Skip to main content

பாச்சை உருண்டை

பாச்சை உருண்டையில் இரண்டு வகை இருக்கிறது. வெங்கட்நாராயணா சிக்னலில் தோளின் குறுக்கே குழந்தையை மாட்டிக்கொண்டு இவற்றை விற்பதைப் பார்த்திருப்பீர்கள். அம்மினிக் கொழுக்கட்டை மாதிரி சின்னதாக இருக்கும். பாச்சை உருண்டை என்று கேட்டால் நகரக் கடைக்கார்களுக்குத் தெரியாது. ’நாப்தலின் பால்ஸ்’ என்றால் எடுத்துக்கொடுப்பார்கள். நாப்தலின் என்ற வேதிப்பொருள் இதில் இருப்பதால் இந்தப் பெயர். பூ, பழ வாசனையுடன் நம் வீட்டு பாத்ரூமிலும், பீரோவிலும் இருப்பது இன்னொரு வகை. வாசனைக்குக் காரணம் Paradichlorobenzene என்ற பொருள். முகர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும், ரொம்ப முகர்ந்தால் தலைவலி வரும்.  நாப்தலின் பீரோவில் வைத்தால் கொஞ்ச நாளில் கற்பூரம் போலக் கரைந்து போகும் . திடப் பொருளாக இருக்கும் நாப்தலின் வாயுவாக மாறுகிறது என்று சின்ன வயதில் படித்திருக்கிறேன். இதிலிருந்து வெளிவரும் விஷ வாயு அல்லது வாசனை கலந்த விஷ வாயுதான் சின்னச் சின்ன ஜீவன்களை சத்தம் போடாமல் சாகடிக்கிறது.



நாம் உட்கொண்டால் வயிற்றைப் பிரட்டி வாந்தி வருவது போல இருக்கும். வாந்தி வராதவர்களுக்கு பேதி, மூத்திரத்தில் ரத்தம் வரும். போன வாரம் டிவியில் 'ஹலோ டாக்டர்' நிகழ்ச்சியில் ”குழந்தையைப் போர்த்தும் துணியில் நாப்தலின் வாசனை இருந்தாலே குழந்தைகளுக்கு ரத்த சோகை வர வாய்ப்பிருக்கிறது. ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் அளவை குறைத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுத்தி சிறுநீரகம், கல்லீரல்...” சரி, இதெல்லாம் எதற்கு , என் பெண் எட்டு மாதக் குழந்தையாக இருக்கும் போது இதை சாப்பிட்டுவிட்டாள். அதைப் பற்றி சொல்லுகிறேன்.


வாசல் கதவில் தொங்கவிட்டிருக்கும் பாக்கெட் பால் ஒழுகி முடிந்திருந்த சாதாரண காலை. ஒழுகாத இன்னொரு பாக்கெட்டை எடுத்த போது எதிர் வீட்டுக் கடிகாரத்தில் ஏழே கால். 'சே இனிமே ராத்திரி டிவியில் படம் பார்க்க கூடாது' என்று கீழே குனிந்து பார்த்தபோது,  “Resolution of Kashmir only way to amity: Musharraf” என்றது ஹிந்து. முஷாரப்பை கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குப் போனேன்.


பால் குக்கர் விசிலுக்குப் போட்டியாக, “சீக்கிரம் வெளிய வாங்க, ஏதோ மீட்டிங் இருக்குன்னீங்களே” காஷ்மீர் பிரச்சினையை அவசரமாக மூடி வைத்துவிட்டு பாத்ரூம் கதவைத் திறந்தபோது விசில் சத்தம் அதிகமாகக் கேட்கத் தொடங்கியது. நின்ற போது மணி ஏழே முக்கால். வேறு சத்தம் ஆரம்பம்; பெண் எழுந்துவிட்டாள்.


குழந்தை எட்டு மாதத்தில் தவழ ஆரம்பிக்கும் இவ கொஞ்சம் சீக்கிரம். ஏழு மாசத்திலேயே கையையும் முட்டியையும் வைத்து தவழ முயற்சிசெய்து, ஏதாவது பொருள் கண்ணில் பட்டால் அதை எடுக்க முன்னே சென்று.., பிறர் உதவி இல்லாமல் தானாகவே இயங்கும் உற்சாகத்தில் எல்லா இடங்களுக்கும் போக ஆரம்பித்துவிட்டாள். பெரிசாக இருந்தால் உடைப்பாள்; சின்னதாக இருந்தால் பொறுக்கிச் சாப்பிடுவாள். “அந்த டிவியை அணைச்சுட்டு இவளைக் கொஞ்சம் பார்த்துக்கோங்களேன்”, ”ஏய் அதை எடுக்காதே”, போன்ற சம்பாஷனைகளும், “ஏன் எப்பப் பார்த்தாலும் உங்க வீட்டு ஃபோன் என்கேஜ்டாவே இருக்கு?” போன்ற விசாரிப்புக்களும் அடிக்கடி கேட்க ஆரம்பித்ததற்கு காரணம் இவ தான். பொருள்கள் எல்லாம் பிரமோஷன் கிடைத்த மாதிரி மேலே சென்றது. அப்படியும் சில சாமான்கள் உடைந்தது, விளையாட்டு பொருள்களை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்தையும் எடுக்க ஆரம்பித்தாள். பருப்பு, அரிசி என்று எது கீழே கிடந்தாலும் அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சின்னதாக ஒரு “ஹக்கு” இல்லை “ஹக்கு ஹக்கு” என்பாள். வாயில் விரலை விட்டு என்ன என்று என்று பார்த்தால் வாந்தி எடுப்பாள்.


