Thursday, September 20, 2012

வெளியே இருப்பவர்கள்


இன்று காலை எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டு இருந்த போது நண்பர் ஒருவர் ஜெயமோகன் எழுதியிருக்கும் 'உள்ளே இருப்பவர்கள்' என்ற பதிவை எனக்கு அனுப்பியிருந்தார். படித்தேன்.

ஒரு முறை சுஜாதாவை அவர் இல்லத்தில் சந்தித்த போது விஷ்ணுபுரம் பற்றி பேச்சு வந்தது. (புத்தகத்தை ஜெயமோகனுக்கு திரும்பி அனுப்பிய சமயம் என்று நினைக்கிறேன்). அவரேதான் ஆரம்பித்தார். ஆனால் அவர் சொன்ன விஷயமும் ஜெயமோகன் குறிப்பிடும் சில விஷயங்களும் மிகுந்த முரண்பாடாக உள்ளன. அதைப் பற்றி நான் இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. சுஜாதா என்ன சொன்னார் என்றும் நான் சொல்லப்போவதில்லை.

ஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு முறை ஸ்ரீராமானுஜர் குருவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாக தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், குரு யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கமலக் கண்கள் குரங்கின் பின்பகுதியை போல சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார். இதை கேட்டதும் ஸ்ரீராமானுஜர் கண்களிலிருந்து நீர் பெருக அவற்றில் சில துளிகள் யாதவப் பிரகாசர் தொடையில் பட, யாதவ பிரகாசர் ஏன் என்று கேட்க, அதற்கு ஸ்ரீராமானுஜர், "இதற்கு இப்படி அர்த்தம் செய்யக் கூடாது; சூரியனின் கதிர்களால் ஆஸம்- மலரச் செய்யப்பட்ட புண்டரீகம் தாமரை மலர்; அந்த மலரைப் போன்ற கண்களை உடையவன்" என்று பொருள் என்றாராம்.

இந்த நிகழ்ச்சி பெருமாள் மீது ஸ்ரீராமானுஜர் வைத்த பிரேமை/பக்தியை காட்ட.

ஸ்ரீவைஷ்ணவனுக்கு பெருமாளை விட, ஆசாரியன் மிக முக்கியம். பாகவத அபசாரம் என்பது பெரிய - மிகப்பெரிய பாவம். நம்மாழ்வார் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவர். ஆசார்ய குருபரம்பரை வரிசையில், பெருமாள், பிராட்டி, விஷ்வக்ஸேனருக்குப் பின் பூலோக ஆசார்யர்களில் முதலிடத்தில் இருப்பவர். ஸ்ரீவைஷ்ணவத்துக்கே இவர்தான் ஃபவுண்டேஷன். சுஜாதாவின் மன உளைச்சலுக்குக் காரணமில்லாமல் இல்லை.

வெளியே இருப்பவர்களுக்கு அது புரியப்போவதில்லை.

- * - * -


சுஜாதா 90களில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தர வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் "இந்தியா நூறு வருஷத்துக்கு முன்" என்கிற மறுபதிப்பு புத்ததகம் இருக்கிறது. டபிள்யூ உர்விக் ( W.Urwick ) என்னும் பாதிரியார் எழுதியது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, திருச்சி, சிதம்பரம், மாகாபலிபுரம் போன்ற இடங்களில் நூறு வருஷத்துக்கு முந்தைய தோற்றத்தின் வர்ணனை கிடைக்கிறது. சில அரிய வுட்கட் போன்ற படங்களும் பிரமிக்க வைக்கின்றன. ஸ்ரீரங்கம் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் சேஷராயர் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் வர்ணித்துவிட்டு வேல்ஸ் இளவரசர் 1875-இல் இந்தியா விஜயத்தின் போது இங்கு வந்திருந்து கோபுரத்தின் மேல் ஏறினதையும் ஐந்நூறு ரூபாய் கோவிலுக்கு அளித்ததையும் சொல்லியிருக்கிறார்.
அதன் பின் வருகிறது ஓர் அதிர்ச்சி. "கோயிலின் பிரம்மாண்டமும் பெருமையும் அதன் பிரகாரங்களின் விஸ்தாரமும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் திறமையும் வருஷக் கணக்கான உழைப்பையும் காட்டும் போது இதற்கு ஏறுமாறாக உள்ளே ஒளியிழந்த இருட்டில் எண்ணெய் வழியும் அச்சம் தரும் பிம்பம் மிக வினோதமாக நம்மை தாக்குகிறது. வெறுக்கத்தக்க மோசமான உருவவழி பாட்டுக்கு உலகிலேயே விஸ்தாரமான ஒருகோயில் அமைப்பு எழுப்ப்ப பட்டுள்ளது.

