Skip to main content

கார்காலம்

[%image(20061108-getz.jpg|200|111|getz)%]

சென்னையில் தற்போது கார்காலம்.  பெங்களூரிலும் கார்காலம் தான். போன வருட கணக்குப் படி பெங்களூரில் ஒரு மாதத்திற்கு 5000 கார்கள் விற்பனையாகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு 60,000 கார்கள். தற்போது பெங்களூரில்  1.9 மில்லியன் கார்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. (பெங்களூரின் மக்கள் தொகை 6.5 மில்லியன். ). [ கார் வாங்குபவர்கள் பற்றிய புள்ளிவிபரம்  -  முதன்முறையாக கார் வாங்குபவர்கள் - 33%,  தங்களிடம் இருக்கும் காரை விற்றுவிட்டு புது கார் வாங்குபவர்கள் - 33%,  இரண்டாவதாக இன்னொரு கார் வாங்குபவர்கள் - 33%. ]


ஒவ்வொரு முறையும் சென்னைக்கு செல்லும் போது, வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷன் போவதற்கு 2 மணி நேரம் ஆகிறது. மழை வேறு வந்துவிட்டால் பெருமாளை நினைப்பதை தவிற வேறு வழியில்லை. அலுவலகம்/மீட்டிங்கிற்கு லேட்டாக வருகிறவர்கள் கால் ஒடிந்திருந்தாலும்  'டிராஃபிக் ஜாம்'  என்று தான் காரணம் சொல்லுகிறார்கள். எல்லா வாகனங்களும் இரண்டாவது கீருக்கு அடுத்து செல்லுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் கார் வாங்குவதை யாரும் நிறுத்துவதாக இல்லை. கார் வைத்திருப்பவர்கள் அதை விற்றுவிட்டு அடுத்த மாடல்/அல்லது பெரிய கார் வாங்குகிறார்கள். கணவன்/மனைவி இரண்டு பேரும் வேலைக்கு சென்றால் ஆளுக்கு ஒரு கார் வாங்குகிறார்கள். இன்னும் சில வருடங்களில் பெங்களூரில் வாகன நெரிசலை நினைத்தால் வயற்றை கலக்குகிறது.


முதலில் நான் கார் வாங்க நினைத்த போது, மனைவி  "பெங்களூரில் காரா ? நல்லா தானே இருந்தீங்க ?" என்றாள். அலுவலகத்தில் எனக்கு கார் வாங்க அலவென்ஸ் தருவதாலும், ஒரு வித பியர் பிரஷரினால்,  வாங்கித்தான் பார்க்கலாம் என்று தோன்றிற்று. இந்த எண்ணம் வந்தவுடனேயே, என்ன கார் வாங்கலாம் என்ற குழப்பமும் வந்து சேர்ந்தது.



  "அப்பா ரெட் கலர் கார் வாங்குப்பா" என்று என் மகள் சொன்னதால் என்ன கலர் என்பதில் குழப்பம் இல்லை.  மாமனார் போன் செய்து, "மாப்பிளை, எந்த கலர் வாங்கினாலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் மீது ஏற்றி பூஜை செய்துவிடுங்கள்" என்றார். எலுமிச்சை பழம் ஏறிய கார் வந்து போன மாதத்தோடு ஒரு வருடம் ஆகிறது.


கார் வந்த முதல் நாள் ரொம்ப ஜாக்கிரதையாக ஓட்டினேன். பார்க்கிங் கிடைக்கவில்லை என்றால், ஒரு கிலோ மீட்டர் தள்ளி காரை நிறுத்தி விட்டு நடந்தேன். கையில் ஒரு துணி வைத்துக்கொண்டு கார் அழுக்கானால் துடைத்தேன். கடைசியில் வந்து பார்க் செய்யும் போது முன் பக்கம் ஒரு தூணில் இடித்து கொஞ்சம் பெயிண்ட் தூணில் ஒட்டிக்கொண்டது.( தூணில் உள்ள பெயிண்ட் காரில் ஒட்டிக்கொண்டது). அதற்கு பிறகு காரை பயமில்லாமல் கான்பிடண்ட்டாக ஓட்டினேன். இந்த ஒரு வருடத்தில் நாலு பக்கமும் கார் அடிவாங்கியிருக்கிறது. கான்பிடண்டும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.


கார் வந்தால் கூடவே கொஞ்சம் தெனாவெட்டும் திமிரும் வருகிறது. ரோடில் போகும் போது யாராவது ஓவர் டேக் செய்தால் அவர்களை துரோகிகள் போல் துரத்துவதும், சாலையில் வழிவிடாத பைக்கை ஹாரன் அடித்து முறைப்பதும் இதில் அடங்கும். அதே போல் வாகன நெரிசலில் நிறைய பொறுமை வருகிறது. நல்ல பாட்டு கேட்க முடிகிறது. வெள்ளை சட்டை அழுக்காகாமல் இருக்கிறது. 'சக்கத் ஹாட் மகா' 98.3 FM கேட்க முடிகிறது. எங்கு டிராப்பிக் ஜாம் என்று டிராப்பிக் ஜாமில் நின்று கொண்டிருக்கும் போது FMமில் கேட்க முடிகிறது. மழை வந்தால் கவலைப் படாமல் வீட்டுக்கு கிளம்ப முடிகிறது.


