Skip to main content

அட அட ads - 1

இந்த பதிவு விளம்பர இடைவேளை இல்லாமல் விளம்பரங்கள் பற்றிய (பெரிய) பதிவு. வேலை இருப்பவர்கள் லீவு நாளில் படிப்பது உத்தமம். 


[%image(colgate_toothpowder.jpg|102|102|Colgate)%]

போன வாரம் உளுத்தம் பருப்பு வாங்க கடைக்குப் போனபோது தான் கோல்கேட் பல்பொடி இன்னும் கடைகளில் இருப்பது தெரியவந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு பழைய  கோல்கேட் டூத் பவுடர் விளம்பரத்தில் பயில்வான் பாலும் பாதாமும் தன் மனைவியிடம் கேட்க, "உடலுக்கு பாலும் பாதாமும்; ஆனா பல் துலக்க கரியா?" என்று அவர் வாயின் உட்புறத்தில் உள்ள சொத்தைப் பல்லைக் கிளோசப்பில் காண்பிப்பது தான் நினைவுக்கு வந்தது.



எனக்குத் தெரிந்து நான் பார்த்த முதல் டப்பிங் விளம்பரம் இது என்று நினைக்கிறேன். இப்போதும், "ஒரு விலை மலிவான டூத்பவுடர் குடுங்க" என்று கேட்கும் அப்பா, பையன் தயவால் டாக்டரிடம் "வெச்சுதா செலவு அதிகம்?" என்று பரிகசிக்கப் படுகிறார். ஆனால் இந்தக் காலத்தில் யார் பல்பொடியை உபயோகிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அந்தச் சுவையை திரும்ப அனுபவிக்க ஆசைப்பட்டு, ஒரு சின்ன டப்பா வாங்கினேன்.  பல்பொடி டப்பாவில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டுமே எழுதியிருக்கிறார்கள். தமிழ் மக்கள் அவ்வளவாக உபயோகப்படுத்துவதில்லை போலும்.


 அதே கோல்கேட் பல்பொடி விளம்பரம் சில நாட்களில், "டாக்டர் இவரு வாய் ரொம்ப நாறுது" என்று மனைவி சொல்ல டாக்டர் கணவரிடம் கோல்கேட் பல்பொடி உபயோகிக்க சிபாரிசு செய்து,  கடைசியில் "எப்படி இவ்வளவு நெருக்கம்?" என்று யாரோ சொல்லுவார்கள்.


அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை இந்தப் பல்பொடி டப்பாவில் உள்ள ஒரே பிரச்சனை - கொஞ்ச நாளில் அடிப்பகுதி துருப் பிடிக்கும். கோல்கேட் பல்பொடியில் உள்ள மற்றொரு உபயோகம் வெள்ளி பாத்திரங்களை நன்றாகச் சுத்தம் செய்யும். வெள்ளிப் பல் கட்டியிருந்தால் கேட்கவே வேண்டாம்.


[%image(gopal_toothpowder.jpg|123|85|gopal )%]

கோபால் பல்பொடி விளம்பரமோ, "இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது.. கோபால் பல்பொடி; பற்களை முத்துப் போல் பிரகாசிக்கச் செய்வது.. கோபால் பல்பொடி" என்று சொல்லிவிட்டு "டிடிங்டங்" என்று முடிப்பார்கள். இது உண்மையா என்பது கோபால் பல்பொடி கவரில் முத்து மாலை போட்டுக்கொண்டு இருக்கும் கிருஷ்ணருக்கே வெளிச்சம். 


1431 பயரியா பல்பொடி மின்சார ரயிலில் போகும் போது எல்லா சுவற்றிலும் எழுதியிருக்கும்.  மின்சார ரயிலில் பயணம் செய்பவர்கள் மட்டுமே உபயோகிக்க தயார் செய்வது என்று நினைக்கிறேன்.  ஒரு முறை எப்படி இருக்கும் வாங்கி பார்த்ததில், கை விரல் நாமக்கட்டி போல ஆகிவிட்டது.


[%image(Vicco-Vajradanti.jpg|112|150|ViccoVaj)%]

வஜ்ர தந்தி வஜ்ர தந்தி விக்கோ வஜ்ரதந்தி என்ற விளம்பரம்  திரையரங்கங்களில் ஒன்ஸ்மோர் கேட்காமலேயே இரண்டு முறை காண்பிப்பார்கள். ஒரு கிழவர் வால் நட்டை கடிப்பதையும், வேறு ஒருவர் ஆதாம் மாதிரி ஆப்பிளை கடிப்பதையும் பார்க்க வைப்பர்கள்.


