Monday, November 25, 2013

மர மண்டை

மர மண்டை என்ற பிரயோகம் எப்படி வந்தது என்று என்றும் யோசித்ததில்லை. செந்தில் கவுண்டமணி நகைச்சுவையில் "தேங்காய் மண்டைத் தலையா!" முதல் மாங்கா மண்டை வரை பல 'தலை'களை பார்த்திருக்கிறோம். என் மனைவி "உங்க தலையில..." என்று சொல்ல வந்து நிறுத்திவிடுவாள். 

ஆனால் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு, என் மண்டையில் கூட ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. சொல்லுகிறேன். 

வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்லும் பாதையில் திடீர் என்று தலையில் ஏதோ மடார் என்று பெரிய பாரம் ஒன்று விழுந்தது. என்ன என்று சுதாரிப்பதற்குள் அது நடந்து, மன்னிக்கவும் பறந்து சென்றது. நடந்தது இது தான் - பெரிய கழுகு தன் கால்களை என் தலையில் வைத்து என்னை தூக்கப் பார்த்து முடியாமல் மேலே பறந்து சென்றது. பருந்தை இவ்வளவு கிட்ட டிஸ்கவரி(தமிழ்) சேனலில் கூட பார்த்ததில்லை. அதிர்ச்சியில் கத்தக் கூட முடியவில்லை.

பருந்து சும்மாப் போகவில்லை, அதன் கால்களில் கூடு கட்டுவதற்குக் கொண்டு வந்த சில சுள்ளிகளைக் கீழே போட்டுவிட்டு பறந்து சென்றது. என் தலையை நிஜமாகவே மர மண்டை என்று நினைத்துக் கூடு கட்ட நினைத்திருக்கலாம். 

“ஒரு பறவை தலையில் எச்சமிடுவதைத் தடுக்கமுடியாது; ஆனால் தலையில் அது கூடுகட்டாமல் தடுக்கமுடியும்.!" என்று வைரமுத்து எப்போதோ சொன்னதை நினைவுப்படுத்தி என்னை நானே தேத்திக்கொண்டேன்.

தசாவதாரம் படத்தில் கமலை கழுவில் ஏற்றும் போது கருடன் வட்டமிடும். அந்த மாதிரி நான் ஒரு வீர ஸ்ரீவைஷ்ணவன் கூட கிடையாது; கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது, கோயிலுக்கு மேலே கருடன் வட்டமிடும் என்பார்கள். குடுமி வைத்து என் தலை கோபுரம் மாதிரியும் இல்லை. ஆனால் ஏன் என் தலை மீது கருடாழ்வார் தட்டிவிட்டுச் சென்றார்? தெரியவில்லை. போகட்டும். 

கழுகு தலையைத் தட்டினால் ஏதாவது நல்லது நடக்குமா என்று சிலரைக் கேட்டேன். என்ன, தலையில் கழுகு தட்டியதா ? "காக்கா அல்லது ஆந்தை இப்படிச் செய்தால் ஏதாவது ப்ரீதி சேய்ய வேண்டும், கழுகு, கருடன் எல்லாம் நோ ப்ராபளம். விஷ்ணுவின் அருள் உங்களுக்கு இருக்கிறது அவ்வளவு தான்... கவலைப்படாதீங்க அடுத்த முறை வரும் போது 'கோவிந்தா' என்று சொன்னால் ஒன்றும் செய்யாது போய்விடும். குரங்கு கூட்டமாக வந்தால் 'ராமா ராமா' என்று சொல்லுவதில்லையா? அது மாதிரி!"

நேற்று முன் தின நாளிதழில் அமெரிக்காவில் மிகப்பெரிய காற்றலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சில மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. காரணம் இதன் காற்றாடியில் சிக்கி சில கழுகுகள் பலியாகி இருக்கிறது. 

