Skip to main content

கல்யாணி



மேலே நீங்க பார்ப்பது நேற்று வந்த தி.ஹிந்து இரண்டாம் பக்கம். மேலிருந்து கீழே இரண்டாவது காலத்தில் பாருங்க. “02.30pm: Mr…… - Violin, All are welcome” அப்படீன்னு இருக்கா? அந்த Mr….. நான் தான்.. இந்த மத்யானக் கச்சேரிக்குத் தான் அமெரிக்காவிலேருந்து வந்தேன். உடனே என்னை ஏதோ சஞ்சய் சுப்பிரமணியன் மாதிரியோ, டி.எம்.கிருஷ்ணா மாதிரியோ நினைக்காதீங்க. அந்த அளவுக்கு ஞானமும் கிடையாது அதிர்ஷ்டமும் கிடையாது.

டிசம்பர் மாசம் ஆச்சுன்னா கச்சேரி பண்ண சபால ஸ்லாட்டும், கேண்டீன்ல மெதுவடை கிடைக்கறதும் அவ்வளவு கஷ்டம். அந்தக் கஷ்டம் எனக்கு மட்டுந்தான் தெரியும். எல்லா இடத்திலேயும், சிபாரிசு, போட்டி, பொறாமை… என்ன செய்ய? போன சீசனுக்கே வாசிச்சிருக்கணும் கடைசி நிமிஷத்துல இல்லைனுட்டா. சரி அது எல்லாம் பழைய கதை.

சீசன் டிக்கெட்டோட வைரத்தோடு மாமிகளும், டி-ஷர்ட் மாமாக்களும் முன்வரிசைல உட்கார்ந்துண்டு, தனி ஆவர்த்தனை ஆரம்பிச்சதும் வெளியே வந்து, “சார் அறுசுவை நடராஜன் அடை அவியல் பிரமாதம்” என்று சொல்லும் சீசன்ல எனக்கு இந்தத் தடவை மத்தியானம் இரண்டரை மணி ஸ்லாட் கிடைச்சிருக்கு. என்.ஆர்.ஐ கோட்டான்னு பேர். எல்லாம் சிபாரிசுதான்.

“இரண்டரை மணி ஸ்லாட், ரொம்பக் கஷ்டப்பட்டு வாங்கியிருக்கேன்,” ரங்கண்ணா போனில் சொன்னார். ரங்கண்ணாவுக்கு சங்கீதம் தெரியுமோ தெரியாதோ ஆனா எல்லா சபா செகரேட்டரிகளையும், ஸ்பான்சர்களையும் தெரியும். கேண்டீன் பக்கம் போனா, “அண்ணா சூடா மைசூர் போண்டா சாப்பிடுங்கோ”ன்னு உபசாரம் கிடைக்கற அளவுக்கு இவருக்குத் தெரியாத ஆளே கிடையாது.

“நமக்குத் தெரிஞ்ச பிரஸ்காரா இருக்கா. சரியா நீங்க மெயின் வாசிக்கும் போது வரச்சொல்லிடறேன். உங்க வாசிப்பை பிரமாதப்படுத்திடுவா. வயலின் வாசிக்கிற போஸுல ஐந்து காப்பி போட்டோ மட்டும் எடுத்துண்டு வந்துடுங்கோ” என்றார்.

லஞ்ச் சாப்பிட்டு விட்டு ஏஸி ஹாலில் லேசாகத் தூங்கலாம் என்று வரும் 10 ’ரசிகர்’களுக்கு வயலின் வாசிக்கணும் ஆழ்வார் பேட்டைல ஏதோ மினி ஹாலாம். எனக்கு தெரிஞ்சவா கிட்டே எல்லாம் சொல்லியிருக்கேன். வெறும் நாற்காலிகளை பார்த்தா என்ன வாசிக்க வரும்?