லண்டனில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் எத்தனை தப்பாக விபரீதமாக நம் முறைகளையும் விக்கிரக வழிபாட்டையும் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு சரியான சாட்சி.

லேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களோ மத இயலாளர்களோ ஒரு பொழுதும் நம் திருத்தலங்களின் வழிமுறைகளை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு விளக்கிச் சொல்லுவது விரயம் எப்படி நம்மால் அவர்கள் 'ஓப்பெரா' சங்கீதத்தை ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ள முடியாதோ அதே போல்.

"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாராயணனே கருமுகில் போல் எந்தாய்" என்று திருமங்கையாழ்வார் திருநாங்கூரின் கருவறையின் இருட்டில் பாடியதின் உருக்கத்தை எப்படி பாதிரியார்களுக்கு விளக்க முடியும் ? நம் வழிபாடு வெளிப்புற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பது மத மாற்ற அவசரத்தில் இருந்தவர்களுக்கு புரிந்ததே இல்லை.

Saturday, September 15, 2012

மொட்டை கோபுரம்......எட்டாம் பிரகாரம் ‘அடையவளைந்தான்’ என்று அழைக்கப்படுகிறது. சமிஸ்கிரததில் சர்வெஷ்டானம் என்ற சொல்லிலிருந்து இது வந்திருக்கலாம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் Maze என்று சொல் கிட்டேவருகிறது. இங்கே இருக்கும் நான்கு கோபுரங்களும் முடிவு பெறாமல் இருக்கிறது( தெற்கு கோபுரம் 1987 ஆம் ஆண்டு ராஜ கோபுரம் ஆனது ). பெரியவர்களுக்கு இவை ராய கோபுரம். சின்னவர்களுக்கு இவை ‘மொட்டை கோபுரம்’.

சின்ன வயசில் கோயிலுக்கு போகும் போது இந்த தெற்கு வாசல் மொட்டை கோபுரத்தை வியந்து பார்த்துள்ளேன். "எப்படி கட்டியிருக்கிறார்கள் பாருடா!" என்று அப்பா ஒவ்வொரு முறையும் ஸ்ரீரங்கம் போகும் போது காண்பிப்பார். 130 X 100 அடியில் மொட்டையாக இருந்தாலும் கம்பீரமாக இருக்கும். இதில் உள்ள கதவு சட்டம் 43 அடியில் ஒரே கல்லினானது. மேல் கூறையில் இருக்கும் குறுக்கு சட்டம் 23-4-4 அளவில் மேலே எப்படி எடுத்துக்கொண்டு போனார்கள் என்று வியக்கலாம். சின்ன வயசில் இதற்கு மேல் கோபுரம் கட்டியிருந்தால் அது மேகத்தை தொட்டிருக்கும் என்று கற்பனை செய்துள்ளேன்.

இந்த மொட்டை கோபுரங்கள் நாயக்கர் மன்னர்கள் கடைசியாக கட்ட ஆரம்பித்து பின்பு பிரஞ்சு, பிரிட்டிஷ்காரர்களின் தாக்குதலால் கட்டுமான பணி பாதியில் 1736-1759 ஆண்டுகளில் நின்று இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

தேவதைகள் ஒரு நாள் ராத்திரியில் ஸ்ரீரங்கத்தை கட்ட ஆரம்பித்து கடைசியாக ராயகோபுரம் கட்டும் போது விடிந்துவிட்டதால் அவர்கள் சென்று விட்டார்கள் என்று சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். இன்றும் அந்த கதையை நம்பவே எனக்கு ஆசையாக இருக்கிறது.