பஞ்ச பாண்டவர்களின் ஒருவரான சகாதேவன் நிமித்த சாஸ்திரத்தில் இதை பற்றி விரிவாக எழுதியிருக்கலாம். சில ஒலைச்சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் இருக்கிறதாம் யாராவது பார்த்துச் சொன்னால் நன்றாக இருக்கும். கழுகு தட்டினால் என்ன பயனோ தெரியாது.ஆனால் தட்டியவர்கள் இந்த மாதிரி ஒரு கட்டுரை எழுதவும், இன்னும் தட்டப்படாதவர்கள் அதைப் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

Friday, November 8, 2013

வீரநாராயணபுரம்

போன மாதம் ஒரு பொடி நடையாக காரை எடுத்துக்கொண்டு சென்னை, கடலூர், வீரநாராயணபுரம்-காட்டுமன்னார் கோயில் என்று ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றி வந்தேன்.

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமத் நாதமுனிகள் வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார். ( அவருக்கு பின்னர் ஆளவந்தாரும் இந்த ஊர் தான் ). ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் காலப் போக்கில் மறைந்து போயின. அவைகளைத் தொகுத்த பெருமை ஸ்ரீ நாதமுனிகளையே சாரும்.

ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளை சேவிக்க சில ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாடினர். அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று சேவிக்கின்றீர்களே, இந்த ப்ரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா ? என்று அவர்களிடம் கேட்க அவர்கள் எங்களுக்கு இந்த பத்துப் பாட்டு மட்டும் தான் தெரியும். என்று கூறிவிட்டார்கள்.

நாதமுனிகளுக்கு அன்று முதல் திருவாய்மொழி ஆயிரத்தையும் பெறவேண்டும் என்ற ஆவல் குடிகொண்டது. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான திருநெல்வேலிக்குப் பக்கம் இருக்கும் திருக்குருகூருக்கு சென்று அங்கு விசாரித்ததில் அந்த ப்ரபந்தம் பற்றி யாருக்கும் தெரியவில்லை.

நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் சம்பந்தம் பெற்ற பராங்குசதாசர் என்பவரிடம் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற ப்ரபந்தத்தை உபதேசம் பெற்று அதை பன்னீராயிரம் முறை சேவித்த பின் நம்மாழ்வார் தோன்றி திருவாய்மொழி மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களையும் தந்தருளினார் என்கிறது குருபரம்பரை.

என் அப்பா பல முறை சொல்லிய இந்த கதையை கேட்டிருக்கிறேன். நாதமுனிகள் அவதரித்த இடத்துக்கு சென்று வரும் பாக்கியம் இவ்வளவு நாள் கழித்து போன மாதம் தான் கிடைத்தது.

சுஜாதாவின் தம்பியை கடைசி முறை பார்த்த போது, கங்கைகொண்ட சோழபுரம் பக்கம் நாதமுனிகள் ஆச்சாரியன் திருவடிகள் அடைந்த இடம் ஒன்று இருக்கிறது, என்று ஒரு சின்ன கதையும் சொன்னார். அது பின்வருமாறு

ஒரு நாள் நாதமுனிகள் வீட்டுக்கு வில்லுடன் இருவரும் ஒரு பெண்பிள்ளையும் குரங்குடன் வந்து அவர் மகளிடம் நாதமுனிகள் பற்றி விசாரித்திருக்கிறார்கள். அதற்கு அந்த பெண் அப்பா கோயிலுக்கு சென்றிருப்பதாக சொல்ல, வந்தவர்கள் சென்றுவிட்டார்கள். திரும்பிய நாதமுனிகள் மகள் சொன்னதை கேட்டு சக்கரவத்தித் திருமகனான ராம, லக்ஷ்மணர், சீதையும் ஹனுமாரும் தான் தன்னைப் பார்க்க வந்தவர்கள் என்று நம்பி அவர்களைத் தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அவர்களை தேடிக்கொண்டு சோழபுரம் வரை சென்றார். அவர் சென்ற வழியில் பூச்சரம் ஒன்றை கண்டார், அதைக் கண்டவர் "இது சீதையுடைய பூச்சரம்" என்று சொல்லியவாறு சென்றார். அந்த இடம் தற்போது "பூவிழுந்த நல்லூர்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் கொஞ்ச தூரம் சென்ற பின் குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருப்பததை கண்டார். அந்த இடம் தற்போது "குறுங்குடி" என்று அழைக்கப்படுகிறது. மேலும் கொஞ்ச தூரம் சென்றவர் வழியில் சென்றவர்களை பார்த்து அடையாளங்களைச் சொல்லி "அவர்களைக் கண்டீர்களா?" என்று கேட்டார். அவர்களும் "ஆம் கண்டோம்" என்று சொல்லியுள்ளார்கள். அந்த இடமே தற்போது "கண்ட மங்களம்" என்ற ஊர். அவர்களை எங்கு தேடியும் பார்க்கமுடியாமல் அந்த இடத்திலேயே மூர்ச்சித்து பரமபதித்தார். அந்த இடம்தான் தற்போது "திருவரசு" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "சொர்க்கப்பள்ளம்" என்று பெயர்.