போகப்போக பல்பொடி கொஞ்சம் கௌரவக் குறைச்சலாகப் போய், பேஸ்ட் மட்டுமே வாங்க ஆரம்பித்தார்கள். கிளோசப் மாதிரி கலர்ஃபுல் பேஸ்ட் உபயோகப்படுத்தி சிரித்தாலே கேர்ள் ஃபிரண்ட் கிடைப்பார்கள் என்று தெரியாத காலங்களில்,  ஃபோர்ஹான்ஸ் பேஸ்ட் கிடைக்கும். நீல நிற பாக்கெட் என்று ஞாபகம். வீட்டில் பேஸ்ட் தீர்ந்து போனால் ஓடி போய் ஃபோர்ஹான்ஸ் டூத்பேஸ்ட் தான் வாங்கி வருவேன். காரணம் அந்த டப்பாவிற்குள் சின்னதாக பொம்மை ஒன்று இருக்கும். அப்பா கோல்கேட் தான் வாங்குவார்.


ஒருமுறை அத்தை ஊரிலிருந்து வந்த போது, "ஃபோரான்ஸ் பேஸ்டே வாங்கு" என்று அட்வைஸ் செய்துவிட்டு போனார். அடுத்த வருடம் அத்தை விடுமுறைக்கு வந்துவிட்டுப் போனபோது, என்னிடம் இருந்த எல்லா பொம்மைகளும் காணாமல் போய்விட்டன. போன மாதம் கூட அத்தை வீட்டுக்குப் போனபோது இந்த பொம்மைகளை பார்த்தேன். என்றாவது ஒரு நாள் அவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணியதுண்டு. ஆனால் இன்று வரை அதைச் செய்யவில்லை.


இப்போது வருவது போல் பேஸ்ட் முன்பு பிளாஸ்டிக் ட்யூபில் வராது; அலுமனியத்தில் வரும். கொஞ்ச நாளில் பக்கங்களில் எல்லாம் சின்ன ஓட்டைகள் வந்து பிதுக்கினால் சேவை மிஷின் மாதிரி மெலிசாக எல்லா சைடிலிருந்தும் பேஸ்ட் வெளியே வரும். சில சமயம் நம் அதிர்ஷ்டம் ஓட்டை இல்லாமல் ஒழுங்காக இருக்கும். அப்படி இருக்கும் பேஸ்ட் டப்பாவின் மூடியைக் கழற்றி அதில் தண்ணீர் ஊற்றி, திரும்பவும் மூடி, சின்ன கல் இரண்டை எடுத்து அடுப்பு மாதிரி செய்து, தீயை மூட்டி, அதன் மீது தண்ணீர் நிரம்பிய பேஸ்ட் டப்பாவை வைப்போம். கொஞ்சம் நேரத்தில் நீராவி அழுத்தம் அதிகமாகி, மூடி கொஞ்சம் தூரத்தில் ராக்கெட் மாதிரி போய்விழும். இன்னும் ரிசர்ச் செய்திருந்தால் அப்துல் கலாம் மாதிரி ஆகியிருப்பேனோ என்னவோ.


[%image(milkbikis.jpg|150|150|Milkbikis)%]

பள்ளியிலிருந்து திரும்பும் சிறுவர்
பரவசமுடனே சுவைப்பது என்ன ?
பிரிட்டானியா மில்க் பிக்கீஸ்!


விளையாடியபின் குஷியோடு வளரும்
சிறுவர் சுவைப்பது என்ன ?
பிரிட்டானியா மில்க் பிக்கீஸ்!


பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சாயங்காலம் உப்புமாவையோ தோசையோ வாயில் அடைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடப் போய்விடுவோம். விளையாடிய பின் தெருவோரம் இருக்கும் 'சோழியன் கடையில்' ஜவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், அல்லது கமர்கட் போன்ற வஸ்துக்களைத்தான் வாங்கிச் சாப்பிடுவோம்.  நிச்சயம் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டது இல்லை. அதே மாதிரி சாப்பாடு பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு அம்மா பிந்து அப்பளம் எல்லாம் பொரித்துப் போட்டதில்லை. இத்தனைக்கும் என் அம்மா "என் குழந்தை சாப்பிடவே மாட்டேன்னு சொல்லிட்டா.. பிந்து அப்பளம் பொரிச்சு போட்டதும்.." என்ற விளம்பரத்தை நூறு முறையாவது கேட்டிருப்பாள்.


இதே மாதிரி இன்னொரு விளம்பரம் ( இதை படிக்கும் போது ராகத்துடன் படித்தீர்கள் என்றால் உங்களுக்கு கிட்டத்தட்ட என் வயது. )


"அப்பா அப்பா, கடைக்குப் போறியா?"
"ஆமாங்கண்ணு, உனக்கு என்ன வேணும் சொல்லு!"
"டாலர் பிஸ்கெட் டாலர் பிஸ்கெட் டாலர் பிஸ்கெட் வேணும்."


