Tuesday, February 28, 2017

எழுத்தும் பணமும்

இந்தியா டூடே தமிழில் அம்பலம் சிறப்பு பக்கத்தில் சுஜாதா அவர்களின் கேள்விபதில்களும், சின்ன சின்ன கதைகள், கட்டுரைகள் வந்த சமயம்.
என் எழுத்து ஆர்வம் காரணமாக நான் பெண் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தை சிறு கட்டுரையாக எழுதினேன். அதை தைரியமாக சுஜாதா அவர்களிடம் காண்பித்தேன்.
இதை ஒரு பிரிண்டவுட் எடுத்து கொடு என்றார். கொடுத்தேன்.
அதன் மீது, ”Next Ambalam issue" என்று எழுதி கையெழுத்து போட்டு அருகில் இருந்தவரிடம் கொடுத்தார்.
இந்தியா டூடேயில் வந்தது. அடுத்த முறை அவரை பார்க்கும் போது
“சார் இந்த இஷ்யூவில வந்தது” என்றேன்.
அதற்கு அவர் கேட்ட முதல் கேள்வி
“பணம் வந்ததா ?... உங்க அட்ரஸ் கொடுத்துவிடுங்க இவர்களிடம்..பணத்தை ஒழுங்கா அனுப்பிடுங்க..” என்றார்.
பணம் பெரிது இல்லை ஆனால் எழுத்துக்கு அவர் கொடுத்த மரியாதை இது.

இந்த கட்டுரையை படிக்கும் போது சில்லரைத்தனமாக இருக்கிறதே என்று இன்று நினைக்கிறேன். ஆனால் அவர் தந்த ஊக்கம் தான் இன்று என்னையும் பலரையும் எழுத வைத்திருக்கிறது.

நான் எழுதிய கட்டுரை கீழே...

Monday, February 27, 2017

சுஜாதாவின் முதல் சிறுகதை

சுஜாதாவின் "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்” தொகுப்புக்கு கதைகளை வரிசைப்படுத்திக்கொண்டு இருந்த நேரம். அவர் எழுதிய முதல் சிறுகதை பற்றிய பேச்சு வந்தது. 
“சிவாஜி பத்திரிக்கையில் எழுதிய கதை”
“அது கிடைக்காது” என்றார் தீர்மானமாக. 

இதே போல அவர் எம்.ஐ.டியில் படிக்கும் போது ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது எம்.ஐ.டி வெள்ளி விழா மலரில் வந்தது. அதை நானும் துபாயில் இருக்கும் ராஜ்குமார் என்பவரும் பல வருஷமாக தேடினோம். பிறகு சுஜாதா மறைந்தபின் அந்த முயற்சியை விட்டுவிட்டோம். மீண்டும் தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த வாரம் ஆனந்தவிகடனில் சுஜாதாவின் முதல் கதை என்றவுடன் பழைய உற்சாகத்துடன் புத்தகம் வாங்கி பார்த்தேன், பிறகு படித்தேன். மைகேல் மதன காம ராஜன் படத்தில் சரளமாக அங்கிலம் பேசும் கமலை பார்த்து இன்னொரு கமல் ”அதெல்லாம் அப்படியப்படியே வரதுதானில்ல...” என்பார். அதே போல் தான் சுஜாதாவின் எழுத்தும். பதினெட்டு வயதில் எப்படி அசால்டாக எழுதியிருக்கிறார்.

எப்படி இந்த கதை கிடைத்தது என்று ஒருவாரமாக தேடினேன். சிவாஜி பத்திரிகையை நடத்தினவர்களின் தொலைப்பேசியை நண்பர் மூலம் கேட்டு அவர்களிடம் பேசினேன்.
”முன்பு சிவாஜியில் தன்னுடைய கதை ஒன்று வந்தது என்று எழுதியிருந்தார் அதை பார்த்துவிட்டு அவரிடம் கடிதம் எழுதினோம்.” ஆனால் மேற்கொண்டு தொடர்பில் இல்லை.
”கதை இருந்ததா உங்களிடம் ?”
“ஆமாம்”

”பெண், பாதி ராஜியம்” என்றவுடன் அதை ஏதோ நகைச்சுவையாக எடுத்துக்கொண்டுவிட்டார் சுஜாதா என்று தெரிகிறது.

