Sunday, November 26, 2006

பொடிடப்பா – புஷ்பா ராகவன்

இவர் எழுத ஆரம்பித்த போது இவருக்கு வயது 56. தற்போது இவருக்கு வயது 58! இவர் கதைகள் பாக்கியா, குமுதம், சிநேகிதி, ராணி nilacharal.com போன்ற பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இவர் எழுதிய நாவல் பெண்மணி மாத இதழில் வந்துள்ளது. இவரது சிறுகதைகளை இவரே வானொலியில் வாசித்துக்காட்டியுள்ளார்.  'குழந்தை தொழிலாளர்கள்' பற்றி இவர் எழுதிய கதைக்கு தமிழக அரசு இரண்டாம் பரிசு கொடுத்து கவுரவித்துள்ளது. கர்னாடக சங்கீதம் பிடித்த இவருக்கு எழுத எல்லா ஊக்கமும் தந்தவர் இவர் கணவர் ராகவன். இவ்வளவு எழுதும் திருமதி புஷ்பா ராகவ்ன் படித்தது 8ஆம் பகுப்பு மட்டுமே.

இந்த பதிவில் தன் 'nostalgia' நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார்... 


 


( தொடர்ந்து என் வலைப்பதிவில் எழுதுவார் என்று எண்ணுகிறேன்)பொடிடப்பா - புஷ்பா ராகவன்
நான் எப்போதாவது  தனிமையில் அமர்ந்திருக்கும் போது  என் இள வயது நினைவுகளில்; மூழ்கிவிடுவேன். இனிமையும்,குறும்பும் நிறைந்த பருவம் அது.


எனக்கு எட்டு வயது. எனக்கு கீழ் ஏழு ,ஆறு ,ஐந்து ,வயது நிரம்பிய தங்கை தம்பிகள்,
பள்ளியில் முழுப்பரிட்சை முடிந்து விடுமுறை வந்துவிட்டால் எங்களுக்கெல்லாம் ஒரேகுஷிதான்.


அதற்குகாரணம் ஸ்ரீரங்கத்திலிருந்து எங்களின் அத்தை பையனும் ,மாமா பசங்களும்
வருவார்கள்,அவர்கள் வந்துவிட்டாலே வீட்டில் கலகலப்புக்கு குறைச்சலே இருக்காது, அத்தை பையன்வெங்கிட்டுவும்.,மாமாபையன் ரங்குவும்.,ஜோக்மன்னர்கள்,
அவர்கள் சொல்லும் ஜோக்குக்கு நாங்கள்தான் விழுந்து,விழுந்து சிரிப்போம்.ஆனால் அவர்கள், சிரிக்கவேமாட்டார்கள்.


எங்களின் அப்பா இருக்கும்போது மட்டும் எல்லோரும் கப்சிப் என்று இருப்போம்.
ஏனென்றால் எல்லோருக்கும் அவர் ஒரு சிம்மசொப்பனம், அவர் எப்போது ஆஃபீஸுக்கு
கிளம்புவார் என்று காத்துக்கொண்டிருப்போம், என் கடைக்குட்டி தங்கைதான்நொடிக்கொருதரம் வாசலுக்கு சென்று ஆஃபீஸ் ஜீப் வந்துவிட்டதா என்று பார்த்து விட்டு வருவாள்.


இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல ஆளுக்கு ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்போம், என் அப்பாவும் நாங்கள் பாடங்களைத்தான் சீரியசாகப்படித்துக்கொண்டிருக்கிறோம், என்று நினைத்து மகிழ்ந்டுபோய்விடுவார், பாடப்புத்தகத்துள் கதைப்புத்தகம் ஒளிந்திருப்பது பாவம் அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.


''டேய்; வெங்கிட்டு நீதான் கணக்கு பாடம் நன்னா போடுவியே, இவாளுக்கும் கொஞ்சம் கணக்கு சொல்லிக்கொடு.ஏய் பசங்களா,அவன் ஊருக்கு போறதுக்குள்ளே கணக்கு போடக்கத்துக்கோங்க.'' என்று கண்டிப்போடு சொல்வார்.


அவ்வளவுதான் நரிக்கு நாட்டாமை கொடுத்ததுபோல் ஆகிவிடும் வெங்கிட்டுவுக்கு.''ஆகட்டும் மாமா, நிச்சயம் சொல்லிக்குடுக்கிறேன்''என்று பவ்யமாக சொல்லிவிட்டு ''எல்லோரும் போய் நோட்டு,பென்சில் கொண்டு வாங்க ,நான் போட்டு தர்ற கணக்கை ஒழுங்கா போடுங்க''என்று அதட்டுவான்.


'' இருடா,இரு மாமா கிளம்பிஆஃபீசுக்கு போகட்டும் வச்சுக்கிறோம் கச்சேரியை''என்று ரகசியமாய் ஆள்காட்டி விரலால் எச்சரிப்போம்.ஆனால் எமகாதப்பயல்,எங்களைப்பார்க்காமல் வேறு எங்கேயோ பார்ப்பதுபோல்நடிப்பான்.


இந்த சமயம் கடைக்குட்டி ஓடி வந்து ''ஜீப் வந்துடுத்து,ஜீப்வந்துடுத்து'' என்று ரகசியமாய் மெதுவான குரலில் கட்டியம் கூறும்.அவ்வளவுதான் எங்களுக்குள் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.


