Sunday, February 21, 2010

காதலாவது கத்தரிக்காயாவது

“எங்க காதலைக் கத்தரிக்காதீங்க!” என்று காதலர்கள் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்க, உடனே அப்பாமார்கள், “காதலாவது கத்தரிக்காயாவது,” என்று சொல்லியிருப்பார்கள். தமிழில் வங்கணம் என்ற சொல் இருக்கிறது அதற்கு நட்பு, காதல், கத்தரிச் செடி என்று ந.சி.கந்தையாப் பிள்ளை, (1950 edition ) தொகுத்த செந்தமிழ் அகராதியில் பொருள் கூறியிருக்கிறார்கள். இரட்டைக் கத்தரி காதல் சின்னம் போல இருப்பது கூட, ‘காதல் என்ன கத்தரிக்காயா?’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம்!

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது, ஆனால் தற்போது கத்தரிக்காய் மீது மக்களுக்கு திடீர் காதல் வந்துவிட்டது. ஏன் என்று பார்க்கலாம்.நன்றி : flickrஇந்தக் கத்தரிக்காய்க் காதலைப் பற்றிச் சொல்லும் முன், உங்களுக்கு வழுதலை, வழுதுணங்காய், வழுதுணை பற்றியும் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள்; வழுதுணங்காய், வழுதுணை, வழுதலை என்பவை கத்தரிக்காயின் தமிழ்ப் பெயர்கள். நம்புங்கள், சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று வருகிறது. வழுக்கையாக இருப்பதால் அது வழுதலை என்று பெயர் பெற்றது என்று ஆராய்ச்சி செய்துள்ளார்கள். தமிழில் கத்தரிக்காய் பற்றி தெனாலி ராமன் கதை ஒன்று இருக்கிறது; ஹிந்தியில் பீர்பால். இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. ஆனால் ஔவையார் பாட்டி கத்தரிக்காய் வதக்கல் சாப்பிட்டிருக்கிறார்.

புல்வேளூர் பூதன் என்பவர் பாட்டிக்கு, பசி வேளையில், கத்தரிக்காய் வதக்கல் செய்து போட, அதைச் சாப்பிட்ட பாட்டி, ‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும்’ என்று வெண்பாவில் தான் என்னென்ன சாப்பிட்டார் என்று லிஸ்டே கொடுத்துவிட்டார். அடுத்த முறை புளித்த மோர்சாதத்துக்கு கத்தரிக்காய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வெண்பா எழுத வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

நாலடியாரில், ‘வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே’ என்று வருகிறது. ‘வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது’ என்று கத்தரிக்காயை விதைக்க பாகன் (பாகற்காய்) முளைத்தது என்ற சுவாரஸ்யமான பாடல் ஒன்று, திருமந்திரத்தில் வருகிறது.

கத்தரிக்காயில் பல ரகங்கள் உள்ளன. சாம்பாரில் போட்டுவிடுவதால் நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை. தமிழ்நாட்டிலேயே அண்ணாமலை, புளியம்பூ, வரிகத்தரி, பவானி, இளையம்பாடி,பொய்யூர், பூனைத்தலை, முள்ளு, தூக்கானம்பாளையம், சுக்காம்பார், அய்யம்பாளையம், வெள்ளைக் கத்தரிக்காய் என்று பலவகை இருக்கிறது.

பெங்களூரில் இரண்டு விதக் கத்தரிக்காய்; ஒன்று மெலிதாக, பச்சையாக ‘லாரல்’ மாதிரி இருக்கும். மற்றொன்று ‘ஹார்டி’ மாதிரி குண்டாக இருக்கும். இதை வெட்டினால் வெண்ணை மாதிரி இருக்கும். கால் மீது விழுந்தால் விரல் வீங்கும். (இவை சென்னையிலும் கிடைக்கும்.)

ஏன் பெரிதாக இருப்பதற்குப் பெயர் ‘பெங்களூர் கத்தரிக்காய்’ என்று என் மகளுக்கு தமிழ் சொல்லித்தரும் பக்கத்துவீட்டு நண்பரைக் கேட்டேன். அவர் குடமிளகாயைக் கூட நாங்கள் ‘பெங்களூர் மிளகாய்’ என்று தான் சொல்லுவோம் என்றார். பெரிதாக எது இருந்தாலும் அதற்கு முன் பெங்களூர் சேர்த்துவிடுவது தமிழ் மரபு போல!

வெள்ளைக் கத்தரிக்காய் கொஞ்சம் கடுக்கும், “ஏண்டா இதை வாங்கிண்டு வந்தே?” என்று எனக்கு அம்மாவிடம் திட்டும், “தளிகை பண்றப்போ துளியூண்டு சக்கரை போடு, கடுக்காம இருக்கும்” என்று என் அம்மாவுக்கு பாட்டியிடம் டிப்ஸும் கிடைக்கும். திருச்சி புத்தூர் மார்கெட்டில் ‘நாமம்’ கத்தரிக்காய் என்று ஒரு வகை; கத்தரிக்காயில் வெள்ளை கோடுகளுடன் கிடைக்கும்.

திருமண் (நாமம்) போட்ட வடகலை ஐயங்கார்கள் ‘அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி’ என்று வெள்ளைக் கத்தரியை விலக்கிவைக்க வேண்டும் என்று வேதாந்த தேசிகன் தன்னுடைய ‘ஆகார நியம’த்தில் கூறியுள்ளார்.. அவர் சொன்னது வெண் கத்தரி; ஆனால் இன்று எல்லா வகைக் கத்தரியும் உண்ணத் தக்கதல்ல என்று சிலர் நினைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை எக்பிளாண்ட் என்று கூறுவர். நேற்று தான் இதற்கு விடை கிடைத்தது (பார்க்க படம்).

தினமும் பல வகை காய்கறிகளைப் பார்க்கிறோம். திருச்சி மாம்பழச் சாலையில் ‘ஒட்டு’ மாம்பழம் என்று ஒரு வகை உண்டு. உங்களில் பலர் இந்த ஒட்டுச் செடிகளைப் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் அடுத்த முறை ஏதாவது நர்சரியில் பாருங்கள். இரண்டு செடிகளை லேசாக வெட்டிவிட்டு பாண்டேஜ் மாதிரி கட்டுப்போட்டு ஒட்டிவிடுவார்கள். ஒட்டப்பட்ட இடத்தில் வளரும் செடி இந்த இரண்டு வகையையும் சார்ந்து இருக்கும்.

பல வண்ணங்களில் பூக்கும் போகன்வில்லா; ஒரே செடியில் இரண்டு விதமான வண்ணப் பூக்களுக்கு எல்லாம் இந்த ஒட்டுதான் காரணம். அதே போல முருங்கையில் கூட ஒட்டு உண்டு.

சரி, இப்பொழுது ஒரு புளிய மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் ஒரு கேரட் செடியை ஒட்ட முடியுமா? உடனே முடியாது என்று சொல்லிவிடுவீர்கள். ஏன் என்றால் இரண்டும் வெவ்வேறு வகை. ஒன்று மரம், மற்றொன்று செடி. ஆனால் மரத்திலிருந்து ஒரு ஜீனை எடுத்து செடியில் புகுத்தலாம். அட அப்படியா? எப்படி என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான உதாரணம் தருகிறேன்.

மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். ராத்திரி வயல்வெளியில் மினுக் மினுக் என்று அலையும். அமெரிக்க விஞ்ஞானிகள் அந்தப் பூச்சிகளின் ஒரு ஜீனை எடுத்து புகையிலை செடிக்குள் செலுத்தியுள்ளார்கள். பிறகு ஒரு விதமான தண்ணீர் ஊற்றும் போது அந்தச் செடியை ஸ்பெஷலாகப் படம் பிடித்துள்ளார்கள். ‘அவதார்’ படத்தில் தாவரங்களிலிருந்து ஒளி வருவது போல், செடியின் பல திசுக்கள் (tissue) அதில் தெரிந்திருக்கிறது. இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1986. ஆக, இப்படி மரபணுவைச் செடிகளில் செலுத்துவதால் அதன் ஆதார குணம் மாறும் சாத்தியக்கூறு இருக்கிறது.

நாளைக்கே தவளையின் டி.என்.ஏவை தக்காளியில் புகுத்தினால், ரசத்துக்குள் தக்காளி தானாகவே குதித்துக்கொள்ளும் சாத்தியக்கூறு இருக்கிறது!.

மேலும் கட்டுரையைத் தொடர, செல்கள், ஜீன், டி.என்.ஏ, குரோமோசோம் என்று நாம் கேள்விப்பட்ட சில வார்த்தைகளை திரும்பவும் பார்த்துவிடலாம்.

நீங்கள் அடுத்த முறை கண்ணாடி முன் நின்றுகொண்டு உங்களைப் பார்க்கும் பொழுது உங்கள் உடலில், 10 டிரில்லியன் (1000000000000 ) உயிரணுக்களைப் (Cells) பார்க்கிறீர்கள் என்பதை நினைவுவைக்கவும். உங்கள் தசைகள், குடல், முடி, ஈரல் என்று அதில் மொத்தம் 200 வகை. பற்களில் உள்ள எனாமல், நீங்கள் பார்க்கும் கண் லென்ஸ் கூட ஒரு வகை உயிரணு தான்.

உடைந்த எலும்பு சரியாவதும், நம் உடலில் உள்ள பாகங்கள் வளர்வதும் இந்த செல் செய்யும் மாயம் தான். நம் ஒற்றைத் தலைமயிரின் விட்டத்தில் (diameter) பத்தில் ஒரு பாகம் தான் செல்லின் அளவு!, உங்கள் விரல் நுனியில் 2-3 பில்லியன் செல்கள் இருக்கும்!

எல்லா மனிதர்களின் செல்களிலும் டி.என்.ஏ (என்கிற டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலம் deoxyribonucleic acid) இருக்கிறது. இது முறுக்கிவிட்ட நூலேணி போல் இருக்கும்; பிறந்தநாள் பார்ட்டியில் இருக்கும் சுருளான ஜிகினா காகிதம் மாதிரி.

இந்த நூலேணிப் படிகளில் விதவிதமான புரோட்டீன்களை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது. அவை கிட்டத்தட்ட நம்முடைய ரகசியங்கள் என்று சொல்லலாம். இந்த ரகசியத்தைத் தான் ஜீன்(Gene) என்கிறார்கள். முக அமைப்பு, நிறம் போன்ற தகவல்கள் எல்லாம் இந்த ஜீன்களில் தான் இருக்கிறது. எல்லா மனிதர்களின் ஜீன்களும் 98-99% ஒரே மாதிரி தான் இருக்கும். மிச்சம் இருக்கும் 1-2% தான் என்னையும், இதைப் படிக்கும் உங்களையும் வேறுபடுத்துகிறது.மேலே படத்தில் இருப்பது செல், இதில் நூடுல்ஸ் மாதிரி இருப்பது தான் டி.என்.ஏ. ஒரு முறை பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.

இந்த முறுக்கிக் கொண்டு இருக்கும் நூலேணியில் கொஞ்சம் ஏறிப் பார்க்கலாம். முதலில் டி.என்.ஏ என்ற கூட்டணு தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் (டூப்ளிகேட் செய்துகொள்ளும்) குணம் பெற்றது. ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி… இப்படிப் பிரதியெடுக்கும். என்று நீங்கள் இப்போது இதை படிக்கும்போது கூட அவை பிரதியெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன..

நீங்கள் இந்த உலகத்தில் முதலில் ஒரு செல்லாக இருந்தீர்கள், பிறகு இந்த இரட்டிப்பு முறைத் தொடர் பிரதியெடுப்பினால் இன்று ஒரு மனிதனாக ஆகியுள்ளீர்கள். சரி இந்தப் பிரதியெடுப்பினால் எப்படி எனக்கு கண் காது மூக்கு எல்லாம் வந்தது என்று கேட்கிறீர்கள். டி.என்.ஏவில் விதவிதமான புரோட்டீன்கள் எப்படி உண்டாக்குவது என்ற குறிப்பு இருக்கும் என்று பார்த்தோம். கூடவே நம் செல்களில் என்னென்ன ரசாயன மாற்றங்கள் செய்ய வேண்டும், அவை எந்த அளவுக்கு வேண்டும் என்ற தகவல்கள், ஆணைகள் அதில் இருக்கிறது!

டி.என்.ஏவின் அடுத்த படிக்குச் செல்லாலாம்.இந்தப் படத்தில் என்ன தெரிகிறது?. இரண்டு பக்கங்களிலும் நீல ரிப்பனும் இடையில் வண்ண வண்ணப் படிகளும் தெரிகிறதா? இந்தக் கூட்டமைப்புக்குப் பெயர் ந்யுக்ளியோ-டைடுகள் (nucleotides). படத்தை மற்றொரு முறை கவனியுங்கள், படிகளில் என்னென்ன வண்ணங்கள் இருக்கின்றன?. மஞ்சள், பச்சை, சிகப்பு, ஆரஞ்ச் என நான்கு வண்ணங்கள் இருப்பது தெரியும். இந்த நான்கு வண்ணங்களும் நான்கு வகையானவை. அவை என்னென்ன என்பதும் படத்தில் இருக்கிறது. வசதிக்காக, சுருக்கமாக A, T, C, G என்று வைத்துக்கொள்ளலாம். (மஞ்சள் - அடினைன், பச்சை - தயோமைன், ஆரஞ்ச் - சைடோசைன், சிகப்பு – குவானின் என்று பெயர்கள் ).

ஒவ்வொரு ந்யுக்ளியோடைடும் மூன்று பாகங்கள் கொண்டது - பாஸ்பேட் தொகுதி (phosphate group), சர்க்கரைத் தொகுதி (sugar group) மற்றும் நான்கு வித நைட்ரஜன் அடிப்படையில் ஏதாவது ஒன்றைக் கொண்டது (Nitrogen Base)

நான்கு வித நைட்ரஜன் தான் நாம் பார்க்கும் அந்த நான்கு வண்ண ஏணிப் படிகள். பக்கவாட்டில் நீல நிற ரிப்பன் மாதிரி இருப்பவை சர்க்கரை, பாஸ்பேட் ஆதாரக் கூட்டமைப்பு.