சரி எப்படி கிடைத்தது ? நண்பர் Arvind Swaminathan அரவிந்த் சாமிநாதன் ( பா.சு.ரமணன் ) அவர்களின் பாட்டனார் அந்த காலத்தில் ஆயிரக்கணக்கில் பழைய பழைய புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தவர். ஊர் ஊராக, வீடு, வீடாக மாற நேர்ந்ததால் அவற்றில் பலவற்றை கோட்டையூர் முத்தையா செட்டியாரிடம் கையளித்து விட்டார். எஞ்சியவை இன்னமும் (கரையான் அரித்தது போக, வெந்நீர் அடுப்பில் பாட்டி எரித்தது போக, தூள் தூளாக உதிர்ந்தது போக) ஊரில் கல்லியம் பெட்டிகளில் இருக்கின்றன........

அரவிந்த் அப்பாவும் அதே மாதிரி புத்தகச் சேகரிப்பாளர், நா.பா. மணியன், சாவி, ஜெயகாந்தன் உள்ளிட்டோரின் நாவல்களைச் சேகரித்து வைத்திருந்தார்... (அவையும் அழிந்தது போக இன்னமும் சில இருக்கின்றன)
அப்படி இற்றுப் போய் வீணாய்ப் போன பல நூல்களை ஊருக்குச் சென்றிருந்தபோது அரவிந்த் போட்டோ எடுத்தும் சேகரித்தும் வந்திருக்கிறார். அவை பழைய ஹார்ட் டிஸ்கில் இருந்திருக்கிறது.

பல பழைய புத்தகம், பேப்பர் எல்லாம் ஸ்கேன் செய்து பழைய ஹார்ட் டிஸ்கில் வைத்திருந்தார் அரவிந்த்.

சில மாதங்களுக்கு முன்னால் பழைய ஹார்ட் டிஸ்கை நோண்டிக் கொண்டிருந்தபோது புதுக்கோட்டையிலிருந்து வெளியான சில நூல்களின் ஸ்கேன் காபியைப் பார்த்திருக்கிறார். அவற்றோடு சிவாஜி இதழும் இருந்தது. அப்போது ‘எஸ்.ரங்கராஜன்’ என்ற பெயரும் அவர் கண்ணில் பட்டது! அப்பறம் நடந்தது உங்களுக்கே தெரியும்.

அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு சுஜாதா எழுதிய முதல் கதை கிடைத்திருக்கிறது. இதுவே அவரின் கடைசி கதையும் கூட !

Sunday, February 26, 2017

பார்த்தேன் எடுத்தேன் - 2

நம் தேசம் பாரம்பரியம்மிக்கது. கோயில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லை. இங்கே தான் கல்வி, கலாச்சாரம் வளர்ந்தது. மழை, புயல் போன்ற காலங்களில் பலருக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறது. பஞ்சகாலத்தில் மக்களுக்கு உணவுவளித்து காத்துள்ளது. ”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னாரகள்.

ஸ்ரீரங்கம் போன்ற திவ்ய தேசங்களை வாழ் நாள் முழுக்க பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். பல்லவர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், நாயக்கர்கள் மட்டும் இல்லாமல், விஜயநகர, ஹோய்சாளப் பேரரசர்கள் ஸ்ரீரங்கத்தை பல நூற்றாண்டுகளாக பல் வேறு காலகட்டங்களில் கட்டியது. இங்கே பல மொழிகளில், 644 கல்வெட்டுகள் இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் விட்டு சென்ற எழுத்துகள், ஆவணங்கள்.
2013ல் ஸ்ரீரங்கம் சென்ற போது இந்த சின்ன சிற்பம் கண்ணில் பட்டது. சின்ன தவழும் கண்ணன் கையில் வெண்ணையுடன்!. 