ஆனால் எங்கள் அப்பா உடனே கிளம்பமாட்டார். ஜீப் டிரைவரை உள்ளே வரச்சொல்லி  அம்மாவை கூப்பிட்டு அவனுக்கு காஃபி கொடுக்கச்சொல்லி உத்தரவுபோட்டுவிட்டு திண்ணையில் உட்கார்ந்து டிரைவர் காஃபி குடிக்கும் வரை காத்துக்கொண்டிருப்பார்.


டிரைவரோ மெதுவாக கப்பில் இருந்த காஃபியை ஒவ்வொரு சிப்பாக உறிவதைபார்த்து எரிச்சலாய் வரும்.''மாமி போட்டுக்குடுத்த இந்த தண்ணிகாப்பியையே இப்படி ரசிச்சு குடிக்கிறானே, அப்ப அவன்வீட்டுகாப்பி எப்படி இருக்கும்,பார்த்துக்குங்க''என்பான் வெங்கிட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு. எங்களுக்கும் சிரிப்பு வந்தாலும்


''இரு,இரு எங்க அம்மா போட்ட காஃபியையா கொறை சொல்றே? இனிமே உனக்கு காஃபியே குடுக்கவேண்டான்னு அம்மாகிட்டே சொல்லி வைக்கிறேன் ''என்று சொல்லி அவனை பயமுறுத்துவேன்.


ஒரு வழியாக அப்பா ஜீப்பில் ஏறி தெருமுனை தாண்டியாச்சு என்று மறுபடியும் ஒரு அறைகூவல் விடுக்கும் சின்னது,''அப்பாடா'',என்று ஒரு பெருமூச்சுடன் புத்தகத்தை ஓரம் கட்டிவிட்டு எங்கள் கொட்டத்தை ஆரம்பித்துவிடுவோம்.


தலைப்பு விஷயத்துக்கு வருவோம். என் கடைசீ சித்தப்பா திருமணம் ஆகி சித்தியுடன் எங்கள் ஆத்தில்தான் இருந்தார். அவர்களுக்கு ஒரு வயதில் பையன் இருந்தான்.என் அப்பாவும்,சித்தப்பாவும் மூக்குப்பொடி போடுவதில் வல்லமை மிக்கவர்கள்.அப்பாவாவது ஓரளவுக்கு பரவாயில்லை.சித்தப்பா அரைமணிக்கு ஒரு தடவை உறிஞ்சுவார்.


சுண்டுவிரலுக்கும் கீழே இருக்கும் ஒரு குட்டியூண்டு டப்பியில் பொடியை அடைத்து வைத்து   அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நிதானமாய் ரசித்து போடுவார்.அதில் என்னதான் சுவாரஸ்யம் இருக்குமோ என்று நாங்கள் நினைத்து கொள்வோம்.அந்த பொடிடப்பா கவசகுண்டலம்போல் அவர் வேட்டியில் சுருட்டி வைத்திருப்பார்.


எங்களாத்தின்,வாசல்புறம் ஒரு சின்ன அறை இருக்கும்.சாதாரணநாளில் நாங்கள் படிக்கும் அறையாக இருக்கும் . விடுமுறை நாளில் எங்களின் ஆஸ்தான ஆலோசனைக்கூடமும் அதுதான்.


வெங்கிட்டு எங்கள் எல்லோரையும் அந்த அறைக்கு வரச்சொல்லி ரகசியமாய் கூப்பிட்டான்.அன்று ஞாயிற்று கிழமையாதலால் அப்பாவும்,சித்தப்பாவும் ஆத்தில்தான் இருந்தார்கள்.கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.


''என்னடா,விஷயம்? எதுக்கு அவசரமா கூப்பிட்டே?''என்று கேட்டதும்.''கீதா,ஜூனியர் காந்தி தம்பதி ராட்டையிலே நூல் நூற்க ஆரம்பிச்சாச்சா?''என்று மெதுவாககேட்டான்.


 இந்த இடத்தில் என் சித்தப்பாவைப்பற்றி  ஒரு நல்ல விஷயம் சொல்லியே ஆக வேண்டும். காந்திஜியின் ராட்டையில் நூல் நூற்கும் கொள்கையை மட்டும் விடாமல் கைப்பற்றி வந்தார்.சித்திக்கும் சொல்லிகொடுத்து அவரையும் தேர்ச்சி பெறசெய்துவிட்டார்.


நூற்றதை கதர் கடையில் கொடுத்து வேட்டி,துண்டு தீபாவளிக்கு வாங்கி கொள்வார்.விடுமுறை நாளில் வாசல் தின்ணையில் ராட்டையும் கையுமாக அமர்ந்து விடுவார்கள். சித்தி ஆத்து வேலை செய்வதை விட நன்றாக நூல் நூற்பார். பையன் அழுதால் நாங்கள்தான் பார்த்துக்கணும்.  சித்தியிடம் இருப்பதைவிட எங்களிடம் சமர்த்தாக இருப்பான்.


''எல்லோரும் நன்னா கேட்டுக்கோங்க, இன்னிக்கு சின்ன மாமாவை ஒரு மணி நேரமாவது பொடி போட முடியாம பண்ணப்போறேன்.''என்ற அவன் வார்த்தையை கேட்டதும் வியப்புடன் அவனை பார்த்தோம்.


