Thursday, January 31, 2013

திருவரங்க உலா

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை  பற்றி பத்ரி எழுதியிருந்தார். ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளைப் சுற்றிப் பார்க்க போகிறார்கள் என்று தெரிந்து  ஒரு நாள் மட்டும் அவர்களுடன் ஸ்ரீரங்கம் சென்று வந்தது இனிய அனுபவம்.

தாத்தா, பாட்டி, மாமி மாமா, இளைஞர்கள், இளைஞிகள் என்று அவியல் மாதிரியான ஒரு குழு. குழு என்று சொல்லுவதை விட குடும்பம் என்று சொல்லலாம். .

Friday, January 18, 2013

நேற்று புத்தகக் காட்சியில்...

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வழிநெடுகிலும் எம்.ஜி.ஆர் சிரித்த முகத்துடன் என்னை புத்தகக் காட்சிக்கு வரவேற்றார். வடபழனியில் டிராஃபிக் நெரிசலில் ஆபீஸ் கூட்டம் தவித்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் ஹார்ன் அடித்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டு இருந்தார்கள்.

"என்ன டிராபிக் ஜாம்?" என்று ஆட்டோ ஓட்டுபவரிடம் கேட்டேன்

"தெர்ல சார்"

பெங்களூர் மாதிரி காலைப் பனி கூட கிடையாதே என்று பார்த்தபோது 'கலை இலக்கியப் பகுத்தறிவு' பேனர் முழு சிக்னலையும் மறைத்ததால் வந்த வினை.

Friday, January 4, 2013

உடுப்பியில் இரண்டு நாள்

கிறுஸ்துமஸ் லீவுக்கு உடுப்பி போகலாம் என்று முடிவு செய்து திடீர் என்று குடும்பத்துடன் காரில் கிளம்பினோம்.

"வழி எல்லாம் தெரியுமா ?"

"அது தான் GPS இருக்கே .. "

"இப்படித் தான் போன தடவை அதை நம்பி போனோம்.. பாதி வழியில ரோடு பிளாக்... மாமி திரும்ப வீட்டுக்கு வழி சொல்லிடுத்து"

( GPSல் பெண் குரலில் வழி சொல்லும் அதை மாமி என்று அழைப்போம், மாமாவிற்கும் மாற்றிக்கொள்ளலாம் !)

சனிக்கிழமை காலை 6 மணிக்கு உடுப்பி கிளம்பினோம். பெங்களூர் - நீலமங்களா - சென்னராயப்பட்டனா, ஹாசன், ஷிர்டி காடு வழியாக மங்களூர் - உடுப்பி என்ற வழியில் போனோம். 420 கிமீ தூரம்.

உடுப்பி என்றால் நினைவுக்கு வருவது ஹோட்டல் இன்னொன்று கிருஷ்ணர். .

கிருஷ்ணர் கோயில் எப்படி இருக்கும் எங்கே தங்கப் போகிறோம் என்ற எந்தத் தகவலையும் கூகிளில் பார்க்காமல் புறப்பட்டேன். உடுப்பி போய்ச் சேர்ந்தபோது மதியம் 3 மணி ஆகிவிட்டது. தங்குவதற்கு எல்லா மடங்களும், ஹோட்டல்களும் 'ஹவுஸ் ஃபுல்' என்று போர்ட் மாட்டியிருந்தார்கள். ஏதோ ஒரு மடத்தில் சில மணி நேரம் சற்றே இளைப்பாற ஒரு ரூம் குடுத்தார்கள்.

ஏதோ ஒரு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷ்டி கோயிலுக்குள் பஜனையுடன் செல்ல நாங்களும் அவர்களைத் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று தொடர்ந்தோம்.

கோயில் உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லாமல் இருட்டாக இருந்தது. கோடியில் சின்னதாக ஒரு விக்ரகம் தெரிந்தது.
"கிருஷ்ணர் உங்களுக்கு தெரிகிறதா ? எனக்கு ஒன்றும் தெரியலையே"
சரியா பார் "அங்கே பார் முகம், கை கூட தெரிகிறது" என்றேன்.

நன்றாக சேவித்துவிட்டு வெளியே திண்ணையில் வந்து உட்கார்ந்தோம்.

