Skip to main content

ஆகவே... ஒரு கதை பிறக்கிறது!




இந்தக் கதை உங்களைக் கவருமா என்று தெரியாது. ஆனால் ஒரு உத்திரவாதம் தருகிறேன். பெயர்கள்கூட மாற்றாத, எந்தக் கலப்படமும் இல்லாத என் சொந்த அனுபவம்.
ஐ.டி கம்பெனியில் இருபது வருஷம் குப்பை கொட்டியபின் எல்லோருக்கும் வரும் அந்த அலுப்பு, எனக்கு வந்த சமயம் பிள்ளை பிடிக்கும் கும்பல் மாதிரி என்னை ஒரு கன்சல்டன்சி பிடித்து அமெரிக்க கம்பெனிக்கு வைஸ் ப்ரெசிடண்டாக செக்கின் செய்தது. அதற்கு நடத்தப்பட்ட இன்டர்வியூவில் அந்தக் கேள்வியை என்னால் மறக்க முடியாது.
“பல பெரிய டீமை உருவாக்கியுள்ளீர்கள்...மறக்க முடியாத அனுபவம்?” எனக்கு உடனே ராமகிருஷ்ணாதான் நினைவுக்கு வந்தான்.
“நெவர் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர் என்பதற்கு எடுத்துக்காட்டு ராமகிருஷ்ணா” என்று என் அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தேன்.
புதிதாக ஒரு டீமை சில வருடங்களுக்கு முன் தேர்வு செய்துகொண்டிருந்த சமயம் “ஐ வாஸ் அண்டர் லாட் ஆப் பிரஷர்”. ஒரு ‘வாக் இன் இன்டர்வியூ’க்கு வந்திருந்தான்.
தொள தொள பேன்ட், சட்டையில் ஆங்காங்கே உப்புப் பூத்திருந்தது. பழைய செருப்பு, கையில் லேடிஸ் குடை. தமிழ்நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவன். எங்கள் கம்பெனியோ ஐ.டி. நெட்வர்க்கிங், இங்கே எதற்கு வந்தான் என்று குழம்பினோம்.
“எங்க கம்பெனி நெட்வொர்க்கிங்.
உங்க படிப்பு கெமிக்கல்.. இட் ஈஸ் நாட் மேட்ச்.”
“சார், சான்ஸ் கொடுத்துப் பாருங்க...
சிஸ்கோ சி.சி.என்.ஏ. எல்லாம் படித்திருக்கிறேன்.”
“வீ ஆர் லுக்கிங் ஃபார் எஸ்ப்ரீயன்ஸ் பீபிள்.. வித் மாஸ்டர்ஸ் இன் கம்ப்யூட்டர்.. ”
“நான் கத்துப்பேன் சார், சான்ஸ் கொடுத்துப் பாருங்க” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.



“வி ஹேவ் லாட்ஸ் அஃப் வர்க்... நிறைய பேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.. டோன்ட் வேஸ்ட் டைம்.” அவன் விடுவதாக இல்லை. “ஏதாவது டெஸ்ட் வெய்யுங்க” என்றான் மீண்டும்.
அவனைத் துரத்த என் மேனேஜர் ஐ.பி. முகவரி ஒன்றைக் கொடுத்து சப்நெட் மாஸ்க் எழுதச் சொன்னார். அவன் எழுதவில்லை, வாயால் சொல்லி விட்டான்.
அடுத்த கேள்வி நான் ரவுட்டிங்கில் கேட்க, ‘இது எல்லாம் ஒரு கேள்வியா?’ என்பதைப் போலப் பார்த்துவிட்டு பதில் சொல்ல, அடுத்து புரோட்டோ கால், நெட்வர்க் மேனேஜ்மென்ட் என்று எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அந்தாக்ஷரி ஸ்டைலில் கேட்க எல்லாவற்றுக்கும் பதிலை சர்வ சாதாரணமாகச் சொல்ல எங்களுக்கு ஆச்சரியம். எங்களிடம் அவனை வீழ்த்த எந்த பிரம்மாஸ்திர மும் இல்லாமல், எச்.ஆரிடம் சிபாரிசு செய்து வேலைக்கு அமர்த்தினோம்.