கைநாட்டு வைக்கும் கட்டைவிரல் அளவு தான் இருக்கும் இந்த சிற்பம். ஆனால் நாம் கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்போமா ?
சூப்பர் கம்யூட்டர், கிளவுட் கம்ப்யூட்டிங் என்று வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இது போல கையால் செய்வதற்கு ஆள் கிடையாது. இன்னும் நூறு வருடங்கள் கழித்து இந்த பிரம்மிப்பு இன்னும் அதகமாகும். 3D பிரிண்டிங் மூலம் செய்யலாம் ஆனால் இது போல perfection, symmetry கொண்டு வருவது கஷ்டம்.
பேலூர் சிற்பம் 2012ல் எடுத்த படம் ஒன்றை இங்கே போட்டிருக்கிறேன். உற்றுப்பாருங்கள். அதன் முகத்தில் நம் என்ன செய்திருக்கிறோம் ? முகமதியர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

நம் வீட்டு சுவற்றில் யாராவது எழுதாமல் இருக்க “இங்கே நோட்டீஸ் ஒட்டவோ எழுதவோ கூடாது” என்று அறிவிக்கிறோம். ஆனால் நம்மாழ்வார் சொன்ன ‘வீடு’ கொடுக்கும் ஸ்ரீரங்கத்தை ?
தாயார் சன்னதிக்கு பின்புறம் எடுத்த படத்தை பாருங்கள். நம் மக்கள் தேர்வில் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று தங்களுடைய ரோல் நம்பரை, பெயரை 

கிறுக்கிவைத்துள்ளார்கள். சமீபத்தில் கோயிலை முழுவதும் பல கோடி ரூபாய் செலவு செய்து சுத்தம் செய்ந்துவிட்டு ‘புது நாமம்’ பெயிண்ட் அடித்துள்ளார்கள். எது மேல் ? கல்வெட்டு மேல் அடிக்க கூடாது என்று போராடியவர்கள் பேச்சை கேட்காடதவர்கள் எல்லாம் இத்தனைக்கும் நல்ல படித்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ! பலர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அடியேன் கேள்விப்பட்டேன். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் என்று ஒரு பழமொழி உண்டு.


ஸ்ரீரங்கம் ஸ்ரீவைணஷ்ணவ சம்பிரதாயத்தை தோற்றிவித்த இடம். இன்று வாழும் நமக்கு மட்டும் இது சொந்தம் இல்லை. நாளை வர போகும் நம் சந்ததியினருக்கும் இது சொந்தம். அவர்கள் இதை எல்லாம் பார்த்து ரசிக்க இது ஒழுங்காக பாதுகாக்க வேண்டாமா ? பாதுகாத்தால் “வையத்து வாழ்வீர்காள்” என்று ஆண்டாள் சொன்ன வாக்கு பலிக்கும்.

பார்த்தேன் எடுத்தேன் - 1

இந்த படத்தில் இருக்கும் பூ இன்று காலை வாக்கிங் போகும் போது - ’பார்த்தேன் எடுத்தேன்’.


நான் குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் இந்த செடியை பார்த்து வியந்திருக்கிறேன்.எப்போது பார்த்தாலும் வசிகரிக்கும். பல நாள்கள் அதைத் தொட்டுப் பார்த்து அனுபவித்திருக்கிறேன். பழைய சினிமா வில்லனின் புலி நகம் வைத்த செயின் மாதிரி என்ன விதமான படைப்பு! பூவின் பெயர் தெரியாது.