பள்ளியில் படித்த விஷயத்தை திரும்ப ஒரு முறை பார்க்கலாம். H2O என்றால் என்ன? – நீர். அதாவது (2)ஹைட்ரஜனுடன் (1)ஆக்ஸிஜனும் கூட்டு சேர்ந்தால் கிடைப்பது நீரின் மூலக்கூறு (Water Molecule)படத்தை நன்றாக கவனித்தால், ஒரு மஞ்சள் (அடினைன்) பச்சையுடன் (தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (குவானின்) ஆரஞ்சுடன் (சைடோசைன்) சேருகிறது. இந்த நூலேணியை நடுவில் வெட்டினால் அவை இரண்டாகப் பிரிந்துவிடும். சரியான ஜோடி கிடைக்கும் போது திரும்ப ஒட்டிக்கொள்ளும். யார் உடன் யார் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற தகவல் பத்திரமாக அதனுள்ளேயே இருக்கிறது!

மனிதனாக இருந்தாலும், வெண்டைக்காயாக இருந்தாலும் டி.என்.ஏ ஒன்று தான் - அவை தன்னைத் தானே இரட்டிப்பு செய்துகொள்கிறது. தேவையான புரேட்டீன்களை உற்பத்தி செய்கிறது. என்ன விதமான புரோட்டீன் தேவை என்ற தகவல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பல ஜீன்களின் கூட்டுச் சேர்க்கை தான் உயிர். உதாரணமாக சோளத்தில் 2,50,000 விதமான ஜீன்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். டி.என்.ஏ முறுக்கு ஏணியில் எல்லா ஜீன்களும் வரிசையாக டி.என்.ஏ மூலக்கூறுகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மூலக்கூறுகள் பல்வேறு தொகுப்பாக, குரோமோசோம்களாக இருக்கின்றன.

மனிதனின் டி.என்.ஏவை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாம். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஏணி போல அடுக்கி வைத்த புத்தகங்களை பார்த்திருப்பீர்கள். இதே மாதிரி 1000 டெலிபோன் டைரக்டரியை அடுக்கி வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த அளவிற்கு இருக்கும் மனிதனின் ஜீன்கள்! என்ன ஒன்று, அந்த புத்தங்களில் பெயர்களுக்கு பதில் எல்லாம் A,C,T,G என்ற எழுத்து தான் இருக்கும். நமக்கு தலை கால் புரியாது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கூட்டணுவைக் குறிக்க்கும். இந்த எழுத்தை எல்லாம் 46 பாகங்கங்களாக பிரித்திருக்கிறார்கள். பாகங்களுக்கு பெயர் குரோமோசோம். அப்பாவிடமிருந்து 23; அம்மாவிடமிருந்து இன்னொரு 23!. ஆக மொத்தம் 46. இதில் உங்க அம்மா வழி, அப்பா வழி தாத்தா பாட்டி என்று எல்லாம் கலந்து இருக்கும். எல்லம் பிரதியெடுப்பதின் பலன்!. “அப்படியே மாமாவை உரிச்சு வெச்சிருக்கான்” என்பதன் ரகசியம் இது தான்!

ஒரு செடியில் இருக்கும் செல்லை எடுத்துப் பார்த்தால் இந்த குரோம்சோம் காப்பி அதில் பரவி இருக்கும்.அதே போல மனிதனோ, மிருகமோ, செடியோ உள்ளே சென்று பார்த்தால் எல்லா டி.என்.ஏவும் ஒன்று தான். இதனால் தான் ஒரு தவளையின் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் வெட்டி ஒட்டலாம். எந்த விதமான புரோட்டீன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தகவல் அதில் இருக்கும். இந்த மாதிரி இரு வேறு விதமான டி.என்.ஏ சேரும் போது அந்தத் தக்காளியில் என்ன விதமான ரசாயன மாற்றம் வரும் என்று யாரும் அனுமானிக்க முடியாது. (அதுசரி, இப்படிச் செய்தால் அந்தத் தக்காளி வெஜ்ஜா நான்-வெஜ்ஜா?)

தென்னை மர ஓலையை இரண்டாகப் பிரிப்பது மாதிரி டி.என்.ஏ-வைப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். மிக நுட்பமான மைக்ராஸ்கோப் மூலமும், மைக்ராஸ்கோப் சர்ஜிக்கல் உபகரணம் கொண்டும் இந்த ஜீன்களை இரண்டாக வெட்டி, இன்னொரு ஜீனுடன் சேர்க்கிறார்கள். இதைத் தான் ஜெனட்டிக் எஞ்சினியரிங் என்று சொல்லுகிறார்கள். சுருக்கமாக GE.

எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன். அதற்கு முன் பிளாஸ்மிட் (Plasmid) என்ற ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நூல் ஏணி போல் இல்லாமல் வட்ட வடிவமாக உள்ள டி.என்.ஏ. தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்த ஸ்பெஷல் டி.என்.ஏ. ஒரு டி.என்.ஏவை வெட்டி மற்றொன்றுடன் எப்படி ஒட்ட வேண்டும் என்பதை சமையல் குறிப்பு போலத் தரலாம்.

1. முதலில் பிளாஸ்மிட் டி.என்.ஏவை எடுத்துக்கொண்டு ஒரு பகுதியை வெட்டிஎடுத்துவிடுங்கள்.
2. வெட்டப்பட்ட இடத்தில் வேறு ஒரு டி.என்.ஏவின் பகுதியைப் ஒட்டவைத்துவிடுங்கள்.
3. இந்த ஒட்டப்பட்ட புதிய டி.என்.ஏவை செல்லுக்குள் புகுத்திவிடுங்கள்.
4. புகுத்தப்பட்ட டி.என்.ஏ தன்னைத் தானே பிரதியெடுக்கத் தொடங்கும்.
5. புதிய வகை டி.என்.ஏ தயார்.

பிளாஸ்மிட் டி.என்.ஏவை வெக்டர்(Vector) என்பர். புகுத்தபட்ட டி.என்.ஏவை டோனர் (Donor) என்பர். வெக்டர் என்ன வகையான செல்களோ, அங்கே தான் இந்த மாற்றப்பட்ட டி.என்.ஏவை உற்பத்தி செய்வார்கள்.

உங்கள் வீட்டில் நீங்கள் தான் மார்க்கெட் போய் காய்கறிகளை வாங்குவீர்களா? கத்தரிக்காய் வாங்கும்போது, அதில் பூச்சி இருக்கிறதா என்று பார்த்து வாங்குவீர்கள் தானே? நான் எவ்வளவுதான் பார்த்துப் வாங்கி வந்தாலும், வீட்டில் வந்து அதை வெட்டும்போது, மனைவியிடம் திட்டு நிச்சயம். பல கத்தரிக்காய்கள் உள்ளே சொத்தையாக இருப்பதைப் பார்க்கலாம். இனிமேல் இந்தப் பிரச்சனை இருக்காது. வந்துவிட்டது மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்- BT-Brinjal!

