Skip to main content

மர மண்டை

மர மண்டை என்ற பிரயோகம் எப்படி வந்தது என்று என்றும் யோசித்ததில்லை. செந்தில் கவுண்டமணி நகைச்சுவையில் "தேங்காய் மண்டைத் தலையா!" முதல் மாங்கா மண்டை வரை பல 'தலை'களை பார்த்திருக்கிறோம். என் மனைவி "உங்க தலையில..." என்று சொல்ல வந்து நிறுத்திவிடுவாள். 

ஆனால் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு, என் மண்டையில் கூட ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. சொல்லுகிறேன். 

வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்லும் பாதையில் திடீர் என்று தலையில் ஏதோ மடார் என்று பெரிய பாரம் ஒன்று விழுந்தது. என்ன என்று சுதாரிப்பதற்குள் அது நடந்து, மன்னிக்கவும் பறந்து சென்றது. நடந்தது இது தான் - பெரிய கழுகு தன் கால்களை என் தலையில் வைத்து என்னை தூக்கப் பார்த்து முடியாமல் மேலே பறந்து சென்றது. பருந்தை இவ்வளவு கிட்ட டிஸ்கவரி(தமிழ்) சேனலில் கூட பார்த்ததில்லை. அதிர்ச்சியில் கத்தக் கூட முடியவில்லை.

பருந்து சும்மாப் போகவில்லை, அதன் கால்களில் கூடு கட்டுவதற்குக் கொண்டு வந்த சில சுள்ளிகளைக் கீழே போட்டுவிட்டு பறந்து சென்றது. என் தலையை நிஜமாகவே மர மண்டை என்று நினைத்துக் கூடு கட்ட நினைத்திருக்கலாம். 

“ஒரு பறவை தலையில் எச்சமிடுவதைத் தடுக்கமுடியாது; ஆனால் தலையில் அது கூடுகட்டாமல் தடுக்கமுடியும்.!" என்று வைரமுத்து எப்போதோ சொன்னதை நினைவுப்படுத்தி என்னை நானே தேத்திக்கொண்டேன்.

தசாவதாரம் படத்தில் கமலை கழுவில் ஏற்றும் போது கருடன் வட்டமிடும். அந்த மாதிரி நான் ஒரு வீர ஸ்ரீவைஷ்ணவன் கூட கிடையாது; கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது, கோயிலுக்கு மேலே கருடன் வட்டமிடும் என்பார்கள். குடுமி வைத்து என் தலை கோபுரம் மாதிரியும் இல்லை. ஆனால் ஏன் என் தலை மீது கருடாழ்வார் தட்டிவிட்டுச் சென்றார்? தெரியவில்லை. போகட்டும். 

கழுகு தலையைத் தட்டினால் ஏதாவது நல்லது நடக்குமா என்று சிலரைக் கேட்டேன். என்ன, தலையில் கழுகு தட்டியதா ? "காக்கா அல்லது ஆந்தை இப்படிச் செய்தால் ஏதாவது ப்ரீதி சேய்ய வேண்டும், கழுகு, கருடன் எல்லாம் நோ ப்ராபளம். விஷ்ணுவின் அருள் உங்களுக்கு இருக்கிறது அவ்வளவு தான்... கவலைப்படாதீங்க அடுத்த முறை வரும் போது 'கோவிந்தா' என்று சொன்னால் ஒன்றும் செய்யாது போய்விடும். குரங்கு கூட்டமாக வந்தால் 'ராமா ராமா' என்று சொல்லுவதில்லையா? அது மாதிரி!"

நேற்று முன் தின நாளிதழில் அமெரிக்காவில் மிகப்பெரிய காற்றலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சில மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. காரணம் இதன் காற்றாடியில் சிக்கி சில கழுகுகள் பலியாகி இருக்கிறது. 

பஞ்ச பாண்டவர்களின் ஒருவரான சகாதேவன் நிமித்த சாஸ்திரத்தில் இதை பற்றி விரிவாக எழுதியிருக்கலாம். சில ஒலைச்சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் இருக்கிறதாம் யாராவது பார்த்துச் சொன்னால் நன்றாக இருக்கும். கழுகு தட்டினால் என்ன பயனோ தெரியாது.ஆனால் தட்டியவர்கள் இந்த மாதிரி ஒரு கட்டுரை எழுதவும், இன்னும் தட்டப்படாதவர்கள் அதைப் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

Comments

  1. ரசித்தேன்.... பல்லி விழும் பலன் மாதிரி கழுகு தட்டல் பலன் யாராவது எழுதி இருக்காங்களான்னு பார்க்கணும் போல! :)

    ReplyDelete
  2. புதுவிதமான அனுபவம் தான்...:)

    ReplyDelete
  3. அமேரிக்கக் கால்பந்து ஆட்டத்தில் 32 அணிகள். சேன் டீயாகோ நகர அணியில் விளையாடும் ஒரு ஆளின் பெயர் டேனி வுட்ஹெட் (மரமண்டை)

    ReplyDelete
  4. மர மணடையாக இருப்பது நல்லதுதான் ..
    தண்ணீரில் விழுந்தால் மூழ்க மாட்டார்கள் கட்டுமரம் மாதிரி மிதக்கலாம் ..!

    களிமண் மணையாக இருந்தால் ஆபத்து .. தண்ணீரில் கரைந்துவிடு மே..!

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  6. இரமேஷ் இராமமூர்த்திMay 5, 2017 at 5:38 PM

    என் மீது சில வருடம் முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருநதபோது கூட்டமாக வட்டமடித்த கழுகுகில் ஒன்று வேகமாக வந்து தலையில் மோதியது. அடுத்தவாரமே எனது தாயார் பரமபதம் அடைந்தார்.

    ReplyDelete
    Replies
    1. தலையில் மருந்து / கழுகு அடித்தால் குடும்பத்தில் யாராவது மரணமடைவார்கள். என்தலையில் தட்டிய ஒரு வருஷத்தில் என் அப்பா உலகை விட்டு போய்விட்டார். இன்று வரை நாங்கள் கஷ்டபடுகிறோம் உடனே பரிகாரம் செய்யவும்

      Delete
  7. என் தலையிலும் கழுகு தட்டியது...ஆனால் அசம்பாவிதம் ஒன்றும் நடக்கவில்லை

    ReplyDelete
  8. Enakku thatti irukku today than enna agum nu psyama irukku

    ReplyDelete
    Replies
    1. என் தலையில் இன்று கழுகு தட்டியுள்ளது ...என்ன பரிகாரம் என்று தெரிந்தால் சொல்லுங்கள்

      Delete

Post a Comment