இந்த இடத்தை தேடிச்சென்று சேவித்துவிட்டுப் புறப்பட்டோம்.

வீரநாராயணபுரத்தைப் பற்றிச் சொன்னால் கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் .

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' முன்பு மணியன் ஓவியங்களுடன் படித்திருக்கிறேன். ஒரு மாதம் முன் பாம்பே கண்ணன் அவர்களுடைய ஒலிப்புத்தகத்தைக் காரில் போகும் போதும், காலை நடைப்பயிற்சியின் போதும் கேட்க ஆரம்பித்து பிரமித்துப் போனேன்.

பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள், தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் எல்லோருக்கும் இதைச் சிபாரிசு செய்வேன். ஒலிப்புத்தகத்தில் இசை, பேசியவர்கள் ( குறிப்பாக அதில் வரும் பெண் கதாபாத்திரங்களின் குரல் ) எல்லாம் மிக அருமையாக செய்திருக்கிறார்கள். அவர்களுடைய மாடுலேஷன் எல்லாம் இந்த கதைக்கு மேலும் உயிரூட்டுகிறது. பாம்பே கண்ணன் அவர்களின் உழைப்பு எல்லா இடங்களிலும் தெரிகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வனை படம் எடுக்கிறேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை, ஆனால் பாம்பே கண்ணன் முழு நாவலையும் ஒலிவடிவத்தில் அதன் கதாபாத்திரங்களை நம் கண் முன்பே கொண்டு வந்துவிட்டார்.
இதை ஒலிப்புத்தகம் என்று சொல்லுவதை விட ஒலிச்சித்திரம் என்று அழைத்தால் தகும்.

இனி யாராவது படம் எடுக்கிறேன் என்று மீண்டும் கிளம்பினால், பாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் அவர்களுக்கு கைகுடுக்கும். தேவையான பகுதிகளை எடுத்து வெட்டி ஒட்டி சுலபமாக திரைக்கதை எழுதிவிடலாம். கல்கியின் வர்ணனைகள் எல்லாம் திரைக்கதைக்காகவே எழுதியிருக்கிறார்.

இந்த ஒலிப்புத்தகத்தில் மேற்கத்திய இசையும், கர்நாடக இசையும் தேவையான பகுதிகளுக்கு மெருகூட்டுகிறது. இதை தவிர மரங்கள் அசைந்தது, மழை வந்தது, இடி, மின்னல், ஆந்தை சத்தம் என்று வரும் இடங்களில் எல்லாம் பின்னணி இசை மிக மிக அருமை.

மீண்டும் மீண்டும் டிவிக்கு மஹாபாரதம் எடுப்பவர்கள் அடுத்த முறை பொன்னியின் செல்வனை கொண்டுவரலாம். அதற்கு பாம்பே கண்ணனின் உதவியை நாடலாம்.

Monday, November 4, 2013

போலீஸ் வீடு

ஞாயிற்றுக்கிழமை காலை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்த போது,  அம்மா

"ராஜேஷ் அப்பா போய்ட்டாராண்டா" என்று எழுப்பினாள்

"என்ன?" என்று படுக்கையியிலிருந்து எழுந்து உட்கார்ந்து,

"எப்போ?" என்றேன்

"ராத்திரி போயிருப்பார் போல... கார்த்தால கோலம் போடும் போது அவ ஆத்து வாசல்ல ஒரே கூட்டம்.. அந்த லதா பொண்ணு தான் ஓடி வந்து 'மாமீ...'ன்னு ஒரே அழுகை"

"ராஜேஷ் அம்மா ?"

"இன்னும் வரலையாம்"

Sunday, November 3, 2013

பாட்டி வெடித்த வெடி

தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று படித்த ஞாபகம். நான் ஸ்கூல் படித்த போது இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு.