''என்னடா குழப்பறே?அவராலே பத்து நிமிஷம் கூட பொடி போடாம இருக்கமுடியாதே; அதுவும் இல்லாமெ,பொடிடப்பா அவர்கிட்டேதானே இருக்கு ;எப்படி முடியும்?''என்று ஆவலுடன் கேட்டான் ரங்கு.  ''அதுதான் இல்லே,இதோ பார்; அவரோட பொக்கிஷம் இப்போ என்கிட்டே ;டொட்ட;டொய்ங்;என்று மூடி இருந்த கையை விரித்து காண்பிக்க, அங்கே பொடிடப்பா சமர்த்தாக உட்கார்ந்திருந்தது.


''மாமா,மறந்து போய் மேஜைமேலே வச்சுட்டு போய்ட்டார் போலேருக்கு நான் எடுத்து வச்சுண்டேன்'' என்றான் குறும்புடன்.


''இப்போ இதை ஒரு இடத்துலே மறைச்சு வைக்கப்போறேன்,கொஞ்சநேரம் தேடுவார். அப்புறம் நானே தெரியாதமாதிரி எடுத்து குடுத்துடுவேன்.''என்றவன்''என்ன சொல்றீங்க ஒளிச்சு வைக்கட்டுமா?''என்று கேட்டான்.


இது தப்பு என்று தெரிந்தாலும் இதிலும் ஒரு''த்ரில்லிங்'' இருக்கே என்று நாங்கள் ''பூம்,பூம்''மாடுபோல் தலையை ஆட்டினோம்.


ஆனால் இதில் ஒரு ஆபத்து என் இரண்டாவது தங்கை சீதா ரூபத்தில் இருந்தது. அவள் ஒரு உண்மை விளம்பி. நான் வெங்கிட்டுவிடம் இதை ஜாடையாக கண் காட்டினேன்.உடனே  ரங்கு சீதா விடம்


''சீதா, உனக்கு மூலைக்கடை மாமா பண்ற பக்கோடா புடிக்கும்தானே?''என்றதும் ''ஆமா,ஆமா;''என்று நாக்கில் நீர் ஊறியது போலும்,தலையை அசைத்தது.''அப்புறமா வாங்கித்தறேன்''என்றான் ரங்கு.


என் சித்தப்பா எழுந்து வரும் சத்தம் கேட்டது.அவசர,அவசரமாக வெங்கிட்டு,பொடிடப்பாவை கட்டில் மேலிருந்த உபயோகத்தில் இல்லாத, சுருட்டி வைக்கப்பட்டிருந்த படுக்கையின்கீழ் ஒளித்து வைத்து விட்டான்


ஒன்றுமே அறியாதது மாதிரி கேரம் போர்டு விளையாட ஆரம்பித்தோம்.சித்தப்பா அறைக்குள் வந்தவர் மேஜைமேல் துழாவினார்.பிறகு மேஜைக்கு அடியில்,மேஜைடிராவில்,என்று எல்லா இடத்திலும் தேட ''என்ன மாமா தேடறீங்க''என்று அப்பாவியாக கேட்டான் வெங்கிட்டு.எங்களுக்கோ உள்ளுக்குள் சிரிப்பு ,அடக்க ரொம்பவே சிரமப்பட்டோம்


''என்னோட பொடிடப்பாவை எடுத்தீங்களாடா?''என்று சிறிது அதட்டலாக கேட்டார். கேட்காமலே இருந்திருக்கலாம்.''மாமா,எங்களுக்கு பொடிபோடற வழக்கமே கிடையாதே''என்று சீரியசாக சொல்லவும்,''என்னடா ,கிண்டலா?''என்றார் கோபமாக.அவருக்கு பொடிபோட முடியாமல் மூக்கும்,கையும் துறு,துறு என்று இருந்தது போலும்.


''பத்மா,பத்மா,''என்று சித்தியை உரக்க கூப்பிட்டார்.''எதுக்கு இப்படி குடி மூழ்கினா மாதிரி கத்தறீங்க''என்று அலுத்து கொண்டே வந்தாள் சித்தி. உடனே சித்தப்பாவின் குரல் பலஹீனமாகிவிட்டது. அவர் அப்படித்தான்.


''குடி ஒன்றும் மூழ்கவில்லை பத்மா,என்பொடிடப்பியைத்தான் காணோம்.அதான் நீபார்த்தியான்னு கேக்கத்தான் ...''என்று இழுக்கவும்,''எனெக்கென்ன தெரியும் நீங்கதானே எப்பவும் புதையலை மறைச்சு வைக்கறமாதிரி உங்கவேஷ்டியிலே சுருட்டி வச்சிண்டுஇருப்பீங்க எங்கே போயிருக்கும்?''என்று முகத்தை கடுமையாக வைத்து கொண்டு சொன்னார்.


இந்த சமயத்தில்தான் என் தங்கை சீதா,''சி...சித்..சித்தப்பா''என்று ஏதோ சொல்ல வந்ததும்,ரங்கு அதன் வாயை பொத்தி ''சீதா,வா, உனக்கு பக்கோடா வாங்கித்தறேன்''என்று அதை அங்கிருந்து கிளப்பி  அழைத்துக்கொண்டு போய்விட்டான்.


