Saturday, December 6, 2014

வணக்கம் சென்னை - 5

 திடீரென்று ஒரு நாள் பாரிஸ் கார்னரை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என்று புறப்பட்டேன். பாரிஸ் கார்னர், எலிஃபெண்ட் கேட், பிராட்வே, பூக்கடை, சௌகார்பேட்டை, ஜார்ஜ் டவுன் என்று பல இடங்கள் ஒரே இடத்தைக் குறிப்பிடுகிறது என்று நினைக்கிறேன். இதே மாதிரி சென்னையில் வேறு இடங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த கடைகளின் அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது. ஒரு தெரு முழுக்க செண்ட் விற்பனை, மற்றொரு தெரு முழுக்க பாத்திரக்கடை; ஜவுளி கடை, நகை என்று தெருவிற்கு தெரு வித்தியாசமாக இருக்கிறது. 

பைராகி மடம் என்று அழைக்கப்படும் பிரசன்ன வேங்கடேச பெருமாள்  கோயிலை அந்த கோயில் எதிர்த்த மாதிரி இருப்பவர்களுக்கு கூட தெரிவதில்லை. 400 வருடம் பழமை மிகுந்த இந்தக் கோயில் அங்கே வசிக்கும் மார்வாடி, சேட் உபயத்தில் ஸ்ரீநிவாசர் நன்றாக இருக்கிறார். அர்ச்சகர் புன்னகையுடன் எல்லோரையும் தங்கள் வீட்டுக்கு வரவேற்பதைப் போல வரவேற்று பெருமாள் சேவை செய்து வைக்கிறார். அர்ச்சனையை ராகத்துடன் பாடி அசத்துக்கிறார். கோயிலில் இருக்கும் ஆண்டாள் கொள்ளை அழகு. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். திருப்பதிக்கே லட்டு மாதிரி திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு இங்கிருந்து தான் ஆண்டு தோறும் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருட சேவையின் போது ஏழுமலையானுக்குச் சாத்தப்படுகிறது என்பது எனக்குத் அன்று தெரிந்த, தெரியாத தகவல். 

சௌகார்பேட்டை போய்விட்டு பானிபூரி, ஜிலேபி சாப்பிடவில்லை என்றால் உம்மாச்சி கோவிச்சிக்கும் என்று கொஞ்சம் டேஸ்ட் செய்துவிட்டு, இன்னொரு கடையில் மிளகாய் பொடி தூவிய மினி இட்லியைப் பதம் பார்த்துவிட்டு ஏதோ ஒரு பீடா தெருவில் நுழைந்து ஒரு பீடா போட்டுக்கொண்டு கிட்டதட்ட சேட்டாக மாறிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். இது வேறு உலகம். 
போன வணக்கம் சென்னையில் கமல்ஜி பற்றி எழுதியது ஞாபகம் இருக்கலாம். இந்த 'ஜி’ இலக்கணம் ரஜினிக்குப் பொருந்தாது.  ”ரஜினிஜி” என்று சொல்லிப்பாருங்கள் சரியாக வராது; சுஜிஜி அதே ரகம், சூப்பர் சிங்கரில் மனோஜி, சுபாஜி, சித்ராஜி போல சுலபமாக இருக்காது. ஜி வராத இடத்தில் சார்/மேடம் தான் சரியாக வரும். 

அது சரி ‘சர்ஜி’ என்று வருகிறதே என்று சந்தேகம் கேட்பவர்களுக்கு, இது வேற இலக்கணம், தொல்காப்பியருக்கு ஹிந்தி கற்றுகொடுத்த பின் அவரை கேட்கலாம். 

தஞ்சை மெஸ் மாறவில்லை. காலை ஏழு மணிக்கே பளிச் என்று உபசரிக்கத்  தொடங்கிவிடுகிறார்கள். இரவு ’கடப்பா’ வை சாப்பிடவே ஒரு கூட்டம் வந்துவிடுகிறது. ஸ்டேஷன் ரோடில் இருக்கும் காமேஸ்வரி மெஸ் குட்டி போட்ட மாதிரி இரண்டு வந்துவிட்டது. அண்ணன், தம்பி தகராறு என்று நினைக்கிறேன் “எதிர்த்த மாதிரி இருக்கும் காமேஸ்வரி மெஸ் எங்கள் கிளை கிடையாது” என்று நோட்டிஸ் ஓட்டியிருக்கிறார்கள். பழைய கடை ஒன்லி காஃபி கடை ஆகிவிட்டது, எதிர்கடை ஒன்லி டிபன். கூட்டமாக மக்கள் உப்புமா சாப்பிட்டுவிட்டு எதிர்கடையில் காஃபி சாப்பிட போகிறார்கள். அம்பானி பிரதஸ் மாதிரி தொழில் தெரிந்தவர்கள். 

இன்னும் ஒரு ஹோட்டல் புதிதாக வந்துள்ளது. நடேசன் பூங்கா பக்கம் கிரீன் ஓட்டல் இங்கே முழுக்க முழுக்க சிறுதானியம் கொண்டு தயாரிக்கும் உணவை பாக்கு மட்டையில் ( அட ஸ்பூன் கூட பாக்கு மட்டை ஸ்பூன் தான் !) கொடுக்கிறார்கள். சிறுதானிய சூப் ( கஞ்சி என்று கூட சொல்லலாம் ) சூப்பர். 

பல வருடம் கழித்து சத்யம் தியேட்டர் சென்றிருந்தேன். திரையரங்கு முழுக்க பாலிஷ் செய்து பள பள என்றாக்கியிருக்கிறார்கள். ‘டாய்லெட் ரெஸ்ட் ரூமாகி  முழுக்க கண்ணாடியில் கண்ணாடி அறை சேவை மாதிரி இருக்கிறது.  டாய்லெட் போகும் அந்த இரண்டு நிமிஷம் கூட நம்மை சின்னத்திரையில் சினிமா பார்க்க வைக்கிறார்கள். இடைவேளையின் போது, நகை, ஜவுளி என்று ஏகப்பட்ட விளம்பரங்கள். “ஆஹா இல்லை என்றால் உங்கள் பணம் சுவாஹா” விளம்பரம் மட்டும் ஐந்து முறை மாறி மாறி போடுகிறார்கள். எல்லா விளம்பரமும் முடிந்த பின்னர், பக்கத்தில் இருந்தவரிடம் “சார் இப்ப பார்த்துக்கொண்டு இருந்தோமே அது என்ன படம் ?” என்று கேட்டுத் தெரிந்துக்கொண்டேன். 
( படங்கள் இணையம் ) 

Monday, December 1, 2014

திருச்சிடா - 2


2007ல் சுஜாதாவுடன் திருச்சி மலைக்கோட்டை ரயிலில் பயணம் செய்த பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் மலைக்கோட்டை ரயிலில் கடந்த வாரம் திருச்சிக்குச் சென்றேன்.

சென்டரல் ஸ்டேஷனை விட எக்மோர் சுத்தமாக இருக்கிறது. நிறைய பேர் ‘ரயிலில் நீர்’ வாங்காமல் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்ததைப் பார்த்தேன். எக்மோர் ஸ்டேஷனில் எல்.ஈ.டி. அறிவிப்புத்திரை வைரம் போல ஜொலிக்கிறது.

ரயில் பெட்டிகள் சுத்தமாக, மொபைல் சார்ஜ் செய்ய வசதி எல்லாம் எனக்குப் புதுசு. மாம்பலம் வரும் முன்பே இளைஞர்களின் செல்ஃபோனில் படம் ஆரம்பித்து முதல் பாட்டு வந்துவிடுகிறது.

வழக்கம் போல், ஸ்ரீரங்கத்துக்குப் பிறகு ராக்போர்ட் எஸ்பிரஸ் தவழ்ந்து திருச்சி ஜங்ஷன் வந்து சேருகிறது. முகமூடி அணிந்துகொண்டு பணிப் பெண்கள் சுத்தமான ஸ்டேஷனை இன்னும் சுத்தமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

திருச்சி அவ்வளவாக மாறவில்லை. இன்னுமும் மெயின்கார்ட் கேட்டிலிருந்து வரும் பேருந்துகள், கோர்ட் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் பிள்ளையார் கோயிலோடு ஏமாற்றிவிட்டு போகிறது. பின்னாடி ஏதாவது பஸ் வந்தால் இரண்டு கண்டக்டர்களும் விசிலில் பேச, பஸ் அசுர வேகத்தில் பறக்கிறது. தில்லைநகர் சாலை இரண்டு இன்ச் அகலமாகத் தெரிகிறது. பெரிய ஆஸ்பத்திரி முன்பக்கம் மரங்கள் அகற்றப்பட்டு கட்டிடம் பளிச். மூலையில் இரண்டு வாட்டர் டாங்க்குகள் இன்னும் இருக்கிறது. ஐந்து ரூபாய் டிக்கெட்டில் ஊரையே சுற்றிக் காண்பிக்கிறார்கள்.

பஸ்ஸ்டாண்ட் பக்கம் இருக்கும் சங்கீதாவில் கூட்டமும், எதிர் பக்கம் மூத்திர நாத்தமும் மாறவில்லை. ஹோட்டல் முன் பக்கம் “அம்மா டாக்ஸி ஸ்டாண்ட்” புதுசு!.

சினிமாவில் ஒட்டடை படிந்த வீட்டை காண்பித்து, அடுத்த ஷாட்டில் கலரடித்த அதே வீட்டை “எப்படி இருந்த வீடு” என்ற ஃபீலிங்கிற்கு காண்பிப்பார்கள். சோனா மீனா தியேட்டர் அந்த மாதிரி ஆகிவிட்டது. மாரிஸ் தியேட்டருக்குப் பழுப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள். மெயின்கார்ட்கேட் பஸ் ஸ்டாப்பில் பிரம்பு கடை, சைக்கிள் கடை இன்னும் இருக்கிறது. ஜோசப் காலெஜ் வெளிக்கதவுக்கு மட்டும் புதுசாக பெயின்ட் அடித்துள்ளார்கள். சத்திரம் பேருந்து நிறுத்ததிற்குக் குடை அமைத்திருக்கிறார்கள்.

