Skip to main content

மொட்டை கோபுரம்



......எட்டாம் பிரகாரம் ‘அடையவளைந்தான்’ என்று அழைக்கப்படுகிறது. சமிஸ்கிரததில் சர்வெஷ்டானம் என்ற சொல்லிலிருந்து இது வந்திருக்கலாம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் Maze என்று சொல் கிட்டேவருகிறது. இங்கே இருக்கும் நான்கு கோபுரங்களும் முடிவு பெறாமல் இருக்கிறது( தெற்கு கோபுரம் 1987 ஆம் ஆண்டு ராஜ கோபுரம் ஆனது ). பெரியவர்களுக்கு இவை ராய கோபுரம். சின்னவர்களுக்கு இவை ‘மொட்டை கோபுரம்’.

சின்ன வயசில் கோயிலுக்கு போகும் போது இந்த தெற்கு வாசல் மொட்டை கோபுரத்தை வியந்து பார்த்துள்ளேன். "எப்படி கட்டியிருக்கிறார்கள் பாருடா!" என்று அப்பா ஒவ்வொரு முறையும் ஸ்ரீரங்கம் போகும் போது காண்பிப்பார். 130 X 100 அடியில் மொட்டையாக இருந்தாலும் கம்பீரமாக இருக்கும். இதில் உள்ள கதவு சட்டம் 43 அடியில் ஒரே கல்லினானது. மேல் கூறையில் இருக்கும் குறுக்கு சட்டம் 23-4-4 அளவில் மேலே எப்படி எடுத்துக்கொண்டு போனார்கள் என்று வியக்கலாம். சின்ன வயசில் இதற்கு மேல் கோபுரம் கட்டியிருந்தால் அது மேகத்தை தொட்டிருக்கும் என்று கற்பனை செய்துள்ளேன்.

இந்த மொட்டை கோபுரங்கள் நாயக்கர் மன்னர்கள் கடைசியாக கட்ட ஆரம்பித்து பின்பு பிரஞ்சு, பிரிட்டிஷ்காரர்களின் தாக்குதலால் கட்டுமான பணி பாதியில் 1736-1759 ஆண்டுகளில் நின்று இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

தேவதைகள் ஒரு நாள் ராத்திரியில் ஸ்ரீரங்கத்தை கட்ட ஆரம்பித்து கடைசியாக ராயகோபுரம் கட்டும் போது விடிந்துவிட்டதால் அவர்கள் சென்று விட்டார்கள் என்று சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். இன்றும் அந்த கதையை நம்பவே எனக்கு ஆசையாக இருக்கிறது.

தெற்கு ராயகோபுரம் 1979 வரையில் மொட்டையாக இருந்தது. பிறகு 1987 ஆம் ஆண்டு 44ஆம் பட்டம் அழகியசிங்கர் அதை ராஜகோபுரமாக்கினார். இன்றும் பலர் அதை கட்டியிருக்க கூடாது என்று சொல்லுவதை பார்க்கலாம். பதின்மூன்று நிலைகளை கொண்ட இந்த ராஜகோபுரம் கட்டியபின் ஸ்ரீரங்கத்துக்கு கூட்டம் வர தொடங்கியது. வானத்தை தொடும் என்று என் கற்பனை முடிவுக்கு வந்தது. 85 வயதில் கோபுரத்தை கட்ட தொடங்கி, தன் 92 வது வயதில் இதை கட்டி முடித்தார். ராஜகோபுரத்தைவிட இது எனக்கு பெரிய ஆச்சரியத்தை தந்தது. இன்றும் ஸ்ரீரங்கம் செல்லும் போது அந்த அடி பாகம் தான் தான் என்னை பரவசப்படுத்தும். அதன் கீழே நடக்கும் போது இந்த 'ஐபோன்' காலத்திலும் வியக்க வைக்கிறது. இப்போது எழுப்பட்ட ராஜகோபுரம் முந்தைய மொட்டை கோபுரத்தை சிறியதாக்கி ஸ்ரீரங்கத்துக்கு வரும் கூட்டத்தை பெரியதாக்கியுள்ளது.

இந்த நாலு மூலையிலும் Pilaster என்னும் ஒரு பக்க தூண்களின் மேல் கும்பம் மாதிரி அழகிய வேலைப்பாடுகளை பார்க்கலாம். இதை கும்பபஞ்சரம் என்று சொல்லுவார்கள்.