மண்ணிலுள்ள ஒரு வகை நுண்ணுயிரின்(பாக்டீரியா) பெயர் ‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ (Bacillus Thuringiensis - BT) சுருக்கமாக ‘பி.டி’ (BT). இந்த பாக்டீரியாவில் இருக்கும் நச்சுத் தன்மை கொண்ட டி.என்.ஏ, பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்று கண்டுபிடித்துள்ளார்கள். முதலில் இதை பருத்திச் செடிகளில் சோதித்துப் பார்த்து, அதில் வெற்றி பெறவே அடுத்தது கத்தரிக்காய் பக்கம் வந்துள்ளார்கள்.

இந்த பி.டி நுண்ணுயிரின் நச்சுத் தன்மையை எடுத்து கத்தரிக்காய்ச் செடிகளிலுள்ள மரபணுக்களில் செலுத்துவதால், கத்தரிக்காய்ச் செடிகள் பூச்சிகளிடமிருந்து தன்னைத் தானே காத்துக்கொள்ளும். மின்மினி பூச்சியிலிருந்து எடுத்த டி.என்.ஏவை புகையிலைச் செடியில் புகுத்தினார்கள் அல்லவா அதே போலத் தான் இதுவும். இதிலிருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு கத்தரிச் செடிகள் சாகுபடி செய்தால் எல்லாக் கத்தரிக்காய்களும் இனி பூச்சியில்லாமல் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு கத்தரிக்காய் வாங்கலாம். நச்சுத் தன்மை உடைய மரபணுவிற்குப் பெயர் cry1Ac.

இன்னும் கொஞ்ச விஷயம் இருக்கு. ஒரு நட்டும் போல்ட்டும் எப்படி வேலை செய்கிறது? நட்டில் இருக்கும் மரையும் போல்ட்டில் இருக்கும் மரையும் வேறு வேறு மாதிரி இருந்தால் தான் இரண்டும் ஒன்றுசேரும். அதே போல் தான் டி.என்.ஏவிலும். நான்கு வண்ண ஏணியைக் கொஞ்சம் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள் - மஞ்சள் ( A-அடினைன் ) பச்சையுடன் (T-தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (G-குவானின்) ஆரஞ்சுடன் (C-சைடோசைன்) சேருகிறது என்று பார்த்தோம். ஜீன் என்பது இந்த நான்கு A, T, G, C என்ற எழுத்துக்களால் ஆன பெரிய புத்தகம் மாதிரி என்று சொல்லுவார்கள். அதில் இந்த CTTAAG என்ற வரிசை முக்கியமானது. இதை EcoR1 (eco R one) என்று சொல்லுவார்கள். CTTAAG என்ற வரிசையை திருப்பி எழுதினால் GAATTC என்று வரும். இவை இரண்டையும் சேர்ந்த்து எழுதினால் கிடைப்பது ஒரு பாலிண்ட்ரோம்.

மஹாபாரதத்தில் ஜராசந்தன் கதை பார்க்கலாம். ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் கடுமையான சண்டை. ஜராசந்தனை தென்னை ஓலையை கிழிப்பது போல இரண்டாக கிழித்து போடுகிறான் பீமன். ஆனால் மாயக்காரனான ஜராசந்தன் பிரித்த உடல் இரண்டும் மீண்டும் ஒட்டிக்கொண்டு உயிர் பெற்று விடுகிறான். பீமனுக்கு என்ன செய்வது என்று தெரியாது நிற்கும் போது கண்ணன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து மற்றி போடும் படி பீமனுக்கு சொல்கிறார். அதன் படி பீமன் ஜராசந்தனை கிழித்து மாற்றி போட ஜராசந்தன் அழிகிறான் இப்ப இந்த வரிசையை பாருங்கள்.

C – G
T – A
T – A
A – T
A – T
G – C


இதை இரண்டாக வெட்டி பீமன் ஜராசந்தனை போட்ட மாதிரி போட்டால் மாற்றி போட்டால் நட் போல்ட் போல ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். படத்தில், “புகுத்தப்பட வேண்டிய டி.என்.ஏ” என்ற இடத்தில் cry1Ac என்று போட்டுப் பாருங்கள், எல்லாம் புரியும்!

இன்னும் கொஞ்ச நாளில் ‘மாம்பழத்து வண்டு…’ என்ற பாடலை யாரும் பாட முடியாது. இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு என் மனைவியிடம் காண்பித்தேன். படித்துமுடித்தவுடன்,
படித்துமுடித்தவுடன் “அடுத்த தடவை கத்தரிக்கா வாங்கிண்டு வரும் போது சொத்தையா பார்த்து வாங்கிண்டு வாங்க” என்றாள்.

Friday, February 19, 2010

ரங்கராஜனும் ரங்கநாதனும்!

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தில்....


குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;


- ஆண்டாள் அருளிய திருப்பாவை( 28 )


இந்த வரிகளுக்கு எளிய விளக்கம்:


"எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா;

நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது."
சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக்கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது "இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்

பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்" என்பார்.

அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும்வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாது சிலசமயம் நடந்து செல்வார். " ஏம்ப்பா வெயில்ல போற?" என்று கேட்டால், "யாருக்குத் தெரியும்?  இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா?" என்பார்.

அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

- 0 - 0 -

"எப்படியாவது என்னை ஸ்ரீரங்கம் அழைச்சுண்டு போயிடு. என் பிறந்த நாளைக்கு அங்கே போனா நன்னா இருக்கும். முடியுமா?" என்று என்னிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதா கேட்டார்.

ஒவ்வொரு வாரமும் அவரை பார்க்கும் போதும் "இந்த வாரம் டிக்கெட் இருக்கா பார்" என்று கேட்பார்.

"நிச்சயம் போகலாம்," என்று சொல்லியும் அவர் பிறந்தநாளன்று போக முடியாமல், மே மாதம் கடைசி வியாழக்கிழமை (31 மே, 2007) அன்றுதான் எங்களால் போக முடிந்தது.

முதல் முறை ரயிலில் போகும் குழந்தை போல் ஆர்வமாக இருந்தார். அன்று எங்கள் ராசி ஒரு மார்க்கமாக இருந்ததால், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் எல்லாம் ஒரு 'சைடாக' கிடைத்தது. 'சைடு அப்பர்', 'சைடு லோயர்' !

"ரொம்பக் குளிருமோ?" என்று ரயில்வே கொடுத்த போர்வையைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே கேட்டார்.டிக்கேட் பரிசோதிக்க வந்தவரிடம், "ஸ்ரீரங்கம் எத்தனை மணிக்கு வரும்... எங்களைக் கொஞ்சம் எழுப்பிவிட்டுடுங்க" என்றார்.

ஐந்து அடி ஆறு அங்குலம் இருக்கும் எனக்கே முழுதாக நீட்டினால் சைடு பர்த்தில் கால் கட்டை விரல் மடங்கும். சுஜாதாவிற்கு?