"சார் கிருஷ்ணர் கோயிலுக்கு எப்படி போகணும்?" என்று எங்களை மாதிரி டூரிஸ்ட் ஒருவர் வழி கேட்க நாங்கள் தரிசித்த கோயிலைக்  காண்பித்தோம். எங்கள் பக்கத்தில் இருந்தவர் (உள்ளூர் ஆசாமி ) இது கிருஷ்ணர் கோயில் இல்லை இது அனந்தேஸ்வரர் கோயில். கொஞ்சம் தூரம் தள்ளி கிருஷ்ணர் கோயில் இருக்கு என்று காண்பித்தார்.

"எப்படி உங்களுக்கு கிருஷ்ணர் கை கால் எல்லாம் தெரிந்தது" என்றாள் என் மனைவி.

"உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் - எல்லாம் கண்ணன்" என்று நம்மாழ்வார் சொன்னதை சொல்லிப்பார்த்தேன். அவர்கள் நம்பாமல் சிரித்தார்கள்.

கிருஷ்ணர் கோயில் போகும் முன் அதை பற்றி ஒரு சின்ன வரலாற்றுச் சுருக்கம்.

உடுப்பி பக்கம் இருக்கும் மால்பே கடலில் துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல் புயலில் சிக்கிக்கொண்ட சமயம் மத்வாச்சாரியார் கடற்கறையில் இருந்து அதை காப்பாற்றினார். கப்பலில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியைத் தெரிவிக்க என்ன வேண்டும் என்று கேட்க கப்பல் ஓரத்தில் கோபி சந்தனத்தால் கற்கள் இருப்பதை பார்த்து அதை வேண்டும் என்று கேட்டார். அதனுள்ளே இருந்துதான் இன்று நாம் பார்க்கும் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் வந்ததாக சொல்கிறார்கள். இன்றும் மத்வ சமூகத்தினர் கோபி சந்தனத்தால்தான் திலகம் இட்டுக்கொள்கின்றனர். கோபி சந்தனம் துவாரகாவிலிருந்து இன்றும் இங்கே வருகிறது. ( கிலோ 30ரூபாய் ). இந்த திருமேனி ருக்மணியால் பூஜிக்கப்பட்ட கிருஷ்ணரின் சாளக்கிராமத்தாலான திருமேனி என்றும் நம்பப்படுகிறது.

கன்னட பக்தர் கனகதாசர் ஒரு முறை பெருமாளை தரிசிக்க உடுப்பி வந்த போது பிராமணர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி என்ற காரணத்தால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கிருஷ்ணனை சிறிய துவாரத்தின் மூலம் காண முயன்றார், ஆனால் அவருக்கு கிருஷ்ணனின் பின் பக்கம் தான் தெரிந்தது. மனமுருகிப் பாட ஆரம்பிக்க, கிருஷ்ணர் முகத்தை துவாரத்தை நோக்கி திருப்பினார். இதுவே இன்று 'கனகணகிண்டி' என்றழைக்கப்படுகிறது. நாமும் இந்த குட்டி கிருஷ்ணனை அந்த ஜன்னல் வழியாக தான் பார்க்க வேண்டும். எல்லா கோயில்களிலும் பெருமாளின் முகம் கோயிலின் வாசற்பக்கம் நோக்கியிருக்கும் ஆனால் உடுப்பியில் இது மாறி இருப்பதற்கு இதுவே காரணம். திருப்பாணாழ்வார் பக்தியும் இதனுடன் ஒத்துப்போவதை பார்க்கலாம்.

சிலவற்றை அனுபவிக்க வேண்டும். உடுப்பி கிருஷ்ணரும் அதே போல தான். அலங்காரம் செய்து, அலங்காரம் செய்யாமல் எப்படி பார்த்தாலும் அழகு. அதே மாதிரி பண்டரிபூர்.

கோயிலில் பல கறவைமாடுகள் இருப்பது வாசனையிலேயே தெரிகிறது. கோயில் குளத்துக்கு பக்கம் விறகுகளை தேர் போல அடுக்கி வைத்திருக்கிறார்கள் தினமும் அன்னதானத்துக்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். கோயில் சுற்றி இருக்கும் தேரடிவீதியில் வாகனங்கள் அனுமதி இல்லை. அதனால் நிம்மதியாக இருக்கிறது. எல்லா கடைகளிலும் பிளாஸ்டிக் கவர் உபயோகப்படுத்துவதில்லை அதனால் கோயில் சுற்றி சுத்தமாக இருக்கிறது.