”என்ன டிஃபன் சாப்ட்றீங்க? உப்மா பண்ணட்டுமா?”
 
“வழியில பார்த்துக்கிறேன் ரொம்ப லேட்டாயிடுத்து” என்று ஓடப்பார்த்தது மணி ஒன்பதே கால் என்பதால் மட்டும்தான்; அம்பத்தூர் போக முக்கால் மணி நேரமாவது ஆகும். மீட்டிங்கிற்கு அரை மணி லேட் ஆகப்போகிறது. வாசல் கதவை திறக்கும்போது என் பின்னாலேயே தவழ்ந்து வந்துவிட்டாள்.


“அப்பாவுக்கு டாட்டா சொல்லு,” கேட்டுக் கிளம்பும்வரை எல்லாம் சரியாகதான் இருந்தது. அந்த சம்பவம் அதற்கு பிறகு தான் நடந்தது.


ஆபீஸிலிருந்து திரும்பி வர வழக்கம் போல் எட்டு மணி ஆகிவிட்டது. ஷூவை கழட்டும் போது, “இன்னிக்கு எங்கே போனீங்க? உங்க ஆபீஸுக்கு நிறைய தடவை ஃபோன் பண்ணினேன்”


“என்ன ஆச்சு?”


“நீங்க பாட்டுக்கு ஆபீஸுக்கு போற அவசரத்தில உங்க பீரோ கதவை சரியா சாத்தாமா போயிட்டீங்க. நான் கிச்சனில் இவளுக்கு பால் கரைச்சுண்டு இருந்த சமயம் இவ பீரோ கதவை ஆட்டியிருக்கா, கதவுல மாட்டியிருந்த ஓடோனில் கீழே விழுந்து பொடியாகி, இவ அதை எடுத்து வாயில் போட்டுண்டுட்டா”


“ஐயோ என்ன ஆச்சு ?” என்று படுக்கையறைக்குப் போனேன். அழகாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.


“...என்னடா இவ சத்தத்தையே காணோமேன்னு பார்த்தா கைல எல்லாம் சின்ன சின்ன பீஸா இருக்கு. வாயில மோந்து பார்த்தா ஒரே வாசனை. எவ்வளவு சாப்பிட்டான்னு தெரியலை. பெருமாளை வேண்டிண்டு குழந்தையை தூக்கிண்டு, ஏதோ ஸ்கூல் ஆட்டோவை பிடிச்சு நேரா சைல்ட் டிரஸ்டுக்கு போனேன்.  ஆஸ்பத்ரில எமர்ஜன்சின்னு சொல்லி... டாக்டர் வந்து பார்த்துட்டு ஸ்டமக் வாஷ்பண்ணனும்னு சொல்லிட்டா...”


“ஸ்டமக் வாஷ்?”


”எவ்வளவு சாப்பிட்டான்னு தெரியலை. அதனால் ஸ்டமக் வாஷ் தான் பெட்டர்ன்னு டாக்டர் சொல்லிட்டா. என்னை வெளியிலே அனுப்பிட்டா, உள்ளே குழந்தை ஒரே அழுகை. எனக்கு இருப்புக் கொள்ளாம உள்ளே போயிட்டேன் டாக்டர், நர்ஸ்ன்னு அஞ்சாறு பேர் குழந்தையைப் பிடிச்சுண்டு மூக்கு வழியா ட்யூப் விட்டு அதில சலைன் வாட்டரை பம்ப் பண்றா. குழந்தை ரொம்ப அவஸ்தை பட்டா. உள்ளே அனுப்பின சலைனை அதே டியூப் வழியா திரும்ப எடுக்குறா. குழந்தை மூஞ்சி எல்லாம் சிவந்து போய் எனக்கு பயமா போயிடுத்து. வீட்டுக்கு வர மத்தியானம் ஆச்சு. வந்து திருப்பதிக்கு ஒத்த ரூபாய் முடிஞ்சு வெச்சேன். உங்களுக்கு போன் செஞ்சு செஞ்சு பார்த்தேன். நீங்க எடுக்கவே இல்லை”


”அடக் கடவுளே, இப்ப பயப்பட ஒண்ணுமில்லையே? நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருந்தேன்”


”என்ன மீட்டிங்கோ. முதல்ல ஒரு மொபைலை வாங்கித் தொலைங்க”


                                                         - 0 - 0 - 0 -


சென்ற மாதம் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சட்டையில் மொபைல் கிச்சுக்கிச்சு மூட்ட, எடுத்தேன். குழந்தை அழும் சத்தம் கேட்டது.


“ஏங்க பையன் வீட்டுக்குள்ள வந்த தேனியை எடுத்து வாயில போட்டுண்டுட்டான்”


“என்னது, தேனியையா?"


”ஆமாம்.. தேனி கொட்டிடுத்து. இருங்க...  நாக்கு அடியில் கொட்டிருக்கு...... கொடுக்கை இப்பதான் எடுத்தேன். சீக்கிரம் வாங்க..”


“கொட்டின இடத்தில சுண்ணாம்பு தடவு”


“நாக்கு அடியில எல்லாம் சுண்ணாம்பு தடவ முடியாது. நான் டாக்டர் வீட்டுக்கு போறேன் நீங்க சீக்கிரம் அங்கே வாங்க”


நான் அடுத்த சிக்னலில் யூ டர்ன் அடித்தேன்.


அது வேறு கதை.

Comments

Post a Comment