"சார், வேணும்னா வேற யார்கிட்டயாவது கேட்டு பர்த் மாத்தித் தரேன்," என்றேன்.

"வேண்டாம்,  இதுவே ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு," என்று காலை மடக்கிவைத்துப் படுத்துக்கொண்டார்.

"கால் முழங்கால் வரைக்கும் போர்த்திவிடு, குளிரித்துனா இழுத்துக்கறேன்" என்றவர், பின் தூங்கிப் போனார்.

எதோ நினைப்பில் இருந்த டிக்கெட் பரிசோதிப்பவர், சிறிதுதூரம் சென்று திரும்பிப் பார்த்தார். சுஜாதா தூங்கியபின் என்னிடம் வந்து "'இவர்தானே மிஸ்டர் சுஜாதா?" என்று என்னிடம் கேட்டுவிட்டுச் சென்றார். அவர் பார்வையில், "அடடே, அவரிடம் கொஞ்சம் பேசியிருக்கலாமே" என்ற ஏக்கம் தெரிந்தது.

ஸ்ரீரங்கத்தில் காலை ஐந்து மணிக்கு முன்பு இறங்கியவுடன் சுஜாதா உற்சாகமும் சந்தோஷமுமாக, "கோயிலுக்கு, வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துடலாம்" என்றார்.

- 0 - 0 -

காலை, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அவர் தம்பியுடன் (திரு.எஸ்.ராஜகோபாலன் ) கிளம்பினோம். போகும் முன், "எனக்குக் கொஞ்சம் இட்டு விடு" என்று தன் தம்பியிடம் கேட்டு, நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு புறப்பட்டார்.

"வெறும் கால்ல நடந்தா எரியும், கோயில் உள்ளே சாக்ஸ் போட்டுக்கலாமா?"

உள் ஆண்டாள் சந்நிதிக்கு வெளியே இருக்கும் வேணுகோபாலன் சந்நிதியில் வெளிப்புற சிற்பங்களைப் பார்த்தார். "நம்ம .... இருக்கானே அவன் எப்பவும் இது பக்கத்திலேயேதான் இருப்பான். அவன் இப்ப எங்கேடா?" என்று தம்பியிடம் கேட்டார். பழைய நினைவுகள்...

"தேசிகன், இந்தச் சிற்பத்துல மட்டும்தான் பெண்களோட அங்கங்களை மிகைப்படுத்தாம ஒழுங்கான அனாடமில செதுக்கியிருப்பாங்க," என்றார்.

"நீங்க சொல்லியிருக்கிங்க, ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்குக் கூட இதை வரைஞ்சிருக்கேன்," என்றேன்.

"இங்கதான் கார்த்திகைக்கு சொக்கப்பானை கொளுத்துவாங்க... இங்கே தான் ஸ்ரீஜயந்தி உரியடி உற்சவம் நடக்கும்... எவ்வளவு தடவை இந்தக் கோயிலைச் சுத்தியிருக்கோம்!"

கோயிலுக்குள் போகும்போது கார்த்திகை கோபுரவாயிலில் திருப்பதியில் இருப்பது போல சிறிய குழாய் வழியாக நீர் கசிந்து கால்களை அலம்புவதைப் பார்த்து, "அட ஸ்ரீரங்கத்லயும் வந்துடுத்தா?" என்றார்

அவருடைய உடல் கொஞ்சம் தளர்ந்திருந்த காரணத்தால் சிறிது நடந்தபின் ஆங்காங்கே சற்றுநேரம் உட்கார்ந்துகொண்டார். அவர் அப்படி உட்காரும்போதெல்லாம் எங்களுக்கு அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. கருட மண்டபத்தில் உட்கார்ந்து, வேடிக்கை பார்த்தபடி, பேசிக்கொண்டு இருந்தார். எல்லாம் நினைவுகள்.

கோயிலுக்குள் பெருமாள் சேவிக்க நெருங்கும்போது அவர் முகத்தில் ஒரு விதமான மகிழ்ச்சி கலந்த பரபரப்பு இருந்தது. சேவித்துவிட்டு வெளியே வந்தபோது என் தோளை அழுத்திவிட்டு, "எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!" என்ற போது அவர் கண்களின் ஓரத்தில் கண்ணீர் தேங்கியிருந்ததைப் கவனிக்க முடிந்தது.

பின் தாயார் சந்நிதியிலும் சேவித்துவிட்டு வெளியே கொஞ்சம் நேரம் உட்கார்ந்துகொண்டார்."நீங்களும் உங்க தம்பியும் கொஞ்சம் நேரம் பேசிண்டிருங்க. நான் இருந்தா பர்சனலா பேச முடியாது. நான் இப்படியே ஒரு ரவுண்ட் போய்விட்டு வரேன்," என்று கிளம்பினேன்.

"நீங்க இருந்தா பரவாயில்ல தேசிகன்".

"இல்ல சார், நீங்க பேசிண்டு இருங்க. நான் மேட்டு அழகியசிங்கர் சந்நிதிக்குப் போயிட்டு வரேன். அங்க ஓவியங்கள் நன்னா இருக்கும்."

நான் போய் அவைகளை என் டிஜிட்டல் கேமராவில் கவர்ந்துக்கொண்டு வந்து காண்பித்தேன். ஆர்வமாகப் பார்த்தார்.


"சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட கோயில் பெரியவாச்சான்-பிள்ளை உபன்யாசங்கள் செய்ய முதுகு சாய்த்த மண்டபத்தின் முன் மேட்டு அழகியசிங்கர் சந்நிதியில் உள்ள பழங்காலச் சுவர்ச் சித்திரங்களை தேசிகன் படம் எடுத்து டிஜிட்டலில் உடனே காட்டினார். வடக்கு உத்தர வீதியில் எங்கள் ஆசார்யன் சிறுபலியூர் அண்ணன் சுவாமிகளுக்குத் தண்டம் சமர்ப்பித்துவிட்டு, தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு, தம்பி ராஜகோபாலனின் புத்தகங்களில் ‘கோயில் ஒழுகு’ - பகுதி III, கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ‘A History of God’ இரண்டை மட்டும் கவர்ந்துகொண்டு, அடுத்து அரங்கன் எப்போது அழைக்கப்போகிறான் என்பது தெரியாமல், மறுதினம் பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பினேன்"

என்று 'கற்றதும் பெற்றது'மில் சுஜாதா எழுதியிருந்தார்.


