Skip to main content

மலையாள திவ்யதேசப் பயணம் - 1

குலசேகர ஆழ்வார் வைபவம்

போய் வந்த பாதை
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களுடன் மலையாள திவ்யதேசங்கள் சென்று வந்தது ஒரு மாறுபட்ட அனுபவம்.

பொதுவாக 108 திவ்யதேசம் செல்லும் அன்பர்கள் ஒரு கோயிலை முடித்துவிட்டு அடுத்த கோயிலுக்கு ஓட்டமாக ஓடுவார்கள். ஒரு நாளில் இவ்வளவு பார்த்தேன் என்று ஏதோ பரிட்சை சிலபஸ் முடிப்பது போல முடிப்பார்கள். சிலர் சின்ன புத்தகத்தில் தங்களுடைய லிஸ்டை 'டிக்' செய்து இன்னும் எனக்கு 22 பாக்கி என்பார்கள். இந்த மாதிரி அவசரத்தில் சேவிப்பதால் இரண்டு நாள் முன் செய்தித்தாளில் என்ன வந்தது என்பது போல நினைவில் இருப்பதில்லை.

அப்படி இல்லாமல், திவ்யதேசங்களைப் பார்த்துவிட்டு, அந்தந்தக் கோயிலிலேயே கிட்டதட்ட ஒரு மணிநேரம் உட்கார்ந்து, அந்தக் கோயிலைப் பற்றிய சிறப்பு, ஸ்தல புராணம், ஆழ்வார் பாடிய பாசுரங்களின் உட்கருத்து என்று வேளுக்குடி ஸ்வாமியின் உபன்யாசத்தைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.

ஸ்ரீவைஷ்ணவ திய்வதேசங்கள் 108. இவை ஆழ்வார்களால் பாடபெற்ற திருத்தலங்கள். சோழநாட்டு திவ்யதேசங்கள் 40; பாண்டிய நாட்டில் 18; தொண்டை நாட்டில் 22; நடுநாடு - 2, சேர நாடு அல்லது மலையாள திவ்யதேசங்கள் 13; வட நாட்டுத் திருத்தலங்கள் 12; வைகுண்டம் - 1.



பல திவ்யதேசங்கள் தமிழ்நாட்டில் இருப்பவை. தமிழகத்துக்கு அருகே இருக்கும் கேரளாவில் 11 திவ்யதேசங்களும், 2 நாகர்கோயில் பக்கம் இருக்கிறது. இந்த 13 திவ்யதேசங்களை சேரநாட்டு (அல்லது மலைநாட்டு) திவ்யதேசங்கள் என்று கூறுவர். பெரும்பாலும் இவைகளை மங்களாசாசனம் (பாடியவர்) செய்தவர் நம்மாழ்வார். சில திவ்யதேசங்களை திருமங்கை ஆழ்வாரும் பாடியுள்ளார். திருவித்துவக்கோடு என்ற திவ்யதேசத்தை குலசேகர ஆழ்வார் பாடியுள்ளார்.

இவை தவிர சேரநாட்டில் மேலும் இரண்டு முக்கியமான அபிமான ஸ்தலங்கள் இருக்கின்றன-- திருவஞ்சிக்களம், குருவாயூர்.

திருவஞ்சிக்களம் குலசேகர ஆழ்வார் அவதரித்த இடம். திருச்சூரிலிருந்து சுமார் 45 கிமீ தொலைவில் கொடுங்களூர் உள்ளது. அங்கிருந்து சுமார் 4 கிமீ தூரத்தில் திருவஞ்சிக்களம். அங்கே திருக்குலசேகரபுரம் என்ற சின்ன ஊரிலே ஆழ்வாருக்குக் கோயில் உள்ளது.

நாங்கள் திருவஞ்சிக்களம் போன அன்று ஆழ்வார் திருநட்சத்திர உற்சவத்தில் கலந்துக்கொள்ள முடிந்தது. குலசேகர ஆழ்வார் பற்றி முதலில் பார்த்துவிட்டு மற்ற திவ்யதேசங்களைப் பற்றிய என் அனுவத்தை எழுதலாம் என்று இருக்கிறேன்.

குலசேகர ஆழ்வார் பிறப்பிடம் திருவஞ்சிக்களம். வைணவ சம்பிரதாய நூல்களான திவ்யசூரி சரிதம், பிரபந்நாம்ருதம், ஆயிரப்படி குருபரம்பரை, ஆழ்வார்கள் வைபவம், அரிசமயதீபம் போன்ற நூல்கள் கொண்டு அவருடைய வரலாற்றை அறியமுடிகிறது.