“சார், கச்சேரிக்கு நீங்க வரவேண்டியது தான் பாக்கி. என்ன என்ன பாட்டு வாசிக்கப் போறீங்கன்னு சின்னதா ஒரு பேப்பர்ல எழுதித் தாங்கோ. எனக்குத் தெரிஞ்ச பையன் இருக்கான்; 18 வயசுதான்; மிருதங்கம்; கை விளையாடும்; அருமையா வாசிப்பான். பக்கவாத்தியத்துக்கு அவனையே அரேஞ்ச் பண்ணிடறேன். ஜாமாய்சுடலாம்” என்றார் ரங்கண்ணா

ஒரு மணி நேரத்தில என்னத்த வாசிக்க முடியும்? ஒரு விநாயகர் பாட்டு, அப்பறம் வர்ணம், ஒரு மெயின் ஐட்டம், இதுல அந்தப் பையனுக்கு ‘தனி’ வேற கொடுக்கணும். அப்பறம் துக்கடா வாசித்து முடிக்கும் முன் ஸ்கிரீன் பக்கம் மேக்கப்போட பரதநாட்டிய கோஷ்டி வந்து “எப்ப எழுந்துக்கப் போறீங்க” ங்கற மாதிரி பார்க்க ஆரம்பிச்சுடுவா.

வயலின் கச்சேரி செய்றது அவ்வளவு சுலபம் இல்லை. வாய்ப்பாட்டுனா பரவாயில்லை வயலினில் எல்லாம் ஜனங்களுக்குத் தெரிஞ்ச பாட்டா வாசிக்கணும். தெரியாத பாட்டு வாசிச்சா கேண்டீன் பக்கம் காப்பி சாப்பிடவோ, அல்லது சபா வாசல்ல கொடுக்கற மாம்பலம் டைம்ஸ், சென்னை டைம்ஸ் படிக்க ஆரம்பிச்சுடுவா. ஒரு மணி நேரத்துல ராகம் தானம் பல்லவி எல்லாம் நோ சான்ஸ். டைம் கொடுத்தாலும் எனக்கு வாசிக்கத் தெரியாது. நான் முறையா சங்கீதம் கத்துக்கல. ஸ்வரத்தைக் கொடுத்தா வயலின்ல வாசிப்பேன். அவ்ளோதான். ஆச்சரியமா பார்க்காதீங்க, நான் சங்கீதம் கத்துண்டு கரைகடந்த கதையை சின்னதாச் சொல்லிடறேன்.



இவனோட தாத்தா பாடினா இன்னிக்கும் கேட்டுண்டே இருக்கலாம்” அப்டீங்கற மாதிரியான சங்கீதக் குடும்பத்துல எல்லாம் நான் பிறக்கலை. அம்மாவுக்கு சுருதிதப்பி ‘பால் வடியும் முகம்’ மட்டும்தான் தெரியும். பெண்பார்க்கும் போது, “பெண்ணுக்குப் பாட தெரியுமா?” கேள்விக்காகப் பாட ஒரே ஒரு பாட்டு கத்துக்கொடுத்திருக்கிறார் என் தாத்தா. இன்னிக்கும் பாடுன்னா அம்மா, “பால் வடியும் முகம்…”னு தான் ஆரம்பிப்பா. நல்ல ஞாபக சக்தி. அப்பா ரேடியோவுல, “இன்று இசை அரங்கத்தில் …” ன்னு ஆரம்பிச்சா, யார் பாட போகிறார்கள்னு சொல்றதுக்கு முன்னாலயே அணைச்சுடுவார். பின்ன எனக்கு மட்டும் எப்படி சங்கீதத்தில் ஆசை வரும்? ஆனா வந்தது. குன்னக்குடி வைத்தியநாதனைப் பார்த்த பிறகு.

இவ்வளவு தூரம் என் கதையை கேட்டுட்டீங்க, நான் சங்கீதம் கத்துக்க பட்ட கஷ்டத்தையும் கொஞ்ச கேளுங்க.. அப்படியே கல்யாணி பத்தியும் கொஞ்சம் சொல்லப்போறேன். அதனால பாதியில ஓடிடாதீங்க