2011 ஆஸ்திரேலியா சென்றபோது, சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) பக்கம் பெரிய மரம் அதிலும் அதே பூ!. சிறிது நேரம் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அங்கே கிளி இரண்டு விளையாடிக்கொண்டு இருந்ததையும் கவனிக்க முடிந்தது. பச்சைக் கிளிகளையே பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு வானவில் நிறத்தில் அந்தக் கிளிகளைப் பார்க்கும்போது அத்தை பெண்ணுக்குப் பதில் ஆண்ட்ரியாவைப் பார்த்த மாதிரி இருந்தது.

சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு சிட்னி துறைமுகப் பாலத்தில் நடக்க ஆரம்பித்தேன். பாலத்தின் தடுப்புச் சுவற்றிலும் அதே டைப் கிளிக்குஞ்சு.
பிரியாவிடை கொடுத்துவிட்டுத் திரும்பி வந்ததிலிருந்து அந்தப் பூவின் பெயரையும் அந்தக் கிளியின் பெயரையும் தேடிக்கொண்டிருந்தேன்.


ஒரு வருடம் கழித்து, 2012ல் பூவின் பெயர் தெரிந்தது- புலிநகக் கொன்றை! பூவை இன்னொரு முறை பாருங்கள். பெயர்க் காரணம் தெரியும்.
பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம்தான் நினைவு வந்தது. பல வருடங்களாகப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் அடுக்கியிருக்கும் அந்தப் புத்தகத்தை எடுத்து புலிநகக் கொன்றை பற்றி எதாவது சொல்லியிருக்காரா என்று மேலோட்டமாகத் தேடியபோது 'புலிநகக் கொன்றை - பெயரும் பின்னணியும்' என்ற தலைப்பில் இந்த பூவை பற்றி ஐங்குறுநூறு 142-ஆம் பாடலில் வருகிறது என்று எழுதியுள்ளார். உங்கள் பார்வைக்கு அதை இங்கே தருகிறேன்.

ஐங்குறுநுறு 142-ஆவது பாடலில் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்துதான் எனக்கு இந்த நாவலுக்கான தலைப்பு கிடைத்தது. மொழி பெயர்த்தவர் சங்கப் பாடல்களை உலகம் முழுவதும் அறியச் செய்த AK ராமானுஜன் அவர்கள். பாடலும் அதன் பொருளும் ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கீழே தரப்பட்டிருக்கிறது.
எக்கர் ஞாழல் இறங்கிணார்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் காண்ணே
[அம்மூவனார், ஐங்குறுநூறு 142]
தோழி கேள்,
அவனுடைய மணலடர்ந்த கூரையில் ஒரு புலிநகக் கொன்றை மரம். அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூட்டலிட்டு அழிவு செய்யும் பறவைகள் கூட்டம். அவனை இனி நான் நினைக்க மாட்டேன். எனது கண்களுக்குச் சிறிது தூக்கமாவது கிடைக்கும்.
The Tigerclaw Tree
What she said
Friend, listen
I'll not think any more
of that man on whose sandy shore
birds occupy the tigerclaw tree
and play havoc with the low flowering branches
and my eyes will get some sleep
[A.K.Ramanujan translation]

கிளிக்கு வருவோம். 'வானவில் நிறத்தில் கிளி' என்று கூகிளில் தேடினேன். உடனே அதன் பெயர் 'lorikeets' என்று கிடைத்தது. தமிழில் இதற்கு இன்னும் யாரும் பெயர் வைக்கவில்லை. நமக்கு அடுத்த சந்ததியினர் வளரும்போதும் புலிநகக் கொன்றை பூக்கள் இருக்கும்; ஆனால் அதன் பெயர் தெரியாமலே வளர்வார்கள்.


Saturday, February 25, 2017

நம்பி தெரு நம்பிக்கை விநாயகர் - பாகம் - 2

சற்று முன் திருவல்லிக்கேணி சம்பத்குமார் ஸ்வாமி அவர்கள் நான் 2010ல் திருக்கச்சி நம்பி பற்றி எழுதிய பதிவுக்கு (http://sujathadesikan.blogspot.in/2010/01/blog-post_8257.html  ஒரு கமெண்ட் போட்டிருந்தார். உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.  அவர் எழுதிய பதிவை இங்கே போட்டிருக்கிறேன். 

