Skip to main content

ஆவி கதை

செல்போன் மாதிரி என் பெயர் ரொம்பப் பொதுவானது. டைரக்டரியை எடுத்துப் பாருங்கள்; பத்து பக்கத்துக்கு என் பெயர் விதவிதமான இனிஷியல்களில் அடுக்கியிருக்கும். ஆனாலும் நான் வித்தியாசமானவன். நினைவு இருக்கும்போதே கேட்டுவிடுகிறேன், உங்களிடம் செல்போன் இருக்கிறதா? மெசேஜ் அடிக்கத் தெரியுமா? நல்லது. உங்கள் செல்போனில் Prediction ஆன் செய்துவிட்டு 5477 என்று டைப் அடித்துப் பாருங்கள். என்ன வருகிறது? Lips என்று வருதா? இதற்கு மாற்று வார்த்தை இருக்கிறது. அதற்கு நீங்கள் உங்கள் சொல்போனில் கீழே இருக்கும் * பட்டனை அழுத்துங்கள். Kiss என்று வருகிறதா? இந்த இரண்டு வார்த்தைகளும் வரும்வரை கதையை மேற்கொண்டு படிக்காதீர்கள். அப்படியே படித்தாலும் கடைசியில் கதை புரியாது.

இப்பொழுது எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிவிடுகிறேன் - என்னால் ஆவிகளுடன் பேச முடியும். உடனே, ஆவிகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாம் சுத்த புருடா என்று எல்லோரும் சொல்லுவதைப் போல நீங்களும் சொல்லாதீர்கள். எனக்கும் நம்பிக்கை கிடையாது, மாலாபுரம் செல்லும் வரை.



திருச்சியிலிருந்து கும்பகோணம் போகும் வழியில் ஏதோ ஒரு வளைவான ரூட்டில் பாபநாசம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சைக்கிள் ரிக் ஷா ஸ்டாண்டில் மாலாபுரம் என்றால் வழி காண்பிப்பார்கள். ஆனால் வர மாட்டார்கள். தாத்தா, பாட்டி மாலாபுரம். மொத்த எண்ணிக்கையே பத்து வீடுகளுக்குள் இருக்கும் அக்ரஹாரத்தில் ஐந்தாவது வீட்டில் இருந்தார்கள். நான் ஒன்பதாம் வகுப்புத் தேர்வு அப்போதுதான் எழுதியிருந்தேன்.

“ஏண்டா உனக்கு லீவு தானே? தாத்தா, பாட்டியை ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வாயேன். அவாளுக்கும் வயசாயிடுத்து,” என்று அம்மா நச்சரித்ததால், ஐந்து நிமிஷத்துக்கு ஒரு கும்பகோணம் பஸ் கிளம்பும் திருச்சி பஸ் ஸ்டாண்டில் மூன்று மணிக்கு ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். பஸ்ஸை ஸ்டார்ட் செய்த டிரைவர் ஏனோ அதைக் கிளப்ப மனம் இல்லாமல் இன்ஜினை உறுமவிட்டுக்கொண்டே இருந்தார்.

ஜன்னல் பக்கம், “எதை எடுத்தாலும் ஐந்து ரூபாய்…”

“வேண்டாம்பா.”

“தம்பி வாங்கிக்கோங்க, பஸ்ஸுல படிச்சுகிட்டு போகலாம். அஞ்சு ரூவா… அஞ்சு ரூவா… “

“வேண்டாம்பா,” என்று திரும்பவும் சொல்லும் போது விற்றவர் கையில் வைத்திருந்த புத்தகத்தில் ‘ஹெல்மெட் - திகில் பேய் கதை’ என்று ரத்தச் சிவப்பில் எழுதியிருந்தது. கீழே ஹெல்மெட் மண்டை ஓடு மாதிரி படம் வேறு. ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன்.

தஞ்சாவூர் வருவதற்கு முன்பு கதையைப் படித்து முடித்துவிட்டேன். படித்த கதையை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.