ஊர் முழுக்க நிறைய பரோட்டாக் கடைகளும், மருந்துக் கடைகளையும் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கா என்று திருச்சிவாசிகள் ஆராயலாம். காலை 8 மணிக்கே பரோட்டா மாவு பிசைந்து பரோட்டா தட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பல வருடங்கள் கழித்து, பாலக்கரையில் இருக்கும் கிருஷ்ணா ஆயில் மில்லுக்குச் சென்ற போது நல்லெண்ணெய் மணம் சுண்டி இழுத்தது. பட்டாசு கடை போல ஒருபக்கம் பில், ஒரு பக்கம் சரக்கு என்று எண்ணெய் விற்பனை வழுக்கிக்கொண்டு போகிறது. காந்தி மார்க்கெட் அப்பாய் மளிகையில் வாடிக்கையாளர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்க கூட முடியாமல் ஆள் ஆளுக்கு மும்முரமாக எதையோ கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

திருச்சி பீம நகர் சட்டி பானை கடை, பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பக்கம் மர ஸ்டூல், பெஞ்ச் கடை, பிரமந்தா சர்பத் கடை எல்லாம் அப்படியே இருக்கிறது.

முசிறி, தொட்டியம் பக்கம் இருக்கும் கிரமத்துக்கு சென்று வந்தேன். ஊர் முழுக்க வாழை. பூவம், கற்பூரவல்லி, ரஸ்தாளி, ஏலக்கி சாகுபடி செய்கிறார்கள். இங்கிருந்து தான் கர்நாடகா, மஹாராஷ்டராவிற்குப் போகிறது என்பதை கேட்டு ஆச்சரியப்பட்டேன்.
துடப்பத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சந்தியாவை கூப்பிட்டு
“துடப்பம் எதற்கு?”
“பட்டாம் பூச்சி பிடிக்க”
“எப்படி பிடிப்ப?”
“இதோ இப்படி” என்று செய்து காண்பித்தாள்
”ஸ்கூல் கிடையாதா ?”
வெட்கப்பட்டுக்கொண்டு “ஸ்கூல் இருக்கு” என்று ஓடிவிட்டாள்.

இந்த ஊரில் என்னை கவர்ந்தது அந்த ஊர் தென்னை மரங்கள். தென்னை மரங்கள் பல மொட்டையாக இருக்கிறது. ஒருவரிடம் கேட்டதற்கு “எங்க தம்பி காமராஜர் காலத்துல போட்ட வாய்க்கா இப்ப தண்ணீரே இல்லை இப்ப இருப்பவர்கள் பேசுகிறார்கள் ஆனால் ஒண்ணும் செய்வதில்லை” என்று அலுத்துக்கொண்டவரின் மகன் ஏதோ ஒரு ஐ.டி கம்பெனியில் வைஸ் பிரசிடண்டாக இருக்கிறார்.

திருச்சியில் குளிர் என்று சொல்ல முடியாது, ’பிளசண்ட்’ க்ளைமேட் என்று சொல்லலாம். அதுக்கே எல்லோரும் camouflage டிசைனில் காதுக்குக் கவசம் அணிந்துக்கொண்டு ஊர் முழுக்க அலைகிறார்கள்.

ஞாயிறு காலை ஸ்ரீரங்கம் சென்ற போது, எல்லா கடைகளிலும் “ஏன் காங்கிரஸ் ? குஷ்பு ‘ஃபீலிங்’, ஐயப்பா கருப்பு, காவி வேட்டிக்குப் போட்டியாக எல்லாக் கடைகளிலும் தொங்கியது. ராஜகோபுரம் தாண்டியவுடன் எல்லா ஜவுளி கடைகளிலும் புடவை, வேட்டிகளுக்கு மலையாள வாசனை அடித்தது.

இந்த முறை ஸ்ரீரங்கம் கோயில் முழுக்க வித்தியாசமாக இருந்தது. எல்லா கோபுரங்களுக்கும் பச்சை முக்காடு போடப்பட்டு, ஒரு பெரும் படையே புனரமைப்பு வேலையில் ஈடுபட்டுள்ளது. கோபுரங்களுக்கெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘வாட்டர் கலர்’ அடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லுகிறார்கள். உபயம் தமிழ்நாடு அரசும், டிவிஎஸ் கம்பெனியுமாம்.

முதலாழ்வர்கள் சன்னதி பின்புறம் புதிதாக நூறு கால் மண்டபம் முளைத்துள்ளது. ரங்கா ரங்கா என்று எதிரொலிக்கும் சுவர் பக்கம் இருக்கும் தோதண்டராமர் சன்னதியில் விளக்கு எரிந்துக்கொண்டு இருக்க அங்கே இருக்கும் தூண்களில் ‘ஆசிட் சோடா’ அடித்து பழைய பெயிண்ட் கறைகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அட அங்கே ஒரு கிணறு கூட இருக்கிறது!.

எப்போதும் பூட்டியே இருக்கும் பிள்ளைலோகாச்சாரியார் சன்னதி திறந்து இருக்கிறது. தீர்த்தம், சடாரி எல்லாம் கிடைக்கிறது. திருகச்சி நம்பிகள் சன்னதியில் எனக்குப் பிரசாதம் கூடக் கிடைத்தது!.

ரங்கவிலாஸ் மண்டபத்தில் இடுக்கில் இருக்கும் சன்னதிகளில் அதிவேக அழுத்தத்தில் தண்ணீர் அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல சன்னதிகளில் சிமெண்ட் சுவர்கள் இடிக்கப்பட்டு, நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கம் கோயில் எப்படி இருந்ததோ அப்படி கொண்டு வர முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது. இப்படிச் செய்யும் போது பல பழைய கல்வெட்டுகள் அழிந்து போகாமல் இருக்க அவர்கள் முயற்சிகள் எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இன்னும் ஆறு மாதத்தில் ஸ்ரீரங்கம் வேறு விதமாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

பெரிய பெருமாளைச் சுற்றி ஆதிஷேன் போல கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. 250ரூபாய் டிக்கெட்டிற்கே வாசல் வரை கியூ நிற்கிறது.

மேலும் சில புதுவரவுகள் - அம்மா மண்டபம் பக்கம் கும்பகோணம் காபி கடையும், சைக்கிளில் 100 ரூபாய்க்கு உள்பாக்கெட் வைத்த பல வண்ணக் கதர் சட்டை விற்பனையும், முரளி காபி கடையில் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமா இருப்பவர் செடி கொடிகள் போட்ட அவாயி(Hawaii) ஹாலிடே சொக்கா, பர்முடாவுடன் பார்த்தது புதுசு. இவரைப் பார்த்த பிறகு ஸ்ரீரங்கம் கோயில் கெட்டப் மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது!. தன்வந்தரி சன்னதி பக்கம் எப்போதும் ஒடிக்கொண்டு இருக்கும் அந்த பூனை பழசு!.

ஞாயிறு மாலை ஸ்ரீவட்சன் வீட்டுப்பக்கம் சென்றேன்.
ஸ்ரீவட்சன் என் வகுப்புத் தோழன். ஒரே பையன். வேன்பு சன்ஸ் என்று கடை வைத்திருந்தார்கள். காத்ரேஜ் பீரோ, லாக்கர் எல்லாம் திருச்சியில் வாங்க வேண்டும் என்றால் இவர்களின் கடைக்குதான் வருவார்கள். ”தேக்சா” என்று அவனை கிண்டல் செய்வோம். ( ’தேக்சா’ என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாது ) ஏழாவது படிக்கும் போது அவனை நானும் என் நண்பர்கள் சிலரும் கிண்டல் சண்டை வந்து பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது.

+2ல் அவன் காம்ர்ஸ் நான் சயின்ஸ் வெவ்வேறு வகுப்பு, பேசுவதற்கு அவ்வளவாக சந்தர்ப்பம் கிடையாது. கல்லூரிக்கு சென்ற பிறகு சந்திக்கும் சந்தர்ப்பமும் இல்லாமல் போய்விட்டது. மளிகை கடைக்கு வந்தால் பார்த்துக்கொள்வோம் ஆனால் பேச மாட்டோம். ஈகோ!.

சென்னையில் வேலைக்கு சென்ற பிறகு வாரயிறுதிக்கு ஒரு முறை திருச்சிக்கு வந்த போது அம்மா “ஸ்ரீவட்சன், ஆக்ஸிடண்டில் போய்ட்டாண்டா” என்றாள். சில வருடங்களில், அவனுடைய தந்தை இறந்துவிட அவனுடைய வீட்டைப் பார்த்தாலே ஏதோ செய்யும். இந்த முறை திருச்சிக்குச் சென்ற போது மாலை அவன் வீட்டுப்பக்கம் சென்று எட்டிப்பார்த்தேன். வீடு முழுக்க இருட்டாக, கார்த்திகைக்கு வெளியே ஒரு விளக்கு மட்டும் அசங்காமல் எரிந்துக்கொண்டு இருந்தது. திரும்ப வந்துவிட்டேன்.Wednesday, November 12, 2014

வணக்கம் சென்னை - 4

சென்னையில் பண்பலை வரிசையில் பாப்புலர், பிந்து அப்பளம் எல்லாம் நமத்துப் போகும் அளவுக்கு தீவாவளி சமயம் மழை அடித்தது.

தீவாவளி முடிந்து பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிய போது செண்டரல் ஸ்டேஷனில் ஓர் இடத்தில் நீர்வீழ்ச்சி போல ஜலம் கொட்டிக்கொண்டிருந்தது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் நியூஸ்பேப்பரை கீழே விரித்துத் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

வெளியே ”ஆட்டோ வேண்டுமா?” என்று கேட்ட அந்த குங்குமப் பொட்டுக்காரரிடம் “தி.நகர்” என்று சொன்னவுடன் பதில் பேசாமல், எனக்கு பின் வந்தவரிடம் ஆட்டோ வேணுமா? என்று கேட்கப் போய்விட்டார். அடுத்து வந்தவர் ”800 ஆகும் சார் தி.நகர் முழுக்க ஒரே தண்ணி" என்றார்

சென்னையில் இந்த சாதாரண மழைக்கே ராஜ்பவன் செல்லும் சாலை ’ஐ’ படத்தில் விக்ரம் மூஞ்சி போல ஆகிவிட்டது. மற்ற இடங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை தி.நகர் நாயர் சாலையில் சைகிள் ஓட்டிக்கொண்டு போன போது, போலீஸ் என்னை தடுத்தார்கள். பயத்தில் வேர்த்துவிட்டது என்ன விஷயம் என்று கேட்டதற்கு அங்கே 8x8 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்ட இடத்தை காண்பித்தார். நல்ல வேளை யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை.