''சின்னமாமா, எனக்கொரு சந்தேகம்,கார்த்தாலே பெரியமாமா பொடிதீர்ந்த்போச்சு வாங்கணும்னு சொல்லிண்டு இருந்தார்,ஒருவேளை,அவசரத்துக்கு உங்கபொடி டப்பாவை எடுத்திருப்பாரோ?''என்று வம்புக்கிழுத்தான் அவனுக்கு தெரியும், என் அப்பாவிடம் ,சித்தப்பாவுக்கு பயம் என்று.வேண்டுமென்றே மாட்டிவிட்டான்
முதலில் சித்தப்பா தயங்கினாலும்,பொடிமீதிருந்த அபாராஆசையால்,''விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல்'' ஈஸிசேரில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த என் அப்பாவிடம் சென்று,தலையை சொறிந்துகொண்டே


''முத்தா''[அண்ணா] எ..என்..என்னோட பொடிடப்பியை எ..எ...எடுத்திண்டீங்களா'''என்று ஈனஸ்வரத்தில் கேட்டார்.


ரொம்ப  சுவாரஸ்யமாக படித்து கொண்டிருந்த என் அப்பாவுக்கு,சித்தப்பாவின் இந்த அபத்தமான கேள்வி எரிச்சலை தர,''நான் ஏண்டா,ஒன்னோடதை எடுக்கிறேன்.நேத்துதானே ஃபுல் டப்பா வாங்கி வச்சிருக்கேன் வேணும்னா என்கிட்டே இருந்து கொஞ்சம் எடுத்துக்கோ''என்று சொல்லிவிட்டு புத்தகத்தில் மூழ்கிவிட்டார்.


இனி மேல் இந்த பொடிவிஷயத்தை  பெரிதாக்கினால் நம் மரியாதை போய் விடும் என்று நினைத்தாரோ என்னமோ பெரியடப்பாவில் இருந்து சிறிது  பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சியவர் ஞாபகமாக அந்தடப்பாவை கையில் எடுத்துக்கொண்டு போனார்.


இனி மேலும் அவரை தவிக்க விடுவது பாவம் என்று நினைத்த வெங்கிட்டு தான் ஒளித்து வைத்த பொடிடப்பாவை எடுக்கப்போனான்.ஆனால் அவன் வைத்த இடத்தில் அது இல்லை.எங்கே போயிருக்கும் ? எல்லோரும் தேடினோம் அகப்படவே இல்லை. படுக்கைக்கு அடியில் எங்கேயாவது சிக்கிகொண்டதோ,என்னவோ படுக்கையை எங்களால் நகர்த்தக்கூடமுடியாது.


''சரி,விடுடா,நாளைக்கு ஆறுமுகத்தை விட்டு படுக்கையை நகர்த்தசொல்லிட்டு எடுத்து குடுத்துடலாம். என்று சொன்னேன். பாவம் சித்தப்பா அன்று பூராவும் தேடிக்கொண்டேடான் இருந்தார்.


ஆனால்,அடுத்த நாள் எல்லோரும் மகாபலிபுரம்,பீச் என்று சுற்றி விட்டு வந்ததில் பொடிடப்பாவை மறந்தே போனோம் என்றுதான் சொல்லவேண்டும்.


இரண்டு நாளில் வெங்கிட்டு,ரங்கு குடும்பங்கள் ஊருக்கு கிளம்பிவிட்டனர். அப்போதுதான் நினைவு வந்தாற்போல் ''ஏய்;கீதா மாமாவோட பொடிடப்பாவை எப்படியாவது கண்டுபிடிச்சு குடுத்திடுங்கடி பாவம் நான்லெட்டர்லே எழுதிகேப்பேன்''என்று உருகி சொல்லிவிட்டு போனான்.


நாங்களும் சரி,சரி  என்று தலையை ஆட்டிவிட்டு மறந்தேபோனோம். பள்ளிதிறந்து போக ஆரம்பித்ததும் இன்னும் சுத்தம்.


வெங்கிட்டுவும் கடிதம் போடும்போதெல்லாம்,நினைவு படுத்திகொண்டுருப்பான். என் சித்தப்பாவே மறந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் அவர் வேறு பொடிடப்பா மரத்தினால் ஆன சதுரடப்பா வாங்கி அதில் பொடிநிரப்பி வைத்துக்கொண்டார்.


ஆனால் மறந்தும் அதை கீழே வைப்பதில்லை.ஒரு நாள் எங்கள் ஆத்தில் எலித்தொல்லை ஜாஸ்தியாக இருந்ததால் வேலையாள் ஆறு முகம் வீட்டை ஒழித்துக்கொண்டிருந்தபோது, படுக்கையை எடுத்து கீழே போட்டான். படுக்கையை எல்லாம் எலி குதறி வைத்திருந்தது.


அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.காணாமல் போய் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த சித்தப்பாவின் பொடிடப்பி டொம் என்று கீழே விழுந்து உருண்டோடியது.