மூன்று நண்பர்கள் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அதில் ஒருவன் சரியான பயந்தாங்கொள்ளி. மற்ற இருவரும் அவனை எப்போதும் கிண்டல் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாள் இந்த இருவரும் ஒய்ஜா பலகை வைத்து ஆவியுடன் பேச வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். வீட்டில் காலியான ஓர் அட்டைப் பெட்டியைப் பிரித்து சதுரப் பலகை மாதிரி செய்து மூன்று பக்கங்களில் A,B,C,D, … என்று Z வரைக்கும் எழுதி, மீதிப் பக்கத்தில் 0-9 வரை எண்கள் எழுதி, நடுவில் ஒரு வட்டம் போட்டு, பக்கத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து, லைட்டை அணைத்துவிட்டு ஒரு கண்ணாடி டம்ளரை நடுவில் கவிழ்த்துவைத்து இரண்டு பேரும் எதிரெதிர்பக்கம் உட்கார்ந்துகொண்டு, தங்கள் ஆள்காட்டி விரலை கவிழ்த்த டம்ளரில் வைத்து, கண்களை மூடிக்கொண்டு… பயந்தாங்கொள்ளி நண்பன் எவ்வளவு தடுத்தும் இவர்கள் கேட்கவில்லை…. முதல் கேள்வியைக் கேட்க ஆரம்பிக்கிறார்கள்…

“நீங்கள் யார்?”

அன்று ஒன்றும் நடக்கவில்லை.

அடுத்த நாள், காலேஜ் விட்டு வந்தவுடன் இவர்கள் இதே மாதிரி செட்டப் செய்து திரும்பவும் ஆவியுடன் பேச முற்படுவதைப் பார்த்த ப.கொ.நண்பன் திகிலுடன் வெளியே ஓடிவிட்டான்.

இரவு 10 மணி.

வீட்டில் அந்த நண்பர்கள் இருவர் மட்டும்தான் இருக்கிறார்கள். விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு, சின்னதாக மெழுகுவத்தி ஏற்றி, கொஞ்சம் பயமாகவும் ஆர்வமாகவும்…

“ஆவியே, வந்துவிட்டீர்களா?” என்று ஒருவன் கேட்க ஒன்றும் நடக்கவில்லை.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கொஞ்சம் நேரம் சும்மா இருக்க தீடீர் என்று அவர்கள் விரல் ‘Y - E - S” என்ற வரிசையில் எழுத்துகளில் சென்று நிற்கிறது. நடுங்கிவிட்டார்கள்.

அடுத்தக் கேள்வி..

“உங்க வயசு என்ன?” என்று அடுத்தவன் கேட்கிறன்.

அவர்கள் கை “2 - 8″ என்ற எண்களில் போய் நிற்கிறது.

உங்களுக்குப் பிடித்த நிறம், நடிகை என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள்.

“நீங்கள் எப்போது இறந்து போனீர்கள்?” என்று கேட்க, “J - U - S - T - N - O - W” என்று பதில் வந்ததும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.

“எப்படி இறந்து போனீர்கள்?”

“H - E - L - M - E - T” என்று பதில் வர அப்போது தான் மெழுகுவத்தி வெளிச்சத்தில் டேபிள் மீது ஹெல்மெட் இருப்பதைப் பார்க்கிறார்கள். ப.கொ.நண்பனின் ஹெல்மெட். பய அவசரத்தில் அதைப் போடாமல் போய்விட்டான்.

தஞ்சாவூர் வந்தவுடன் ஒரு லெமன் சோடா குடித்துவிட்டு கதையின் நினைப்பில் கும்பகோணத்துக்குப் பயணிக்கும்போது, அந்தச் சம்பவம் நடந்தது. பாபநாசம் பக்கம் வரும்போது பஸ் டயர் பஞ்சர் ஆகி எல்லோரும் கீழே இறங்கிவிடப்பட்டோம். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அடுத்த பஸ்ஸுக்குக் காத்திருந்து, வராமல், கொஞ்சம் இருட்டிவிட்டது. லேசான தூறல் வேறு வரத் தொடங்கியது. ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி பாபநாசம் வரும் போது பெரிய மழை. மணி இரவு 7 இருக்கும். பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ, ரிக் ஷா என்று எதுவும் இல்லை. இரண்டு கிலோ மீட்டர் தானே, நடந்தே சென்றுவிடலாம் என்று நடக்கத் தொடங்கினேன். இரண்டு பக்கமும் இருட்டைப் பழிக்கும் இருட்டு. மழைக்கு சில சுவர்க்கோழிகள் சப்தம் மட்டும் விட்டுவிட்டுக் கேட்டது.