டாலர் பிஸ்கெட் எப்படி இருக்கும் என்று அமெரிக்கா போய் திரும்பிய பின்னும் எனக்குத் தெரியவில்லை.  அப்பா புத்தூர் சிந்தாமணிக்குச் சென்றால் மிருகங்களின் வடிவில் பொம்மை பிஸ்கெட் வாங்கிவருவார். எந்த மிருகத்தை சாப்பிட்டாலும், சுவை ஒரே மாதிரி  தித்திப்பு கம்மியாக இருக்கும், இருந்தாலும், வடிவம் மிருகம்  மாதிரி இருப்பதால் விரும்பிச் சாப்பிடுவோம். நான் சாப்பிட்ட 'நான் வெஜ்' பிஸ்கெட் இது என்று நினைக்கிறேன். இன்று பல பிஸ்கெட்கள் வந்து தோனியும், விஜய்யும், ராப்பரில் ஆக்கரமிக்க ஏதாவது சின்னச் சின்ன பிளாஸ்டிக் பொருள்கள் இலவசமாக கொடுத்து கடும் போட்டி நிலவுகிறது.


அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
எல்லாம் கோபுரம் பூசு மஞ்சள் தூள் மகிமை தான் கண்ணா


இதை ரேடியோவில் கேட்கும் போதே எரிச்சல் தலைக்கேறும். ஒரு சமயம்  விஷுவலாகவும் பார்த்துவிட்டேன். என்ன செய்ய. கோபுரம் பூசு மஞ்சள் தூள் விளம்பரத்தில் அம்மாவாக வருபவர் நேராக ஏதாவது அம்மன் படத்தில் நடிக்கப் போகலாம். குழந்தைகள் பொய் சொல்லாது என்று கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் இந்த விளம்பரத்தில் அந்தக் குழந்தை அநியாயப் பொய் சொல்லும்.


[%image(vicco.jpg|200|129|Vicco)%]

"விக்கோ டர்மரிக் இல்லை காஸ்மெடிக்.. விக்கோ டர்மரிக் ஆயுர்வேதிக் கீரிம்" என்ற விளம்பரத்தையும் சினிமா ஆரம்பிக்கும் முன் இரண்டு முறை போட்டு வெறுப்பேற்றுவார்கள். ஷனாய் இசை ஒலிக்க, தோழிகள் 'கிளுக் கிளுக்' என்று சிரிக்க, இளைமையான சங்கீதா பிஜ்லானி கை கால்களில் தோழிகள் மஞ்சளோ சந்தனமோ பூசுவார்கள், பிறகு கல்யாணம் நடந்து, ஹனிமூன் சென்று அவர் கணவர் அவளை விதவிதமாக ஃபோட்டோ எல்லாம் எடுப்பார். கடைசியில் இதற்குக் காரணம் விக்கோ டர்மரிக் என்பது போல காண்பிப்பார்கள். இன்னொரு விளம்பரம், வீட்டில் இருக்கும் அம்மா, இரண்டு பெண்கள் எல்லாம் ஒரே மாதிரி இந்த மஞ்சள் விக்கோ டர்மரிக்கை பூசிக்கொண்டு நடந்து வருவார்கள். இது மாதிரியும் குடும்பம் இருக்குமா என்று பார்க்க தமாஷாக இருக்கும்.


இந்த மாதிரி விளம்பரங்கள் ஒரு வகை என்றால் அதிகாரமும், கேள்வியும் கேட்கும் விளம்பரம் வேறு மாதிரி


சொறி, சிரங்கு எதுவும் நமக்கு இல்லை என்றாலும் தினமும் "உங்களுக்கு சொறி சிரங்கு படைத் தொல்லையா ?" என்று ஒருவர் தினமும் கேட்டுக்கொண்டே இருப்பார். இந்த விளம்பரத்தைக் கேட்டவுடனேயே நமக்கும் எங்கோ லேசுபாசாக அரிப்பதுமாதிரியே இருக்கும்.


[%image(ujala.jpg|150|150|Ujala)%]

மதர் தெரேசா போன்ற நீல நிற பார்டர் புடைவை கட்டிக்கொண்டு மூன்று பெண்கள் வந்து "நான் உஜாலாவுக்கு மாறிட்டேன். அப்ப நீங்க?" என்று மிரட்டுவார்கள். டினோபால், ராபின் புளு போன்றவை காணாமல் போனதற்கு உஜாலா தான் காரணம்.


உங்களுக்கு தலைவலியா ?
மூக்கடைப்பா ?
இருமலா ?


[%image(vicks_action_500.jpg|151|117|null)%]

ஆமாம்பா ஆமாம். என்ற விக்ஸ் ஆக்ஷன் 500 விளம்பரத்தில் அந்த ஆசாமியின் ஆக்ஷன் நிஜமாகவே நல்லா இருக்கும்.