திருச்சியில் எங்க வீட்டுக்குப் பக்கத்துல உய்யகுண்டான் வாய்க்கால் பக்கம் புதுசா ஐயப்பன் கோயில் வந்த சமயம். நவராத்திரி போது ராத்திரி கதா காலட்சேபம்., கச்சேரி எல்லாம் நடக்கும். எனக்கு அது எல்லாம் அலர்ஜி. பொழுது போகலன்னு ஒரு நாள் சும்மா ஃபிரண்ட்ஸ் எல்லாம் கோயிலுக்குப் போனோம். அன்னிக்கி குன்னக்குடி கச்சேரி. ஏழு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கச்சேரி எட்டரைக்குத் தான் ஆரம்பிச்சாங்க. வாசிச்சவரோட புருவம், விபூதிப் பட்டை, குங்குமம், கண் எல்லாம் வாசிப்புக்கு ஏத்த மாதிரி டான்ஸ் ஆடித்து. வேடிக்கை பார்த்துண்டிருந்தவனை கொஞ்சம் கொஞ்சமா ஏதோ ஈர்க்கவும், முன்னாடி போய் ரசிக்க ஆரம்பிச்சேன். முழங்கை அளவு வயலின்ல எப்படி அந்த மாதிரி பேச முடியறது? அன்னிக்கு அவர் வாசிச்சது ஒன்னும் புரியலைன்னாலும் கேட்டுண்டு இருந்தேன். ஏதோ ஒருவிதமான மயக்கம். கடைசி அரை மணி நேரத்துல, “ஓடும் மேகங்களே…ஒரு சொல் கேளீரோ” ன்னு எம்.ஜி.ஆர் பாட்டை எல்லாம் வயலின் பேசினபோது. நாமளும் வயலின் கத்துக்கணும்னு முடிவுசெஞ்சு அப்பாகிட்ட கேட்டேன்

“நம்மாத்துல எல்லாம் யாருக்குமே சங்கீதம் வராதே”

“அதனால என்னப்பா நான் கத்துக்கிறேன்”

“அவன் கத்துக்கறதுன்னா கத்துக்கட்டுமே. எங்க அத்தை ரொம்ப நல்லா பாடுவா” என்று அம்மா சிபாரிசு செய்ய, “யாரு, நம்ப கல்யாணத்துல ஆரத்தி எடுக்கும் போது பாடினாளே…” என்று ஏதோ சொல்ல வந்து பாதியில் நிறுத்திவிட்டு, என்னிடம் “ஏண்டா போன தடவை கணக்குல என்ன மார்க்?” என்றார் விறைப்பாக.

“அதுக்கும் வயலின் கத்துகறதுக்கும் என்ன சம்பந்தம், போன தடவை எல்லாம் அவுட் ஆப் சிலபஸ்”

“போய் படிக்கிற வழியப் பாரு” என்றார் அப்பா.

“நான் விடலையே எப்படியாவது குன்னக்குடி மாதிரி இல்லைன்னாலும் ஏதோ ஒரு சின்னக்குடியாவாவது வரணும்னு ஆசை. வயலின் வாங்கக் கிளம்பினேன். திருச்சில ஸ்போர்ட்ஸ் கடைகள்தான் நிறைய இருக்கு. அங்கே கஞ்சிரா மாதிரி ‘ஜல் ஜல்’ தான் கிடைக்கும். அது ஃபுட் பால் மேட்சுக்கு தான் யூஸ் ஆகும். பக்கத்து வீட்டு மாமாகிட்ட விசாரிச்சப்ப, “திருச்சில எல்லாம் கிடைக்காது, இதுக்கு மெட்ராஸ்தான் போகணும்” னார். பெரிய கடைவீதில அலைஞ்சப்ப நாட்டு மருந்துக் கடை பக்கம் ஒரு சின்னக் கடைல வயலின் தொங்கவிட்டிருந்தாங்க. மூக்கு நுனியில கண்ணாடியோட இருந்தவர் வீணையை ரிப்பேர் செஞ்சுகிட்டிருந்தார்.

“ஒரு வயலின் வேணும்”

என்னை மேலும் கீழும் பார்த்த்து “என்ன வயலின்?”

வயலினில் எவ்வளவு தந்தி இருக்குன்னு கூட தெரியாது. என்ன வயலின் என்றால் நான் என்ன சொல்லுவேன்?

