலைக்கு சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் அப்பாவிற்கு வயிற்று பகுதியில் மிகுந்த வலி வந்த போது ”வெந்தயம், சுக்கு சாப்பிட்டா” சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்துவிட்டார். சண்டைபிடித்து வலுக்கட்டாயமாக டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். கோலி குண்டு அளவு சிறுநீரக கல் இருப்பது
ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டது.

”எவ்வளோ பெரிசு சார்... இனிக்கே அட்மிட்டாகிடுங்க... கல்லை எடுத்துடலாம்.. !” என்றார் டாக்டர். 
”மத்தியானம் வருகிறேன்” என்று வந்துவிட்டார்.

வீட்டுக்கு வந்த பிறகு ”டாக்டரிடம் வரமாட்டேன் என்று சொன்னா நல்லா இருக்காது அதனால அப்படி சொன்னேன்” என்ற போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
”கல் தம்பாட்டுக்கு இருக்கட்டும், அதுவாக வெளியே வரும். வராமல் போகட்டும் எனக்கு பயம் இல்லை”

பெரிய காம்பிளிக்கேஷனாகிவிடும்... உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று சொல்லிப்பார்த்தோம்.
“அட போடா... என் உயிரை இந்த டாக்டர் காப்பாத்த முடியாது... பெருமாள், ஆழ்வார் தான் காப்பாத்த முடியும்” என்று பிடிவாதம் பிடித்தார்.

மேலும் வாக்குவாதம் தொடர்ந்தது.
“நீ சயின்ஸ் படிச்சிருக்கே... அதான் நிறைய கேள்வி கேட்கற...”
“அப்படி இல்லப்பா”
“பெருமாளிடம் திட விஸ்வாசம் வேண்டும்... பிரகலாதன் காண்பிக்கும் தூணில் உடனே வர வேண்டுமே என்று நரசிம்மரே ஒரு செகண்ட் பதறிட்டார். நரசிம்மர் ஏன் பதறினார் என்றால் அவர் மேல் பிரகலாதனுக்கு இருந்த திட விஸ்வாசம். வேதாந்த தேசிகர் இதைப் பற்றி அருமையாக சொல்லியிருக்கிறார்” என்றார்.

இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. யோகா செய்தார், வாழைத்தண்டு நறுக்கி சாப்பிட்டார். ஒரு நாள் சிறுநீர் போகும் போது மிகுந்த
வலியுடன் அந்த கல் வெளியே வந்து விழுந்தது. டாக்டரிடம் சென்றார்

“என்ன சார் அன்னிக்கு வரேன்னு சொல்லிட்டு அப்பறம் வரவே இல்லை... உங்களுக்காக ஆபரேஷன் தியேட்டர் எல்லாம் ரெடி செய்தோம்”
“இந்தாங்க டாக்டர் அந்த கல்” என்று அவரிடம் கொடுத்தார்.
“இதை எப்படி வெளியே எடுத்தீங்க”
“யோகா, வாழைத்தண்டு... அதுவா வெளியே வந்துடுத்து”

டாக்டர் ஆச்சரியப்பட்டு “இவ்வளவு பெரிய கல் எப்படி சார்... இதை நான் வைத்துக்கொள்ளலாமா” என்று கேட்டு வாங்கிக்கொண்டார்
அப்பாவிடம் போனில் பேசிய போது ”யோகா செய்தேன், வாழைத்தண்டு சாப்பிட்டேன் ஆனால் கல் வெளியே வந்து விழுந்ததற்கும் ஆழ்வார் தான் காரணம்” என்றார்.

ரிடையர் ஆகும் தருவாயில் வருடாந்திரச் செக்கப்பில் ரத்தப் பரிசோதனை செய்த போது அப்பாவிற்கு டயபட்டீஸ் இருப்பது தெரியவந்தது. அதை பற்றி அவர் துளியும் கவலைப்படவில்லை. அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. ”காபிக்கு சக்கரை போட்டுக்கொள்ளாதே”
என்று சொன்ன அறிவுரையை ஏற்றார். 

“மாமா உங்களுக்குப் பிடிக்குமே பாயசம்” என்று கொடுத்த எதிர்த்தவீட்டு பாயசத்தையும் சாப்பிட்டார். அமெரிக்காவிலிருந்து என் தம்பி சுகர் டெஸ்ட் எடுக்கும் கருவி வாங்கிக்கொண்டு வந்தான். அதை உபயோகிக்க மறுத்தார்.