தீவாவளிக்கும் கிருஸ்துமஸுக்கும் இடைப்பட்ட காலத்தில் ”மெட்ராஸ் ஐ” வழக்கம் போல் வந்து பலர் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு அலைந்ததை ஊர் முழுக்க பார்க்க முடிந்தது.

மழைக்கு சாக்கடையும், மழைத்தண்ணீரும் கலந்த ஜிகர்தண்டாவை சகித்துக்கொள்ளும் சென்னை மக்கள்; பச்சை சிக்னல் கிடைத்ததும் பொறுமை இல்லாமல் ஹார்ன் அடித்து முன்னாடி இருப்பவரை பூச்சாண்டி காட்டி பயமுறுத்துற மாதிரி செய்கிறார்கள். பஸ், லாரி பற்றி கேட்கவே வேண்டாம். யாரும் இல்லாத ரோடுகளில் கூட ஹார்ன் அடித்து தங்கள் இருப்பை, சந்தோஷத்தைத் தெரியப்படுத்துகிறார்கள். அதிகமாக ஹாரன் அடிப்பது ஒருவிதமான மனவியாதியோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் சென்னையில் வந்து இறங்கும் விமானமும் ஹார்ன் அடித்தால் ஆச்சரியப்படமுடியாது.

தி.நகர் போதீஸ் எதிரே இருக்கும் பாலத்துக்கு அடியில் பொதுஜனக் கூட்டம் எல்லாம் ஓய்ந்தபின் அங்கே வேறு வாழ்க்கை தொடங்குகிறது. பலூன் விற்கும் ஒரு குடும்பம் கந்தல் துணிகளை கீழே விரித்து குழந்தைகளைத் தூங்க வைக்கிறார்கள். இங்கேயே வசித்து, இரண்டு லிட்டர் பெப்ஸி பாட்டில் தண்ணீர்ல் பல்தேய்த்து, எதிர்த்த கடையில் டீ குடித்துவிட்டு தங்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள். நெற்றியில் அடிப்பட்ட புண் ஆறாத அந்தக் கிழவி பாரதி புத்தக நிலையம் வாசலில் சொறி பிடித்த நாய்க்கு உண்ணிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறாள். எப்போது போனாலும் ஜி.ஆர்.டி கதவு இடுக்கு வழியாக ஏசி தப்பித்துக்கொண்டு, கடை மூலையில் இளநீர் குவியலை பார்க்கலாம். சில சமயம் அதன் பக்கம் யாராவது சிறுநீர் கழித்துக்கொண்டு இருப்பார்கள். (இளநீர் வாங்கி பிறகு தேங்கா மட்டை ஸ்பூனில் அந்த வழுவலை சாப்பிடும் போது? )

கமல் பிறந்தநாள் முழுவதும் எல்லா பண்பலை வரிசைகளிலும் விளம்பரங்களுக்கு இடையில் கமல் பாடல்களைத் திகட்டத் திகட்ட ஒலிபரப்பினார்கள். சென்னையில் உலக நாயகன், தாய்மை நாயகன் என்று பல போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. மோதியின் ’ஸ்வச் பாரத்’ திட்டத்திற்காக மாடம்பாக்கம் ஏரியை நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களுடன் சென்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார் என்று செய்திகள் வந்தது.

பெங்களூரைக் காட்டிலும், சென்னை மக்கள் அதிகம் குப்பை போடுகிறார்கள் என்று சொன்னால் கோபம் வரலாம்.

ஸ்வச் பாரத் திட்டம் பற்றிய விளம்பரம் எல்லா பண்பலை வரிசைகளிலும் (ஒரு வாரத்துக்கு முன்வரை) ஹிந்தியில் தான் ஒலிபரப்பிக்கொண்டு இருந்தார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு சென்னையில் பலருக்கு ஹிந்தி வார்தைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அலுவலகத்தில் பலர் பெயருக்கு பின் ‘ஜி’ போட்டு அழைக்கிறார்கள். கமல் பிறந்தநாள் அன்று எ.ஃப்எம் ரோடியோவில் கூட கமல்ஜி என்றுதான் அழைத்தார்கள். ’ஜி’ இப்போது தமிழ் வார்த்தை ஆகிவிட்டது, இன்னும் கொஞ்ச நாளில் வேறு சில வார்த்தைகள் தமிழுக்கு வர வாய்ப்பிருக்கிறது. வந்தால் சந்தோஷம் ஹை.

இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விளம்பரங்களின் இறுதியில் “நிபந்தனைகளுக்கு உட்பட்டது... Insurance is the subject matter of solicitation...read the offer document carefully" என்பதை நூறு மீட்டர் ஓட்டப்பந்தய வீரரை விட்டு பேசச் சொல்லுவது ஏன் என்பது புரியாத புதிர். சமீபத்தில் ’ஃபூச்சர் குருப்’ விளம்பரம் ஒன்று எஃப்எம் ரேடியோவில் வந்து பிறகு கடைசியில் இது மாதிரி ஏதோ சொன்னார்கள். காரை ஓரம்கட்டி பலமுறை கேட்டுப்பார்த்தும் என்ன என்று புரியவில்லை. இன்று பல் தேய்த்து வாய்கொப்பளிக்கும் போது விடை தெரிந்தது - கொப்பளிக்கும் ஓசை அதே மாதிரி இருந்தது.


Saturday, November 1, 2014

ஆழ்வார்கள் விஜயம்

ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு ஆழ்வார்கள் அறிமுகமானார்கள். அந்த வயதில், திருப்பாவை முதல் இரண்டு பாடலும், கடைசி இரண்டு பாடலும் மனனம். அப்பாவுடன் சைக்கிளின் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் போது, திருப்பாவை, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவர்களுடைய அவதார ஸ்தலம், அவர்களைப் பற்றிய கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வருவார்.

கல்லூரி நாள்களிலும் தொடர்ந்து ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள அழகு, பக்தி பற்றிய பேச்சு, அப்பாவுடன் அவதார ஸ்தல விஜயம் என ஆழ்வார்கள் கூடவே வந்தார்கள்.

ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை (இருபது வருடம் இருக்கும்) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் எல்லா ஆழ்வார்களையும் வரிசையாகப் பார்த்த போது அதுபோலவே வீட்டிலும் சின்னதாக மாடல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அதே மாதிரி மாடல் செய்ய-- கூகிள் இல்லாத காலத்தில்-- ஆழ்வார்கள் அவதார ஸ்தலத்தில் உள்ள உற்சவர் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். பதினாறு வருடங்கள் முன்பிருந்தே ஆழ்வார்களின் அவதார ஸ்தலத்தில் உள்ளது போலவே சின்னதாக யார் செய்து கொடுப்பார்கள் என்று தேடத் தொடங்கினேன்.

ஆழ்வார்கள் கோஷ்டி
பல இடங்களில் விசாரித்தபோது “இவ்வளவு சின்னதா அதே மாதிரி செய்ய இப்ப ஆள் கிடையாது” என்பார்கள் அல்லது ”சார் இவ்வளவு சின்னதா செய்யும்போது நுட்பமா வராது” என்பார்கள். கும்பகோணம் பாத்திரக்கடைகளில் அழுக்கு படிந்த ஏற்கனவே செய்து வைத்த ‘ஆழ்வார் செட்’டைக் காண்பிப்பார்கள். வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்பவர்கள் “ஃபோட்டோவில் இருக்கறதைவிட பிரமாதமா செஞ்சுடலாம் சார் அட்வான்ஸ் கொடுங்க” என்பார்கள்.

சென்ற வருடம் மலையாள திவ்ய தேச யாத்திரையின் போது என் நீண்ட நாள் கனவு நனவாக வாய்ப்புக் கிடைத்தது. சொல்கிறேன்...

யாத்திரையின் போது பஸ்ஸில் என் பக்கத்தில் இருந்தவரிடம் ( ஸ்ரீ ஸ்ரீதரன் ஸ்வாமி, ஸ்ரீரங்கம், ரிடையர்ட் ஸ்டேட் பேங்க் மேனேஜர் ) வைகுண்ட ஏகாதசி பற்றி பேசிக்கொண்டு இருந்த போது ஆழ்வார்கள் பற்றிய என் கனவை அவரிடம் சொன்னேன்.

எனக்கு யாரையும் தெரியாது, ஆனால் என் கூட வங்கியில் பணி செய்த ‘தேனுகா’ ஸ்ரீநிவாசன் கும்பகோணத்தில் இருக்கிறார். அவர் ஓவியம், சிற்பங்கள் மற்றும் கலை விமர்சகர். அவருக்கு யாரையாவது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்று அவர் தொலைப்பேசி எண்ணை என்னிடம் தந்தார்.

ஒரு நாள் காலை தேனுகாவிடம் என் விருப்பத்தை பற்றிப் பேசினேன். “இப்ப இது மாதிரி செய்ய யாரும் இல்லை, இருந்தாலும் நிறைய வேலை, பொறுமை வேண்டும். செய்வார்களா என்று தெரியாது.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என்றார்.

ஒரு மாதம் கழித்து திரும்பவும் அவருடன் தொலைப்பேசினேன் “உங்களுக்கு வித்தியாசங்கர் ஸ்தபதி தெரியுமா?” என்றார்.

“தெரியாது”

”நீங்கள் கேட்பது மாதிரி அவர்தான் செய்ய முடியும், இப்ப உள்ளவர்களுக்கு அந்த நுணுக்கம் எல்லாம் தெரியாது, எல்லாம் கமர்ஷியல் ஆகிவிட்டது”

”அவரிடம் கேட்க முடியுமா ?”

”அவருக்கு வயது ஆகிவிட்டது, தவிர அவர் ரொம்ப பிஸியா எங்காவது சுற்றிக்கொண்டு இருப்பார். இப்ப அவர் சிற்பம் எல்லாம் செய்வதில்லை. பன்னிரண்டு ஆழ்வார்கள் பெரிய வேலை, இந்த வேலை எல்லாம் எடுத்துப்பாரா என்று தெரியாது”

“கேட்டுப்பாருங்களேன்”

”சரி உங்க விருப்பத்தை அவரிடம் சொல்கிறேன். அவரை நான் வற்புறுத்த முடியாது”
வித்தியாசங்கர் ஸ்தபதி

ஒரு மாதம் கழித்து திரும்ப அவரிடம் கேட்டதற்கு, “சொன்னேன் அவர் யோசிக்கிறார். திரும்ப நான் அவரிடம் அதைப் பற்றி கேட்கவில்லை. விருப்பம் இருந்தால் அவரே என்னிடம் பேசுவார்”

“எதுக்கும் இன்னொரு முறை பேசிப்பாருங்களேன்”

சில வாரங்கள் கழித்து தேனுகாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்த்து. “ஸ்தபதியிடம் உங்க விருப்பத்தைச் சொன்னேன், உங்களை நேரில் பார்த்து பேசிய பிறகு முடிவு செய்வார்” என்றார்.