அமைதியாக எல்லா வேலைகளும் செய்வான். இரவு பகல் என்று பாராமல் புதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டான். இவன் ஆற்றலைப் பார்த்து எங்கள் ஆஸ்திரேலியா கிளை அவனை அங்கே சில மாதங்கள் அனுப்ப சொன்னது. அனுப்பினோம்.
ஒரு நாள் இரவு அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியது ராமகிருஷ்ணாதான்.
“சார், நான் பெரிய இக்கட்டில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன்..”
“என்ன?”
“என் பர்ஸ், கிரெடிட் கார்ட்...எல்லாம் பறி போய்விட்டது.”
“ஐயோ எப்படி?” என்று கேட்பதற்குள் அவனே சொன்னான்:
“ராத்திரி அலுவலகத்திலிருந்து வந்துகொண்டு இருந்தேன். அப்போது சிலர் என்னிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பர்ஸை பிடுங்கிக்கொண்டு போய் விட்டனர்.”
“அடபாவமே.. நீ பயப்படாதே... எவ்வளவு இருந்தது?”
“ஐந்தாயிரம் டாலர்... அப்பதான் சார் நான் ஏ.டி.எம்.மிலிருந்து... எடுத்தேன்.”
“உனக்கு ஒன்றும் ஆகலையே? போலீஸுக்கு...”
“இப்பதான் போய்விட்டு வரேன். கம்ப்ளைய்ன்ட் எழுதிக் கொடுத்தேன்.”
“சரி, உனக்கு என்ன நடந்தது என்று டீடெய்லா ஒரு மெயில் அனுப்பு. எச்.ஆருக்கும் காப்பி செய்...”
“சரி சார், காலை செய்றேன்... இப்ப எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு. தூங்கணும்..”
“ஓ.கே.”
மறுநாள் ராமகிருஷ்ணா விவரமாக மெயில் அனுப்பினான்.
அலுவலகத்திலிருந்து மெட்ரோ ரயிலில் இறங்கிய பின் ஏ.டி.எம் பூத்துக்குச் சென்று பணம் எடுத்து சுமார் ஐநூறு அடி தொலைவில் உள்ள ஹோட்டலுக்கு நடந்து சென்ற போது அங்கே இருக்கும் பஸ் ஸ்டாப் பக்கம் மூன்று பேர் வந்து கத்தியை(விரல் சைஸ் இருக்கும்) காண்பித்து மிரட்டி பர்ஸை பிடுங்கிக்கொண்டு சென்று விட்டனர். இருவர் வெள்ளையாக இருந்தார்கள், ஒருவன் மாநிறம். அதில் ஐயாயிரம் ஆஸ்திரேலியா டாலர் பணமும் கம்பெனி கிரெடிட் கார்ட், என்னுடைய பர்சனல் கார்ட், ரயில் பாஸ் இத்தியாதி இத்தி யாதி... இது நடந்த சமயம் இரவு சுமார் 10.30 இருக்கும். இத்துடன் நான் போலிஸுக்கு அளித்த புகார், அவர்களுடைய அக்னாலேஜ்மெண்ட் இரண்டையும் இணைத்துள்ளேன்.
தற்போது என்னிடம் பணம் ஐம்பது டாலர்தான் இருக்கிறது. உடனடியாக எனக்கு ஹோட்டல் பில், கை செலவுக்குப் பணம் அனுப்பவும்.
இப்படிக்கு,
ராமகிருஷ்ணா
பிகு: க்ளையன்ட்டிடத்தில் ‘அக்ஸப்டென்ஸ் டெஸ்ட்’ முழுவதும் முடித்துவிட்டேன். மூன்று பிரச்னை இருக்கிறது. டெவலப்மெண்ட் டீமுக்கு விவரமாக நாளை எழுதுகிறேன்” என்று தொழில் பக்தியைப் பின் குறிப்பில் இணைத்திருந்தான்.
அந்தப் பையனுக்கு எங்கள் ஆஸ்திரேலியா கிளையிலிருந்து பணம் கொடுக்க ஏற்பாடு செய்து வேலையை முடித்துக்கொண்டு ஒரு வாரத்தில் இந்தியா வந்து சேர்ந்தான்.
அவன் கிரெடிட் கார்ட்டில் செலவழித்த ஹோட்டல் பில், மற்ற செலவுகள் சில லட்சம் இருக்கும். இதற்காக அலுவலகம் அவனுக்குத் தந்த பணத்தை கிரெடிட் கார்டுக்குக் கட்டவில்லை. அது எங்களுக்குத் தெரியவந்த போது அவன் சொந்த ஊரில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
ஒரு மாதம் கழித்து அலுவலகம் வந்த போது அவனே, “சார், ஆஸ்பத்திரியில் செலவு. அதனால் கிரெடிட் கார்ட் பணம் உரிய நேரத்தில் கட்ட முடியவில்லை. எனக்குச் சம்பள அட்வான்ஸ் கொடுத்தால் உடனே கட்டிவிடுகிறேன். ஏதாவது ஹெல்ப் செய்யுங்க” என்றான். ஒரு வருட காலத்தில் மாதத் தவணையாக தருவதாகப் பணத்தை வாங்கிக் கொண்டான்.
சில வாரங்கள் கழித்து, ஒருநாள் என் ரூமுக்கு ஓடி வந்தான். அப்போது நான் ஒரு கான்ப்ரன்ஸ் காலில் இருந்தேன்.
மூச்சு இறைக்கப் பேசினான்.
“சார்... மெயின் ரோட்டில் மெயின் ரோட்டில்.. .. என் நண்பன் பைக்கில் விழுந்து விட்டான்...”
கான்ப்ரன்ஸை மியூட் செய்தேன்.
“தலை... அடி... ரத்தம்... ஹெல்மெட் போடவில்லை... கொலம்பியா ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் என் நண்பனுடன் அனுப்பியிருக்கிறேன்... அர்ஜென்டா ஒரு பத்தாயிரம்... இல்லை இருபதாயிரம் கொடுங்க.”
ஏ.டி.எம். வாயிலிருந்து இருபதாயிரம் எடுத்துக் கொடுத்தேன்.

