Skip to main content

ஸ்ரீரங்க விஜயம்

மூன்று நாள் விஜயமாக திருச்சி, ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சென்னை திருச்சி நெடுஞ்சாலைகளில் 20கிமீட்டருக்கு இருபக்கத்திலும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் முளைத்து, ’சக்கரையுடன் இறக்கப்பட்ட டிகாஷனின் உதவியுடன் அசட்டு தித்திப்பு காபியுடன் திருச்சி வந்து சேர்ந்த போது சித்திரை வெயிலிலும் சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கூட்டமும் பரோட்டாவும் குறையவில்லை.

கரூர் பைபாஸ் சாலை, பெங்களூர் 80 அடிச் சாலை மாதிரி இரண்டு பக்கமும்  பிராண்டட் கடைகளும், ஹோட்டல்கலும் வந்துவிட்டது. பேருந்துகள் ராட்சச சத்தத்துடன் இடைவெளி விட்டு ராகமாக ஹாரன் அடித்துக்கொண்டு பறந்து செல்கிறது. ஜங்ஷன் பஸ்டாண்டில் சங்கீதா ஹோட்டலில் எப்போதும் போல கூட்டம் அலைமோதுகிறது. நகர் வலம் வந்த போது, பல இடங்களில் நுங்கு கிடைக்கிறது. முன்பு எல்லாம் பனை ஓலையில் கட்டித்தருவார்கள், தற்போது எல்லாம் கேரி பேக் மயம் தான்.

அன்று ஆசாரியர்கள் நடமாடிய ஸ்ரீரங்கம் வீதிகளில் இன்று‘கழகங்களின் தேர்தல் பிரச்சார வண்டிகள் ஹரி’ படத்தில் வேகமாக ஓடும் ரவுடிகளின் டாட்டா சுமோ பறக்கும் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. தாயார் சந்நிதி நுழைவாயில் இருக்கும் திராவிட கழகம் கட்சி கொடி இந்த முறை மிஸ்ஸிங்! கம்பம் இன்னும் இருக்கிறது. சிவாஜி சுஜாதா வசனம் மாதிரி ”ஸ்ரீரங்கம் வருபவர்கள் எல்லாம் நாமம் போட்டுக்கொண்டு பொங்கல் சாப்பிடுபவர்கள் என்று நினைச்சியா ?” என்பது மாதிரி இருந்தது யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் ‘ஸ்ரீரங்க விலாஸ் சிற்றுண்டுயில் கிடைக்கும் மெனுவை பார்த்த போது கேள்வி எழுந்தது.

கோயிலுக்குள் மேலும் பல இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பசுமையாகக் காட்சியளிக்கிறது. எல்லாச் சந்நிதிகளிலும் பெயர் பலகை வைக்கப்பட்டு ”அட இங்கே ஒரு சந்நிதி இருந்ததா ? ”என்று வியப்பாக இருக்கிறது. சந்நிதிகளில் அபிஷேக நீர் வெளியே வரும் இடத்தில் எல்லாம் தனி கூம்பு வடிவக்குழாய் வைத்து அதை ஒழுங்குபடுத்தியுள்ளார்கள்.

திருப்பதி மாதிரி வரும் பக்தர்களை ’ஜருகண்டி ஜருகண்டி’ என்று பெண்களின் மீதும் கைவைத்து தள்ளிவிடுவதைப் பார்க்க முடிந்தது. இத்தனக்கும் நாங்கள் சென்ற போது கூட்டமே இல்லை. இதைப்பார்த்துவிட்டு “ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் மட்டும் ஓ.கே” என்றான் அமுதன். பெண்கள் மீது கைவைத்து தள்ளிவிடுவதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் உடனே கவனிக்கவேண்டும்.

உடையவர் சந்நிதியின் பக்கம் இருந்த கழிப்பிடம் இடிக்கப்பட்டு அழகான சோலையாக காட்சியளித்து, சித்திரை குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் வாசனையுடன் சந்நிதி எதிர்புறம்.. மீண்டும் அழகான தோட்டம். கோவில் மராமத்து பணிகளின் போது கழட்டப்பட்ட உடையவர் தஞ்சாவூர் சித்திரங்கள் மீண்டும் பழைய இடத்துக்கு வந்துவிட்டன.