அப்போதுதான் பேய்க்கதை படித்திருந்ததால் மனம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. வழியில் ஒரு பெரிய அரச மரம்; அதன் ‘சல சல′ சத்தம் எனக்குப் பயமாக இருந்தது. வேகமாக நடந்து சென்றபோது இரண்டு சமாதி மேடுகள் கண்ணில் பட்டன. எல்லா தவளையும் அன்று ஓவர்டைம் செய்துக்கொண்டு இருந்தது. பயம் இன்னும் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் தூரத்தில் சின்னதாக ஒரு விளக்கு தெரிவதை திகிலுடன் பார்த்தேன். விளக்கு பக்கத்தில் வர, யாரோ சைக்கிளில் எதிரே போனார். ஏனோ, அவர் காலால்தான் ஓட்டுகிறாரா என்று பார்க்கத் தோன்றியது. ரோட்டுக்கு இரண்டு பக்கமும் பார்க்காமல் வேகமாகக் கடந்து சென்றேன். வீட்டை அடைந்தபோது பாட்டி, “ஏண்டா இவ்வளவு லேட்டு?” என்று விசாரித்தார்.

“பஸ்… பஞ்சர்” என்று சொல்லநினைத்தும் குரல் வெளிவரவில்லை. சாப்பிட்டபின் தூக்கமும் வரவில்லை.

“பாட்டி, மெழுகுவத்தி எங்க இருக்கு?”

“ரேழியில இருக்கு… கரண்டு தான் இருக்கே, மெழுகுவத்தி எதுக்கு?” கேள்விக்கு பதில் சொல்லாமல் ரேழியில் இருந்த மெழுகுவர்த்தியை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டேன்.

ராத்திரி எல்லோரும் தூங்கியபின், அந்த கதையில் வருவது போல ஒய்ஜா போர்டு ஒன்றைத் தயார் செய்தேன்.

பதினொரு மணி இருக்கும். மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து டம்பளரைத் தேடினேன். கிடைக்கவில்லை. பாட்டில் மூடியை போர்டின் நடுவில் வைத்து என் விரலை நடுக்கத்துடன் அதன் மீது வைத்தேன். நகரவில்லை. கண்களை லேசாக மூடிக்கொண்டேன். சாமியை வேண்டிக்கொள்ளலாம் என்று யோசித்தேன். சாமிக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? சாமிக்கும் ஆவிக்கும் ஆகாது என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.

ouija-board

“நிஜமா நீ இருக்கியா?” என்று மெலிதாகக் கேட்டேன்

கை மெதுவாக நகரத் தொடங்கியது. “Y - E - S” என்ற எழுத்தில் போய் நின்றது.

எனக்கு ரொம்பப் பயமாகிவிட்டது. அதற்குப் பிறகு கொஞ்சம் தைரியத்தை வந்ததும், “சாப்பிட்டாச்சா?”

“C-U-R-D R-I-C-E”

நீ ஆணா ?

“N-O”

போன்ற சில சம்பாஷணைகள் எங்களுக்குள் நடந்தது.

விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன் என் பேனா தொலைந்துபோனது. எல்லா இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. சரி ஆவியைக் கேட்கலாம் என்று அன்று இரவு ஏற்பாடாக அமர்ந்தேன்.

“என் பேனா கிடைக்குமா?”

“Y-E-S”

“எங்க இருக்கு?”

“R-A-M-K-Y” என்று பதில் வர, அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் ராம்கி பையைத் தேடிய போது என் பேனா கிடைத்தது.

அதற்குப் பிறகு ஆவிகளுடன் பேசுவது எனக்கு ஏதோ பொழுதுபோக்கு மாதிரி ஆகிவிட்டது. இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் நகம் கடிப்பதைப் போல, விடமுடியவில்லை.