ஒன்பது மாதங்கள்( பிப் 27, 2008 ) கழித்து ஆசார்யன் திருவடிகளை அடைந்தார்

- 0 - 0 -

அவர் ஆசார்யன் திருவடிகளை அடைந்து சில நாட்கள் கழித்து, அவரது தம்பி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். நான் மேட்டு அழகியசிங்கர் கோயிலுக்குச் சென்றபோது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதன் விபரம் அதில் இருந்தது.
"

..... ஸ்ரீரங்கமும், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளாகிய நம்பெருமாளை சேவிக்கும் போதும், நம்மை ஒருவித பரவசமான மனநிலைக்கு ஏன் ஆட்படுத்துகின்றன என்று அந்த உணர்வுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க பல சமயம் நினைததுண்டு. மற்ற திவ்யதேசங்களில் இல்லாமல், ஏன் ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்தகைய உணர்வு வருகிறது என்று நானும் என் சகோதரனும் (ரங்கராஜன்) அன்று பேசிக்கொண்டோம். யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழவைக்கிறது? பிறப்பணுவிலேயே(Genes) சொந்த ஊர், மொழி உணர்வு எல்லாம் வந்துவிடுகிறதோ ?

அதற்கான காரணம் 'இந்தப் பெருமாளை சேவிக்கும்போது, நம் தாய் தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பொருமாளின் மூலம் பார்க்கிறோம்' என்பதை அன்று உணர்ந்தோம். அவர்கள் பலப் பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இவனுள்ளேயே வாழ்கிறார்கள்; இவன் பாதங்களையே சென்றடைந்திருக்கிறார்கள்; நம் வாழ்வுகளுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான். கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். பெருமாளை நன்றாக சேவிக்கும்போது அந்த திவ்யமங்கள ரூபத்தில் எங்கள் தாய் தந்தையரை பார்க்கும்படியும் ரங்கராஜனிடம் சொன்னேன். அவனும் 'ஆம், அது தான் உண்மை' என்று ஆமோதித்தான். அந்த உண்மையை தான் அறிந்ததால்தான் இங்கு வந்து பெற்றோருடன் நெருக்கமாக இருக்கும் ஆர்வம் மேலோங்கியதாகச் சொன்னான்.

அவன் உயிருடன் இருக்கும்வரை அந்த ஆசையைப் பூர்த்திசெய்துகொள்ள இயலவில்லை; ஆனால் தற்பொழுது அவனது ஆத்மாவும் ரங்கநாதனுடன் ஐக்கியமாகிவிட்டது...."

... என்னை அன்புடன் 'ராஜப்பா' என்றே அழைப்பான்" என்று கடிதத்தை முடித்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் ஸ்ரீரங்கம் சென்று நம்பெருமாளை சேவிக்கும்போது, என் அப்பாவையும், ஸ்ரீரங்கம். எஸ்.ஆர் என்கிற சுஜாதா ரங்கராஜனையும் பார்க்க முடிகிறது.

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு மற்றொரு பெயர் ரங்கராஜன்.

( நான் எழுதிய இந்த கட்டுரை, இந்த வாரம் விகடனில்( 24.02.10 ) வந்தது. பிரசுரித்த அவர்களுக்கு நன்றி. )

( கோட்டோவியங்க -  ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டபம், ஸ்ரீ வேணுகோபாலன் சந்நதி, சந்நதியில் இருக்கும் பெண் சிற்பம் ( இவை எல்லாம் ஸ்ரீரங்கத்து கதைகளுக்கு வரைந்தது )( படங்கள்: படம் 1: மேட்டு அழகியசிங்கர் கோவிலில் சுஜாதாவிற்கு டிஜிட்டலில் படம் எடுத்து காண்பித்தது. படம் 2: சுஜாதாவும் அவர் தம்பி திரு ராஜகோபாலனும் அவர்களுடன் ஸ்ரீரங்கம் போன போது எடுத்தது )

Thursday, February 18, 2010

Wednesday, February 10, 2010

பக்தி - ஓர் எளிய அறிமுகம்: -0 3

தமிழ் ஹிந்துவில் பக்தி பற்றி நான் எழுதிய பாகம் 3

Friday, February 5, 2010

பூவா தலையாமேலே பார்க்கும் இந்த ஃபிளக்ஸ் பேனர் (தமிழ் பெயர் டிஜிட்டல் பேனர்), 3 பாஸ் முறையில், பத்துக்கு பத்து என்ற அளவில், கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் செலவில் அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், வட்டம் என்ற நீண்ட பட்டியலினால் கொஞ்சம் கனமாகவே இருந்தது. ஏழைகளின் காவலன் என்ற வாசகத்துக்கு கீழே, தலைவர் இரு கரம்கூப்பி வணக்கம் சொல்லும் படத்தில் பவழ மோதிரம் பளிச் என்று தெரிந்தது. வட்டங்களின் படங்கள் சதுரமாக ஸ்டாம்ப் சைஸுக்கு கீழே அடுக்கியிருந்தது.


தமிழ்நாட்டில் ஒரு பட்டி. வெயில் வழக்கதை விட அதிகமாக அடிக்கும் ஒரு நாள்.


மெயின் ரோட்டிலிருந்து பிரியும் அந்த ரோட்டில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் போனால், “மங்கலம் காலனி வருக! வருக!” என்று வரவேற்கும். அதைத் தாண்டிப் போனால் மங்கலம் காலனி எக்ஸ்டென்ஷன். தபால்காரரைத் தவிர்த்து வேறு யாரைக் கேட்டாலும் “எக்ஸ்டன்ஷனா ? என்று வானத்தைப் பார்த்துவிட்டு “அங்கே சிவா மெடிக்கல்ஸுல கேளுங்க” என்பார்கள். பிரசித்தி பெற்ற சிவா மெடிக்கல்ஸ் பக்கத்தில் குப்பைத் தொட்டி மறைத்திருக்கும் மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த கல்லில் எழுதியிருக்கும் “மூன்றாவது மெயினை”க் கடந்து உள்ளே சென்றால், “சுகுணா சிக்கன்” என்ற போர்டுக்குக் கீழே சின்னதாக, “வேளாங்கன்னி மளிகை ஸ்டோர்ஸ்” என்று எழுதியிருப்பதைப் பார்க்கலாம். கடை வாசலிலிருந்து பார்த்தால் கோயில் கோபுரம் சின்னதாகத் தெரியும். பக்கத்தில் போனால் வாசலில் “உ” என்ற பிள்ளையார் சுழிக்கு கீழே “நவ சக்தி விநாயகர்” என்ற பலகை. அதற்குக் கீழேதான் சிவகாமி பூக்கடை. கடை என்றால் நிஜக் கடை இல்லை. தரையில் பிளாஸ்டிக் பேப்பர் போட்டு பந்து பந்தாகப் பூக்கள்.


சிவகாமிக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். ஒல்லியான உடம்பு. உதட்டு விரிசல்களில் வெற்றிலைக் கறை. பூவை முழம் போடும்போது முழங்கையில் சின்ன கோலம் பச்சை குத்தியிருப்பது தெரியும். காது குத்தியிருக்கும் இடத்தில் துந்து போகாமல் இருக்க ஈர்க்குச்சி. பக்கத்தில் போனால் ஒருவித வேப்ப எண்ணெய் வாசனை. எப்போதும் சிரித்த முகம்.