“தெரியாது, இனிமேதான் கத்துக்கப் போறேன்” என்றேன் அப்பாவியாக.

மேல் சொன்ன அதே பார்வையை பார்த்துவிட்டு, பள பள என்று இருக்கும் வயலினை என்னிடம் காண்பித்து “ஆயிரத்து எட்டு நூறு ரூபாய். கத்துக்க இது போறும்” என்றார்.

என் கையில் இருந்தது வெறும் ஐநூறு ரூபாய்.”திரும்ப வரேன்” என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன்.

சின்னகுடி ஆகாமல் விடுவேனா ? அம்மாவிடம் ஒரு மாசம் நச்சரித்து அந்த வயலினை வாங்கி வந்துவிட்டேன். வயலின் மாதிரி வடிவத்தில் சின்ன சூட்கேசில் வயலின் இருந்தது. உள்ளே சிகப்பு வெல்வெட் துணி ஒட்டியிருந்தார்கள். மூடியின் உள்பகுதில் போ. சாளக்கிராமப் பெட்டி போல சின்னதான பெட்டியில் கெட்டியான கல் மாதிரி ஒன்று சாம்பராணி வாசனையுடன் இருந்தது. எதற்கு என்று தெரிவில்லை. ஏதோ கொடுத்திருக்கிறார்கள் என்று விட்டுவிட்டேன். வீட்டுக்கு வந்தவுடன், போவை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

“என்னடா சத்தமே வரலை. போய் திருப்பி கொடுத்துட்டு வா” என்றாள் அம்மா

திரும்பவும் கடைக்கரரிடம் எடுத்துக்கொண்டு போய் “சத்தம் வரலை” என்றேன். அவர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, அந்த சாம்பராணி கல்லில் போவை கொஞ்சம் தேய்த்து பிறகு வாசித்துக்காண்பித்தார். இசை வந்தது!

வீட்டுக்கு எடுத்து வந்து குன்னக்குடி மாதிரி மேலும் கீழும் இழுத்தபோது கிட்டத்தட்ட கழுதை போடும் சத்தம் மாதிரி வந்தாலும் பரவசமாக இருந்தது. அதில் தேய்த்த ரோஸ்லின் வீபூதி மாதிரி கொட்டி பிசுபிசுத்தது. “வீட்டுல ஏதாவது கார்ப்பெண்டர் வேலை நடக்குதா?” என்று பக்கத்து வீட்டு மாமி வந்து காப்பி சாப்பிட்டுவிட்டுப் போனாள்.

அடுத்த பெரிய பிரச்சினை யார் வயலின் சொல்லித்தருவார்கள் என்பது தான். யாரோ ஆல் இந்தியா ரேடியோவில் போய் கேட்டால் சொல்வார்கள் என்றார்கள். போய்க் கேட்டேன். அங்கே இருந்த ஒருவர் வெத்தலையை துப்பிவிட்டு, “தில்லை நகரில் ‘பிடில்’ லோகநாதன் இருக்கார் ‘கிளாஸ் A ஆர்டிஸ்ட்’ அவர் சொல்லித்தருவரா தெரியாது. அங்கே போய் கேட்டுப் பாருங்க” என்று அட்ரஸ் கொடுத்தார்.

தில்லைநகரில் அட்ரஸ் தேடிப் போனபோது ஒரு சின்ன வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் ‘கல்யாணி இல்லம்’ என்று கல் பதித்து இருந்தது. வீட்டு கேட்டில் சின்ன போர்ட் மாட்டியிருந்தது. அதில் யாரோ கத்துக்குட்டியால், வயலின் மாதிரி வரைந்து கீழே “பிடில்’ லோகநாதன். AIR Artist என்று எழுதியிருந்தது. நிச்சயம் அடுத்த மழைக்கு அந்த போர்ட் இருக்காது. காலிங் பெல்லை அழுத்திய போது கதவைத் திறந்தாள் - கல்யாணி.

“என்ன வேணும்?” என்று கேட்ட போது கீழே ஒரு பல் மட்டும் வரிசையில் இல்லாதது அழகாக இருந்தது. ம.செ இவளை பார்த்து தான் ஓவியம் வரைவாரோ ?