பயணத்திற்கு முன் எங்களுக்கு ஸ்ரீவேளுக்குடி அவர்களால் மலையாள திவ்யதேச கோயில்கள் பற்றி தமிழில் தொகுக்கப்பட்ட அருமையான புத்தகம் ஒன்றும், திருப்பதி தேவஸ்தானம் வெளியீட்டான மலைநாடு திவ்யதேசங்கள் பற்றிய ஆங்கில புத்தகம் ஒன்றும், இந்த திவ்யதேசங்கள் பற்றிய ஒலி-ஒளியுடன் கூடிய ஒரு DVD-யும் தந்தார்கள். போகும் முன் அந்தந்த திவ்யதேசங்கள் பற்றிக் கொஞ்சம் தெரிந்துக்கொண்ட பின்பு சென்றதால் அனுபவம் இன்னும் கூடிற்று.

ஆழ்வார்களிலேயே குலசேகர ஆழ்வாரை மட்டும் தான் 'குலசேகரப் பெருமாள்' என்று அழைக்கிறோம்.  ராமர் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டதால் அதற்குக் காரணம். இவர் அருளிசெய்த திவ்வியப் பிரபந்தம் பெருமாள் திருமொழி, 105 பாசுரங்கள் கொண்டது. வடமொழியில் முகுந்தமாலை என்று ஒரு நூல் இயற்றி உள்ளார் என்று கூறுவர். இதை எழுதியது வேறொரு குலசேகரர் என்றும் கூறுவாரும் உண்டு.

சுஜாதாவின் 'ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்' புத்தகத்திலிருந்து குலசேகர ஆழ்வார் பற்றி சில பகுதிகள். 
"குலசேகரர் சேரநாட்டை ஆட்சி புரிந்த அரசர். திருமாலிடம் பக்தி பெருகி அவரையும் அவர் அடியார்களையும் பெரிதும் ஆதரித்து, உலக வாழ்வில் பற்று விட்டுப்போய் ஆட்சியைத் துறந்து திருமாலின் அடியார் கூட்டத்தில் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. அரசப் பொறுப்புகளைவிட்டு பக்தியில் திருமாலின் கூட்டத்துடன் அவர் அதிக நேரம் செலவழிப்பதைக் கண்ட சபையினர் அரச சபையில் திருட்டுப்போன ரத்னமாலையை இந்த பக்த கோஷ்டியினர்தான் திருடினர் என்று பழி சுமத்த, குலசேகர மன்னன் மிகுந்த வருத்தம் கொண்டு ''பரமன் அடியார் ஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டார்கள், அப்படிச் செய்திருந்தால் என்னைப் பாம்பு பிடுங்கட்டும்'' என்று ஒரு குடத்தில் பாம்பை வைத்து அதில் கையிட்டார். பாம்பு அவரைக் கடிக்கவில்லை. இந்தக் கதையை நாதமுனிகளின் சிஷ்யர் மணக்கால் நம்பி என்பவர் ஒரு தனிப் பாடலாக எழுதியுள்ளார்.

ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளரென்று அவர்களுக்கே
வாரங்கொடு குடப்பாம்பிற் கையிட்டவன் - மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லிகாவலன் வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே.

குலசேகர ஆழ்வார் அரச பதவியைத் துறந்த பக்தர் என்பதற்கு சரித்திரச் சான்றுகளும் சேக்கிழார் புராணத்தில் குறிப்புகளும் உள்ளன. அவர் காலத்தில் தொண்டர் குழுவினர் ஊர் ஊராக அலைந்தார்கள் என்பதற்கும் பாடல்களில் சான்றுகள் உள்ளன.

ஆறு போல வரும் கண்ணீர் கொண்டு
அரங்கன் கோயில் திருமுற்றம்
சேறு செய்யும் தொண்டர்

என்று ஆழ்வாரே குறிப்பிடுகிறார். சத்திரிய வம்சத்தவர் என்பதை கொங்கர்கோன் என்றும், கொல்லிநகர்க் கிறை என்றும் தன்னையே குறிப்பிட்டுக் கொள்கிறார். சேரநாடு என்பது கோவை, சேலம், குடகு, மலையாள தேசங்களையும் அடக்கியிருந்தது. அதன் அரச பதவியைத் தன் மகனுக்குப் பட்டம் கட்டிவிட்டுத்தான் துறந்தார் என்கிற குறிப்புகளையும் காண்கிறோம். குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடி, திருமங்கை ஆழ்வார்களுக்கு சமகாலத்தவர் என்று கருதுவதில் தவறில்லை. அவரே ஒரு பாசுரத்தில், ''ஆடிப்பாடி அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப்பொடி'' என்று எழுதியுள்ளார். அது தொண்டரப்பொடி ஆழ்வாரைக் குறிக்கலாம், அல்லது தொண்டரடிப்பொடி இதைப் படித்தபின் இதை தனது தாஸ்ய நாமமாக ஏற்றிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். எப்படியும் குலசேகரப் பெருமான் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று நம்ப இடம் இருக்கிறது.
இவர் பெருமாள் திருமொழி என்று 105 பாடல்களைப் பாடியுள்ளார். இராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள்."


