Skip to main content

வீரநாராயணபுரம்

போன மாதம் ஒரு பொடி நடையாக காரை எடுத்துக்கொண்டு சென்னை, கடலூர், வீரநாராயணபுரம்-காட்டுமன்னார் கோயில் என்று ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றி வந்தேன்.

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமத் நாதமுனிகள் வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார். ( அவருக்கு பின்னர் ஆளவந்தாரும் இந்த ஊர் தான் ). ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் காலப் போக்கில் மறைந்து போயின. அவைகளைத் தொகுத்த பெருமை ஸ்ரீ நாதமுனிகளையே சாரும்.

ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளை சேவிக்க சில ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாடினர். அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று சேவிக்கின்றீர்களே, இந்த ப்ரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா ? என்று அவர்களிடம் கேட்க அவர்கள் எங்களுக்கு இந்த பத்துப் பாட்டு மட்டும் தான் தெரியும். என்று கூறிவிட்டார்கள்.

நாதமுனிகளுக்கு அன்று முதல் திருவாய்மொழி ஆயிரத்தையும் பெறவேண்டும் என்ற ஆவல் குடிகொண்டது. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான திருநெல்வேலிக்குப் பக்கம் இருக்கும் திருக்குருகூருக்கு சென்று அங்கு விசாரித்ததில் அந்த ப்ரபந்தம் பற்றி யாருக்கும் தெரியவில்லை.

நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் சம்பந்தம் பெற்ற பராங்குசதாசர் என்பவரிடம் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற ப்ரபந்தத்தை உபதேசம் பெற்று அதை பன்னீராயிரம் முறை சேவித்த பின் நம்மாழ்வார் தோன்றி திருவாய்மொழி மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களையும் தந்தருளினார் என்கிறது குருபரம்பரை.

என் அப்பா பல முறை சொல்லிய இந்த கதையை கேட்டிருக்கிறேன். நாதமுனிகள் அவதரித்த இடத்துக்கு சென்று வரும் பாக்கியம் இவ்வளவு நாள் கழித்து போன மாதம் தான் கிடைத்தது.

சுஜாதாவின் தம்பியை கடைசி முறை பார்த்த போது, கங்கைகொண்ட சோழபுரம் பக்கம் நாதமுனிகள் ஆச்சாரியன் திருவடிகள் அடைந்த இடம் ஒன்று இருக்கிறது, என்று ஒரு சின்ன கதையும் சொன்னார். அது பின்வருமாறு

ஒரு நாள் நாதமுனிகள் வீட்டுக்கு வில்லுடன் இருவரும் ஒரு பெண்பிள்ளையும் குரங்குடன் வந்து அவர் மகளிடம் நாதமுனிகள் பற்றி விசாரித்திருக்கிறார்கள். அதற்கு அந்த பெண் அப்பா கோயிலுக்கு சென்றிருப்பதாக சொல்ல, வந்தவர்கள் சென்றுவிட்டார்கள். திரும்பிய நாதமுனிகள் மகள் சொன்னதை கேட்டு சக்கரவத்தித் திருமகனான ராம, லக்ஷ்மணர், சீதையும் ஹனுமாரும் தான் தன்னைப் பார்க்க வந்தவர்கள் என்று நம்பி அவர்களைத் தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அவர்களை தேடிக்கொண்டு சோழபுரம் வரை சென்றார். அவர் சென்ற வழியில் பூச்சரம் ஒன்றை கண்டார், அதைக் கண்டவர் "இது சீதையுடைய பூச்சரம்" என்று சொல்லியவாறு சென்றார். அந்த இடம் தற்போது "பூவிழுந்த நல்லூர்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் கொஞ்ச தூரம் சென்ற பின் குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருப்பததை கண்டார். அந்த இடம் தற்போது "குறுங்குடி" என்று அழைக்கப்படுகிறது. மேலும் கொஞ்ச தூரம் சென்றவர் வழியில் சென்றவர்களை பார்த்து அடையாளங்களைச் சொல்லி "அவர்களைக் கண்டீர்களா?" என்று கேட்டார். அவர்களும் "ஆம் கண்டோம்" என்று சொல்லியுள்ளார்கள். அந்த இடமே தற்போது "கண்ட மங்களம்" என்ற ஊர். அவர்களை எங்கு தேடியும் பார்க்கமுடியாமல் அந்த இடத்திலேயே மூர்ச்சித்து பரமபதித்தார். அந்த இடம்தான் தற்போது "திருவரசு" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "சொர்க்கப்பள்ளம்" என்று பெயர்.

இந்த இடத்தை தேடிச்சென்று சேவித்துவிட்டுப் புறப்பட்டோம்.

வீரநாராயணபுரத்தைப் பற்றிச் சொன்னால் கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் .

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' முன்பு மணியன் ஓவியங்களுடன் படித்திருக்கிறேன். ஒரு மாதம் முன் பாம்பே கண்ணன் அவர்களுடைய ஒலிப்புத்தகத்தைக் காரில் போகும் போதும், காலை நடைப்பயிற்சியின் போதும் கேட்க ஆரம்பித்து பிரமித்துப் போனேன்.

பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள், தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் எல்லோருக்கும் இதைச் சிபாரிசு செய்வேன். ஒலிப்புத்தகத்தில் இசை, பேசியவர்கள் ( குறிப்பாக அதில் வரும் பெண் கதாபாத்திரங்களின் குரல் ) எல்லாம் மிக அருமையாக செய்திருக்கிறார்கள். அவர்களுடைய மாடுலேஷன் எல்லாம் இந்த கதைக்கு மேலும் உயிரூட்டுகிறது. பாம்பே கண்ணன் அவர்களின் உழைப்பு எல்லா இடங்களிலும் தெரிகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வனை படம் எடுக்கிறேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை, ஆனால் பாம்பே கண்ணன் முழு நாவலையும் ஒலிவடிவத்தில் அதன் கதாபாத்திரங்களை நம் கண் முன்பே கொண்டு வந்துவிட்டார்.
இதை ஒலிப்புத்தகம் என்று சொல்லுவதை விட ஒலிச்சித்திரம் என்று அழைத்தால் தகும்.

இனி யாராவது படம் எடுக்கிறேன் என்று மீண்டும் கிளம்பினால், பாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் அவர்களுக்கு கைகுடுக்கும். தேவையான பகுதிகளை எடுத்து வெட்டி ஒட்டி சுலபமாக திரைக்கதை எழுதிவிடலாம். கல்கியின் வர்ணனைகள் எல்லாம் திரைக்கதைக்காகவே எழுதியிருக்கிறார்.

இந்த ஒலிப்புத்தகத்தில் மேற்கத்திய இசையும், கர்நாடக இசையும் தேவையான பகுதிகளுக்கு மெருகூட்டுகிறது. இதை தவிர மரங்கள் அசைந்தது, மழை வந்தது, இடி, மின்னல், ஆந்தை சத்தம் என்று வரும் இடங்களில் எல்லாம் பின்னணி இசை மிக மிக அருமை.

மீண்டும் மீண்டும் டிவிக்கு மஹாபாரதம் எடுப்பவர்கள் அடுத்த முறை பொன்னியின் செல்வனை கொண்டுவரலாம். அதற்கு பாம்பே கண்ணனின் உதவியை நாடலாம்.

Comments

  1. Thanks sir, for taking us to வீரநாராயணபுரம் .where do i get the audio CDs of ponniyin selvan

    ReplyDelete
  2. Thanks for sharing and yes Bombay Kannan has done a marvellous job. Kudos to him.

    ReplyDelete
  3. ///ஒரு பொடி நடை...ஒரு ஆயிரம் கிலோ மீட்டர்..../// வாமணன் அம்சம் ..! .
    I'm enjoyed your writing Sir....வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
  4. வீரநாராயணபுரம் பற்றிய தகவல்களுக்கு நன்றி. பொன்னியின்செல்வன் ஒலிப்புத்தகம் நிச்சயம் ஆதரிக்கப்படவேண்டும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  5. Ponniyin Selvan is too multifaceted even to fit within a 4 hour (!!) movie. Hope no one attempts it. Would be a disaster and people would refer to the movie for reference, thus doing great injustice to Kalki and the written word. Tamil TV has not developed, I think, to the level of BBC, to produce, say a 10 part serial of PS. Maybe in another 50 years. That too, a big maybe. Thank You.

    ReplyDelete
  6. Sir

    How do we go to Viranarayanpuram from chidambaram? Thank you Kasthurirangan

    ReplyDelete
  7. உங்களுடன் எங்களையும் வீர நாராயணபுரம் அழைத்துச் சென்றமைக்கு நன்றி.... பொன்னியின் செல்வம் ஒலிவடிவத்தினை விரைவில் கேட்க ஆசை. பார்க்கலாம்.

    ReplyDelete
  8. சன் டீவியின் மகாபாரதத்தில் வரும் ஆட்களை பார்த்த பின்பு பயமாக இருக்கின்றது. பேசாமல் கோச்சடையான் போல கார்ட்டூனாக (கார்ட்டூன் படம்தானே?) கொண்டு வந்து விடலாம். உங்களின் பயணக்கட்டுரைகளை படித்த பின், பயண ஆசை வளருகின்றது. ஒரு நாள் வரும்.

    ReplyDelete
  9. நாதமுனிகள் திருவரசு பற்றி அறிந்து கொண்டேன். தரிசிக்க வேண்டும் கட்டாயம். அவர் இல்லாவிட்டால், பிரபந்தமே கிடைக்காமல் போயிருக்கும்! நம்மாழ்வார் அவருக்கு வழி தான் காட்டினார். பாசுரங்களுக்கு வேண்டி நாதமுனியின் முயற்சியும், அவற்றைத் தொகுக்கவும், இசை வடிவம் கொடுக்கவும் அவரது உழைப்பும் அசாத்தியமானது இல்லையா!

    ReplyDelete
  10. ஒலிப்புத்தகம் வாங்குவது எப்படி

    அல்லது பதிவிறக்கம் செய்வது எப்படி

    ReplyDelete

Post a Comment