டாக்டரிடம் போகலாம் டயபட்டீஸ் ஒரு மோசமான வியாதி என்று பலமுறை சொல்லிப்பார்த்தோம். கோவித்துக்கொண்டும், சின்ன சண்டை, பெரிய சண்டை எல்லாம் போட்டு ஓய்ந்துபோனோம். நீரிழிவு நோய் தன்னை ஒன்றும் செய்யாது. நோய் வருவதும் போவதும் அவன் செயல். உன் டாக்டரும் மருந்தும் என்னைக் காப்பாத்த முடியாது என்பதை திடமாக நம்பினார்.
“உங்க யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டேன்... ஒரு நாள் டக்குன்னு ஆழ்வார் என்னைக் கூப்பிட்டுக்கொள்வார்” என்றார்.

அப்பா ரிடையர் ஆன பிறகு தினமும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவித்து(படித்து) வந்தார். வாரயிறுதிகளில் திருச்சிக்குச் செல்லும் போது, வீட்டுக்குள் நுழைந்தவுடன், ராமானுஜ நூற்றந்தாதி புத்தகத்தை என் கையில் கொடுத்து “முழுவதும் கடம்(மனப்பாடம்) செய்துட்டேன், சேவிக்கிறேன்,
சரியா இருக்கா பார்” என்று வாரம் தவறாது சின்ன குழந்தை போல சொல்வார். ஒரு ஞாயிற்றுக்கிழமை பாத்ரூம் சென்றவர் மயங்கிவிழுந்து ஆசாரியன் திருவடியை அடைந்தார்.

முன்பே டாக்டரிடம் சென்றிருந்தால் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாரோ ? தற்போது நான் கடைப்பிடிக்கும் டயட் முன்பே தெரிந்திருந்தால் அவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாமே, போன்ற கேள்விக்கு விடை நம்மாழ்வார் திருவாய்மொழியில் தான் இருக்கிறது. ஆசாரியன் திருவடியை அடைவதற்கு சில மணி நேரம் முன்பு என் அம்மாவிடம் “அடுத்த பத்து
நாளைக்கு சேர்த்து இன்றே சேவித்துவிட்டேன்” என்று சொன்னதைப் பற்றி இன்றும் யோசிப்பதுண்டு.

பிகு: அப்பா ஆசாரியன் திருவடியை அடைந்து பல வருடங்கள் கழித்து அப்பா ஆசாரியன் திருவடியை அடைந்த நாளும் ஸ்ரீராமானுஜர் திருநாட்டுக்கு எழுந்தருளிய நாளும் ஒன்று என்று தெரிந்துகொண்டேன் ( மாசி மாதம் சுக்லபக்ஷ்ம் தசமி திதி சனிக்கிழமை பிற்பகலில் திருநாட்டுக்கு எழுந்தருளினார்)

- சுஜாதா தேசிகன்
7.2.2017
அப்பாவின் 80வது பிறந்தநாள்

Comments

  1. தங்களின் அப்பாவை நானும் பார்த்துள்ளேன். பெருமாள் போலவே பளிச்சென்று அடிக்கடி நெற்றியில் நாமத்துடன் தரிஸித்துள்ளேன். அவர் வேலை பார்த்த அதே அலுவலத்தில், அதே துறையில், ஆனால் வேறு பிரிவில் நான் வேலை பார்த்து வந்தேன். [நான் அவரைவிட 15 வருடங்கள் சின்னவன்.] இருப்பினும் நான் அவரிடம் நெருங்கிப்பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

    தங்களின் அப்பாவின் மிக உயர்ந்த குணங்கள் பற்றி, வீரபாகு உள்பட, பலரும் என்னிடம் சொல்லியுள்ளது எனக்கும், இன்றும் நன்கு நினைவில் உள்ளன.

    அவர் செய்யாத அந்தத் தப்புக்கு அன்று பனிஷ்மெண்ட் கொடுக்க நினைத்த மேல் அதிகாரிகள் மூவருமே இன்று தங்கள் வாழ்க்கையில் மன நிம்மதியுடன் இல்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

    அதிலும் தெனாவெட்டான அந்த நம்பர்-1 அதிகாரி, மிகவும் ஸாத்வீக குணங்கள் மட்டுமே உள்ள, என்னிடமும் ஒருமுறை அநாவஸ்யமாக மோதி, என் மனதை மிகவும் காயப்படுத்தியிருந்தார்.

    இரவோடு இரவாக தெய்வபலம் அவருக்கு நான் யார் என்பதைக் காட்டிக்கொடுத்து விட்டது. மறுநாள் என்னை அவர் தன் குளுகுளு அறைக்கு அழைத்து, (என் காலில் விழாத குறையாக) இரண்டு மணி நேரங்கள் என்னுடன் வேறு பேச்சுக்கள் மிக இனிமையாகப் பேசி என்னை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு என்னை அவர் சந்திக்கும்போதெல்லாம், அவரே எனக்கு மிகப்பெரிய கும்பிடு போட்டு வந்து கொண்டிருந்தார்.