இன்னொரு விக்ஸ் விளம்பரம் தன் மகளுக்கு கதை சொல்லும் அப்பாவிற்கு தொண்டையில் 'கிச் கிச்' ஆகும். விக்ஸ் மாத்திரை சாப்பிடுவார். உடனே மகளும் ஒரு மாத்திரை கேட்டு போட்டுக்கொண்டு அழகாகக் கண்ணடிக்கும்.


"தொண்டையிலே கிச் கிச்
தொண்டையிலே கிச் கிச்
என்ன செய்ய?


விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க
கிச் கிச்சை விரட்டுங்க"


[%image(vicks.jpg|141|106|null)%]

என்ற பாடலில் போது, தொண்டையில் சின்ன ஆக்டோபஸ் மாதிரி ஒரு ஜீவன் அட்டகாசம் செய்யும். விக்ஸ் மாத்திரை சாப்பிட்ட உடன் அது காணாமல் போகும். நான் பார்த்த முதல் கார்ட்டூன் விளம்பரம் இது என்று நினைக்கிறேன்.


அதே போல வரும் இன்னொரு கார்ட்டூன் விளம்பரம்


[%image(tnsc.gif|96|96|TNSC)%]

சிறகு அடித்து பறக்கும் இந்த சிட்டு குருவியை பாருங்கள்...
மகளுக்கு திருமணம்....குழந்தைகளின் கல்வி இது போல எந்த தொந்தரவும் இல்லாத
இந்த சிட்டு குருவியே சிறுக சிறுக சேமிக்கும் போது...

என்று வரும் TNSC வங்கி விளம்பரம்..


"சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய்
என்ன வெண்மையோ ஆஹா என்ன வெண்மையோ"


பாடலுக்குப் பின் "சொட்டு நீலம் என்று கேட்காதீர்கள் ரீகல் சொட்டு நீலம் என்று கேட்டு வாங்குகள்" என்று கொடுத்த 9 வினாடிக்குள் அவசர அவசரமாக ஆணையிடுவார்கள். இது இப்படி என்றால் டைம் சென்ஸே இல்லாத விளம்பரம் இதயம் நல்லெண்ணெய் விளம்பரம்


என்னடா இவன் வீட்டுக்கும் போகாமா....ரோட்டுக்கும் போகாமா...
நடுவழில நிற்கிறானேன்னு பாக்குறீங்களா...
என்ன சார் பண்றது? வீட்ட விட்டு கிளம்பும் போதே சொன்னாளே...
வரும் போது மறக்காம இதயம் நல்லெண்ணெய்
வாங்கிட்டு வாங்கன்னு"


எஸ்.எம்.சுரேந்தர் குரலில் அப்பாவியாக ஒருவர் பேசுவார். நடித்தவர் யார் என்று மறந்துவிட்டது.  "இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்..போய் இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்களேன்" என்று அதட்டும் சித்ரா பிறகு நல்லெண்ணெய் சித்ரா என்று புகழ் பெற்றார். பிறகு ஒருபெண் திருமணநாளன்று அலுவலகத்தில் கடித உறையைக் கிழித்துக் கொண்டிருக்க, கணவன் பொறுப்பாக வீட்டுக்கு வந்து (ஏகப்பட்ட பட்டாணியை எல்லம் கீழே சிதறி) இதயம் நல்லெண்ணெயில் சமைத்துக் கொண்டிருப்பார். அதற்கு பிறகு நல்லெண்ணை விளம்பரத்தில் வந்த ஜோதிகா இட்லி மிளகாய் பொடிக்கு அரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றியும், தற்போது  இதயம் வெல்த் ஆயில் புல்லிங் ஹாலில் கொப்பளிக்கும்  நடிகைக்கும் நல்லெண்ணெய் புகழ் கிடைக்கவில்லை.


எது எப்படியோ இந்த மாதிரி நடிகைகள் வந்ததால் நல்லெண்ணெய்யை விட நெய் விலை கம்மியாகிவிட்டது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மாதிரி நாங்களும் வீட்டில் எல்லா உபயோகத்திற்கும் நெய்தான்.


இதே மாதிரி கணவன் அசட்டுத்தனமாக வழியும் இன்னொரு விளம்பரம் அர்ச்சனா ஸ்வீட்ஸ்.


"ராதா லேட்டா வந்தேன்னு கோபமா?
"போங்க என்கூட பேசாதீங்க"
"வரும் போது அர்ச்சனா ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வந்தேன் அதான் லேட்"
"இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டோட தான் வரணும்".


விதி யாரை விட்டது?


( பகுதி - 2 )

Comments