கும்பகோணம் சென்று தேனுகாவை முதல் முறை சந்தித்தேன். படத்தில் இருப்பது போல எளிமையான மனிசாதாரணமாக இருந்தார். தன்னுடைய பைக்கில் சுவாமி மலைக்குப் போகும் வழியில் இருக்கும் வித்தியாசங்கர் ஸ்தபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

செம்புப் பட்டைகள், சிற்பத்தின் கை, கால்கள், நவீன சிற்ப வடிவங்கள் என்று வீடு முழுக்க இறைந்து கிடந்தது.

நான்கு முழ காவி வேட்டி, தாடி, குங்குமப் பொட்டு என்று பார்க்க துறவி போலக் காட்சி அளித்தார் வித்தியாசங்கர் ஸ்தபதி.

ஸ்தபதியிடம் என் விருப்பத்தையும், நான் சேகரித்த படங்களையும் காண்பித்தேன். ஒவ்வொரு படத்தையும் அதன் லட்சணத்தையும் பார்த்து ரசிக்க ஆரம்பித்தவர், “இந்த ஆழ்வார் ராஜாவாக இருந்திருப்பார்.. நான் சொல்லுவது சரிதானே..?...இந்தச் சிற்பம் சோழர் காலத்துச் சிற்பம்.. என்ன அழகு!” என்று வியந்தோதினார். ஓர் ஆழ்வாரின் மூர்த்தியைப் பார்த்து “சில வருடங்களுக்கு முன் செய்தது.. இது பழைய சிற்பம் இல்லை” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

”எனக்கு நீங்கதான் செஞ்சு தரணும்” என்றேன்.

படம்: நன்றி விகடன்
“நீங்க கேட்பது மாதிரி எல்லாம் செய்ய இப்ப ஆள் கிடையாது, இந்த வேலையை எடுத்துக்கொண்டால் தவம் போல செய்து முடிக்க வேண்டும். முன்ன மாதிரி உடம்பு ஒத்துழைக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் ஸ்ரீரங்கம் எல்லாம் போய்விட்டு வரேன். எனக்கு செய்யணும்னு உத்திரவு வந்தா உங்களை தேனுகா மூலம் தொடர்பு கொள்கிறேன்” என்றார்.

85 வயது வித்தியாசங்கர் ஸ்தபதி பற்றி தேனுகா கூறியது:
"வித்தியாசங்கர் பூர்வீகம் சுவாமிமலை. இவருடைய அப்பா கௌரிசங்கர் ஸ்தபதி ஸ்ரீரங்கம் கோயிலோட ஆஸ்தான ஸ்தபதி. இவருடைய தாத்தா திருவெள்ளறையின் ஸ்தபதி.

இவருடைய தந்தை ஸ்ரீரங்கம் யானை மண்டபத்தில் கோயிலில் பட்டறை அமைத்து வேலை செய்யும் போது, இவர் அங்கே விளையாடிக்கொண்டு இருப்பார். பிறகு ஸ்ரீரங்கம் சேஷராய மண்டபத்தில் திமிரிப் பாயும் குதிரைகளின் கற்சிலையை வியந்து ரசிக்க ஆரம்பித்தார்.

இவருடைய உறவினர்கள் அனைவரும் சிற்ப நேர்த்தியறிந்த ஸ்தபதிகளாகவும், ஆகம விதிப்படி கோயில் கட்டிட வேலை செய்தும் வாழ்ந்து வருகிறார்கள். செம்பொன்னாலும், ஐம்பொன்னாலும் செய்யப்பட்ட சிலைகளோடுதான் இவர்களது வாழ்க்கை!.

பால்ய வயது ஸ்ரீரங்க சிற்பச் சூழல் வித்தியாசங்கரின் சிற்ப உலகிற்கு வழிவகுத்தது. 1962-இல் சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவரானார். நவீன சிற்பங்கள் இவரை வெகுவாக கவர்ந்தாலும், மரபை விட்டுவிடவில்லை.

பிறகு கும்பகோணம் ஓவியக் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பல சிற்பங்களை வடித்து, பலரை ஆச்சரியப்படுத்தினார்.

’சுஹாசினி’ என்னும் இவரது சிற்பம் பார்ப்பவரைச் சுண்டி இருக்கும் தன்மை கொண்டது. பல்வேறு யெளவனக் கனவுகளுடன் புன்சிரிப்பில், சாமுத்ரிகா லட்சணகளைக் கொண்ட இப்பெண் தலையணையிட்டுப் படுத்திருக்கிறாள். துண்டித்து ஒட்டி வைக்கப்பட்ட இவள் கைகள் உடலின் பாகங்களாக ஒட்டிக்கொள்வது பார்ப்போரை அதிசயிக்க வைக்கும். (இவரது சிற்பங்கள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம் ).

மத்திய அரசின் தேசிய விருது, தமிழக அரசின் கலைச்செம்மல் விருது என்று எண்ணற்ற விருதுகளை பெற்ற இவரது சிற்பங்கள் இந்தியா, க்யூபா, சிங்கப்பூர், மலேசியா போன்ற அருங்காட்சியகங்கள், கண்காட்சிகளில் இடம்பெற்றுவருகின்றன.

லலிதகலா அகதமியின் தென் மண்டலப் பிரிவு சென்னையில் சமீபத்தில் இவருக்கு "ஆர்டிஸ்ட் ரெசிடன்சி" எனும் மிகப் பெரிய கௌரவத்தை வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கம் ஹை ஸ்கூலில் தன் ஓவியத்துக்காக ராஜாஜி கையால் பரிசு பெற்ற இந்த சிற்பி, இப்பவும் மாதம் இரண்டு முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றுவிடுவார்; சிற்பங்களை பார்க்க தான்!.


ஸ்தபதியை சந்தித்து பிறகு இரண்டுமாதம் இதை பற்றி மறந்துவிட்டேன். ஒருநாள் தேனுகாவிடமிருந்து மீண்டும் தொலைப்பேசி அழைப்பு வந்தது.

“ஸ்தபதி சரி என்று சொல்லிவிட்டார். கும்பகோணம் வந்தால் சந்தித்து மேற்கொண்டு பேசலாம்” என்றார்.

சில வாரம் கழித்து கும்பகோணம் சென்றேன். ஸ்தபதியிடம் தேனுகா அழைத்து சென்ற போது “அவர் ஒத்துக்க மாட்டார் என்றுதான் நினைத்தேன். உங்களுக்குச் செய்துதர வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கு. அதிர்ஷ்டம் தான்” என்றார்.

ஸ்தபதியிடம் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். தொண்டரடிப்பொடி ஆழ்வார் கையில் பூக்கூடை இருக்க வேண்டும் போன்ற ஒவ்வொரு ஆழ்வார் பற்றியும் சொல்லும் போது குறிப்பு எடுத்துக்கொண்டார்.

ஒரு மாதத்தில் மெழுகில் செய்த ஓர் ஆழ்வார் வார்ப்பு போட்டோவை தேனுகா எனக்கு அனுப்பினார். தொலைப்பேசியில் நான் கேட்ட (காது, மூக்கு எல்லாம் பெரிசா இருக்கே?) சந்தேகம் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்தார்.

இரண்டு மாதத்தில் எல்லா ஆழ்வார்களின் மெழுகு வார்ப்புப் படங்களை எனக்கு அனுப்பி “அருமையா வந்திருக்கு தேசிகன்” என்றார் தேனுகா.

மெழுகு வார்ப்பு எப்படி சிலையாகிறது என்று தெரியாதவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

(https://www.youtube.com/watch?v=8SuEzTXCk4c )

திருமங்கை ஆழ்வார் மெழுகு வார்ப்பு
ஒவ்வொரு சிலை செய்யும் போதும், நாள்
நட்சத்திரம், நேரம் எல்லாம் பார்த்துதான் செய்கிறார்கள். அதே போல சிலை செய்து முடித்த பின்பும் பூஜை செய்கிறார்கள். உலோகத்தை மெழுகு வார்ப்பில் ஊற்றி அது சிற்பமாக வெளிவருவது பிரசவம் மாதிரியான வேலை என்றார் ஸ்தபதி. ஒரு முறை ஏதாவது தவறு என்றால், திரும்ப மெழுகு வார்ப்பு செய்ய வேண்டும் !.

நான்கு மாதம் கழித்து ஆழ்வார்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கு நீங்கள் நேரில் வந்து அழைத்துக்கொண்டு போகலாம் என்று தேனுகா தொலைப்பேசினார். ஸ்தபதியை நேரில் பார்த்து ஆழ்வார்களை பெற்றுக்கொண்டு தேனுகாவிற்கு நன்றி சொன்னேன். கடந்த எட்டு ஒன்பது மாதங்களாக அவர் எனக்காக பல உதவிகள் செய்திருக்கிறார். ஸ்தபதி வீட்டுக்கு செல்வது, அவர் செய்யும் மெழுகு வார்ப்புப் படங்களை எனக்கு அனுப்புவது, நான் சொல்லும் திருத்தங்களை ஸ்தபதியுடம் சொல்லுவது என பல உதவி!. அவருக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று எண்ணி அவரிடம் என் விருப்பத்தைச் சொன்னேன்.

”அட அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் எதுவும் செய்யலை... . உங்க ஆவல், விடாமுயற்சிக்கு உதவி செய்தேன்”

“இல்லை சார் என் நீண்ட நாள் கனவு இது, உங்கள் மூலமாக நிறைவு பெற்றிருக்கிறது. ஏதாவது செய்ய வேண்டும்” என்றேன் மீண்டும்.
திருமங்கை ஆழ்வார் உற்சவர் 
“எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால்... என் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்

புத்தகம் எழுதுவாரா ? தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணிக்கொண்டேன்.

மாலை நான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்து “தோற்றம் பின்னுள்ள உண்மைகள் - தேனுகாவின் கலை இலக்கியப் படைப்புகள்” என்ற 400 பக்கப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்டேன்.

