Skip to main content

வணக்கம் சென்னை - 3

சென்னை வெயிலும் வேர்வையும் பழகிவிட்டது. சினிமாக் கதாநாயகன் பாடல் காட்சியில் விதவிதமாக உடை மாற்றுவது போல வேர்த்துக்கொட்டும் போது மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த முறை நான் கவனித்த சில விஷயங்கள்.

இரண்டு இலக்கியம் ஒரு ஆன்மீகம் என்று மூன்று விழாக்களுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் விழாவில் என் பக்கத்தில் உட்கார்தவர் கை பேசியில் பேசியது பத்து அடி சுற்றளவில் உட்கார்ந்த எல்லோருக்கும் கேட்டது.

மறுமுனை என்ன சொன்னது என்று தெரியாது. ஆனால் இவர் பேசியது இது தான்.



“ஜெயகாந்தன் விழா”

“எழுத்தாளர்...”

“நம்ம ஜாதி தான்”

“கூட்டம் இருக்கு”

“அட நம்ம ஜாதி தான் என்று சொல்றேன்”

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் தன்னலமற்ற தொண்டு புரிந்த பெரியவர்களுக்கு “கைங்கரிய ஸ்ரீமாந்” விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன். கிஞ்சித்காரம் ட்ரஸ்ட் ஏற்பாடு. விழாவில் 2000 பேர் ஒன்றாக பல்லாண்டு பல்லாண்டு பாடியது மறக்க முடியாத அனுபவம். திவ்ய தேசத் தொண்டு என்பது மிகவும் முக்கியமானது. ராமானுஜர் காலத்திலிருந்து அனந்தாழ்வான் மாதிரி நிறைய எடுத்துக்காட்டு இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து நூறு டாலர் அனுப்பும் காலத்தில் இந்த மாதிரி தொண்டு செய்பவர்கள் அபூர்வம் தான்.

பாம்பே கண்ணன் வெளியிட்ட பார்த்திபன் கனவு பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

மைலாப்பூரில் பேய்ழாவார் சன்னதி இருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு ஒரு மாலை சென்றிருந்தேன். அதன் முன் ஸ்ரீ தேசிகர் கோயில் இருக்கிறது. நான் கவனித்தது. அங்கே வருபவர்கள் இங்கே வருவதில்லை.

இட்லி விலாஸ் ஹோட்டல் கண்ணதாசன் சிலை பக்கம் இருக்கிறது. மாலை குழாப்புட்டு, குண்டூர் இட்லி என்று விதவிதமாகக் கிடைக்கிறது. போன வாரம் எனக்கு சரவணபவன் ஹோட்டலில் ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல வேண்டும்.

சாம்பார் சாதம் பார்சல் ஆர்டருடன் “கொஞ்சம் ஊறுகாய் வையுங்க” என்றேன்.
உடனே ஷாக் அடித்த மாதிரி
“சார் ஊறுகாய் தயிர் சாதத்துக்கு தான், இதுக்கு 7 வாழைக்காய் சிப்ஸ் தான் கிடைக்கும்”
“எனக்கு கொஞ்சம் ஊறுகாய் வேண்டும் அதுக்கு எக்ஸ்டரா எவ்வளவு”?
உடனே அவர் இருங்க என்று சூபர்வைசரிடம் கேட்க அவர் மேனஜரிடம் கேட்டு எனக்கு உள்ளங்கை அளவு ஊறுகாய் சிபாரிசு செய்யப்பட்டது. சாம்பார் சாதம் சாப்பிடத் திறந்த போது எனக்கு ஆச்சரியம் - சாம்பார் சாதமும் ஊறுகாய் அளவு தான் இருந்தது!

ஜீவன் அனைத்தும் உணவிலிருந்து உண்டாகின்றன ஜீவன்கள் அனைத்தும் முடிவில் உணவாகவே முடியும்” என்று தைத்ரீய உபநிஷம் சொல்லுகிறது.

