Skip to main content

நகரம் - க்யூவும் க்யூ சார்ந்த இடமும்

என்னுடைய ஒரு நாளை எப்படிக் கழிக்கிறேன்?

சுருக்கமாக இரண்டு மதிப்பெண் கேள்விக்கான விடை மாதிரி சொல்ல வேண்டும் என்றால் ”வாகன நெரிசலில் கார் ஓட்டிக்கொண்டு, வழியில் சுமாரான வரிசையைத் தேர்ந்தெடுத்து சுங்கச் சாவடியில் கட்டணம்கட்டிக் கடந்து, கூட்டத்தோடு கூட்டமாக மின்தூக்கியின் (அது தாம்பா லிஃப்ட்) உதவியுடன் ஐந்தாவது மாடியில் இருக்கும் என் அலுவலகம் வந்தடைகிறேன். இதே மாதிரி வீடு திரும்பும்போது வழியில் எக்ஸ்டரா பழமுதிர்ச் சோலையில் காய்கறி வாங்குகிறேன்”

கொஞ்சம் விளாவாரியாக (பத்து மதிப்பெண் மாதிரி) இப்படி விவரிக்கலாம்.

வாகன நெரிசலில் வண்டியை ஓட்டிக்கொண்டு போகும் போது நம்மையறியாமலே முன் செல்லும் கார், பைக் என்று எதையும் விட்டு வைக்காமல் முந்துகிறேன் பின்னால் வரும் வண்டிகளும் அப்படியே. எங்கேயும் எல்லோரும் யாரையாவது முந்திக்கொண்டே செல்கிறார்கள். அடுத்தவர் நம்மை முந்திக்கொண்டு செல்லும் போது நமக்கு ஒரு விதமான எரிச்சல் வருகிறது. நம்மை முந்திக்கொண்டு சென்றவர், பின்னாடி வருபவர் எல்லோரும் அடுத்த போக்குவரத்து சிக்னல் முன் ஒன்றாக பச்சைவரக் காத்து நிற்கிறோம். எல்.ஈ.டி 5.4.3.2.1 பச்சை விளக்கு வந்தவுடன் திரும்பவும்... இந்தப் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்தபின் சுங்கச்சாவடியை வந்து அடைகிறேன்.

சுங்கச்சாவடியில் இதே வரிசைப் போட்டி தொடர்கிறது. பக்கத்து வரிசையில் கூட்டம் கம்மியாக இருந்தால் உடனே தாவ முற்படுகிறோம். நம் பின்னால் வரும் வாகனம் பக்கத்து வரிசையில் நமக்கு முன் சென்றுவிட்டால் நம்மை அறியாமல் உச்சுக் கொட்டுகிறோம்..லிஃப்டிலும் கிட்டதட்ட இதே மாதிரி தான். ஆறு லிஃப்டில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நானும் மற்றவர்களோடு முழிக்கிறேன். எதில் அதிகம் கூட்டம் இல்லையோ அதை தேர்ந்தெடுத்த பின் லிஃப்டின் உள்ளேயும் இது தொடர்கிறது. லிஃப்டின் உள்ளே 1, 2 மாடி பொத்தானை அழுத்தியவர் மீது 5ஆம் மாடி செல்பவர் முகத்தில் கடுகுவெடிப் பார்வை பார்க்க, 3ஆம் மாடி செல்பவர் முகத்தில் ஏற்படும் எரிச்சலில் உளுத்தம்பருப்பும் போட்டு தாளித்துவிடலாம். கணக்குப்பண்ணிப் பார்த்தால் 2ஆம் மாடியிலிருந்து 5ஆம் மாடிக்குச் செல்ல 1 நிமிடம் கூட ஆகாது. ஆனால் அந்த ஒரு நிமிடத்தில்தான் எதையோ சாதிக்க வேண்டும் என்று எல்லோரும் பிரியப்படுகிறோம்.

திரும்ப வரும் போது, பழமுதிர்ச் சோலையில் பணம் செலுத்தும் இடத்தில் இதே எரிச்சல் வந்துவிடுகிறது. கால் கிலோ தக்காளிக்கு பில் போடக் காத்திருக்கையில் முன்வரிசையில் இருப்பவர் மினி கல்யாணம் செய்யும் அளவிற்கு காய்கறி எடுத்திருந்தால் ஐந்து நிமிடம் அதிகம் காக்க வேண்டும் என்கிற எரிச்சல்.

இந்த “Get on your nerves” ஃபீலிங் பெருமாள் தரிசனத்துக்கு, வங்கி, சினிமா டிக்கெட் வரிசை, புதுப்படம் பற்றி டிவிட்டரில் முதல் தகவல், கச்சேரியில் ஸ்வரம் பாடும் போது பாடகருக்கு இணையாக அல்லது கொஞ்சம் அதிகமாக பக்க வாத்தியம் வாசிக்கும் போதும்... என்று பல இடங்களில் அனுபவிக்கலாம். இதனுடைய உளவியல் காரணங்கள் பற்றி ஆழமாக சிக்னலில் காத்துக்கொண்டு இருக்கும் போது யோசிக்கலாம்.
சாதாரணமாக யோசித்தபோது, நமது பள்ளிகளின் கல்விமுறை ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. குழந்தைகளுடைய மார்க் வந்தவுடன், எதிர்த்தவீட்டு கோபு எவ்வளவு, பக்கத்து வீட்டு பாபு ஃபர்ஸ்ட் மார்க்கா என்று கேட்டுவிட்டு அவர்கள் ஒரு மார்க் கம்மியாக இருந்தால் அப்பாடா என்று சந்தோஷப்படுகிறோம். தன்னை யாரும் முந்திவிடக்கூடாது என்ற மனவியாதி இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
நேற்று மாலை இதைப் பற்றித் தீவிரமாக யோசித்துவிட்டதால் இன்று டிராஃபிக் சிக்னல், சுங்கச்சாவடி வரிசைகளை ‘உச்’ சுக் கொட்டாமல் கடந்துவிட்டேன். லிஃப்ட் எடுக்காமல் படியில் ஏறி வந்தேன். ( நல்ல வேளை கூட யாரும் நடக்கவில்லை!).
இன்றைய IRCTCயில் தட்கால் பயணச்சீட்டுக்கு முன்பதிவுக்கு மட்டும் இந்தக் குணம் விதிவிலக்கு.

இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ”நீ, நான்” என்று லைக், ஷேர் பண்ணுவதில் ‪#‎MeTheFirst‬ என்று போட்டி போடாமல் வரிசையில் வந்தால் அதுவும் பெரிய சாதனையே!

Comments

  1. கூட்டம் மற்றும் ஜனத்தொகை தான் இதற்கு காரணம். நமக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயமும் ஒரு காரணம்.

    ReplyDelete

Post a Comment