“வயலின் கத்துக்கணும்”

தெற்றுப்பல் தெரிய அவள் “தாத்தாஆ” ன்னு கத்திண்டே உள்ள ஓடினா.

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் ‘பிரமதவனம் வேண்டும்’ என்று ஜேசுதாஸ் பாட ஆரம்பிக்கும் முன் கொத்தாக வயலின் இசை வரும் அது என் காதில் கேட்டது.

60 வயசு மதிக்கறமாதிரி ஒரு தாத்தா வெளியே வந்தார். “என்ன வேணும்?”
எங்கே வயலின் சொல்லித்தர மாட்டாரோ என்ற பயத்தில் தாத்தா என்று சொல்லாமல் “”வயலின் கத்துக்கணும் மாமா” என்றேன்.

என் கைல இருந்த வயலின் பெட்டியப் பார்த்தார். “இதுக்கு முன்னாடி எங்கே கத்துண்ட?”

“இனிமே தான் கத்துக்கணும்” இது பெரியகடை வீதில போன வாரம்தான் வாங்கினது. AIRல உங்க அட்ரஸ் கொடுத்தா…”

“ஆத்துல யாராவது பாடுவாளா? நான் ஆரம்ப பாடம் எல்லாம் நடத்தறது இல்லை, கீர்த்தனையிலேர்ந்து தான் சொல்லித் தறேன்.”

எனக்கு அவர் சொன்னது புரியலை. ஆனாலும் “ஆரம்ப பாடம் எங்க சொல்லித்தரா?” என்றேன்.

“தெரியாது. கேட்டுச் சொல்றேன், நாளைக்கு வா”ன்னு கதவைச் சாத்திட்டார். ஆனால் இவரிடம் வயலின் கத்துக்கணும்கற நினைப்பை கல்யாணி ஸ்திரம் பண்ணினா.

அன்னிக்கே, கல்யாணி எனக்கு வயலின் கத்துத்தர மாதிரி கனவு வந்தது. எழுந்ததும் அவர் வீட்டுக்குப் போனேன்.

“இங்கே எங்கையும் கத்துதரதில்லையாம்” தாத்தா என் தீவிரம் புரியாம சொன்னார்.

கல்யாணியை நினைச்சுண்டு பேசினேன், “மாமா எனக்கு எப்படியாவது உங்ககிட்டதான் கத்துக்கணும்.” (பாருங்க திரும்பவும் மாமா தான்!)

அவர் கொஞ்சம் யோசிச்சாலும், “சரி வெள்ளிக்கிழமை வந்துடு, வரும் போது பூ, பாக்கு, பழம் தக்ஷணை” எல்லாம் எடுத்துண்டு வந்துடு. ஆரம்பிச்சுடலாம்”னார்.

வெள்ளிக்கிழமை கார்த்தால, பூ பழம் எல்லாம் எடுத்துக்கொண்டு போய் அவரை நமஸ்கரிச்சவுடனே, “இவ என் பேத்தி கல்யாணி. நன்னா பாடுவா, வரைவா. வெளியே இருக்கற அந்த போர்ட் அவ வரைந்தது தான்” என்று சொல்லியபோது கல்யாணியோட சிரிப்புல கொஞ்சம் வெட்கமும் கலந்து இருந்தது.. ( இதுக்கு முன்னாடி “கத்துக்குட்டியால்…” என்று நான் எழுதியதை அழிச்சுட்டு “கலை ஆர்வம் மிக்க…” என்று மாற்றிப் படிக்கவும் )

“கல்யாணி, ஸ்ருதிப் பெட்டியை போடு” என்று சொல்லிவிட்டு “ஸா… பா… ஸா… ” எங்கே சொல்லு என்றார்.

“ஸாபாஸா” என்றேன்.

”அப்படி இல்ல என் கூட சொல்லு “ஸா….பா…..ஸா…” என்று சொல்ல, நான் கூடவே சொன்னேன்

கல்யாணி, கதவு இடுக்கு வழியாக பார்த்துண்டே இருந்தாள். வாய் ஸா..பா…ஸா பார்த்தாலும் கண்கள் கல்யாணி என்று பாடியது.