''ஹை; பொடிடப்பி கிடைச்சுடுத்து'' என்று கத்தி கொண்டே அதை எடுத்து என் சித்தப்பாவிடம் கொடுத்தேன்.என் சித்தப்பா என்னை பாராட்டுவார் என்றூ ஒரு நப்பாசையில் இருந்த எனக்கு அவர் அதை  அலட்சியமாக வாங்கி சூள் கொட்டிக்கொண்டே மேஜை ஒரு ஓரமாக தூக்கிப்போட்டார்.எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது.


''ஏன் சித்தப்பா  இது வேண்டாமா''என்று கேட்டதற்கு,''புது டப்பாவே அழகா,அடக்கமா இருக்கு இனிமே இந்த பழசு எதுக்கு ?''என்று சொல்லிவிட்டார்.


அடுத்த நாளே வெங்கிட்டுவுக்கு விபரமாய் கடிதம் போட்டேன்.சித்தப்பா சொன்னதையும் மறக்காமல் எழுதினேன். மறுவாரமே அவனிடம் இருந்து பதில் வந்து விட்டது,''மாமாவின் பொடிடப்பி கிடைத்தது பற்றி மிகவும் சந்தோஷம்,பழையது கழிந்து,புதியது புகுந்ததும் மகிழ்ச்சியாகவே உள்ளது.ஆனாலும் அந்தபழைய டப்பாவை பத்திரமாக எடுத்து வை,அடுத்த விடுமுறையில் இப்போது  இருக்கும் டப்பி காணாமல் போனால்,  வேண்டி இருக்கும். அப்படியே பத்மா மாமியையும் பத்திரமாகப்பார்த்துக்கொள்..''என்று எழுதி இருந்தான் அந்த பொல்லாத குறும்புக்காரன்.

Thursday, November 23, 2006

சித்திர ராமானுஜர்

சில மாதங்கள் முன் 'சித்திர நாலாயிரம்'  பற்றி எழுதியிருந்தேன். இரண்டு நாட்கள் முன் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் எனக்கு தன் கைபட ஒரு கடிதம் எழுதியுள்ளார் ( ஈ-மெயில் பார்க்கும் நமக்கு இது போன்ற கடிதங்கள் ஒரு வித மன நிறைவை தருகிறது. அதில் உள்ள ஒரு 'பர்சனல் டச்' ஈ-மெயிலில் கிடையாது) அதில் வரும் நவம்பர் 23 முதல் 26 வரை கீழச்சித்திரை வீதியில் திரும்பவும் ஒரு சித்திர கண்காட்சி நடைபெறுகிறது என்றும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார். இந்த முறை


1. ஸ்ரீ ராமானுஜ தரிசனம் 120 - உடையவர் ராமானுஜர் வாழ்ந்த வருடங்களை நினைவூட்டும் வண்ணம் அவரது கதையை 120 சித்திரங்களாக வைக்க போகிறார்கள். (இதையே புத்தகமாகவும் வெளியிட தீர்மானித்துள்ளார்கள் )


2. 108 திவ்வியதேச தரிசனம் - ஆழ்வார்கள் அமுதமொழியில் 108 திருப்பதிப் பெருமாள்களின் தரிசனம்.


3. ஸ்ரீமத் பகவத் கீதையை ஒரே படத்தில் 700 ஸ்லோகங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளது


4. பெரியாழ்வார் திருமொழி - சித்திரவடிவில்


5. சித்திர அமலனாதிபிரான்


என்று அசத்த உள்ளார்.


என்னால் இச்சமயம் போக முடியாது என்று நினைக்கிறேன். இந்த தேதிகளில் நீங்கள் திருச்சி/ஸ்ரீரங்கம் சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய கண்காட்சி.


கண்காட்சி நடைபெறும் இடம்
ஸ்ரீ நாதமுனி ராமாநுஜ கூடம்
(கீழச்சித்திரை வீதி, கோ ரத மூலை)
ஸ்ரீரங்கம்.
நாட்கள் 23-11-06 முதல் 26-11-06 ( 4 நாட்கள் )
நேரம் : காலை 7 முதல் இரவு 9 வரை

Tuesday, November 21, 2006

பெண்களூர்-0 8

* சென்ற வாரக் கடைசியில் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன் (பேலஸ் கிரவுண்ட்ஸில்). நான் போன சமயம் கூட்டமே இல்லை. எல்லாக் கடைகளிலும் நிம்மதியாகப் புத்தகங்களைப் பார்க்க முடிந்தது. கூட்டம் இல்லாததால் புத்தகங்கள் ஒழுங்காக அடிக்கியபடியே இருந்தது. கிழக்கு பதிப்பகத்தில் நிறைய புதிய புத்தகங்களைப் பார்க்க முடிந்தது. ( வாங்கிய புத்தகம் மனிதர்களும் மர்மங்களும் - மதன் ). அனுமதி டிக்கெட் 20/= என்பதால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்றார் நியூபுக்லேண்ட் ஸ்ரீநிவாசன்.[%image(20061121-helmet.jpg|141|200|Helmet)%]

* பெங்களூரில் இப்போது தலைக்கு அவசியம் தலைக்கவசம் ( அதாங்க ஹெல்மெட் ). முன்பு தி.நகரில் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்திப் போடப்பட்ட வாசகம் “To protect your software, wear this hardware!”. பெங்களூர் ரோடுகளுக்குக் குறுக்கே டிவைடர்கள் போடத் தொடங்கியுள்ளார்கள். காலையில் போன சாலை மாலை வேறு மாதிரி இருந்தால் இது தான் காரணம். கொஞ்சம் ஜாக்கிரதையாகப் போக வேண்டும்; இல்லை என்றால் டிவைடரால் கார் டிவைட் ஆகும் அபாயம் இருக்கிறது. ஹெல்மெட்டின் அவசியத்தை பற்றி எனக்கு ஈ-மெயிலில் வந்த இந்தப் படம் நன்றாக இருந்தது.


* ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் உள்ள மூன்று கோயில்களுக்குச் சென்றிருந்தோம். முதலில் ISKCON. நல்ல அழகான கோயில். கோயில் கூரை மேல் அழகான ஓவியங்கள். பார்க்க வேண்டிய இடம். கிருஷ்ணர் சிரித்துக்கொண்டு ராதையுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் விக்கிரகம் அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. கோயில் உள்ளேயே பக்கோடா, கேக், ஜிலேபி, ரசமலாய், ரசகுல்லா, குலாப்ஜாமூன், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், லெமன் ரைஸ், வடை, தயிர்வடை, மிளகாய் பஜ்ஜி, கோபி மஞ்சூரியன், கேக், பாதாம் பால், ரோஸ் மில்க் எல்லாம் கிடைக்கிறது. இதை எல்லாம் சாப்பிட்டு வெளியே வந்தால் சுடச்சுட பருப்பு சாதப் பிரசாதம் தருகிறார்கள். இருங்க சார்/மேடம், எங்கே கிளம்பிட்டீங்க? இஸ்கான் பற்றிய படங்கள் செய்திகள் பார்க்க http://www.iskconbangalore.org/. தினமும் 90,000 ஏழைக் குழந்தைகளுக்கு இவர்கள் சாப்பாடு போடுகிறார்கள்.


அடுத்து இஸ்கான் எதிரே இருக்கும் பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றோம். ஒரே கல்லில் 22 அடி உயர ஆஞ்சநேயர், இதன் சிறப்பு அம்சம். 1960ல் 13 ஏக்கர் பொட்டல்காடாக இருந்த இந்த இடத்தில் 22 அடி கல்லில் ஆஞ்சநேயர் உருவம் மட்டும் வரையப்பட்டிருந்தது. பிறகு 1968-1973 முதல் மெதுவாக மக்கள் இந்த இடத்துக்குக் குடிபுகுந்தார்கள். கல்லின் மேல் பெயிண்ட் அடித்த அஞ்சநேயரை வணங்கிய மக்கள், பிறகு 1975 அதை அப்படியே செதுக்கினார்கள் ( செதுக்கியவர் ஷண்முகாநந்தா ). (இந்தப் படங்கள் எல்லாம் இங்கே இருக்கிறது )


கடைசியாக JP நகரில் உள்ள வெங்கடேஷ்வரா கோயில். உள்ளே அஞ்சநேயர், பிள்ளையார், கிருஷ்ணர், [%popup(20061121-jp_nagar_renganathar.jpg|800|600|ரங்கநாதர் (மிக அழகானவர்))%], நரசிம்மர், வெங்கடாசலபதி, தாயார் என்று பார்த்துக்கொண்டே வந்தால் கடைசியில் கொஞ்சம் புளியோதரை தருகிறார்கள். வெங்கடாசலபதி விளக்கொளியில் தரிசனம் (அதாவது மின்சார விளக்கு இங்கு கிடையாது.)


[%image(20061121-Kannada Flag.jpg|96|64|Kannada Flag)%]

* பெங்களூரில் மஞ்சள் சிகப்பு கொடிகள் தெரியவில்லை என்றால் பக்கத்தில் உள்ள டாக்டரைப் பார்ப்பது உத்தமம். எல்லா வண்டிகள், (குழந்தைகளின் மூன்று சக்கிர வண்டி மற்றும் ஏரோப்பிளேன் தவிர), கட்டடங்கள் என்று எல்லா இடங்களிலும் இருக்கிறது. இது கன்னடக் கொடி. கன்னட பக்ஷா(Kannada Paksha) என்ற கட்சிக்காக இது தயாரிக்கப்பட்டது. இன்று அந்தக் கட்சி இல்லை; ஆனால் கொடி மட்டும் இருக்கிறது. கன்னட ராஜ்யோத்ஸவா (Karnataka Rajyothsava) போன்ற நாள்களில் நகரமே மஞ்சள் சிகப்பு தான்.  ( கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று மொழி அடிப்படையில் தனித்தனி பிரிக்கப்பட்ட நாள் இது  முழுவிவரம் தெரிந்துக்கொள்ள வெங்கட்டின் பதிவை படிப்பது அவசியம் )


* சென்னை அடையார் ஆனந்த பவன் இப்போது A2B (Adyar 2 Bangalore ) என்ற பெயருடன் நிறைய வந்துவிட்டது. மஞ்சள் தட்டுக்களில் சாப்பிடுவதற்குக் கூட்டம் அலை மோதுகிறது. உட்கார இடம் கிடைத்தால் உங்கள் ராசி என்ன என்று எனக்கும் சொல்லுங்கள். BTM பெட்ரோல் பங்க் பக்கத்தில் இருக்கும் A2B கடை முழுவதும் கண்ணாடியினால் ஆனது. கடைக்கு மேல் மஞ்சள் சிகப்பு கொடி. ஒரு பாதுகாப்புக்குத்தான். ;)


மேம்பாலத் தகவல்கள்: ஏர்போர்ட் ரோட், இன்னர் ரிங் ரோட் சந்திப்பில் மேம்பாலம் கட்டிமுடித்துவிட்டார்கள். இது ஒரு பெரிய சாதனை. நான் பார்த்த போது எப்போதும் ஒருவர் தான் வேலை செய்து கொண்டிருப்பார். மரத்தஹல்லியில் பாலத்தை விரிவுபடுத்திகொண்டிருக்கிறார்கள். முடிந்தவுடன் சொல்கிறேன்.