ஆழ்வார்கள் வீட்டுக்கு விஜயம் செய்த அன்று பங்குனி உத்திரம். ஸ்தபதியிடம் மாலை மூன்று மணிக்கு ”பெங்களூர் வந்து சேர்ந்தேன்” என்று சொன்னவுடன் “உங்கள் தகவலுக்காக தான் காத்துக்கொண்டு இருந்தேன். இனிமேல் தான் சாப்பிடணும்” என்றார் அந்த 85 வயது முதியவர்.

தேனுகாவை பற்றி இதற்குமுன் எனக்கு அவ்வளவாக தெரியாது. ஊருக்கு வந்து அவருடைய புத்தகத்தைப் படித்தபோது அதில் முழுவதும், இசை, ஓவியங்கள், சிற்பம் பற்றி பல கட்டுரைகளை அவர் அடுக்கியிருந்தார். குறிப்பாக அவர் எழுதிய நாதஸ்வர ஆவணப்படம் பற்றிய அவர் அனுபவம் என்னை வெகுவாகக் கவர்ந்த்து. இவ்வளவு பெரியவரை நான் சாதாரணமாக உபயோகப்படுத்திவிட்டேனோ என்று உள் மனம் சொன்னது.

தேனுகா 
க.நா.சு, கரிச்சான்குஞ்சு போன்றவர்களிடம் பாராட்டுப் பெற்றிருக்கிறார். நாதஸ்வர இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம்பிராயத்தில் நாதஸ்வர கலைப் பயிற்சியும், தாளக் கலைப் பயிற்சியும் பெற்றவர். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் கலை இளைஞர் பட்டம் பெற்றவர். 1990-இல் தமிழக அரசு விருதோடு மேலும் பல விருதுகளைப் பெற்றவர்.

ஆழ்வார்களுக்கு உடை எல்லாம் அணிவித்து அவருக்கு அதன் படங்களை அனுப்பினேன். சிற்ப உடை பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இதில் கூட முனைவர் பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்றார். சிற்பம் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளார் என்று நினைத்துக்கொண்டேன்.

"உங்களை பற்றி முழுவதும் தெரியாமல் போய்விட்டது. அடுத்த முறை சந்திக்கும் போது உங்கள் நாதஸ்வர அனுபவம் பற்றிப் பேச வேண்டும்" என்றேன்.

”தாராளமாக” என்றார்.

நேற்று தேனுகா அவர்கள் கடந்த வாரமே இந்த உலகை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். இந்தப் பதிவு அவருக்குச் சமர்ப்பணம்.

1-11-2014
பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்

பிகு:
செய்திகள்:
காலம் அள்ளிக்கொண்ட கலா ரசிகர்!

Tuesday, September 16, 2014

பகல் வேஷம்

வெயில் இல்லாத இன்று காலை ’ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா படங்களை பார்த்துக்கொண்டு இருந்தபோது வெளியே கானம் ஒன்று கேட்டது. ராம கானம். அனுமாரை தவிர இவ்வளவு நல்ல ராம கானத்தை யார் பாட முடியும் என்று வெளியே பார்த்தபோது அனுமாரே பாடிக்கொண்டு இருந்தார்.

காலில் சலங்கை, பிளாஸ்டிக் மூக்கு, ஜிகினா பேப்பர் கீரிடம், தாடிக்கு ஏதோ புசுபுசு துணி, நெற்றியில் பச்சை பெயிண்ட் என்று அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் அவர்.

அவர் அடுத்த வீட்டுக்கு சென்ற பிறகும் அவர் குரலின் வசீகரம் என்னை இழுத்தது. அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்து அவரை தேடிக்கொண்டு சென்றேன். தேடுவது கஷ்டமாக இல்லை. அவர் குரல் வந்த திசையை நோக்கி சென்றேன்.

Friday, August 15, 2014

வணக்கம் சென்னை - 3

சென்னை வெயிலும் வேர்வையும் பழகிவிட்டது. சினிமாக் கதாநாயகன் பாடல் காட்சியில் விதவிதமாக உடை மாற்றுவது போல வேர்த்துக்கொட்டும் போது மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த முறை நான் கவனித்த சில விஷயங்கள்.

இரண்டு இலக்கியம் ஒரு ஆன்மீகம் என்று மூன்று விழாக்களுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் விழாவில் என் பக்கத்தில் உட்கார்தவர் கை பேசியில் பேசியது பத்து அடி சுற்றளவில் உட்கார்ந்த எல்லோருக்கும் கேட்டது.

மறுமுனை என்ன சொன்னது என்று தெரியாது. ஆனால் இவர் பேசியது இது தான்.

Saturday, August 9, 2014

தூது சென்ற தூதுவளை

தூதுவளை கொடி
போன வாரம் தூதுவளை கீரை ( இதன் தாவரப் பெயர் Solanum trilobatum என்பதாகும். செடி முழுக்க ஏன் இலையில் கூட முட்கள் இருக்கும்) சென்னையில் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்க தொடங்கினேன். “மைலாப்பூர் போங்க சார் அங்கே தான் எல்லாம் கிடைக்கும்”

“சைதாப்பேட்டையிலே டிரை பண்ணுங்களேன்?”
“பெஸ்ட் திருவல்லிக்கேணி கங்கனா மண்டபம் தான் சார்”
கடைசியில் தி.நகர் மார்கெட்டில் ஒரு பாட்டியிடம் கேட்க
“முள்ளு அதிகம்.. இப்ப எல்லாம் பறிப்பதற்கு ஆள் இல்லை...கஷ்டம், நாளைக்கு வாங்க”
அடுத்த நாள் ஒரு பாக்கெட் நிறைய தூதுவளை கீரையை தருவித்துத் தந்தார்.
“யாருக்காவது சளி, இருமலா ?”
“இல்லை இது ஆளவந்தாருக்கு” என்றேன்.

ஆளவந்தாருக்கும் தூதுவளைக்கு என்ன சம்பந்தம் ?

ஆளவந்தார் வாழி திருமாமத்தில் ”பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே” என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கும் முன் அவர் சரித்திரத்தின் ஒரு பகுதியை சுருக்கமாக பார்க்கலாம்:

ஆளவந்தார், காட்டுமன்னார் கோயில்
ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகளின் பேரன். ( நாதமுனிகளின் குமாரர் ஈஸ்வர முனியின் பிள்ளை )

நாதமுனிகள் வடநாட்டில் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.

( உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்) நாதமுனிகளின் சீடராக இருந்தவர். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை புகட்டுமாறு உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டார். உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார் ( நம்பி லால்குடி பக்கம் இருக்கும் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவர்) )

மணக்கால் நம்பி
சிறுவயதில் சந்தை சொல்ல (பலருடன் பிரபந்தம் செவிக்க(சொல்ல) பயிற்றுவிப்பது தான் சந்தை) யமுனைத்துறைவனை அனுப்பிய போது, முதல் நாள் சென்று சேவித்துவிட்டு மறுநாள் போன போது முதல் நாள் சொன்னதையே மீண்டும் சந்தையில் சொல்லுகிறார்கள் என்று வீடு திரும்பியவர் அவர்!

தந்தை ஆசார்யரின் திருவடி அடைந்த பின், மஹாபாஷ்யபட்டர் என்பவரிடன் இவர் சாஸ்திரப் பாடம் கற்றுக்கொண்டு வந்த காலத்தில், சோழ மன்னனின் ஆஸ்தான வித்வானாக இருந்த ஆக்கியாழ்வான் என்னும் பண்டிதன் அந்நாட்டில் உள்ள வித்வான்களை வென்று அவர்களிடம் கப்பம் வாங்கி வந்தான்.

ஒரு நாள் யமுனைத் துறைவருடைய ஆசிரியரான மாஹாபாஷ்யபட்டருக்கு கப்பம் கேட்டு ஓலை அனுப்ப, பட்டர் திகைத்து நின்றார். அந்த சமயத்தில் யமுனைத்துறைவர் அந்த ஓலையை கிழித்து எறிந்தார்.

இதை கேள்விப்பட்ட அரசன் யமுனைத்துறைவரை அரண்மனைக்கு வருமாறு ஓலை அனுப்ப அந்த ஓலையும் கிழித்துவிட, அரசன் ’இவர் சாமான்யரல்லர்’ என்று அறிந்து இவர் வருவதற்கு பல்லக்கை அனுப்பி உரிய மரியாதைகளுடன் அரசபைக்கு வரவழைத்தான்.

உய்யக்கொண்டார் 
அரச சபையில் பல பண்டிதர்கள் முன்னிலையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவருக்கும் வாதப் போர் தொடங்கியது. வாதத்தின் ஆரம்பத்தில் ஆக்கியாழ்வான் யமுனைத் துறைவரை “இவர் சிறுபிள்ளைதானே” என்று நினைத்து சாஸ்திர விவாதம் இல்லாமல் உலகியல் விஷயங்களிலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணி ”நீர் உண்டு என்பதை நான் இல்லை என்று மறுத்து பேசுவேன்”. போட்டியில் வென்றவர் தோற்றவர் தலையில் அடிக்க வேண்டும்” என்றார்.

இதை கவனித்துக்கொண்டு இருந்த அரசனும் அரசியும் தங்களுக்குள் சபதம் செய்துக்கொண்டார்கள். மன்னன் யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார், அப்படி அவர் ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்கு தந்துவிடுவதாக சொன்னார். அரசியோ ”யமுனைத்துறைவர் வென்றுவிடுவார், அப்படி தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்கு பணிப்பெண்ணாவேன்” என்றாள்.

போட்டி ஆரம்பித்தது, யமுனைத்துறைவர் மூன்று வாக்கியங்களை கூறினார்
1. உன் தாய் மலடியல்ல
2. மன்னன் சார்வபௌமன் ( சக்கரவர்த்தி )
3. அரசி கற்புக்கரசி

ஆக்கியாழ்வான் இதை மறுத்து பேச முடியாமல் மௌனமாக இருக்க தோல்வியை ஒப்புக்கொண்டார். யமுனைத்துறைவர் ஆக்கியாழ்வான் மூத்தவராக இருப்பதால் தலையில் அடிக்க மறுத்துவிட்டார்.

“நீர் சொன்ன மூன்று வாக்கியங்களையும் உம்மால் மறுத்து பேச முடியுமா?” என்று ஆக்கியாழ்வான் கேட்க

யமுனைத் துறைவர் பின்வருமாறு விளக்கம் அளித்தார்.