இப்ப இந்த ஸ்ருதிக்கு ஏத்தாப்பல வெறும் “ஸா..” பாடுன்னார். நான் “ஸா…” பாட அவர் ஸ்ருதி பெட்டில ஏதோ அட்ஜெஸ்ட் செய்தார்.

“நிறைய சாதகம் பண்ணனும்; நாளைக்கு வந்துடு. வரும் போது வயலின் எடுத்துண்டு வர வேண்டாம்”

“அப்போ வயலின் எப்போ…” என்றேன்.

“முதல்ல பாட்டு சொல்லிக்கோ. ஸ்வரஸ்தானம் எல்லாம் சரியா நின்னா, அப்பறம் தானா வாசிக்கலாம். நிறைய சங்கீதம் கேட்கணும்.” தலையாட்டிவிட்டு வந்தேன்.

உடனே அன்று ராத்திரியே ரோஷம் வந்து சாதகம் பண்ணி பெரிய ஆளாகிவிட்டேன் என்று சொல்லப்போவதில்லை. ஒரு மாசம் போயிருப்பேன். “ஸா..பா…ஸா” முடிந்து சரளிவரிசைக்கு வந்தேன். அதுக்கு மேல எனக்கு சுத்தமா மனசுல ஏறல. பெரிய ஸா, சின்ன மா என்று ஏதேதோ சொல்ல ஆரம்பித்தார் தாத்தா. எப்ப வயலின் எடுத்து வாசிக்க போறேன் என்று கவலை வந்துவிட்டது. எனக்கு இந்த ஸ..ரி..க..ம.. மேல் எல்லாம் அவ்வளவு ஆசை கிடையாது. வயலினில் குன்னகுடி மாதிரி பாட்டு வாசிக்கணும். அந்த தாத்தாவுக்கு அது எல்லாம் புரியலை. கல்யாணி வேறு நான் கத்துக்க வந்தால் எதாவது எடுக்க, வைக்க என்று அடிக்கடி என்னை ரொம்ப தொந்தரவு செய்தாள்.

ஒரு நாள் நான் கல்யாணியின் பாட புத்தகம் டேபிளில் இருக்க அதை எடுத்து பார்த்தேன். அவள் என்னை விட இரண்டு கிளாஸ் அதிகம். கொஞ்சம் வருத்தமாகிவிட்டது. தாத்தா ஒரு வழியாக ‘சரளி வரிசை’ போறும் என்று ‘ஜண்டை வரிசைக்குப் போனார். கல்யாணி வந்தால் நான் பாடுவதில் பிசங்குவதை கவனித்துவிட்ட தாத்தா ஒருநாள், “கல்யாணி, பாட்டு சொல்லிக்கொடுக்கும் போது உனக்கு இங்கே என்ன வேலை?” ன்னு அதட்டிட்டு, என்னைப் பார்த்து, “உனக்கு பாட்டுல அவ்வளவா கவனம் போறலை. இன்னும் கொஞ்சம் நா கழிச்சு பார்க்கலாம். நாளையிலிருந்து வர வேண்டாம்” ன்னு சொல்லிட்டார். நான் வருத்தமே படலை. ஒரு விதத்துல சந்தோஷமாக கூட இருந்தது. என்ன, கல்யாணியை பார்க்க முடியாது. அது மட்டும் தான் வருத்தம்.

அதுக்குப் பிறகு கல்யாணியை பாக்கலை. நானும் காலேஜ், வேலை, அமெரிக்கான்னு வாழ்க்கை அப்படி இப்படி என்று இருந்துட்டேன். இன்னிக்கும் தெற்றுப்பல்லுடன் யாரையாவது பார்த்தால் கல்யாணி நினைவுதான் வரும்.