பெண்களூர் 1, 2, 3, 4, 5, 6, 7


 

Wednesday, November 8, 2006

கார்காலம்

[%image(20061108-getz.jpg|200|111|getz)%]

சென்னையில் தற்போது கார்காலம்.  பெங்களூரிலும் கார்காலம் தான். போன வருட கணக்குப் படி பெங்களூரில் ஒரு மாதத்திற்கு 5000 கார்கள் விற்பனையாகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு 60,000 கார்கள். தற்போது பெங்களூரில்  1.9 மில்லியன் கார்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. (பெங்களூரின் மக்கள் தொகை 6.5 மில்லியன். ). [ கார் வாங்குபவர்கள் பற்றிய புள்ளிவிபரம்  -  முதன்முறையாக கார் வாங்குபவர்கள் - 33%,  தங்களிடம் இருக்கும் காரை விற்றுவிட்டு புது கார் வாங்குபவர்கள் - 33%,  இரண்டாவதாக இன்னொரு கார் வாங்குபவர்கள் - 33%. ]


ஒவ்வொரு முறையும் சென்னைக்கு செல்லும் போது, வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷன் போவதற்கு 2 மணி நேரம் ஆகிறது. மழை வேறு வந்துவிட்டால் பெருமாளை நினைப்பதை தவிற வேறு வழியில்லை. அலுவலகம்/மீட்டிங்கிற்கு லேட்டாக வருகிறவர்கள் கால் ஒடிந்திருந்தாலும்  'டிராஃபிக் ஜாம்'  என்று தான் காரணம் சொல்லுகிறார்கள். எல்லா வாகனங்களும் இரண்டாவது கீருக்கு அடுத்து செல்லுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் கார் வாங்குவதை யாரும் நிறுத்துவதாக இல்லை. கார் வைத்திருப்பவர்கள் அதை விற்றுவிட்டு அடுத்த மாடல்/அல்லது பெரிய கார் வாங்குகிறார்கள். கணவன்/மனைவி இரண்டு பேரும் வேலைக்கு சென்றால் ஆளுக்கு ஒரு கார் வாங்குகிறார்கள். இன்னும் சில வருடங்களில் பெங்களூரில் வாகன நெரிசலை நினைத்தால் வயற்றை கலக்குகிறது.


முதலில் நான் கார் வாங்க நினைத்த போது, மனைவி  "பெங்களூரில் காரா ? நல்லா தானே இருந்தீங்க ?" என்றாள். அலுவலகத்தில் எனக்கு கார் வாங்க அலவென்ஸ் தருவதாலும், ஒரு வித பியர் பிரஷரினால்,  வாங்கித்தான் பார்க்கலாம் என்று தோன்றிற்று. இந்த எண்ணம் வந்தவுடனேயே, என்ன கார் வாங்கலாம் என்ற குழப்பமும் வந்து சேர்ந்தது.  "அப்பா ரெட் கலர் கார் வாங்குப்பா" என்று என் மகள் சொன்னதால் என்ன கலர் என்பதில் குழப்பம் இல்லை.  மாமனார் போன் செய்து, "மாப்பிளை, எந்த கலர் வாங்கினாலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் மீது ஏற்றி பூஜை செய்துவிடுங்கள்" என்றார். எலுமிச்சை பழம் ஏறிய கார் வந்து போன மாதத்தோடு ஒரு வருடம் ஆகிறது.


கார் வந்த முதல் நாள் ரொம்ப ஜாக்கிரதையாக ஓட்டினேன். பார்க்கிங் கிடைக்கவில்லை என்றால், ஒரு கிலோ மீட்டர் தள்ளி காரை நிறுத்தி விட்டு நடந்தேன். கையில் ஒரு துணி வைத்துக்கொண்டு கார் அழுக்கானால் துடைத்தேன். கடைசியில் வந்து பார்க் செய்யும் போது முன் பக்கம் ஒரு தூணில் இடித்து கொஞ்சம் பெயிண்ட் தூணில் ஒட்டிக்கொண்டது.( தூணில் உள்ள பெயிண்ட் காரில் ஒட்டிக்கொண்டது). அதற்கு பிறகு காரை பயமில்லாமல் கான்பிடண்ட்டாக ஓட்டினேன். இந்த ஒரு வருடத்தில் நாலு பக்கமும் கார் அடிவாங்கியிருக்கிறது. கான்பிடண்டும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.


