Saturday, March 31, 2012

நம் செயல்களுக்குப் பொறுப்பு யார்? - எஸ்.ராஜகோபாலன்.

சுஜாதாவின் தம்பி திரு.எஸ்.ராஜகோபால் சுஜாதா பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறார்.

சென்னையில் சென்ற டிசம்பர் 6-ஆம் தேதி, ராகேஷ் (32) என்னும் மாணவரை வர்கீஸ் (26) என்னும் மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, "கடவுள்தான் என்னைக் கொலை செய்யச் சொன்னார்; ஏன் என்று கடவுளிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று போலீஸிடம் கூறினார்
(தினமலர் 7-12-2011)

நாம் எல்லோரும் இப்படிச் சொல்பவரை மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லுவிடுவோம். ஆனால் அடிப்படைக் கேள்வியான, 'நாம் செய்யும் காரியங்களுக்கு நாமே பொறுப்பா அல்லது எல்லோரையும் இயக்கும் கடவுள் பொறுப்பா?' என்னும் தத்துவ ஞானக் கேள்விக்கு விடை காண்பதில் சிக்கல் உள்ளது.

என் அண்ணன் ரங்கராஜனும் (சுஜாதா) நானும் ஆறு வருடங்களுக்கு முன் பிரம்ம சூத்திரங்களை எளிமையான தமிழில் மொழிபெயர்க்கும்போது இதுபற்றித் தீவிரமாக சிந்தித்தோம்; படித்தோம்.

பிரம்ம சூத்திரம் (2.1.34) 'பாரபட்சமும் கருணையின்மையும் பிரம்மத்திற்கு இல்லை, நம் முதல் முயற்சியை எதிர்பார்த்து இருப்பதால்' என்று கூறும்-


'வைஷம்யே நைர்குண்யே ந, ஸா பேக்ஷத்வாத் ததா ஹி தர்சயதி'


எனும் சூத்திரத்திற்கு விளக்கம் அளிக்கும்போது, 'நாம் செய்யும் செயல்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு' எனும் திடமான முடிவுக்கு வந்தோம். அந்த இடத்தில் நாங்கள் எழுதியதைக் கீழே தருகிறேன்.


"இது முக்கியமான சூத்திரம். படைப்பு பிரம்மத்தின் விளையாட்டு என்று சொன்னால், அதில் ஏற்றதாழ்வுகள், ஏழை-பணக்காரன், சுக துக்கம் ஏன்? பிரம்மம் நல்ல குணங்களின் இருப்பிடம் என்றால், நம் எல்லாச் செயல்களுக்கும் பிரம்மம் முழுப் பொறுப்பு என்றால், அதற்குப் பாரபட்சமும் கருணையின்மையும் குணங்களாகி விடும். அது தவறு என்கிறது இந்தச் சூத்திரம். இந்தப் பரமாத்மா ஜீவர்களைப் 'படைக்கும்' போது, அவர்களின் பாப புண்யங்களைப் பார்த்து அதற்கேற்ப படைக்கிறது. பிரம்மம் நம் முயற்சியை எதிர்பார்த்தே நம்மைச் செயல்படுத்துகிறது.

முதல் முயற்சி அல்லது பிரதம பிரயத்தனம்- நாம் நல்லதோ தீயதோ செய்ய எடுத்துவைக்கும் முதல் முயற்சியானது நம்மை அந்த முதல் அடியை எடுக்க வைக்கிறது. இதற்கு நமக்கு சுதந்திரம் இருக்கிறது (Free Will)." -- (பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம்- பக்கம் 85.)


சங்கரர் இந்தச் சூத்திரத்தை விளக்கும்போது பிரம்மத்தை மழையோடு ஒப்பிடுகிறார். "விதையிலிருந்து செடி வெளிவருவதற்குக் காரணம் மழை ஆனாலும் எந்தவிதமான செடி (மா, பலா, வேம்பு..) வெளிவருகிறது என்பதை விதையில் புதைந்திருக்கும் குணங்களே தீர்மானிக்கின்றன; அதற்கு மழை பொறுப்பில்லை" என்கிறார்.

இதே போல கடவுளின் அருள் சிலர்மேல் காரணமின்றி (நிர்ஹேதுகமாக) விழுகிறது என்ற வைணவ நம்பிக்கை பற்றி விவாதித்தோம். என் அண்ணன், இந்த நம்பிக்கை, கடவுளை நம் செயல்களில் (ஆகையால் நம்மேல்) விருப்பு வெறுப்பற்றவராக (உதாசீனராக) ஆக்கிவிடுகிறது என்றார்.

நான் "கடவுளை, காரண காரியங்களுக்குக் கட்டுப்படாதவராக, கேட்பாரற்ற சுதந்திரராக வேதங்கள் வர்ணிக்கும்போது, அவருடைய கிருபையையும் நிர்ஹேதுகமாகவே கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது" என்றேன்.

தீவிர சிந்தனைக்குப் பிறகு, "அப்படித்தான் கொள்ளவேண்டும், இல்லாவிடில் முரண்பாடு ஏற்படுகிறது. சர்வ சுதந்திரத்வமும் காரணத்தோடு கிருபை செய்யவேண்டிய கட்டாயமும் oxymoronic status. ஆனால் கடவுள் எதிர்மறைகளின் கூட்டம். கருப்பும் வெளுப்பும் அவரே. ஆகவே அவருடைய அருளின் (கிருமையின்) நிலைப்பாடு, என்றும் விடைகாண முடியாத புதிரானது" என்றார்.

நாங்கள் இதுபற்றி விவாதித்த அந்த நாள்கள் இன்னும் என்னை மகிழ வைக்கின்றன. அவரை அண்ணனாகப் பெற்றது நான் செய்த புண்ணிய பலன்- அதுவும் கடவுளின் நிர்ஹேதுகக் கிருபையே!

ரங்கராஜன், ஒரு 'வகைப்படுத்த' முடியாத எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, விஞ்ஞானம், பொது அறிவு, புதுக்கவிதை, பழங்கவிதை, திரைக்கதை போன்ற எல்லா வடிவத்திலும் ஆர்வமுள்ள எழுத்தாளர். கடவுள், ஆன்மிகம் இவற்றிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. கஷ்டமான சிந்தனைத் தொடர்களைப் புரிந்துகொண்டு, அன்றாடம் பழகும் தமிழில் எளிமைப்படுத்தி எழுதுவது அவருக்குக் கைவந்த கலை.

ரங்கராஜன் 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள், தனது 73-ஆவது வயதில் மறைந்தார். அவர் எழுதியவை மறையாது.