Today evening was seeing photos on Facebook – Mr Rajagopalan Madhavan had posted some good photos of Acharyar Thirukachi Nambigal Uthsavam – a couple of photos attracted me … for I had read about that particular place in a blog post.

'மாசி மிருகசீர்ஷம்'  - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள்.   திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆசார்யர் ஆவார்.  இவர் சௌம்ய வருஷம்,  1009 ஆம் ஆண்டு,  வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.

இந்த பதிவு ஒரு  மகிழ்சி அளிக்கும் விஷயம் பற்றியது.

சுஜாதா தேசிகன் என்பவர்  2004 முதல் தமிழ் வலைத்தளம் அமைத்து எழுதி வருபவர்.  மிக்க புகழ்மிகுந்த எழுத்தாளர் சுஜாதாவின் நண்பர்.  அவரது 'திருக்கச்சி நம்பிகள்' பற்றிய பதிவு 2010 வருடம் எழுதப்பட்டது.  ஆர்வத்தை தூண்டும்படி எழுதியுள்ளார். அவரது  முழு பதிவை இங்கே படிக்கவும் :- Kachi Nambigal avatharasthalam

தேசிகன் - ஆசார்யர் அவதார ஸ்தலத்தின் அப்போதைய அவலநிலை பற்றி எழுதியிருந்தது மட்டும் கீழே மறுபதிவு செய்துள்ளேன்..  
.. ..
கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.

“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா?” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார். 

நம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில்? இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.

“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்?” என்றார்.

“நம்பி வீடு”
“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.
“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப.
அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.

நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.
“உரமா ?”
“ஆமங்க வியசாயத்துக்கு”
அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.
அங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.

“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே ?”
“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”

திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.

திரு தேசிகன் -  நிச்சயம்  தேங்காய் உடைக்க வேண்டும்.  இது யாருடைய  முயற்சி; யாரெல்லாம்  இதற்கு வ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் அறியேன். நிச்சயம் பெரு முயற்சி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.    இன்று எனது நண்பர் திரு மாதவன் ராஜகோபாலனின் முகநூல் பதிவில் - இந்த வருட உத்சவ படங்களை பதிவு செய்துள்ளார்.  அதில் மிளிரும் அவதார மண்டபத்திற்கு ஆசார்யர்  திருக்கச்சி நம்பிகள் எழுந்து அருளும் படமும் உள்ளது.  மகிழ்சியாக உள்ளது. 


ஆசார்யன் திருவடிகளே சரணம்.

The post referred is Sujatha Desikan’s post on Acharyar Thirukachi Nambigal written way back in 2010.  Upon searching for Acharyar Avatharasthalam, with none providing details [locals too were not aware !!] – he found it near a Vinayagar temple, occupied by somebody and had lamented that only God can save and restore the place.  The photos by Madhavan show Acharyar visiting the same Avatharasthalam this year.  For sure, this is made possible by great efforts by some group of people.  It does makes the believers, followers of Srivaishnava Acharyargal happy.  [that portion of Desikan’s search reproduced alongwith photos of Mr R Madhavan]


அடியேன் - திருவல்லிக்கேணி சம்பத்குமார்
( Post reproduced from http://tamil.sampspeak.in/2017/02/thirukachi-nambigal-avathara-sthalam-at.html with thanks ) 

Tuesday, February 21, 2017

கல் சொல்லும் கதை – பாகம் 2

கல் சொல்லும் கதை என்று ஒருவருடம் முன்  நம்பெருமாளை முகமதியர்களிடமிருந்து காத்த ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியர் பற்றியும், நம்பெருமாள் ஜோதிஷ்குடியில் தங்கிய இடம் அங்கே சென்ற அனுபவத்தை கட்டுரையாக அடியேன் எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.
(இந்த கட்டுரையை படிக்கும் முன்பு எழுதிய கட்டுரையை ஒரு முறை படித்துவிடுங்கள் )