சின்ன வயதில் சாப்பிட்ட ஜிஞ்சர் சோடா, பன்னீர் சோடாவை இப்போது காளிமார்க்கில் கிடைக்கிறது!.

எவ்வளவு பேர் கவனிக்கிறீர்கள் என்று தெரியாது, ஆனால் நல்ல குடிநீர் என்பது இலவசமாக கிடைப்பதில்லை. எல்லோர் வீட்டிலும் குடி நீர் வாங்கி தான் குடிக்கிறார்கள். சுத்தமான குடிநீர் என்பது, ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் சொல்லுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் குடிநீர் சேல்ஸ் 3000 கோடி என்று FMல் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

முன்பு எல்லாம் வாழைப்பழம் என்றால் விதவிதமாக கிடைக்கும். ரஸ்தாளி, கற்பூரவல்லி, செவ்வாழை, பூவம்பழம் என்று ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் ஸ்டிக்கர் ஓட்டிய சிருடை அணிந்த மாதிரி ஒரே வாழைப்பழம் தான் கிடைக்கிறது. வாழைப்பழத்தையும் தோல் பார்த்து வாங்க ஆரம்பித்துவிட்டோம். இன்னும் கொஞ்ச நாளில் நம்மூர் வாழைப்பழங்கள் கிடைப்பது அரிதாகிவிடும்.

சைக்கிளில் போகும் போது எல்லா முச்சந்திக்கும் ஒரு நாள் போனேன். எல்லா முச்சந்தியிலும் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. முச்சந்தியில் எப்படி பிள்ளையார் வர ஆரம்பித்தார் என்று யாராவது ஆராயலாம்.

சென்னை மேம்பாலங்கள் பல என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. அடையார் ஐ.ஐ.டிக்கு பக்கம் போகும் பாலத்தில் கார் பக்கம் பஸ் சென்றால் கார் குதிக்கிறது. கோட்டூர் புரம் பக்கம் இருக்கும் மூப்பனார் பாலத்தில் ஒரு பஸ் சென்றால் சைடில் ஒரு தினமலர் வாரமலர் அளவு சொருகும் அளவு தான் இடம் இருக்கிறது. இந்த பாலத்திலிருந்து நாற்பது கீமீ தூரத்தில் மாமல்லபுரத்தை காட்டிலும் இந்த பாலங்கள்தான் எனக்கு அதிசயமாகப் பட்டது.

ஸ்ரீ ஜெயந்திக்கு பழங்கள் விற்க ஆரம்பித்துவிட்டார்கள். பாண்டி பஜாரில் நேற்று பச்சையாக ஒரு காய் வைத்திருந்தார்கள். ரொம்ப யோசித்து பார்த்தும் அதன் பெயர் நினைவில் வரவில்லை. அந்த பெயர் தெரியாவிட்டால் தூக்கம் வராது என்று பத்து நிமிஷம் கழித்து அந்தக் கடைக்காரரிடம்
“இது என்ன ?” என்றேன்.
“இது தெரியாதா சார் இது தான் மானாட மயிலாட ‘கலாக்கா” என்றார்

Comments

  1. தொடர்ந்து எழுதுங்கள் சார், சுஜாதா படிப்பது போல இருக்கு..

    ReplyDelete
  2. Really loved the comment about Sara Ana bhavan sambar Saddam :). keep writing more frequently

    ReplyDelete
  3. Explaining the banana and more - http://t.co/67R9euOAyY

    ReplyDelete
  4. “இது தெரியாதா சார் இது தான் மானாட மயிலாட ‘கலாக்கா” என்றார் --- :-) நல்ல நாஸ்டால்ஜியாவில் திளைக்க முடியாமல், அந்த டுபாக்கூர் டிவி நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது தவிர, கட்டுரை அட்டகாசம், அதுவும் அந்த மூப்பனார் பாலத்து போக்குவரத்து விளக்கம் செம

    ReplyDelete

Post a Comment