    பதவி வெறியினால் எல்லோரையும் அன்று கடித்துக்குதறி வந்த (நரகாசுரன் போன்ற) அவர், பணி ஓய்வு பெற்றுச் சென்றது எல்லோருக்குமே தீபாவளிப்பண்டிகை போல் மகிழ்ச்சியளித்தது. இன்று அதே அலுவலகத்திற்கு ஏதேனும் வேலையாக அவர் வருவாரேயானால் அவரை ஒரு நாயும் மதிக்காது / சீந்தாது. ஒரு கப் டீ கூட கொடுக்காது.

    எந்தப்பதவி வகித்தாலும், பிறரை அதாவது சக ஊழியர்களை மனிதனாக மதிக்கவும் மன்னிக்கவும், அன்பு செலுத்தவும் தெரிந்திருக்கணும் ... தங்களின் அன்புத்தந்தை போல.

    தங்களின் தந்தையின் தோற்றமும், பேச்சுக்களும், நடத்தைகளும் சாக்ஷாத் அந்த இராமானுஜரின் மறு அவதாரமோ என்று நினைக்கத்தோன்றும், எனக்கு.

    தாங்கள் சொல்லும் 7th February என்பது என்னாலும் மறக்கவே முடியாததோர் நாள். நான் பிறந்தது 8th December ஆக இருப்பினும் தவறுதலாக 10 மாதங்கள் முன்பே நான் பிறந்ததுபோல Official Records களில் அமைந்து போய் விட்டது.

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

    இதனால் எனக்கு எவ்வளவோ நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் நானும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், தங்கள் தந்தை போலவே பகவானை மட்டுமே நம்பிக்கொண்டு ஜாலியாகவே, இன்றுவரை இருந்து வருகிறேன்.

    தங்களின் தந்தையார் படத்துடன் கூடிய, இந்தப்பதிவுக்கும் பகிர்வுக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. In First paragraph of my comment (16th word) a small correction (spelling mistake)

      அலுவலத்தில் = அலுவலகத்தில்

      Delete
    2. தாங்கள் இந்தப்பதிவினில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள திரு. ரிஷபன் அவர்களும், திரு. வீரபாகுவும், திரு. ஷஃபியுல்லாவும் என் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே.

      Delete
  2. மனித உருவில் வந்த தெய்வம் உங்கள் தந்தை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதில் ஐயம் இல்லை. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன். வாழ்க பல்லாண்டு, பல்லாண்டு.

    ReplyDelete
  3. எனது அப்பா கிருஷ்ணனும் உங்க அப்பாவும் சிறந்த நண்பர்கள் ..புனேவில் இருந்தபோது பரிச்சயமானவர்கள் ... உங்கப்பா கூறிய அறிவுரையில் தான் நான் ICWA படித்தேன் ..உங்கப்பாவின் நினைவுகள் அப்போப்போது நினைவில் வந்து கொண்டே இருக்கும் ! எனது தகப்பனார் இறப்பதற்கு ஒருமாதம் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது முன்னாள் அவரை பற்றி நிறைய நினைவு கூர்ந்தார் ! நான்தான் அவருடன் உங்கள் வீட்டிற்கு வருவேன் ! அவர் முகம் இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை !

    அருமையான கட்டுரை ! உங்கள் தந்தை போன்ற மனிதர்கள் காண்பது அரிது !

    ReplyDelete
  4. முன்பே படித்தது என்றாலும் மீண்டும் படிக்கும் போதும் கண்களில் கண்ணீ்ர் வரவழைக்கிறது

    ReplyDelete
  5. ஒவ்வொருவருக்கும் அவர்கள் அப்பாவைப்பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்

    ReplyDelete
  6. Super
    I feel that iam also close to your family

    ReplyDelete
  7. படிக்கப் படிக்க நெஞ்சு புளகாங்கிதம் அடைந்தது. ஆஹா.. உங்கள் இருவருக்குள்ளும் என்ன ஒரு பிரேமை.. நட்பு.. அவருக்குத்தான் என்ன ஒரு திடம், பக்தி... இந்தக் கொடுப்பினை ஜன்மாந்திரமாக நலம் தரும் நாமத்தை நவின்றதால்தான். மிகவும் அற்புதமான எழுத்து.

    ReplyDelete

Post a Comment