சித்திரை வீதியில் கற்பக விருட்சம் வாகனத்தில் நம்பெருமாளைத் தீப்பந்தங்களுடன் சேவித்துவிட்டு வரும் வழியில் ”தேவரீர் சனிக்கிழமை இருப்பீர்கள் இல்லையா ? கருட வாகனம் சேவித்துவிடுங்கள்” என்பதுடன் “புதிதாக மடப்பள்ளி ஹோட்டல் வந்திருக்கு.. சாப்பிட்டுபாருங்க” என்று தகவல் தருகிறார்கள் பூலோக வைகுண்டம் வாசிகள்.

பெரியநம்பிகள் வசித்த திருமாளிகைக்கு சென்று கொஞ்ச நேரம் ஆளவந்தாருக்கு பிறகு பெரிய நம்பிகள் வாழ்ந்த இடத்தில் குடும்பத்துடன் செலவு செய்துவிட்டு ஸ்ரீசுந்தராசாரி ஸ்வாமி எங்களுக்காகப் பெரிய நம்பிகள் சந்நிதியை திறந்து பெரிய நம்பிகளின் பாதங்களுக்கு அடியில் இருக்கும் குட்டி ராமானுஜரை ‘கிட்டே வந்து பாருங்கோ’ என்று சேவை செய்து வைத்து இன்முகத்துடன் பெரிய நம்பிகளின் பாதங்களால் ஆசிகளைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார். ஸ்ரீரங்கத்தில் நண்பர் வீரராகவன் ஸ்வாமிகளை சந்தித்துவிட்டு கோயில் கைங்கரியம் பற்றி கொஞ்சம் பேசினோம். காரிலிரிந்து யானைக்கு காசு கொடுக்க அது ஜன்னல் வழியே ஈரம் சொட்ட சொட்ட தும்பிக்கையை ஜன்னல் வழியே நுழைத்து ஆசிர்வதித்தது.

மைகேல் ஐஸ்கீரிம், பிரமனந்தா சர்பத் கடை , திருவானைக்கா பார்த்தசாரதி பட்டர் தோசை என்று எல்லாக் கடைகளிலும் நிற்கக் கூட இடம் இல்லை. பார்த்தசாரதி விலாஸ் பட்டர் தோசையை சாப்பிட்டுவிட்டு எழுந்துகொள்ளும் போது ஜாக்கிரதையாக எழுந்துகொள்ள வேண்டும் கூரை முழுவதும் ஒட்டடை.  ஸ்ரீரங்கம் மாம்பழசாலையில், வரும் வழியில் நாமக்கல் ’ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழி’ என்ற இடத்திலும் பதஞ்சலிக் கடையின் ஊடுருவலைப் பார்க்க முடிந்தது.

buy-1-get-1 மாதிரி 25 வருடம் கழித்து பள்ளி நண்பன் விஜயனையும் அவருடைய நண்பர் Muralid Haransயும், சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. நான் எழுதியதை எல்லாம் படித்து நினைவு வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

திரும்ப வரும் போது தொட்டியம் காட்டுப்புத்தூரில் தண்ணீர் சொட்ட சொட்ட மணல் லாரிகள் இடுக்கில் புகுந்து, வழியெங்கும் FMல் நாமக்கல் வரை அணில் சேமியா விளம்பரங்களும் துளிர்விடும் மரங்களையும் பார்த்துக்கொண்டு பெங்களூல் 15வது மாடி வந்து சேர்ந்த போது உள்மனசு ’சொல்ப அட்ஜஸ்ட் மாடி’என்றது.

Comments

  1. குட்டி ராமானுஜரா.. சேவிக்கணுமே

    ReplyDelete
  2. ஸ்ரீரங்க தரிசனம். இத்தனை கச்சிதமா யாராலயும் எழுத முடியாது. 2014 இல்
    ரங்க தரிசனம் கிடைத்த போது நல்ல வேளை யாரும் தள்ளவில்லை.
    ரங்கனோடு பேசிக்கொண்டிருக்கும் மாமிகளைக் காண முடிந்தது. சில நபர்கள் ....கோவிலைச் சேர்ந்த கோஷ்டி என்று நினைக்கிறேன் அவர்களுக்குத் தனி மரியாதை.
    திருச்சியில் ஏகப்பட்ட மாறுதல். கல்லுக்குழி ஆஞ்சனேயர் பிரமாதமாக மாறி இருக்கிறார்.
    நன்றி தேசிகன்.

    ReplyDelete
  3. எப்போது கிடைக்குமோ மீண்டும் அந்த வாய்ப்பு.......’சொல்ப அட்ஜஸ்ட் மாடி’

    ReplyDelete
  4. Thank you for words on Sree Madapalli

    ReplyDelete
  5. Thank you for words on Sree Madapalli

    ReplyDelete

Post a Comment