குலசேகர ஆழ்வார் மூர்த்தி திருவஞ்சிக்களத்தில் உள்ள முகுந்தன்/கிருஷ்ணன் கோயிலில் இருந்தது. ஆனால் அதற்கு சரியான முறையில் பூஜை எல்லாம் நடைபெற்றதாகத் தெரியவில்லை. 2004-இல் ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியின் முயற்சியால், கேரள அரசு/அதிகாரிகளிடம் பேசி அந்தக் கோயிலுக்கு எதிர்ப்புறம் ஒரு ஸ்ரீநிவாசன் கோயிலைப் புதிதாக எழுப்பி, அங்கே குலசேகர ஆழ்வரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

ஆழ்வாருடைய திருநட்சத்திர உற்சவத்தில் பலர் பங்குகொண்டார்கள். அதனுடைய படத் தொகுப்பு கீழே தந்துள்ளேன்.

இடம் கொடுத்த பாட்டி
கோயிலுக்கு வெளியில் ஒரு மரத்தடியில் திருமஞ்சனம் நடைபெற்றது. நல்ல வெயில். பக்தர்களுக்கு பந்தல் அமைத்திருந்தார்கள். பந்தலைத் தாண்டியும் கூட்டம் இருந்தது. அங்கே நெற்றி நிறைய திருமண்ணுடன் ஒரு வயதான பாட்டி பாதி வெயிலிலும் பாதி பந்தலின் நிழலிலும் உட்கார்ந்து இருந்தார். நான் வெயிலில் நிற்பதைப் பார்த்துவிட்டு, உடனே தான் வெய்யிலுக்கு வந்து,
"சாமி உள்ளே வந்து நிழலில் நில்லுங்க"
என்று அவருடைய இடத்தை எனக்குத் தந்தார்.

முதல் ஆழ்வார்கள் கதை பலருக்குத் தெரியும் என்றாலும் இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

திருக்கோவலூர் என்ற இடத்தில் நடந்த கதை. நல்ல மழை, காற்றுடன் கூடிய பின்மாலைப் பொழுது. நன்கு இருட்டிவிட்டது. மழைக்கு ஒதுங்க நினைத்த பொய்கையாழ்வார் மிருகண்ட முனிவர் ஆசிரமத்தில் உள்ள இடைகழியில் (ரேழி என்றும் சொல்லுவர். வீட்டின் அல்லது கோவிலின் நுழைவாயிலில் உள்ள நடைபாதையைக் குறிக்கும்.) ஒதுங்கினார். அங்கே சற்று ஓய்வெடுக்க நினைத்து, படுத்துக் கொண்டார். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். “ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம்” என்று கூறி, பொய்கையாழ்வார் அவருக்கு இடம் கொடுத்தார். சற்று நேரம் கழித்து பேயாழ்வார் நனைந்துகொண்டு அங்கு வந்தார். “ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்று கூறியபடியே மூவரும் நின்றனர். மூவரும் எம்பெருமான் குறித்துப் பேசி அனுபவித்துக் கொண்டிருக்கையில், அந்த இடத்தில் திடீரென்று ஒரு நெருக்கடி ஏற்பட்டது போல் உணர்ந்தார்கள். யார் இப்படி இவர்களைப் போட்டு நெருக்குகிறார்கள் என்று காண்பதற்காக புறவிருளோடு அகவிருளையும் அகலும்படி முதலில் பொய்கையாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காய்ச்- செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று (முதல் திருவந்தாதி)

என்று ஆரம்பித்து 100 பாடல்களைப் பாடினார்.

[பூமியையே விளக்காக்கி, கடல் நீரை நெய்யாக்கி, சூரியனைச் சுடராக்கி, திருமாலுக்கு விளக்கேற்றினால் உலகே ஒளிமயமாகி, துன்பக் கடல் நீங்கும்.]

பொய்கையாழ்வாரைத் தொடர்ந்து பூதத்தாழ்வார்,

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா- நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்புரிந்த நான் (இரண்டாம் திருவந்தாதி)

என்று இவரும் 100 பாடல்களைப் பாடினார்.

[அன்பை அகலாக்கி, பொங்கி வருகின்ற ஆர்வத்தை நெய்யாக்கி, நல்ல சிந்தனையைக் கொண்ட மனதைத் திரியாக்கி, நாரணற்கு சுடர் விளக்கேற்றினேன்.]