அடுத்த வாரம் “நண்பன் எப்படி இருக்கிறான்?” என்று விசாரித்தபோது “சார், நண்பன் பிழைத்துவிட்டான். இன்னும் ஒரு வாரத்தில் பணத்தைத் திரும்பத் தந்துடறேன்” என்றான்.
அடுத்த நாள் அவன் அலுவலகத்துக்கு வரவில்லை. அவன் மொபைல் ஸ்விச் ஆப்பில் இருந்தது. கிரெடிட் கார்டுக்கும் பணம் கட்டவில்லை. ஒரு மாதத்துக்குப் பிறகு எச்.ஆரிடம் பேசினோம். அவனுடைய அப்பா, அம்மாவுக்குப் போன் செய்தபோது நாங்கள் பேசியது புரியாமல் ஏதோ தெலுங்கில் பதில் சொன்னார்கள். அவன் கொடுத்த அட்ரஸில் சென்றபோது அது ஏதோ துணிக்கடை அட்ரஸ். அப்ஸ்-காண்டிங் பட்டியலில் அவனைச் சேர்த்தோம்.
என்னிடம் மட்டும் அல்லாமல் பலரிடம் இந்த மாதிரி பணம் வாங்கியிருக்கிறது தெரிய வந்தது. போலீஸுக்குப் போகலாமா என்று யோசித்தோம். அதற்கு முன் எச்.ஆர். அவனுக்கு “வேலைக்கு இன்னும் ஒரு வாரத்தில் வரவில்லை என்றால் வேலையிலிருந்து நீக்கப்படுவீர்கள்” என்று கடிதம் எழுதினார். மெயிலும் அனுப்பினார்.
ராமகிருஷ்ணா பற்றி அலுவலகத்தில் யாரிடமும் பேசவில்லை. அவனுடைய நண்பர்களைக் கூப்பிட்டு ‘அவன் பேசினால் எங்களிடம் சொல்லுங்கள்’ என்று கேஷுவலாகச் சொல்லிவைத்தோம்.
ஒருநாள் அவனுடைய நண்பன் ஒருவன் என்னிடம் வந்து, “சார், ராமஸ் எனக்குத் தெரிந்த பெண்ணிடம் பேசியிருக்கிறான்” என்றான்.
“ஓ... அப்படியா!” என்று அவனிடம் விவரத்தைக் கேட்டு அறிந்துகொண்டு அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தபோது, “சார், என்னிடம் நேற்று ஐயாயிரம் வேண்டும் என்று கேட்டான்” என்றாள்.
“அடுத்தமுறை அவன் பேசினால் அலுவலகத்துக்கு அடுத்த பில்டிங்கில் இருக்கும் ஃபுட் கோர்ட்டுக்கு வரச் சொல்” என்று பொறி வைத்தோம்.
அதேபோல் ஒரு வாரத்தில் அவன் ஃபுட் கோர்ட் வருகிறான் என்று தகவல் கிடைக்க, அவன் அங்கே வந்தபோது எங்கள் செக்யூரிட்டியை அனுப்பி அவனைச் சுற்றிவளைத்தோம். அவன்கூட இரண்டு ஹிந்தி பேசும் பெண்கள்.
“எங்கே ஆளை காணோம்? கிரெடிட் கார்ட் பணமும் கட்டவில்லை. நிறைய பேரிடம் பணம் வாங்கியிருக்கிறாய். யூ ஹேவ் லாஸ்ட் யுவர் ஜாப்” என்று நாங்கள் சரமாரியாகக் கேட்ட கேள்விகளுக்கு அவனிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
“கம்பெனி லாப்டாப், ஐ.டி. கார்ட் எல்லாம் திரும்பக் கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் போலீஸுப் போக வேண்டியிருக்கும்.”
‘போலீஸ்’ என்ற வார்த்தையை கேட்டவுடன் அந்தப் பெண்கள் நழுவினார்கள்.
“அதற்குப் பின் என்ன நடந்தது?”
“டு கட் எ லாங் ஸ்டோரி ஷார்ட்.”
அவனை வேலையை விட்டு நீக்கினோம்.