திருமணம் ஆன பிறகு ஒரு நாள் என் மனைவி நான் ஒய்ஜா போர்டு வைத்துப் பேசிக்கொண்டு இருக்கும் போது பார்த்தவள், அலறிவிட்டாள்.

“அப்பா!… உங்க மாப்ள பேய் பிசாசுகளோட பேசறார்ப்பா” என்ற போனில் மனைவி பதறிய ஒற்றை வார்த்தைக்கு மாமியார் மாமனார் குடும்பத்துடன் என் வீட்டுக்கு வந்து கல்யாணத்துக்கு வண்டி வண்டியாக தர வேண்டிய சீர்களை அட்வைஸாக தந்துவிட்டு போனார்கள். திரும்பத் திருட்டுத்தனமாக மற்றொரு நாள் மனைவியிடம் மாட்டிக்கொண்டு, டைவர்ஸ் வரை போய்விட்டது. மறுநாள் நான் அலுவலகத்துக்குப் போயிருக்கும் போது பீரோ மீது இருந்த ஒய்ஜா போர்டை பழைய பேப்பர்காரனுக்குப் போட்டுவிட்டாள்.

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்,’ என்பார்கள் அது மாதிரி இந்தப் பழக்கம் என்னை விட்டுப் போகவில்லை. ஒய்ஜா போர்டுகள் இல்லாமலே இப்பொழுதெல்லாம் என்னால் ஆவிகளுடன் பேசமுடிந்தது. காலையில் நியூஸ் பேப்பரில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு கேள்வி கேட்டால் பேனா எழுத்துகளை நோக்கிப் போகும். அதிலும் பக்கத்தில் தண்ணீருக்கு பதில் காப்பி இருந்தால் போதும். அவ்வளவு ஏன், பொழுது போகாமல் இப்பொழுதெல்லாம் செல்போனை கையில் வைத்துக்கொண்டு கேள்வி கேட்டால் மெசேஜ் அடிப்பது மாதிரி பதில் வருகிறது என்றால் பாருங்களேன்.

இப்பொழுது உங்களிடம் சொன்ன இந்தக் கதையை சொல்வனத்துக்கு அனுப்பப் போகிறேன்.

“என் கதை பிரசுரம் ஆகுமா-ஆகாதா?” என்று கேட்டுவிட்டு செல்போனைக் கையில் எடுத்து பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

என் விரல் “73532833″ என்ற எண்ணை டைப் அடிக்கிறது.

அந்த வார்த்தை என்ன என்று உங்க செல்போனில் பாருங்கள். (நீங்கள் எதிர்பார்த்த வார்த்தை வரவில்லை என்றால் எதற்கும் ஒருமுறை * பட்டனை அழுத்திவிட்டு பாருங்கள்.)

( குறிப்பு: “73532833″ என்ற எண்ணுக்கு Selected அல்லது Rejected என்ற வார்த்தை வரும் )

Comments

  1. Desi sir,
    pudhu design nalla erukku... some time before saw the same story in 'Nalaya Eyakunarkal' in kalaignar tv.. keep rocking

    ReplyDelete
  2. Hi desikan,

    A different desikan with a thriller. cell phone is programmed to give slternatives.
    Who programmed the galss tumbler. TATVAMASI the sanskrit word explains and you are that
    you want to be.

    Why you have written anything about Endiran and Sujatha. Lot of people have written about the inadequate credit given to Sujatha in the making of Endiran. Find out with your OYJA Board what sujatha has to say.

    Regards

    Venkat

    ReplyDelete
  3. very good story.very interesting story

    ReplyDelete
  4. so nice.............really amazing..........

    ReplyDelete
  5. ungalala nijamaway pasa mudiuma ....abdi mudinja help me pls

    ReplyDelete
  6. really it is true.i can'tbelive this. but reallygood.

    ReplyDelete
  7. HAI , SO NICE SUPERB , THANIYA IRUTTULA NADANTHU PONA ANUBAVAM IRUKKU ENAKKUM , HEART BEAT ROMBA FAST AH IRUKKUM ,

    ReplyDelete
  8. ahavi ungaluku nanban....................

    ReplyDelete
  9. reyali surep ethellam nejama erunth epti erukum.......................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  10. its nice and thiriling sir i like it

    ReplyDelete

Post a Comment