பழைய படத்தில் இந்த கோபுரத்துக்கு முன்பு நாயக்கர்கள் கட்டிய சின்ன மண்டபம் மாதிரி ஒன்று இருக்கும், இன்று இந்த மண்டபம் பெட்டிக்கடையாக மாற்றபட்டு தினத்தந்தியும் மாலைமுரசும், வாழைப்பழ கொத்தும், பெப்ஸியும், கோக்கும்
தொங்கவிடப்படுள்ளது. கோயிலுக்கு முன்பு காந்தி சிலை என்று எல்லாம் இந்த நூற்றாண்டின் சாதனைகள்.

எட்டாம் பிரகாரத்தில் இன்னும் மூன்று மொட்டை கோபுரங்கள் இருக்கிறது. இதன் வடிவமைப்புக்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதை பார்க்கலாம். இதில் இருக்கும் தூண்கள் ஒருவிதமான சுருள் வடிவமாக செதுக்கியிருப்பதைக் காணலாம். நான் இந்த வடிவத்தை மேல்கோட்டை, மாமல்லபுரத்தில் பார்த்திருக்கிறேன்.

இந்த விதமான கோபுரம் எழுப்பட்டதா அல்லது அரசர்கள் தங்கள் வெற்றியை பறைசாற்றுவதற்காக எழுப்பபட்ட நினைவு சின்னங்களா என்று தெரியவில்லை. தற்போது இவை சாணித்தட்டுவதற்கும், “இங்கே கம்ப்யூட்டர் முறையில் நியூமராலஜி பார்க்கப்படும்’ என்று விளம்பரப்படுத்துவதற்கும் உபயோகிக்கப்படுகிறது. சிலர் சிமிண்டை கொண்டு தங்கள் வீட்டுக்கு ஒரு பக்க தூண்களாகவும் சுவர்களாகவும், சிலர் அதை உபயோகப்படுத்தியுள்ளார்கள். நம் நாட்டு heritage !

இன்று ஃபேஸ் புக்கில் இந்த படத்தை பார்த்த போது சில வருஷங்கள் முன் ஸ்ரீரங்கம் பற்றி எழுதி வைத்திருந்தது நினைவு வந்தது. அதிலிருந்து ஒரு பகுதி.

Comments

  1. ஒவ்வொரு முறை திருவரங்கம் செல்லும்போதும், இந்த கோபுரத்தின் கீழ் ஒரு சில நிமிடங்களாவது நின்று பார்க்க ஆசையாக இருக்கும் - பின்னால் வருபவர்கள் இடித்துவிட்டு ‘நடு ரோட்டுல என்ன வேடிக்கை’ எனத் திட்ட, நகர்ந்து விடுவேன்..

    இதற்காகவே இரவு ஆள் நடமாட்டமில்லாதபோது தான் சென்று பார்க்கவேண்டும்.... அடுத்த முறை பார்க்கிறேன்...

    நல்ல பகிர்வு நண்பரே....

    ReplyDelete
  2. சின்ன வயசில் கோயிலுக்கு போகும் போது இந்த தெற்கு வாசல் மொட்டை கோபுரத்தை வியந்து பார்த்துள்ளேன்...


    ஒவ்வொரு வருடமும் திருவரங்கம் செல்லும் போதும் , ராஜகோபுரக்கட்டுமாந்த்தின் போதும் பலமுறை பார்த்து வியந்த கோபுரம் !


    ReplyDelete
  3. You are very much blessed by birth desikan sir...I am jealous about ur friendship and memories with the Legend sujatha sir...keep on sharing your memories here...we are here to encourage your passion...God bless :)

    surya krishnan..

    ReplyDelete
  4. நான் எனது துவக்கப்பள்ளி கல்வியை 3வது முதல் 5வத வரை கிழக்கு ரெங்கா எலிமென்டரி பள்ளியில் படித்தவன் !
    தினசரி அம்மா மண்டபம் என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் வாழ்ந்த வீட்டின் பக்கத்தில் (எங்கள்வீடு) இருந்து நடந்து வெள்ளை கோபுரவாசல் வழியாக (குறுக்கு வழி) நடந்து தான் போய் வருவேன். அப்போது இன்றய தெற்கு வாசல் கோபுரம் "மொட்டை ராயர் கோபுரம் என்ற பெயரில் தான் இருந்தது !!

    ReplyDelete

Post a Comment