கோயில் பக்கம் ஹோட்டல்கள் இருக்கிறது. மங்களூர் போண்டா ( அவர்கள் பஜ்ஜி என்கிறார்கள்), மங்களூர் பன் கிடைக்கிறது. வித்தியாசமான உணவு.

மறுநாள் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் மால்பே கடற்கறைக்குச்  சென்றோம். கடல்நடுவே செயிண்ட்மேரீஸ் தீவுக்கும் சிறு படகுகளில் பயணித்தோம். உடுப்பி கோயிலில் பார்த்த அந்தத் தூய்மை இங்கே இல்லை. தீவு முழுக்க விஸ்கி பாட்டில்களும், லேஸ் சிப்ஸ் குப்பைகளும், காலி பெப்ஸி என்று FDI இங்கே வந்துவிட்டது. இவைகளைத்  தவிர இந்த தீவு நன்றாக இருப்பதற்கு இரண்டு காரணம் - எரிமலை பாறைக்குழம்பு படிவங்களும், தெளிவான தண்ணீரும்.

மால்பே கடற்கரையிலிருந்து தீவுக்குச்  செல்ல ஒருவருக்கு 150ரூபாய் வாங்குகிறார்கள். படகுகளில் உயர் காக்கும் "லைப் ஜாக்கெட்" பேருக்கு ஒன்று மாட்டியிருக்கிறார்கள். நடுகடலில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய ரிஸ்க் தான். போவதாக இருந்தால் ஏதாவது சுலோகம் சொல்லிக்கொண்டு போவது நல்லது.

திரும்ப வரும் வழியில் மங்களூர் தாண்டியதும், மைசூர்-மேல்கோட்டை என்ற போர்டை பார்க்க ராமானுஜரை பார்க்க காரைத் திருப்பினேன். இன்னொரு சமயம் அதைப் பற்றி எழுதுகிறேன். (முன்பு மேல்கோட்டை சென்றது பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்)

( படங்கள் உடுப்பி, மால்பே கடற்கரையில் எடுத்தது )

Wednesday, January 2, 2013

போன வருஷம் என்ன செய்தேன் ?

போன வருஷம் என்ன செய்தேன்? பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை. கிச்சனில் தேதி கிழிக்கும் காலெண்டர் கூட 2.1.12 என்று காட்டிக்கொண்டு இருக்கிறது. சில அருமையான சிறுகதைகள் படித்தேன். ஆகஸ்ட் மாதம் கடைசியில் திடீர் என்று 4 சிறுகதைகள் எழுதினேன்.

தாராளமாய் சொல்கிறேன் தேசிகன் சார்உங்கள்
போராளி ஸ்டோரி பிரமாதம் - ஏராள
மாக எழுதுங்கள், மற்று மொருசுஜாதா
ஆகயென் வாழ்த்துக்கள் அன்பு.

....என்று கிரேஸி மோகன் வாழ்த்தியது சந்தோஷமாக இருந்தது.

நல்ல க்ரைம் கதை ஒன்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. மனைவி, "நீங்க எழுதுவதே ஒரு க்ரைம்தான்" என்றாள்.

புது காரை எடுத்துக்கொண்டு ஊட்டி, உடுப்பி என்று சுற்றினேன். இரண்டு முறை பஞ்சர் ஒட்டினேன். நிறைய சினிமா பார்த்தேன். இரண்டு மூன்று முறை தப்பாக ஓட்டியதற்கு யார்யாரிடமோ திட்டு வாங்கினேன்.

'ஹம் ஆப் கே ஹை கோன்' ஹிந்தி படத்திற்குப் பிறகு மீண்டும் தலாஷ் படத்தை தியேட்டரில் பார்த்தேன். குழந்தைகளுடன் டிவி ரிமோட்டுக்கு சண்டை போட்டேன். டிவியில் கோசாமி, ஏர்டெல் சூப்பர் சிங்கர், நீயா நானா?, சமையல் எண்ணெய் விளம்பரம் பார்த்தேன்.