தெற்கு ராயகோபுரம் 1979 வரையில் மொட்டையாக இருந்தது. பிறகு 1987 ஆம் ஆண்டு 44ஆம் பட்டம் அழகியசிங்கர் அதை ராஜகோபுரமாக்கினார். இன்றும் பலர் அதை கட்டியிருக்க கூடாது என்று சொல்லுவதை பார்க்கலாம். பதின்மூன்று நிலைகளை கொண்ட இந்த ராஜகோபுரம் கட்டியபின் ஸ்ரீரங்கத்துக்கு கூட்டம் வர தொடங்கியது. வானத்தை தொடும் என்று என் கற்பனை முடிவுக்கு வந்தது. 85 வயதில் கோபுரத்தை கட்ட தொடங்கி, தன் 92 வது வயதில் இதை கட்டி முடித்தார். ராஜகோபுரத்தைவிட இது எனக்கு பெரிய ஆச்சரியத்தை தந்தது. இன்றும் ஸ்ரீரங்கம் செல்லும் போது அந்த அடி பாகம் தான் தான் என்னை பரவசப்படுத்தும். அதன் கீழே நடக்கும் போது இந்த 'ஐபோன்' காலத்திலும் வியக்க வைக்கிறது. இப்போது எழுப்பட்ட ராஜகோபுரம் முந்தைய மொட்டை கோபுரத்தை சிறியதாக்கி ஸ்ரீரங்கத்துக்கு வரும் கூட்டத்தை பெரியதாக்கியுள்ளது.

இந்த நாலு மூலையிலும் Pilaster என்னும் ஒரு பக்க தூண்களின் மேல் கும்பம் மாதிரி அழகிய வேலைப்பாடுகளை பார்க்கலாம். இதை கும்பபஞ்சரம் என்று சொல்லுவார்கள்.

பழைய படத்தில் இந்த கோபுரத்துக்கு முன்பு நாயக்கர்கள் கட்டிய சின்ன மண்டபம் மாதிரி ஒன்று இருக்கும், இன்று இந்த மண்டபம் பெட்டிக்கடையாக மாற்றபட்டு தினத்தந்தியும் மாலைமுரசும், வாழைப்பழ கொத்தும், பெப்ஸியும், கோக்கும்
தொங்கவிடப்படுள்ளது. கோயிலுக்கு முன்பு காந்தி சிலை என்று எல்லாம் இந்த நூற்றாண்டின் சாதனைகள்.

எட்டாம் பிரகாரத்தில் இன்னும் மூன்று மொட்டை கோபுரங்கள் இருக்கிறது. இதன் வடிவமைப்புக்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதை பார்க்கலாம். இதில் இருக்கும் தூண்கள் ஒருவிதமான சுருள் வடிவமாக செதுக்கியிருப்பதைக் காணலாம். நான் இந்த வடிவத்தை மேல்கோட்டை, மாமல்லபுரத்தில் பார்த்திருக்கிறேன்.

இந்த விதமான கோபுரம் எழுப்பட்டதா அல்லது அரசர்கள் தங்கள் வெற்றியை பறைசாற்றுவதற்காக எழுப்பபட்ட நினைவு சின்னங்களா என்று தெரியவில்லை. தற்போது இவை சாணித்தட்டுவதற்கும், “இங்கே கம்ப்யூட்டர் முறையில் நியூமராலஜி பார்க்கப்படும்’ என்று விளம்பரப்படுத்துவதற்கும் உபயோகிக்கப்படுகிறது. சிலர் சிமிண்டை கொண்டு தங்கள் வீட்டுக்கு ஒரு பக்க தூண்களாகவும் சுவர்களாகவும், சிலர் அதை உபயோகப்படுத்தியுள்ளார்கள். நம் நாட்டு heritage !

இன்று ஃபேஸ் புக்கில் இந்த படத்தை பார்த்த போது சில வருஷங்கள் முன் ஸ்ரீரங்கம் பற்றி எழுதி வைத்திருந்தது நினைவு வந்தது. அதிலிருந்து ஒரு பகுதி.