அவனிடமிருந்து மீட்ட கம்பெனி லாப்டாப்பை திறந்து சோதித்தபோது அதில் பெண்கள் படங்கள்.. அப்புறம் ஆஸ்திரேலியா போலீஸ் இவனுக்கு அனுப்பிய மெயில் ஒன்று அதில் இருந்தது.
“சார் நீங்கள் கொடுத்த புகார் எண். அதில் நீங்கள் சொன்ன இடத்தில் சுற்றி இருக்கும் சி.சி.டி.வி. ஃபுட் டேஜ்களைப் பார்த்தபோது நீங்கள் குறிப்பிடும் சம்பவம் எதுவும் நடந்த மாதிரி அதில் பதிவாகவில்லை. நீங்கள் சரியான லோகேஷன் சொன்னீர்கள் என்றால் வேறு இடங்களில் இருக்கும் சி.சி.டி.வி. ஃபுடேஜ்களைப் பார்த்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும். அப்புறம் அன்று நீங்கள் என்ன கலர் டிரஸ் அணிந்து இருந்தீர்கள்? எங்களுக்கு மீண்டும் சொல்ல முடியுமா? உங்கள் போன் எப்போதும் ஸ்விச் ஆப் ஆகியிருக்கிறது. உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.”
“வாவ்.. வாட் எ எக்ஸ்பீரியன்ஸ்!” என்று இன்டர் வியூவை முடித்தார்கள்.
அடுத்த நாள் கன்சல்டன்சியிலிருந்து ரெட்டி கூப்பிட்டு, “அந்த கம்பெனிகாரர்களுக்கு உங்களை ரொம்பப் பிடித்துவிட்டதாம். உங்க எக்ஸ்பீரியன்ஸ் ஏதோ சொன்னீர்களாம். அசந்துவிட்டார்கள்.
கங்க்ராட்ஸ். உங்க வேலை சான் ஹோசே, வெஸ்ட். நான் இருப்பது, நியூஜெர்ஸி. ஈஸ்ட் கோஸ்ட் வரும் போது நிச்சயம் சந்திக்கலாம். அப்ப எனக்கு அந்தக் கதையைச் சொல்லுங்க. நௌ ஐ ஹேவ் அ கால்...
சி யூ” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
அமெரிக்கா சென்று வேலையில் சேர்ந்த பின் சில மாதங்கள் கழித்து அலுவலக விஷயமாக நியூ ஜெர்ஸி போக வேண்டியிருந்தது. விசாவில் ஏதோ பிரச்னை, அதனால் ரெட்டியும் சந்தித்துவிடலாம் என்று ரெட்டிக்கு போன் செய்தபோது, “வாங்க. உங்க வீசா பிரச்னையை முடித்துவிடலாம். அப்பறம் உங்க கதையை எனக்கும் சொல்ல வேண்டும்,” என்றார்.
ரெட்டியின் அலுவலகத்துக்குச் சென்றபோது, இந்திய, அமெரிக்கக் கொடிகள் கராத்தே வணக்கம் செய்துகொண்டு இருந்தன. பாரத பிரதமர், ஜனாதிபதி, நேரு, காந்தி படங்கள் மாட்டியிருந்த வரவேற்பறையில் இருந்த அந்த சைனீஸ் ரிஸப்ஷனிஸ்டின் லிப்ஸ்டிக் உதடு மட்டும் “டி யு ஹேவ் அப்பாயின்மென்ட்?” என்றது.
“நே.. பட் ஐ ஹேவ் அ கால்.”
“பர்பஸ்?”
“வீஸா... அபீஷியல்...”
ஒரு நம்பரை ஒற்றிச் சிரித்துப் பேசிவிட்டு,“ரெட்டி இஸ் டூ பிஸி டுடே. வில் கம் இன் டென் மினிட்ஸ். லைக் டூ ஹேவ் சம் காபி?” என்று என்னை ரெட்டியின் அலுவலகத்தில் உட்கார வைத்தாள்.