அன்று மதியம் பதினொரு மணி இருக்கும். இனிமேல் கோயிலுக்கு யாரும் வர மாட்டார்கள் என்று சிவகாமி கீழே பரப்பிவைத்திருக்கும் பூக்களை கூடையில் மூட்டைகட்ட ஆரம்பித்த சமயம் ஏர் ஹாரன் அலற, முன்பக்கம் கூட்டணிக் கட்சிக் கொடிகள் சொறுகியிருக்க, புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்த டாட்டா சுமோ சிவகாமி இருக்கும் இடத்துக்கு வந்து நின்றது. புழுதிப் படலம் நிற்காமல் கோயில் வாசலில் சாராய வாசனையை விட்டுவிட்டு கடந்து சென்றது.


சிவகாமி உடனே ஒரு அர்ச்சனைத் தட்டை ரெடி செய்து அவர்கள் இறங்குவதற்குள், “இந்தாங்கையா அர்ச்சனைத் தட்டு. கோயில் மூடற சமயம் சீக்கிரம், சீக்கிரம்” என்றாள்.


செருப்புக் கடைச் சிறுவன் “அய்யரே, அய்யரே” என்று கத்திக்கொண்டு கோயில் உள்ளே ஓடினான்.


வண்டியை ஓட்டிய இளைஞன் வாயில் சிகரெட்டும், சுமோ இன்ஜினும் நிற்காமல் எரிந்து கொண்டிருந்தன. முன்சீட்டிலிருந்து இறங்கியவன் வண்டியில் இருந்து பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொப்பளித்துவிட்டு, கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு மேலும் கீழும் பார்த்தான்.


“இங்கே” என்று சிவகாமி பூ விற்கும் இடத்தைக் காண்பித்தான்.


வண்டியை ஓட்டியவன் அனாவசியத்துக்கு ஆக்ஸிலரேட்டரை அழுத்திக்கொண்டு தலையை ஆட்டினான்.


அர்ச்சனைத் தட்டை நீட்டியவாறே “கோயில் மூடப்போறாங்க. சீக்கிரம்” என்றவளை அலட்சியமாகப் பார்த்துவிட்டு அந்த இளைஞன் சுமோவில் ஒரு தாவு தாவி ஏறி உட்கார்ந்து கதவை மூடும் முன் ரிவர்ஸ் எடுக்கப்பட்டு, விட்ட புழுதியை எடுத்துக்கொண்டு கிளம்பியது.


சிவகாமிக்கு ஒன்றும் புரியாமல், பூப் பந்துகளை தண்ணீர் தெளித்து திரும்பவும் தன் கூடைக்குள் வைத்தபோது, “போயிட்டாங்களாக்கா?” என்று தன் இரண்டு ரூபாய் வருமானம் போன சோகமாகக் கேட்டான் செருப்புக் கடைச் சிறுவன்.


அதே நாள் சாயுங்காலம், வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சிவகாமி, “முழம் எட்டு ரூபாய்க்கு எடுத்துக்கோங்க” என்று வியாபாரம் செய்துகொண்டிருந்த சமயம், திரும்பவும் அதே சுமோ வர அதை கவனிக்கவில்லை.


“எந்திரிமா” என்ற குரல் கேட்டுத் திரும்பிய சிவகாமிக்கு, சாராய நெடியே அவர்களின் அடையாளத்தைத் காட்டிக்கொடுத்தது.


“என்ன?” என்றாள் புரியாமல்.


“எந்திரி, எந்திரி, குழி நோண்டணும்” என்று சொல்லி தன் வாயில் இருந்த பான்பராக்கைத் துப்பினான்.


சிவகாமிக்கு ஒன்றும் புரியவில்லை.


“ஏங்க வியாபார சமயம், அப்பறம்…” என்று ஏதோ சொல்லுவதற்குள் வண்டியிலிருந்து இறங்கியவன் அலாக்காக சிவகாமியின் மொத்தப் பூக்கடையை இரண்டு நுனியையும் கோவணம் மாதிரி சுருட்டி எங்கே போடுவது என்று யோசிப்பதற்குள், நடுவில் இருந்த ஓட்டையில் உதிரி பூக்கள் கொட்டியது. சிவகாமி பதறிப் போய் பூக்களை கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டாள்.


வந்தவன் தன் கரை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சிவகாமி உட்காரும் இடத்தில் கடப்பாறையால் குழி தோண்ட ஆரம்பித்தான். அடியில் இருந்த கல் மீது பட்டு ‘நங்’ என்ற சத்தம் வர, ‘வக்காளி..’ என்று யாரையோ திட்டி விட்டு, அரை மணியில் அங்கு இரண்டு கம்பம் நிறுத்தப்பட்டு மோதிரக் கையால் வணக்கம் சொல்லும் தலைவர் சிவகாமியைப் பார்த்துச் சிரித்தார்.


கரை வேட்டி, “கிளம்புடா அடுத்த தெருவுக்குப் போகணும்” என்ற போது,


“அட தலைவர் படம்” என்றாள் சிவகாமி. வந்தவர்கள் அவளைத் திரும்பிப் பார்க்க “ஏங்க, தலைவர் படம் வைக்கணமுனு முன்னமே சொல்லக்கூடாதா?” என்று கோவித்துக்கொண்டே, தன் பூக்கூடையிலிருந்து ஒரு பந்துப் பூவை எடுத்து, “ஏங்க, இதைத் தலைவருக்கு போடுங்க” என்றாள்.


வந்தவர்கள் புரியாமல் பேனர் மீது அதை மாலையாகப் போட்டுவிட்டு, வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனார்கள்.Courtesy : http://www.flickr.com/photos/gargi/

அவர்கள் போன பின்பு, கொஞ்சம் தள்ளி கடையை விரித்தாள். அடிக்கடி அண்ணாந்து பேனரைப் பார்த்துக்கொண்டாள். அவளிடம் அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டே கோயிலுக்குள் போனவரை நிறுத்தி, “ஏங்க அதுல என்ன எழுதியிருக்கு கொஞ்சம் படிச்சுச் சொல்லுங்க” என்றாள்.“அந்தப் படத்துல இருக்காரே அவருக்கு பிறந்தநாளாம். நாளைக்கு இங்கே வாழ்த்துக் கூட்டமாம்” என்று விட்ட இடத்திலிருந்து மந்திரத்தை சொல்லிக்கொண்டே சென்றார்.


அடுத்த நாள் காலையில் சிவகாமி வந்த போது ரோட்டில் இரண்டு பக்கமும், டியூப் லைட், ரோடு நடுவில் பள்ளம் தோண்டி சவுக்கு மரக் கம்பங்களில் கொடிகள். கம்பத்துக்குக் கம்பம் வாழை மரமும், போலீஸும் இருந்தார்கள். ரோடு நெடுகிலும் வளையம் வளையமாக கார்ப்பரேஷன்காரர்கள் கோலம் மாதிரி சுகாதாரத்துக்கு ஏதோ போட்டிருந்தார்கள். சாலையின் குறுக்கும் நெடுக்குமாக பிளாஸ்டிக் கொடித் தோரணங்கள்; ஷாமியானா போடப்பட்டு தண்ணீர்ப் பந்தல். தள்ளுவண்டியில் வேர்க்கடலை, லவுட் ஸ்பீக்கரில் பக்திப் பாடல்களும், நாக்க முக்கமுக்கவும் ரீமிக்ஸாகி தலைவர் புகழ் பாடிக்கொண்டிருக்கும் போது லாரியிலும், டிராக்டரிலும் மக்கள் வந்து இறங்கத் தொடங்கினார்கள்.