ஃபேஸ்புக்கினால் நிறைய சொந்தகாரர்கள் நண்பர்கள் ஆனார்கள். எதற்கு லைக் போட வேண்டும் என்று புரியாமல் போட்டேன். எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது என்று அவர்கள் போட்டோ பார்த்துத் தெரிந்துக்கொண்டேன். ஆண்கள் கூட தங்கள் படங்களை அழகாக போட்டுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

ஐந்து முறை ஜுரம் வந்தது. 2 முறை டாக்டரிடம் சென்றேன். ஒரு முறை ஆலோசனை செய்த பிறகு ஒரு சிறுகதைக்காக மருத்துவம் சார்ந்த சந்தேகம் கேட்க அவர் பீஸை இரட்டிப்பு செய்தார். மாதத்திற்கு இரண்டு மூன்று முறை மாத்திரை சாப்பிடுவதை மறந்து போனேன். தினமும் வாக்கிங் போனேன். போகாத நாளிலும் போனேன் என்று மனைவியிடம் பொய் சொன்னேன். கோயிலில் ஒரு செருப்பு, வீட்டு வாசலில் ஒரு செருப்பு காணாமல் போனது. எல்லா கல்யாண சாப்பாடும் ஒரே மாதிரி இருந்தது.

ரா.கி.ரங்கராஜன் மரண செய்தி கேட்டு வருத்தப்பட்டேன். நியூஸ் பேப்பர் தினமும் படித்தேன்; டிசம்பர் மாதம் முதல் இரண்டு நியூஸ் பேப்பர் வாங்க ஆரம்பித்து டாய்லெட்டில் நிறைய நேரம் கழித்தேன். கத்தரிக்காய் வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டேன்.  தினமும் கொய்யா வாங்கி சாப்பிட்டேன். எம்.ஜி.ரோட்டில் இருக்கும் பிருந்தாவன் ஹோட்டல் மூடியதால் வருத்தப்பட்டேன். அண்ணபூர்னாவில் அடிக்கடி சாப்பிட்டதால் பலர் நண்பர்கள் ஆனார்கள். நிறைய விஷயங்கள் மறந்து போனேன். "இந்த ஹீரோயின் பேர் என்ன?" என்று டிவி பார்க்கும் போது கேட்டுத் தெரிந்துகொண்டேன். மறக்காமல் செய்தது சரவண பவன் அளவு சாப்பாட்டிற்கு 'புழுங்கல்' அரிசி என்று கேட்டதுதான். JS.Raghavan, பாலஹனுமான், நட்பு கிடைத்தது.

சென்ற வருடமும் பர்வீன் சுல்தானா பாட்டைக் கேட்டு பிரமித்தேன். போதீஸ், நல்லி என்று எந்தக் கடைக்கு உள்ளேயும் போகாததும், நிறைய புத்தகங்கள் வாங்காததும் தான் சென்றவருட சாதனைகள்.  ஃபிலிப் கார்ட்டில் சில பொருட்கள் வாங்கினேன். குழந்தைக்கு என்று பொய் சொல்லி, அமர் சித்திரக் கதா முழு செட் வாங்கி தினமும் இரவு 12 மணி வரை படித்தேன். iPhone, iPad விலை எறங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.

நினைவில் நின்ற பாடல் என்று எதுவும் இல்லை. சென்னையில் சொந்தக்காரர் வீட்டில் 70" டிவி ஹோம் தியேட்டர் செட்டப்பில் கங்கா படத்தில், 'ஆணா பெண்ணா சரித்திரம்' என்ற பாடலில் ஜெய்சங்கர் துப்பாக்கியால் சுட டான்ஸ் ஆடும் பெண்ணின் டிரஸ் ஒவ்வொன்றாக அவிழும் பாடல் கடைசியில் என்ன ஆகப் போகிறதோ என்று பயந்து போய் வால்யூமை கம்மி செய்தேன்.

இந்த வருஷம் நிறைய எழுத ஆசை. இந்த கட்டுரையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

எல்லோருக்கும் புது வருட வாழ்த்துகள்