என்ன டிரஸ், என்ன பட்டாசு, என்ன சினிமா ? என்று தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே பரபரப்பாகிவிடும்.

தீபாவளிக்கு என்ன டிரஸ் என்று முடிவு செய்வது பிரம்ம பிரயத்தனம். அந்த வருஷம் வந்த சினிமாவிற்கும் டிரஸ்ஸுக்கு நிச்சயம் சம்பந்தம் இருக்கும்.

புது வசந்தம் வந்த வருடம், திருச்சியில் பலர் மஞ்சள்-கருப்பு காம்பினேஷனில் டிரஸ் போட்டுக்கொண்டு அலைந்தார்கள். அடுத்த வருடம் சஃபாரி ஜுரம் என்னையும் சேர்த்து பலருக்கு பரவியது. ராமர் கலரில் சஃபாரி போட்டுக்கொண்டு என்னுடைய பெல்பாட்டம் ஊரை எல்லாம் பெருக்கியது.

நான் படிக்கும் போது ரெடிமெட் எல்லாம் வரவில்லை. சட்டை பிட், பேண்ட் பிட் வாங்கி அதை தைக்க வேண்டும். வாங்கிய துணி சட்டையாக எப்படி மாறும் என்ற கற்பனையில் அதை தைக்க கொடுக்க அப்பாவுடன் டைலர் கடைக்கு விஜயம் செய்வேன். தற்போது ரிதம்பாஸ் இருக்கும் இடத்தில் ஒரு சின்ன பெட்டி கடை சைசில் ஒரு ஆஸ்தான டைலர் இருந்தார். வாங்கிய துணியை கொடுத்தவுடன் அதை அளந்து பார்த்து, 10 சென்டிமீட்டர் குறைகிறதே... சரி அட்ஜஸ்ட் செய்து தைக்கிறேன் என்று ஒரு தேதி தருவார். அது கிட்டதட்ட தீபாவளிக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முன்னாடி இருக்கும்.

"அண்ணே கைல ஒரு மடிப்பு வரணும்.. பேண்டுல மூன்று ஃபிளீட்...சைடு பாக்கெட்... உள்ளே சீக்ரெட் பாக்கெட்... மறந்துடாதீங்க" என்று நான் சொல்லுவதை எல்லாம் ஒழுங்காக குறிப்பு எடுத்துக்கொள்வார்.

அவர் குறிப்பிட்ட நாள் அன்று அவர் கடைக்கு சென்றால் சோப்பு துண்டால் மார்க் செய்யப்பட்டு துணியை அரச மர சுள்ளி கட்டு மாதிரி கட்டி வைத்திருப்பார்.
"'நாளைக்கு மறுநாள் தீபாவளி.. இன்னும் தைக்கலையா ? தீபாவளிக்கு போட்டுக்கணும்...சரியில்லைனா ஆல்டர் வேற செய்யணும்"
"ராத்திரி 10 மணிக்கு வாங்க.. நிச்சயம் முடிந்திருக்கும்"

10 மணிக்கு போகும் போது தையல் துணி மிஷினில் அடிப்பட்டுக்கொண்டு இருக்கும். ஆண் குழந்தையை எதிர்பார்த்து பெண் குழந்தை வருவது போல..
"அண்ணே... கைல மடிப்பு கேட்டேனே"
"அதுவா தம்பி... நான் சொல்லல பத்து சென்டிமீட்டர் கம்மி. "அவர் காலுக்கு கீழே வெட்டப்பட்டு துணி பத்து சென்டிமீட்டர் துணி பத்து சிதறி கீழே கிடக்கும்.
"பேண்ட சைடு பாக்கெட் கேட்டேன் நீங்க முன்னாடி வெச்சிட்டீங்களே"
"அப்படியா... அடடே... பரவாயில்லை...இந்த கலருக்கு இது நல்லா தான் இருக்கு.. போன கமல் படம் பார்க்கலை ? அதுல முன்னாடி தான் வைத்திருப்பார்"
வீட்டுக்கு வந்து போட்டுக்கொண்டு பார்க்கும் போது மர்மஸ்தானத்தை ஏதோ இழுப்பது போலவும். உட்கார்ந்தால் முட்டியை இறுக்குவது போலவும் இருக்கும்.
பாட்டி அதை பார்த்துவிட்டு...
"ஏண்டா கீழே இவ்வளவு குட்டையா இருக்கு... ஒரு வாரத்துல நீ இன்னும் உசந்து போயிடபோற" என்பாள்.