அந்த கட்டுரையை படித்த சிலர் ”ஏன் அதில் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் பங்கை நீங்கள் குறிப்பிடவில்லை?”  என்று கேட்டிருந்தார்கள். நியாயமான கேள்வி, குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், சரியான தகவல்களை சேகரித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை சற்றே தள்ளிப்போட்டேன்.
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஒரே பிரச்சனை  கோயில் யானை மட்டும் இல்லை, புத்தகங்களிலும் தென்கலை, வடகலை சார்ந்தே இருப்பது தான்.  வடகலை  நித்யநு சந்தானத்தில் உபதேச சத்தின மாலை இருக்காது, தென்கலை புத்தகத்தில் பிள்ளையந்தாதி இருக்காது.

ஸ்ரீபிள்ளைலோகாசாரியரும், ஸ்ரீ வேதாந்த தேசிகரும் சமகாலத்தவர்கள். ஆனால் சம்பிரதாயத்தை ஒட்டி, சரித்திர சம்பந்தமான விஷயங்களிலும் இந்த மகா புருஷர்களில் யாராவது ஒருவரை தவிர்த்துவிட்டு சரித்திரத்தை எழுதியுள்ளார்கள். இந்த மாதிரி விடுபட்டு எழுதுவதும் ஒருவிதத்தில் பாகவத அபசாரமே.

Saturday, February 11, 2017

அப்பா என்னும் நண்பன்

முன் குறிப்பு: சற்றே பெரிய கட்டுரை

போன மாதம் திருச்சி விஜயத்தின் போது ’புத்தூர் நால்’ ரோடு பக்கம் என் அப்பாவுடன் கூட வேலை
செய்த நண்பர் ஷஃபியை அகஸ்மாத்தாகச் சந்தித்தேன்.

“என்ன சார் எப்படி இருக்கீங்க ?” என்று கேட்டவுடன் “அட என்னப்பா தேசிகன்” என்று என்னை
அடையாளம் கண்டுகொண்டார்.

“எங்கே இருக்க, என்ன செய்யற” என்ற சுருக்கமான நலம் விசாரிப்புக்குப் பின் அவர் சொன்னது இது
தான்...

“ரிடையர் ஆகிட்டேன்.  இப்ப நிம்மதியா இருக்கேன், காரணம் உங்க அப்பா தான். இன்னிக்கும்
அலுவலக நண்பர்கள் ஒன்னா சேர்ந்தா உங்க அப்பா பத்தி பேசாம இருக்க மாட்டோம்.”
சமீபத்தில் என் முகநூல் பக்கத்தில் வேறு ஒரு நண்பர் இவ்வாறு கமெண்ட் செய்திருந்தார் ”Your
father used to tell me… now I am very happy to be in Srirangam”

எனக்கு முகநூலில் நண்பராக அறிமுகமான ரிஷபன் அவர்களும் என் அப்பாவுடன் கூட வேலை
செய்தவர்.

“உங்க அப்பாவுக்கு என் மீது தனி பிரியம். இன்றும் வீரபாஹுவை சந்தித்தால் உங்க அப்பாவைப்
பத்தித் தான் பேசுவார்” என்றார்.  “வீரபாஹு என் அப்பாவிடம் ஈர்க்கப்பட்டு ஆழ்வார் பாசுரங்களைக்
கற்றுக்கொண்டு அதை உங்க  அப்பாவிடம் பாடி காண்பித்தார்.”

என் அப்பாவைப் பிடிக்காதவர்கள் அல்லது அவருக்கு எதிரி என்று எனக்குத் தெரிந்து யாரும் இல்லை.