1. ’தாய் மலடியல்ல’ என்பதற்கு “ஒற்றை மரம் தோப்பு ஆகாது” என்பது போல, ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றவளை பல பிள்ளைகளைப் பெற்றவளுடன் ஒப்பு நோக்க முடியாது. ஆகையால் ஒரே ஒரு பிள்ளை பெற்ற தாயும் மலடியே.

2. ’மன்னன் ஸார்வபௌமன்’ என்பதற்கு “ஸார்வபௌமன் என்றால் பூமிப் பரப்பை எல்லாம் ஆள்பவன் என்று பொருள். ஒரு சிறிதளவு பூமியை (ராஜ்ஜியத்தை) ஆள்பவன் எப்படி ஸார்வபௌமன் ஆவான் ?

3. ’அரசி கற்புக்கரசி’ என்பதற்கு “பெண் தன் கணவனை அடையும் முன்னரே சாஸ்திரப்படி திருமணம் ஆகும் முன் தேவர்களுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அதனால் அதையும் மறுக்க முடியும்

என்று கூற யமுனைத்துறைவர் பதிலை கேட்ட அரசன் பாதி ராஜ்ஜியத்தை யமுனைத்துறைவருக்கு வழங்கினான். ராணி மகிழ்ச்சி அடைந்து “என்னை ஆள வந்தீரோ” என்று எடுத்து அணைத்துக் கொண்டார். அன்று முதல் யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்ற திருநாமம் உண்டாயிற்று.

ஆளவந்தார் தனக்கு தரப்பட்ட ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், இந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிந்த மணக்கால் நம்பி மகிழ்ச்சி அடைந்து தன் ஆசார்யரின் கட்டளையை நிறைவேற்றத் தக்க சமயம் என்று எண்ணி ஆளவந்தாரைக் காண வந்தார், ஆனால் அவரால் அரண்மனைக் காவலை தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. அரண்மனை சமையலறையில் பணிபுரிபவர்களின் வாயிலாக, ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்பார் என்ற விஷயத்தை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஆறு மாதம் கடந்த பிறகும் ஆளவந்தார் இவரைப் பற்றி விசாரிக்காமல் போக, திடீர் என்று நான்கு நாட்கள் கீரை கொடுப்பதை மணக்கால் நம்பி நிறுத்தி விட்டார். ஆளவந்தார் ஏன் “நான்கு நாட்களாக ஏன் தூதுவளை கீரை இல்லை?” என்று சமையல் பணியாட்களை விசாரிக்க “ஒரு வயதான பிராமணர் ஆறு மாதங்களாக கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்தார், நான்கு நாட்களாக அவர் வரவில்லை” என்று கூறினார்கள். ’அவர் மறுபடி வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று ஆளவந்தார் பணித்தார்.

மறுநாள் நம்பி கீரையை கொண்டு போய் கொடுக்க சமையற்காரர் ஆளவந்தாரிடம் அவரை அழைத்துக்கொண்டு சென்றார்.

ஆளவந்தார் நம்பியை பார்த்து உங்களுக்கு என்ன நிதி வேண்டும் ? என்று கேட்க நம்பி எனக்கு ஒன்றும் வேண்டாம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டு போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

தினமும் நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின் உட்பொருளில் திளைத்த ஆளவந்தார் “அவனை அடைவதற்கு உபாயம் எது?” என்று கேட்க நம்பியும் சரம ஸ்லோகத்தை உபதேசித்து, “அவனை அடைவதற்கு அவனே உபாயம்” என்று ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே” என்றார்.

”நீண்ட அப்பெரியவாய கண்களை”க் கொண்டு பெரியபெருமாள் ஆளவந்தாரை ஆட்கொண்டார். அதன் பிறகு ஆளவந்தார் எல்லாவற்றையும் துறந்து துறவு மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தையே உறைவிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்து வந்தார்.

( இன்றும் ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் திருநட்சத்திரத்திரம் அன்று ஆளவந்தாருக்கு தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. )

ஒரு மானசீக ஆச்சார்யனாக, ஸ்ரீராமானுஜரை வைணவத்துக்கு இட்டு வந்து, பெரும் தொண்டாற்ற வைத்த பெருமை ஆளவந்தாரையே சாரும்.
ஆளவந்தார் பல கிரந்தங்களை அருளியுள்ளார். அவரின் ’ஸ்தோத்திர ரத்னம்’ மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் வைணவரக்ள் அனுசந்திக்கும் தனியனான

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா

என்பது ஸ்தோத்திர ரத்னத்தின் ஒரு பகுதி.

ஆளவந்தார் வைபவம் உடையவர் (ஸ்ரீராமானுஜர்) வைபத்திலும் அவருடைய முக்கியச் சீடர்களான பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலை ஆண்டான், பெரிய திருமலை நம்பி, திருவரங்கப்பெருமாள் அரையர், திருக்கச்சி நம்பி, மாறனேரி நம்பி முதலியோர்களின் வைபவகங்களிலும் இருக்கிறது. பிறகு ஒரு சமயம் அது குறித்து எழுதுகிறேன்.

இன்று ஆளவந்தார் திருநட்சத்திரம்.

Friday, June 27, 2014

வணக்கம் சென்னை - 2

ஒரு மாலை, ரங்கநாதன் தெரு அன்பழகன் பழக்கடை முதல் ’தாயார் டைரி’ வரை ஊர்ந்து சென்றேன். பிளாஸ்டிக், துணி, மக்கள் என்று ரங்கநாதன் தெருவை சுலபமாக வகைப்படுத்திவிடலாம். கூண்டு மாதிரி இருக்கும் தாயார் டைரி கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று கடைக்காரருக்கே தெரியுமா என்பது சந்தேகம். ஒரே டிசைனில் புடவை கட்டிய பெண்கள் ஜவுளி கடைகளுக்கு முன் வடை, போண்டா, அல்வா விற்க தொடங்கியிருப்பது புதுசு. தி.நகர் முழுவதும் இப்போது ’சாஃப்டி’ ஐஸ்கிரிம் கடைகளும் பக்கத்திலேயே ஸ்வீட் கார்ன், லெமன் சோடா கடைகளும் நிறைய முளைத்திருக்கின்றன.

பனகல் பூங்காவில் மகிழம்பூ மரம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தேன். யாராவது பனகல் பூங்காவில் இருக்கும் மரங்களிலெல்லாம் அதன் பெயர்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்கும்.

பனகல், நடசேன், ஜீவா என்று எந்தப் பூங்காவிற்குச் சென்றாலும் காலையில் மக்கள் ஊர்வலமாக நடைபயிற்சி செய்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் சிக்னல் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மதியம் பனகல் பூங்காவை மூடிவிடுகிறார்கள்!

சென்ற வாரம் காலை பனகல் பூங்காவில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த போது “எப்படி சார் இருக்கீங்க?” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். தெரிந்தவர் என்பதால் அவருடன் நடக்க ஆரம்பித்தேன்.

“சார் நேத்திக்கு ’தமிழ் இந்து’ பார்த்தீங்களா?”

“இல்லையே”

“ஜெயமோகன் பத்தி வந்திருக்கு”

“ஓ... அப்படியா?”

“என்ன சார் உங்களுக்கு விஷயமே தெரியாதா... பெண் எழுத்தாளர்கள்....” என்று முழுக் கதையும் அவர் சொல்லி முடித்தபோது எனக்கு வழக்கத்துக்கு மிக அதிகமாக வியர்த்துக் கொட்டியவாறு என் நடைப்பயிற்சியும் முடிந்திருந்தது..

“நாளைக்கும் இதே டயதுக்குதான் வாக்கிங் வருவீங்க?”

சென்னையில் பல இடங்களில் ”ஆட்டோக்கள் மீட்டர் போடவில்லை என்றால் புகார் செய்யுங்கள்” என்று எல்.இ.டி எழுத்துகள் துடித்துக்கொண்டு ஓடுவதைப் பார்க்க முடிகிறது. நான்கு ஆட்டோ பயணங்களின் போதும் எல்லோரும் மீட்டரை ஓடவிட்டார்கள். இருவர் மீட்டருக்கு மேல் 20 ரூபாய் தாங்க என்று பவ்யமாக கேட்டார்கள். சென்னையின் சூட்டையும் மீறி ஆட்டோ மீட்டர்கள் சூடு இல்லாமல் ஓடியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.

சரியான வழி தெரிந்தால், சென்னையில் எல்லா முக்கியமான இடங்களுக்கும் பேருந்துலேயே சென்று வரலாம். தொடர்ந்து மூன்று நாள்கள் பேருந்தில் பயணித்தது நல்ல அனுபவம். சில்லறை வேண்டும் என்று எந்த நடத்துனரும் அடம்பிடிக்கவில்லை. குளிர்சாதனப் பேருந்துகளில் பெரும்பாலும் பெண்கள் தனக்குத் தானே சிரித்துக்கொண்டு ‘வாட்ஸ்ஆப்’புகிறார்கள். சிலர் பேச ஒன்றும் இல்லை என்றாலும் ‘அப்பறம் நீ தான் சொல்லணும்’ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். யார் கையிலும் புத்தகம் இல்லை. ஏன் குமுதம், ஆனந்த விகடன் கூட இல்லை!.

12 வருடம் முன் சென்னையில் நான் வைத்திருந்த சைக்கிள் இன்னும் ஓடுகிறது!. பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு மட்டுமாவது சைக்கிளில்தான் போவது என்று முடிவு செய்து தினமும் 45 நிமிடம் ஓட்டிவிடுகிறேன். துரைசாமி சுரங்கப்பாதையை இரண்டு முறை வெற்றிகரமாகக் கடந்து, வடபழனி வரை சென்றுவிட்டு திரும்பினேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். சைக்கிளில் செல்பவரை டி.வி.எஸ்-50 ஓட்டுபவர் கூட மதிப்பதில்லை. சென்னையில் சில சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது சாத்தியமே இல்லை. வெளிநாடுகளைப் போல் இங்கே சைக்கிள் ஓட்டுவதற்கு தனிப் பாதை எல்லாம் கிடையாது நீங்களே தான் உங்கள் பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

நீல, சிகப்பு விளக்கை சிமிட்டிக்கொண்டு பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் ரோந்து செய்து பாதுகாப்புக் கொடுத்தாலும், ஆபத்தானது நகர் முழுக்க ஓடும் கல்லூரிப் பேருந்துகள் தான். அதிலே பயணிக்கும் மாணவர்களை உடனே முன்னேற்றிவிட வேண்டும் என்று துடிப்புடன் அசுர வேகத்தில் ஓட்டுகிறார்கள்.