இவர் பாடி முடித்தபின் மூன்று ஆழ்வார்களுக்கும் பெருமாள் காட்சி கொடுத்தார். அந்தத் தரிசனத்தின் பரவசத்தால் பேயாழ்வார்,

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று. (மூன்றாம் திருவந்தாதி)

[திருமகளைக் கண்டேன்; பொன்னையொத்த மேனியைக் கண்டேன்; சூரியனின் ஒளி வெள்ளத்தைக் கண்டேன்; போர்க்களத்தில் பொன் போன்ற நெருப்பைக் கக்குகிற சக்ராயுதம் கண்டேன்; வலம்புரி சங்கு கண்டேன் கடல்வண்ணம் கொண்ட பெருமாளிடத்தில்.]

என்று இவரும் தன் பங்கிற்கு 100 பாடல்களைப் பாடினார்.

துய்மையான மனிதாபிமானம் மிக்க மனங்கள் கூடும்போது, அவர்களுடைய நெருக்கத்தை விரும்பி, பெருமாள் வருகிறார். அன்பு, ஆர்வத்துடன், தூய்மையான நல்ல மனமும் (இன்பு உருகு சிந்தை) பக்திக்கு மிக அவசியம் என்பதை ஆழ்வார் பாடலில் பார்க்கலாம்.

பக்தனுடைய சம்பந்தம் பெருமாளுடைய சம்பந்தத்தை விடப் பெருமை வாய்ந்தது. அதைப் பற்றி உயர்வாக பல ஆழ்வார் பாடல்களில் எடுத்துக்காட்ட முடியும். ஆனால் கூட்டம் இருக்கும்போது நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை, வீட்டில் படித்ததைக் கோயில் வரிசையில் மறந்துவிடுவதுடன், ஒருவரை ஒருவர் கடுங்சொற்கலாக் ஏசுகிறோம். சுயநலம் முன்னே வந்துவிடுகிறது. படித்த நம்மை போல இருப்பவர்களிடம் இல்லாத அந்த பக்தியை அந்த வயதான பாட்டியிடம் கண்டேன். ஓர் உண்மையான ஸ்ரீவைஷ்ணவரின் குணம் அங்கே தெரிந்தது.

நிழல் கொடுத்த மரம்

பந்தலுக்குப் பக்கம் சின்ன மா மரம் ஒன்று இருந்தது. அதனடியில் சுமார் 20 பேர் நிழலுக்கு ஒதுங்கினார்கள். அந்த மரம் 2004-ஆம் ஆண்டு அந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தின் போது பக்தர் ஒருவர் நட்டது; அவர் இன்று உயிருடன் இல்லை என்று அறிந்துக்கொண்டேன்.

நானும் அந்தக் கோயிலைச் சுற்றி கூடிய சீக்கிரம் பத்து மரக் கன்றுகளை நடலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். இதை படித்துக்கொண்டு இருக்கும் அன்பர்கள் அவரவர் ஊர்க் கோயிலில் இதை செய்யலாம்.










ஆழ்வார் திருநட்சத்திர புகைப்பட தொகுப்பு

பெருமாள்

ஆழ்வார்
 ஆழ்வார்க்கடியான்

கோயிலின் முகப்பு தோற்றம்

திருமஞ்சனம்


தீர்த்தவாரி

கிருஷ்ணன் கோயிலில் ஒரு மரம்

பக்தர் கூட்டம்



குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்


பயணம் தொடரும்....

Comments

  1. Dear Mr Desikan
    Your post was interesting and useful. Can you please share with us how we can also Sri velukkudi swamy on his future tours. Any contact details.


    sripriyamukundan@gmail.com

    ReplyDelete
  2. மிக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள், தேசிகன். நேரே சென்று பெருமாள், ஆழ்வார் தரிசனம் செய்தது போன்ற ஒரு நிறைவை, தங்கள் கட்டுரை அளித்தது ! நன்றி. தாங்கள் சமீபத்தில் ஒரு பெரிய சிறுகதை எழுத்தாளர் என்ற அந்தஸ்தை பெற்றதற்கும் எனது வாழ்த்துகளை தெரிவிப்பது என் கடமையாகும் :-)

    ReplyDelete
  3. மிகச்சிறந்த எழுத்தாளனின் கைவண்ணத்தை உங்கள் எழுத்தில் கண்டேன் தேசிகன்.பெருமா ளின்பால் ஆழ்வார்களின் ஈடுபாட்டை படிக்கும்போது கண்கள் பனிக்கின்றன. மிக்க நன்றி.

    எஸ்.வேங்கடேசன் .

    ReplyDelete

Post a Comment