ரெட்டி ரூம் பெரிதாக இருந்தது. ‘இன்க்ரடிபிள் இந்தியா’ படத்தில் இந்தியா இன்னும் அழகாக இருந்தது. நாற்காலிக்குப் பின்புறம் ரெட்டியின் படம். லேசான புன்முறுவலுடன், சிவப்பு நிற டை கட்டிக் கொண்டிருந்தார். நான் ஏதோ யோசித்தவாரே படத்துக்குக் கீழே எழுதியிருப்பதைப் படித்தேன். "'Save Environment today for our tomorrow' என்றிருந்தது. கீழே ‘ராமகிருஷ்ணா ரெட்டி’ என்று கையெழுத்துப் போடப்பட்டிருந்தது. திரும்பவும் படத்தைப் பார்த் தேன். தலை சுற்றத் தொடங்கியது.                  

நன்றி:
கல்கி தீபாவளி சிறப்பிதழ்
நவம்பர் - 2015
ஓவியம்: தமிழ்

Comments

  1. Sujatha touch அப்படியே இருக்கு !

    ReplyDelete
  2. எதிர்பார்க்காத முடிவு.

    ReplyDelete
  3. Incredible story! Well done Desikan! You made my day!

    ReplyDelete
  4. என் அமெரிக்கா நண்பர் அனுபவத்தை ஒத்து போகிறது. :-) அமெரிக்காவிலே

    ReplyDelete
  5. தேசிகன், உங்க கதைக்கு தொடர்ச்சியாக, என் அனுபவத்தையும் வைத்து ஒரு கதை எழுதினேன்...

    அமெரிக்காவிலே ஒரு தொடர்ச்சி....

    ReplyDelete

Post a Comment