சென்ற வாரம் மெட்ராஸ் காபி கடை பற்றி எழுதியது நினைவிருக்கலாம். அதைக் காணவில்லை. அடுத்த காபி கடை கண்டுபிடிப்பு பாண்டி பஜாரில்-- ‘ஒன்லி காபி’. இங்கே ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி கடைக்கிறது. காலை வாக்கிங் வருபவர்களுக்கு (5மணி முதல் 8 மணி வரை) காபியுடன் கூடவே டவரா அளவு ஒரு பிஸ்கெட்டும் கொடுக்கிறார்கள். வாழ்க. (எல்லாக் கடைகளிலும் சர்க்கரை இல்லாத காபி என்று கேட்டால் ஸ்ட்ராங் காபி தருகிறார்கள். ஏன்?)

சென்ற வாரம் 'அக்கறை' கூட்டத்துக்கும், இரண்டு திரைப்படங்களுக்கும் சென்றேன். அக்கறை கூட்டத்தில் குவாண்டம், ஆஸ்பத்திரி, சொந்த அனுபவம், ஜோக்ஸ் என்று விதவிதமாக பேசினார்கள், ஹாஹோ சிரிப்பானந்தா சிரித்து காண்பித்தது பயமாக இருந்தது. மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்று நினைவில்லை, கடைசியாக மினி சமோசாவும், உப்புக் கடலையும் நினைவிருக்கிறது.

முண்டாசுப்பட்டி படம் முழுக்க சிரிக்க முடிந்தது. அடுத்து நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் ஏற்பாடு செய்திருந்த பிரசன்னா விதானகேவின் With you Without you படம் பார்த்த பிறகு சிரிப்பு வந்தது.

ஒரு தமிழ்ப் பெண்ணுக்கும் ஒரு முன்னாள் சிங்கள இராணுவ வீரருக்கும் இடையே ஏற்படும் காதலையும் மனப் போராட்டங்களையும் சொல்லும் கதை. ஒரு நல்ல சிறுகதையைப் படித்த உணர்வைத் தந்தது. இந்த படம் முடிந்த பிறகு விவாதம் நடைபெற்றது. டாடா சுமோவில் வந்தால் அவன் வில்லனாகத் தான் இருப்பான் என்று நினைக்கும் கூட்டத்துக்கு இந்த மாதிரி படங்கள் எல்லாம் டூமச். சத்தமாக எது பேசினாலும் கைத்தட்டும் வழக்கம் இன்னும் இருக்கிறது என்பதையும் அந்த விவாதத்தில் பார்க்க முடிந்தது.

இந்த வாரம் FMல் கேட்ட நல்ல பாடல்: எந்தாரா எந்தாரா நீயே என் தாரா.
பாடியவர்கள்: ஷதப் ஃபரிதி, சின்மயி. யாருப்பா அந்த ஷதப் ஃபரிதி ?

Tuesday, June 17, 2014

வணக்கம் சென்னை - 1

கடந்த சில வாரங்களாகச் சென்னை வாசம். பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், நுழையும் எல்லாச் சாலைகளிலும் ஒரு தடுப்பு வைத்து ஒத்தையடிப் பாதையாகவோ, அல்லது அம்பு குறிப் போட்டு ஒரு வழிப்பாதையாகவோ மாற்றுவழியில் திருப்பிவிடுகிறார்கள். மெட்ரோ, மேம்பாலம் பழுது என்று ஏதாவது காரணம் இருக்கிறது. கடைசியாக பசுல்லா சாலையில் திருப்பிவிடப்பட்ட போது அங்கிருந்த சங்கீதா ஹோட்டலைக் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் மரத்துக்குக் கீழே “மெட்ராஸ் காஃபி ஹவுஸ்” என்று சின்னதாக முளைத்திருக்கிறது.

சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை முழுவதும், ”கும்பகோணம் காபி” கடை இறைந்து கிடைக்கிறது. யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். ஐயங்கார் பேக்கரி, தலப்பாக்கட்டி பிரியாணி, கோவை பழமுதிர் நிலையம் எல்லாம் இந்த வகை தான்.

அலுவலகம் செல்லும் போது பண்பலையில் தினமும் ஒரு முறையாவது கோச்சடையான் -மெதுவாகத்தான்; சைவம் - அழகு பாடல்களைக் கேட்டுவிட முடிகிறது. போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பித்தாலும் மஞ்சப்பை ”பாத்து பாத்து” பாடலிருந்து தப்பிப்பது கஷ்டம்.

கொசுக்களை விரட்டும் புதிய LG ஏஸி; ”கேரியர் ஏஸி பொருத்திய ராசி நான் கேரியிங்” என்ற விளம்பரங்களைக் கேட்கும் போது சென்னை அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டதாகத் தோன்றுகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புளியோதரையை மந்தாரை இலையில் சுருட்டிக் கொடுக்காமல், ஹோட்டலில் பார்சல் செய்யப் பயன்படும் சின்ன அலுமினியம் ஃபாயில் கன்டெய்னரில் கொடுக்கிறார்கள். கர்பப்பக்ரஹத்தை குளிர்சாதன வசதி செய்திருக்கிறார்கள். வேர்த்துக் கொட்டாத திருமண் அழியாத அர்ச்சகரைப் பார்க்க முடிகிறது. உற்சவர் புறப்பாட்டின் போதும் உற்சவரும் திரும்ப வரும் போதும் சாப்பிட்ட ரத்னா கபே சாம்பாரும் இன்னுமும் மாறமல் அப்டியே இருக்கிறது.

கூட்டம் சேரும் எல்லா இடங்களிலும், A2B அடையார் ஆனந்த பவன், அல்லது க்ராண்ட் ஸ்வீட்ஸ் கடை ஆரம்பித்திருக்கிறார்கள். க்ரண்ட் ஸ்வீட்ஸ் பெயருக்கு ஏற்றார் போல விலையும் க்ராண்ட். சரவண பவன் காம்போ ஆஃபர் போஸ்டர் அடித்து கிருபானந்த வாரியார் படத்துக்கு போட்டியாக ஒட்டியிருக்கிறார்கள். சனி, ஞாயிறு காலை 6.30 மணிக்கே ராயர் மெஸில் க்யூ நிற்கிறது. சுடச்சுட இட்லியைச் சட்னியில் குளிப்பாட்டிச் சாப்பிடமுடிகிறது. காரச் சட்னியில் இன்னும் அதே காரம் இருக்கிறது.

போன வாரம் காலை 6 மணிக்கு பனகல் பூங்கா அருகில் ஒரு தீயணைப்பு வண்டியையும் அதை சுற்றிவேடிக்கை பார்க்கும் கூட்டத்தையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு நகைக்கடை மாடியில் சின்ன ஓட்டை வழியாக புகை வந்துக்கொண்டு இருந்தது. தி.நகர் ஜவுளி, நகைக்கடைகள் எல்லாம் அட்டைப்பெட்டி போல கட்டியிருக்கிறார்கள். எதற்கும் ஜன்னல் கிடையாது. எப்போதும் ஏதாவது தள்ளுபடியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்தக் கடைகள் எல்லாமே ஒரு டைம்பாம் தான்.

Friday, June 13, 2014

பொன்னியின் செல்வன் - நாடகம்


அக்னி வெயில் நாளையுடன் முடிவடைகிறது என்பதை நம்பிச் சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த போது தலையில் தோசை வார்க்கும் அளவிற்கு வெயில் இருந்தது.

அலுவலகம் செல்லும் வழி எல்லாம் பொன்னியின் செல்வன் நாடகம் பற்றி விளம்பரத்தைப் பார்த்து டிக்கெட் முன்பதிவுச் செய்யலாம் என்று முயற்சி செய்த போது டிக்கெட் எல்லாம் தீர்ந்துவிட்டது என்றார்கள்.

எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று நேற்று மியூசிக் அகாடமிக்கு சென்ற போது டிக்கெட் கவுண்டர் பக்கம் ஒருவர் என்னை அணுகி
“என்ன சார் டிக்கெட் வேணுமா ? என்றார்
“ஆமாம்”
“கொஞ்சம் எக்ஸ்டரா ஆகும்”
“அவ்வளவு ?”
“பார்த்துக் கொடுங்க... என்று ஒரு டிக்கெட் கொடுத்தார்”
( எவ்வளவு கொடுத்தேன் என்பது இங்கே தேவையில்லை என்பதால் அதை பற்றி நோ கமெண்ட்ஸ்)

பிளக்கில் டிக்கெட் வாங்குவது குற்றம், படித்தவர்கள் இப்படிச் செய்யலாமா என்று உள் மனது சொன்னாலும், கல்கியின் பொன்னியின் செல்வனை பார்க்க வேண்டும் என்ற ஆவலால் இந்தத் தப்பை செய்தேன்.

நாடகம் எப்படி இருக்கும்... ஐந்து பாகங்களை எப்படிச் சுருக்க போகிறார்கள், காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி வந்தவர்கள் பலர் மனதில் ஓடுவதைப் பார்க்க முடிந்தது.

பத்து நிமிடத்துக்கு முன் நண்பரான பக்கத்துச் சீட் மாமா “முதல்ல எம்.ஜி.ஆர் சார்... அப்பறம் கமல்... மணிரத்தினம்....யாராலையும் முடியலை” என்றார்.

உள்ளே நுழைந்தவுடன், நம்மைக் கவர்வது மேடையில் இருக்கும் கோட்டை அமைப்பு. நாவலில் வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்கு அன்று தொடங்கும் கதையை நாடகத்திலும் அதே மாதிரி அமைத்திருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம் என்று நாடகம் தொடக்கத்திலெயே களைக்கட்டுகிறது.
வந்தியதேவன், ஆழ்வார்க்கடியான் வரும் போது அரங்கில் எல்லோரும் கைத்தட்டுகிறார்கள். அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்களும் சிறப்பாக செய்துள்ளார்கள். (நாடகத்துக்கு ரஜினியும் வந்திருந்தார். “ரஜினி” என்றவுடன் எல்லோரும் கைத்தட்டினார்கள் )

பெரிய பழுவேட்டரையர் நாடகத்தில் சிறியவராக இருக்கிறார், ஆனால் நடிப்பு, வசன உச்சரிப்பில் அதை மறக்கச் செய்கிறார். ஆதித்த கரிகாலனாகப் பசுபதி வந்த பிறகு நாடகம் வேறு கட்டத்துக்குச் செல்கிறது. வந்தியதேவன், ஆழ்வார்கடினான் என்று முக்கியமான பாத்திரங்கள் மறைந்துப் போகிறார்கள். படிக்கும் போது ரவிதாஸன் வரும் காட்சிகளில் ஒரு திகில் இருக்கும் அது நாடகத்தில் இல்லை. அதே போல பொன்னியின் செல்வன் வரும் காட்சியில் ஒரு தாக்கம் இல்லை.