நான் ஒன்பதாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன். மலைக்கோட்டை பக்கம் கிருஷ்ணா ரெடிமேட் வந்து இந்த பிரச்சனையிலிருந்து விடுவித்தது. அதற்கு பிறகு அந்த டைலர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

பட்டாசுகளை திகட்ட திகட்ட வெடித்திருக்கிறோம். அதற்கு காரணம் என் நண்பனின் அப்பா போலீஸில் இருந்தது தான். யானை வெடி வாங்க காந்தி மார்கெட் போயிருக்கிறேன். வெடிகளை அப்படியே வெடிக்காமல் அதை பிரித்து அதில் உள்ள மருந்துகளை கொட்டி நாங்களே தயாரித்த வெடிகளை வெடிப்பதில் தான் மிகுந்த ஆர்வம். அதை எல்லாம் இப்போது நினைக்கும் போது பயமாக இருக்கிறது. ராக்கெட்டை அதன் குச்சியிலிருந்து பிரித்து நூலில் மாட்டிவிட்டு, பழைய காம்ப்ளான் டப்பாவில் உள்ளே அணுகுண்டு போட்டு விட்டு ஓடியிருக்கிறோம். இதற்கு மேலேயும் செய்திருக்கிறோம் ஆனால் பொதுநலம் கருதி அதை எங்கே எழுதாமல் விட்டுவிடுகிறேன். இதை எல்லாம் விட என் பாட்டி வெடித்த வெடியை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்.

ஒரு நாளில் எவ்வளவு சினிமா பார்க்கலாம் என்று யாராவது கேட்டால் அதற்கு சரியான பதில் - 5. தீபாவளி அன்று நிச்சயம் 4 படங்கள் பார்த்துவிடுமோம். அடித்து பிடித்து டிக்கெட் எல்லாம் வாங்க வேண்டாம். ஒரு நண்பனின் அப்பா போலீஸ் அடுத்த நண்பனின் அப்பா பட விநியோகஸ்தர். ரஜினியின் மன்னன், தளபதி கமலின் நாயகன் நான் பார்த்த தீபாவளி படங்களில் மறக்க முடியாதது.

கடல் போன்ற கலையரங்கம் திரையரங்கில் தளபதி படத்தில் வரும் 'சுந்தரி பாட்டை' கட் செய்தார்கள். தளபதி பட கேலண்டர், போஸ்டர்கள். கை நிறைய மிட்டாய் கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. நாயகன் படத்தை பார்த்துவிட்டு அதை பற்றி பலரிடம் பேசியிருக்கிறோம். நாயகன் கமல் என்று பலர் மீசையை எடுத்தார்கள்.

தீபாவளி முதல் நாள் இரவு தெப்பகுளம், NSB சாலை பிளாட்பாரம் கடையில் பனியன், ஜட்டி, கைக்குட்டை, வேட்டி, வெடி என்று எல்லாவற்றையும் குவித்து வைத்து விற்பார்கள். கருர், ஜீயபுரம், லால்குடி என்று சுத்துப்பட்ட எல்லா ஊர்களிலிலிருந்தும் வருபவர்கள் இனிமேல் இது எல்லாம் அடுத்த தீபாவளிக்கு தான் கிடைக்கும் என்பதை போல அள்ளிக்கொண்டு போவதை பார்த்திருக்கிறேன்.

ஒரு தீபாவளி காலை திடீர் என்று சமையல்கட்டில் பயங்கர வெடி சத்தம் புகையும் குப்பைக்கும் நடுவில் பாட்டி பயந்துக்கொண்டு இருந்தாள்.
"என்ன பாட்டி ?"
"உனக்கு மத்தாப்பு வெடிக்க மெழுகுவத்தி என்று நினைத்து பத்த வெச்சேன்...வெடித்துவிட்டது"

பாட்டி மெழுகுவத்தி என்று நினைத்து லக்ஷ்மி வெடியை பற்ற வைத்திருக்கிறாள். இன்றும் எனக்கு அந்த தைரியம் கிடையாது.

எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்