அப்பறம் வயலினுடன் கொஞ்சம் மல்லுக்கட்டினதுல ஸ்தானம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பிடிப்பட ஆரம்பிச்சது. வயலினில் எங்கே பிடிச்சா என்ன வரும் என்று அடையாளத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி பழகினேன். இப்ப ஸ்வரம் கொடுத்தா அப்படியே வாசிப்பேன். கொஞ்சம் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி பிசகும். கீதம், வர்ணம், கீர்த்தனை எல்லாம் எனக்கு யாரும் சொல்லித்தரலை. ஆனா இன்டர்நெட்டுல ‘காற்றில் வரும் கீதமே’, ‘சின்னஞ் சிறு கிளியே’ மாதிரி சில ஃபேமஸ் பாட்டுக்கெல்லாம் நோட்ஸ் இருக்கு அதை பிரிண்டவுட் எடுத்துப் பார்த்து வாசிப்பேன். ஆலாபனைல கற்பனை எல்லாம் எனக்கு வராது. பாலமுரளி, ஜேசுதாஸ், உன்னிகிருஷ்ணன் இவர்கள் செய்யற ஆலாபனையைக் கேட்டு அப்படியே நோட்ஸ் எடுத்து வயலில வாசிப்பேன். அமெரிக்காவில் எனக்குத் தெரிஞ்ச டீச்சர் ஒருத்தர் இருக்கார், ஐம்பது டாலருக்கு ஸ்வரப்படுத்தி தருவார். அதை பார்த்து அப்படியே வாசிப்பேன்.அவ்வளவு தான்.

போன வாரம் அமெரிக்காவிலிருந்து சீசனுக்கு வந்திருந்தபோது திருச்சிக்குப் போயிருந்தேன். எனக்கு ஜண்ட வரிசை வரை சொல்லித்தந்த தாத்தா லோகநாதனை பார்க்கலாம்னு தில்லை நகர் போயிருந்தேன். எல்லாம் மாறிப் போயிருந்தது. கி.ஆ.பெ விஸ்வநாதன் பள்ளிக்கூடத்துக்கு அப்பறம் எந்த கிராஸ்னு மறந்துட்டேன். நல்லி, பழமுதிர்ச் சோலை பழக்கடைன்னு இடமே மாறிப்போயிருந்தது. எல்லா கிராஸுக்குள்ளயும் போய் தேடிப் பார்த்தேன். கடைசியில் அந்த வீட்டை கண்டுபிடிச்சுட்டேன். பச்சை நிற டிஸ்டம்பர் அடிச்சு வீட்டோட அடையாளமே மாறிப்போயிருந்தது. அங்கே வீட்டுல இருந்தவங்ககிட்ட ‘ஃபிடில்’ லோகநாதனைப் ப்ற்றி விசாரிச்சா, “இதுக்கு முன்னாடி இருந்த பாய் துபாய் போயிட்டாங்க” என்றார். வெளியே வரும் போது காம்பவுண்ட் சுவத்துல ‘கல்யாணி இல்லம்’ கல் மட்டும் இருந்தது.

-o00o-

அவ்வளவு தான் சார் நம்ப சங்கீத கதை. எப்படியோ இந்த வருஷக் கச்சேரியை முடிச்சுட்டேன். “அடுத்த வருஷம் வரும் போது, நீங்க வாங்கிக்கொடுத்த கேமராவுக்கு ஒரு சார்ஜர் வாங்கிண்டு வந்துடுங்கோ. ஈவினிங் ஸ்லாட்டல இரண்டு மணிநேரம் ஜாமாய்ச்சுடலாம்”னு சொல்லியிருக்கார் ரங்கண்ணா.

இன்னிக்கு தி ஹிந்து சென்னை பதிப்பு சப்ளிமெண்டரியில் பாருங்க என்னை பற்றி எழுதியிருக்காங்க…



(ஓவியங்கள்: தேசிகன், சொல்வனம் இசைச் சிறப்பிதழில் வந்த சிறுகதை)

Comments

  1. சுஜாதா தேசிகன் பெயர் பொருத்தமாய்..

    ReplyDelete
  2. Elobarating Kalyani என்பதுதான் ஹைலைட் !

    ReplyDelete
  3. அமர்க்களம் swamin.அந்த பிரேம்வதனம் பாட்டு பிடிலுடன் சேர்ந்து வந்ததோ. ராகம் கல்யாணி தான். Super

    ReplyDelete

Post a Comment