பூங்குழலி படகு தள்ளும் காட்சி, யானை வரும் காட்சி மனதில் நிற்கிறது.

இடைவேளையின் போது சின்னப் பழுவேட்டரையர் தன் படையுடன் வந்து காபி குடிப்பவர்களிடம் ”இடைவேளை முடிந்துவிட்டது கோட்டைக்குள் செல்லவும்” என்று எல்லோரையும் அதட்டுவது, அவரிடம் “சமோசா முடிந்துவிட்டதாம்... கொஞ்சம் உதவி செய்யுங்கள்” என்று கேட்பதும் ஒரு மாலைப் பொழுது இனிதே நிறைவடைந்தது.Thursday, February 27, 2014

கையெழுத்து

தினமும் பல ஆச்சரியங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. அவற்றை கவனிப்பதில்லை.சலூனில் இத்துணூண்டு க்ரீமைக் கொண்டு ஷேவிங் பிரஷ்ஷால் தேய்க்கத் தேய்க்க அட்ஷயப் பாத்திரத்திலிருந்து வருவது போல நுரை வருவது; நூலில் சுற்றப்பட்ட சமோசா கோபுரத்தை கீழே விழாமல் எலக்டரிக் ரயிலில் கூட்டத்தின் மத்தியில் விற்கும் அந்தச் சின்னப் பையன்; எப்போது போனாலும் சரவணபவன் சாம்பார் ஒரே மாதிரி இருப்பது; பர்வீன் சுல்தானா எல்லா ஆக்டேவிலும் ஸ்ருதி பிசகாமல் பாடுவது... புத்தகக் கண்காட்சிக்குப் போன போது இதே மாதிரி இன்னொரு ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது.

Friday, January 17, 2014

தற்செயல்


சென்னையில் ஒரு நாள்

திங்கள் அன்று சென்னயில் இருந்தேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் முன் ஏழே முக்காலுக்கு ராயர்ஸ் கஃபேவுக்கு ரொம்ப நாள் கழித்துச் சென்றேன். பெரிய க்யூ நின்று கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே இடம் கிடைத்தது. முதலில் எல்லோருக்கும் கப்பில் கெட்டிச் சட்னி தருகிறார்கள், மற்றபடி எதுவும் மாறவில்லை. சுடசுடப் பொங்கல், வடை, இட்லி என்று சாப்பிட்டுவிட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன்.

Tamil Calendar !
நுழைந்தவுடன் ஒரே மலைப்பாக இருந்தது. பல வருஷங்கள் முன்பு புத்தகக் கண்காட்சியில் பதிப்பகங்கள் சார்ந்து ஸ்டால்கள் இருக்கும். ஆனால் தற்போது பல ஸ்டால்களில் பல பதிப்பகங்களின் புத்தகங்கள் விசிரி போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். நீயா நானா கோபினாத் பல ஸ்டால்களில் சிரித்துக்கொண்டு இருக்கிறார். பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு மலிவாகத் தருகிறாரார்கள்.

பதிப்பகங்கள் சார்ந்த ஸ்டால்களில் பார்த்திவிட்டு மினி சூப்பர் மார்கெட் ஸ்டால்களைச் சுலபமாகக் கடந்து சென்றேன்.

கீதா பிரஸ்
ஹரன் பிரசன்னாவை கிழக்குப் பதிப்பகத்தில் சந்தித்தேன். பார்த்தவுடன் சிரித்துக் கைகுலுக்கினார். என்னை அடையாளம் தெரிந்து சிரித்தாரா அல்லது சும்மா சிரித்தாரா என்று தெரியாது. கூடவே நண்பர் ஜடாயூ இருந்தார். நலம் விசாரித்துவிட்டு உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் இருந்தார். ஒரு ‘ஹலோ’ சொல்லலாம் என்று பார்த்தால் இரண்டு பெண்களிடம் அம்.அதாமி பற்றியும் பாட்டில் தண்ணீர் பற்றியும் டிவியில் விவாதிப்பது போலவே விவாதித்துக்கொண்டு இருந்தார். பிறகு என்னிடம் திரும்பி “உங்க புத்தகம் ஒன்றும் வரலையா இந்த வருஷம் ?” என்றார். அவரைப் போல விவாதிக்க எனக்குத் தெம்பு கிடையாது. பிறகு சந்திக்கிறேன் என்று நழுவினேன்.

இருந்த முறை பெரிதாக எதுவும் வாங்கவில்லை. கீதா பிரஸில் சரணாகதி புத்தகம் ஐந்து ரூபாய்க்கு வாங்கினேன்.

பேயாழ்வார் அவதார ஸ்தலம்
மாலை நான்கு மணிக்கு முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான, பேயாழ்வார் அவதரித்த கிணறு ராயஸ் கஃபே பக்கம் இருக்கிறது அங்கே சென்றேன். நானே வாசல் கதவைத் திறந்து சேவித்திவிட்டு வந்தேன்.

இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மறுநாள் பொங்கல் என்பதால் மனிதர்களைவிட பேருந்துகளே நிறைய இருந்தது. முதுகுப்பை இளைஞர்கள் கையில் ’அக்வஃபினா’ பாட்டில்களும், பெரியவர்கள் கையில் ’அம்மா’ தண்ணீர் பாட்டில்களும் பார்க்க முடிந்தது. புத்தகக் கண்காட்சியில் சிறுவர்கள் கையில் ஆங்கில புத்தகங்களும், பெரியவர்கள் கையில் தமிழ் புத்தகங்களும் பார்க்க முடிந்தது. இந்த இரண்டுக்கும் இதோ தொடர்பு இருப்பது மாதிரி எனக்கு தெரிந்தது. 

Sunday, January 5, 2014

வண்ணங்கள் எண்ணங்கள் - பெங்களூர் சித்திர சந்தை 2014

பெங்களூரில் வருடா வருடம் ’சித்திர சந்தே’ என்று அழைக்கப்படும் ஓவியக் கண்காட்சி கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் வருடா வருடம் நடத்திவருகிறது. குமர க்ருபா சாலையை முழுவதும் கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்கிறார்கள். சாலை இருபுறமும் மரங்கள் சூழ்ந்திருக்க மக்கள் கூட்டமாக குடும்பத்துடன் வந்து ரசிக்கிறார்கள். காண கண் கோடி வேண்டும் என்று சொல்லுவது இந்த கண்காட்சிக்கு பொருந்தும். மூன்று மணி நேரம் சாப்பாட்டை மறந்து பல சித்திரங்களை பார்த்துக்கொண்டு, கூடவே பொரி கடலை, குச்சி ஐஸ் சாப்பிட்டது இனிய அனுபவம்.

சின்ன வயது முதல் ஓவியத்தில் ஆர்வம் கொண்ட எனக்கு இந்த கண்காட்சியை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசை, ஆனால் ஒவ்வொரு வருடமும் கண்காட்சி முடிந்த பிறகு மறுநாள் நாளிதழில் வரும் செய்தியை பார்க்கும் போது ‘அடடே’ மிஸ் செய்துவிட்டோம் என்று வருந்துவேன். இந்த வருடம் நினைவு வைத்துக்கொண்டு சென்று வந்தேன். .. எவ்வளவு வண்ணங்கள்...எவ்வளவு எண்ணங்கள் !

Saturday, January 4, 2014

பீபீ

மற்ற சேனல்களை காட்டிலும் தூர்தர்ஷன் பொதிகையில் சில சமயம் நல்ல நிகழ்ச்சிகள் வருவதுண்டு. இன்று விசாகா ஹரி குருவாயூரப்பன் பற்றி மார்கழி மஹா உற்சவத்தில் உருகிக்கொண்டு இருந்த போது நடுவில் ஒரு விளம்பரம் இடைவேளையின் போது பொதிகைக்கு தாவினேன். வீண் போகவில்லை. 

நாதஸ்வரத்தில் சொருகப்பட்டிருக்கும் தக்கைக்கு பெயர் ”பீபீ” என்று இவ்வளவு நாளாக நினைத்துக்கொண்டு இருந்தேன். அதன் பெயர் சீவாளி. அதை எப்படி செய்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது. 

திருவாரூர் பக்கம் வாய்க்காலை கடந்து அங்கே விளைந்திருக்கும் நாணல் செடிகளில் கிட்டதட்ட மெலிதான பிரம்பு மாதிரி செடிகளை எடுத்து வந்து அதை ஒரு மாதம் வெயிலில் காய வைத்து பிறகு வீட்டு பரணில் ஒரு வருடம் போட்டு வைக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு பிறகு அதை எடுத்து வேண்டாத பகுதிகளை நீக்கிவிட்டு தண்ணீரில் ஊற போட்டு பிறகு சின்ன கரும்பு பிழியும் மிஷின் போன்ற இயந்திரத்தில் பட்டை அடித்து ( நசுக்கி) அவற்றை இருக்கமாக கட்டாக சணல் நூலில் கட்டி, பெரிய அண்டாவில் நெல்லை புழுங்க போட்டு அதில் இந்த கட்டுகளையும் சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள். பிறகு அதை எடுத்து பிரித்து சோற்று கஞ்சியில் சில நாள் ஊற போட்டு ஓரத்தை ஒழுங்காக வெட்டி அதை ஒரு கயிற்றில் நுழைத்து பக்குவமாக ஒரு கம்பியினால் திரட்டுகிறார்கள். ஒரு சீவாளி திரட்ட ஐந்து நிமிஷம் ஆகிறது. 

இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, நமது நாட்டிலேயே டிஸ்கவரி சேனலுக்கு பல விஷயங்கள் இருக்கு என்று தெரிகிறது. அடுத்த முறை நாதஸ்வரத்தில் வரும் இசையும் நாதஸ்வரத்தையும் ரசிக்கலாம். நிகழ்ச்சியை வழங்கிய CP விஜயலக்ஷ்மிக்கு நன்றிகள். 

நிகழ்ச்சி முடிந்த பிறகு குருவாயூரப்பனுக்கு நன்றி சொல்லலாம் என்றால் அங்கே மீண்டும் விளம்பரம்.