“இன்னும் சிறுது நேரத்தில் தலைவர் வருகிறார்” என்ற அறிவிப்பும் “கோயிலுக்குப் பின்புறம் பிரியாணி” என்ற அறிவிப்பும் வந்துக்கொண்டே இருந்தது.


“இப்போது எட்டாவது வட்டம், இலக்கியத் துணை தலைவர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்” என்று சொன்னவுடன் ஒருவர் மேடைக்கு வந்து “மேடையில் அமர்ந்திருக்கும்…” என்று எல்லோரையும் வரவேற்ற பொழுது மேடையில் இருந்த அனைவருக்கும் ஏதோ ஒரு பதவி இருந்தது தெரியவந்தது.


சிவகாமி பேனர் கீழே உட்கார்ந்திருந்தாள். அன்று கடை பரப்பவில்லை. எடுத்துக்கொண்டு வந்த ஒரு பூப்பந்தை மாலை மாதிரி தலைவர் மீது போட்டிருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்தாலும், கோயிலுக்குக் கூட்டம் வரவில்லை. கோயிலின் பெரிய கதவை மூடியிருந்தார்கள். வந்த சிலர் பெரிய கதவில் உள்ள சின்னக் கதவு வழியாகப் போய்விட்டு வந்தார்கள்.


“ஏங்கா இங்கேயே குந்திகிணு இருக்க. பிரியாணி துன்னல? சூப்பரா இருக்குதுகா. ஒரு முட்டை கூடக் கெடச்சுச்சு” என்று கையில் எடுத்து காண்பித்தான் செருப்பு கடைச் சிறுவன்.


“ப்ச், இல்லை. நீதான் எனக்கு ஒண்ணு எடுத்தாயேன்” என்ற சொல்லி பேனரை பார்த்த போது தலைவர் சிவகாமியைப் பார்த்து சிரித்தார்.


“இருக்கா வாங்கியாரேன்”, என்று தான் சாப்பிட்ட மீதியை மடித்து செருப்பு வைக்கும் அலமாரியின் ஒரு பொந்துக்குள் வைத்துவிட்டு. “பாத்துக்கக்கா” என்று ஸ்கூட்டர் மாதிரி சத்தம் செய்துகொண்டு ஓடினான்.


“இன்னும் சிறிது நேரத்தில் தலைவர் வருகிறார்” என்ற அறிவிப்பு “தலைவர் வந்துகொண்டே இருக்கிறார்” என்று மாறியதில் கூட்டம் பரபரத்தது.


ஒருவழியாக ராத்திரி பத்து மணிக்கு பேனரில் இருந்த தலைவர் உயிர்பெற்றுப் பேசத் தொடங்கினார். பேனரில் இருந்த அனைவரின் பெயரையும் குறிப்பிட்டபின், “தாய்மார்களே, பெரியோர்களே… அலைகடலென திரண்டு வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே… வாழ்த்துச் சொன்ன.. ” என்று ஆரம்பித்துவிட்டு, எதிர்கட்சிக்கு ஏகப்பட்ட சவால் விட்டு, ஏதேதோ பேசிவிட்டு இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்” என்று சொன்னபோது பதினொன்றரை. கூட்டம் மெல்ல கலையத் தொடங்கிய போது, கோயிலுக்குப் பின்புறம் பிரியாணி வாசனையை மீறி சாராய வாசனை அடிக்கத் தொடங்கியது.


சிவகாமிக்கு அன்று ஏனோ வீட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றவில்லை. கோயில் பக்கத்தில் உள்ள அரச மரம் சுற்றி போன கும்பாபிஷேகத்துக்கு மிஞ்சிய சிமிண்டில் ஒரு மேடை கட்டியிருந்தார்கள்.அரச மர மேடையில் படுத்துக்கொண்டாள். அவள் தூங்கிய பின்பும் தலைவர் சிவகாமியை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்.


மறுநாள் சூரியனும், சிவகாமியும் எழுந்த போது, மந்தார இலைகளில் பிரியாணி மிச்சங்களின் மீது ஈக்களும், பாலிதீன் பை குப்பைகளும், சில ஒற்றைச் செருப்புக்களும், மூத்திர நாற்றமுமாக அந்த இடமே மாறிப்போயிருந்தது. ஒரு மினி டெம்போ லாரியில் வந்தவர்கள் ரோட்டு நடுவில் இருக்கும் கொடிக் கம்பங்களை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். பேப்பர் பொறுக்கும் கிழவி வாழை மரத்தைப் பிரித்து, அதிலிருக்கும் தண்டை எடுத்துக்கொண்டிருந்தாள். டியூப் லைட் அடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் கொடிகள் விடுதலை பெற்று எல்லா இடங்களிலும் பறந்துகொண்டிருந்தன.


சுமோவில் வந்தவர்கள் பேனரைக் கழற்ற முற்பட்ட போது சிவகாமி, “ஐயா எனக்கு தலைவர் படம் வேணுமுங்க” என்று கெஞ்சலாக கேட்டாள்.


“நீ யார்?” என்பதைப் போல் அவர்கள் பார்க்க,


“ஐயா நாந்தாங்க… நேத்தைக்கு தலைவர் படத்துக்கு மாலை கூட போட்டேனே” என்றாள்


“அதுக்கு என்ன இப்ப ?”


“இன்னிக்கு கூட போட்டிருக்கேன் பாருங்க..பேனரை குடுத்தீங்கனா…”


“தோடா… பேனர் வேணுமாமே” என்று ஒருவன் மற்றவனை பார்த்து சிரிக்க


“கொடுத்தீங்கனா தலைவர் படத்தை வீட்டுல மாட்டிப்பேனுங்க” என்ற போது இளைஞன் கையில் இருந்த செல்போன் ஒலிக்க


“கொடு” என்பது போல ஒரு இளைஞன் கையசைக்க அந்த பேனரைக் கழற்றி சிவகாமிக்குக் கொடுத்துவிட்டு கம்பங்களை உருவிக்கொண்டு போனார்கள். செருப்பு கடைச் சிறுவன் பறந்துகொண்ருந்த கொடிகளைத் தாவித் தாவிப் பிடித்துக்கொண்டிருந்தான்.


அவர்கள் போன பின், சிவகாமி அந்த பேனரை நான்காக மடித்துக் கீழே போட்டு அதன்மேல் பூக்களை அடுக்கிவிட்டு, தானும் வசதியாக உட்கார்ந்தபோது முன்தினம் சாப்பிட்ட பிரியாணியால் “பர்ர்ர்” என்று விட, தலைவர் தலை மீது படிந்த தூசி விலகியது.

Thursday, February 4, 2010

பக்தி – ஓர் எளிய அறிமுகம்: -0 2

தமிழ் ஹிந்துவில் பக்தி பற்றி நான் எழுதிய பாகம் 2