[%image(20061108-Nandi_Hill_top_view.jpg|225|150|Nandi Hill Top View ( from Wiki ))%]

சில மாதங்களுக்கு முன் காரில் பெங்களூர் பக்கத்தில் இருக்கும் 'நந்தி ஹில்ஸ்' சென்றிருந்தேன்.


நந்தி ஹில்ஸ் பெங்களூரிலிருந்து 65 கிமீ தூரத்தில், 4851 அடி உயரத்தில் ஹைதிராபாத் செல்லும் வழியில் இருக்கிறது. திப்பு சுல்தான் கோடை காலத்தில் இங்கு இளைப்பாரினான் என்கிறது வரலாறு. திப்பு சுல்தான் கட்டிய கோட்டையின் மதில்களை இன்றும் காணலாம்.  இன்று பெங்களூர் இளைஞர்கள் சனி, ஞாயிறு அன்று வந்து போகும் இடமாக மாறியிருக்கிறது. மரண தண்டனை கைதிகளை இங்குள்ள ஒரு செங்குத்தான மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இன்றும் பனி காற்று வீசும் போது, மரங்களின் சலசலப்புக்கிடையில், இந்த கைதிகளின் மரண ஓலம் கேட்கும் என்கிறார்கள். நாங்கள் போன சமயம் எங்களுக்கு நாய் குரைக்கும் சத்தம் தான் கேட்டது.


நந்தி ஹில்ஸில் குரங்குகள் தொந்தரவு ரொம்ப இருக்கிறது. எல்லா மரங்களின்


[%image(20061108-tall_tree_small.jpg|150|315|Tall Trees)%]

மேலும் குரங்கு கூட்டதின் சேஷ்டையை பார்க்க முடிகிறது.  எதை சாப்பிட்டாலும், உங்கள் பின்னாடி ஊர்கோலமாக வந்துவிடுகிறது. எதை கொடுத்தாலும் சாப்பிடுகிறது. ஒரு குரங்கு ஐஸ்கீரிம் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. (எந்த குழந்தை அழுதுக்கொண்டிருக்கிறதோ). சில குரங்குகள் கோக் குடிக்கிறது. சாப்பிடுவதற்கு குரங்கு இல்லாத இடத்தை தேடி பின் காருக்குள் சென்று சாப்பிட்டோம். கார் மேல் குரங்கு வந்து "என்னை விட்டுவிட்டு சாப்பிடுவது நியாயமா ?" என்றது.


இந்த மலையின் மேல் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த ஒரு அழகிய சிவன் பார்வதி கோயில் இருக்கிறது. சோழர்களால் கட்டப்பட்டது. (மலையில் நந்தி சிற்பம் இருப்பதால் இந்த மலைக்கு நந்தி ஹில்ஸ் என்று பெயர் ). அழகிய குளம் ஒன்றும் இருக்கிறது. கோயிலுக்குள் என்னை கவர்ந்தது மிருகங்களை போல் உள்ள இயற்கை மர சிற்பங்கள். ( அதாவது யாரும் செதுக்காதது ).


சில் என்று அடிக்கும் காற்று, மலைமேலிருந்து கீழே தெரியும் காட்சி, கத்தாழை பூ, பெரிய மரங்கள் - அனுபவிக்க வேண்டிய இயற்கை காட்சிகள். கூட்டம் அதிகம் வருவதால் குப்பையும், கோக்கும் பெருகி கொஞ்ச நாளில் சுற்று சூழல் பாதிக்கப்படலாம். என்று தோன்றுகிறது.


[%image(20061108-grapes_1_small.jpg|200|150|Grapes)%]

நந்தி ஹில்ஸிலிருந்து திரும்பும் போது, மலை அடிவாரத்தில் நிறைய பச்சை திராட்சை தோட்டங்கள் இருக்கிறது. காரை நிறுத்திவிட்டு இங்கு இருக்கும் திராட்சை தோட்டங்களுக்கு சென்றேன். ( திராட்சை தோட்டத்திற்கு செல்வது இது முதல் முறை ). அங்குள்ள சில ஏழை குழந்தைகளுக்கு நாங்கள் கொண்டு சென்ற சாக்லேட் போன்றவற்றை கொடுத்துவிட்டு திரும்பினோம்.


திரும்பி வந்த போது எங்கள் வீட்டு கார் பக்கத்தில் ஒரு புதிய மஞ்சள் நிற கார் ஒன்று இருந்ததை பார்த்த  என் மகள் "அப்பா எப்போ யெல்லோ கலர் கார் வாங்க போற?" என்றாள்.


[ நந்தி ஹில்ஸ் ஆல்பம் ]

Comments