கார் வந்தால் கூடவே கொஞ்சம் தெனாவெட்டும் திமிரும் வருகிறது. ரோடில் போகும் போது யாராவது ஓவர் டேக் செய்தால் அவர்களை துரோகிகள் போல் துரத்துவதும், சாலையில் வழிவிடாத பைக்கை ஹாரன் அடித்து முறைப்பதும் இதில் அடங்கும். அதே போல் வாகன நெரிசலில் நிறைய பொறுமை வருகிறது. நல்ல பாட்டு கேட்க முடிகிறது. வெள்ளை சட்டை அழுக்காகாமல் இருக்கிறது. 'சக்கத் ஹாட் மகா' 98.3 FM கேட்க முடிகிறது. எங்கு டிராப்பிக் ஜாம் என்று டிராப்பிக் ஜாமில் நின்று கொண்டிருக்கும் போது FMமில் கேட்க முடிகிறது. மழை வந்தால் கவலைப் படாமல் வீட்டுக்கு கிளம்ப முடிகிறது.


[%image(20061108-Nandi_Hill_top_view.jpg|225|150|Nandi Hill Top View ( from Wiki ))%]

சில மாதங்களுக்கு முன் காரில் பெங்களூர் பக்கத்தில் இருக்கும் 'நந்தி ஹில்ஸ்' சென்றிருந்தேன்.


நந்தி ஹில்ஸ் பெங்களூரிலிருந்து 65 கிமீ தூரத்தில், 4851 அடி உயரத்தில் ஹைதிராபாத் செல்லும் வழியில் இருக்கிறது. திப்பு சுல்தான் கோடை காலத்தில் இங்கு இளைப்பாரினான் என்கிறது வரலாறு. திப்பு சுல்தான் கட்டிய கோட்டையின் மதில்களை இன்றும் காணலாம்.  இன்று பெங்களூர் இளைஞர்கள் சனி, ஞாயிறு அன்று வந்து போகும் இடமாக மாறியிருக்கிறது. மரண தண்டனை கைதிகளை இங்குள்ள ஒரு செங்குத்தான மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இன்றும் பனி காற்று வீசும் போது, மரங்களின் சலசலப்புக்கிடையில், இந்த கைதிகளின் மரண ஓலம் கேட்கும் என்கிறார்கள். நாங்கள் போன சமயம் எங்களுக்கு நாய் குரைக்கும் சத்தம் தான் கேட்டது.


நந்தி ஹில்ஸில் குரங்குகள் தொந்தரவு ரொம்ப இருக்கிறது. எல்லா மரங்களின்


[%image(20061108-tall_tree_small.jpg|150|315|Tall Trees)%]

மேலும் குரங்கு கூட்டதின் சேஷ்டையை பார்க்க முடிகிறது.  எதை சாப்பிட்டாலும், உங்கள் பின்னாடி ஊர்கோலமாக வந்துவிடுகிறது. எதை கொடுத்தாலும் சாப்பிடுகிறது. ஒரு குரங்கு ஐஸ்கீரிம் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. (எந்த குழந்தை அழுதுக்கொண்டிருக்கிறதோ). சில குரங்குகள் கோக் குடிக்கிறது. சாப்பிடுவதற்கு குரங்கு இல்லாத இடத்தை தேடி பின் காருக்குள் சென்று சாப்பிட்டோம். கார் மேல் குரங்கு வந்து "என்னை விட்டுவிட்டு சாப்பிடுவது நியாயமா ?" என்றது.


இந்த மலையின் மேல் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த ஒரு அழகிய சிவன் பார்வதி கோயில் இருக்கிறது. சோழர்களால் கட்டப்பட்டது. (மலையில் நந்தி சிற்பம் இருப்பதால் இந்த மலைக்கு நந்தி ஹில்ஸ் என்று பெயர் ). அழகிய குளம் ஒன்றும் இருக்கிறது. கோயிலுக்குள் என்னை கவர்ந்தது மிருகங்களை போல் உள்ள இயற்கை மர சிற்பங்கள். ( அதாவது யாரும் செதுக்காதது ).


சில் என்று அடிக்கும் காற்று, மலைமேலிருந்து கீழே தெரியும் காட்சி, கத்தாழை பூ, பெரிய மரங்கள் - அனுபவிக்க வேண்டிய இயற்கை காட்சிகள். கூட்டம் அதிகம் வருவதால் குப்பையும், கோக்கும் பெருகி கொஞ்ச நாளில் சுற்று சூழல் பாதிக்கப்படலாம். என்று தோன்றுகிறது.


[%image(20061108-grapes_1_small.jpg|200|150|Grapes)%]

நந்தி ஹில்ஸிலிருந்து திரும்பும் போது, மலை அடிவாரத்தில் நிறைய பச்சை திராட்சை தோட்டங்கள் இருக்கிறது. காரை நிறுத்திவிட்டு இங்கு இருக்கும் திராட்சை தோட்டங்களுக்கு சென்றேன். ( திராட்சை தோட்டத்திற்கு செல்வது இது முதல் முறை ). அங்குள்ள சில ஏழை குழந்தைகளுக்கு நாங்கள் கொண்டு சென்ற சாக்லேட் போன்றவற்றை கொடுத்துவிட்டு திரும்பினோம்.


திரும்பி வந்த போது எங்கள் வீட்டு கார் பக்கத்தில் ஒரு புதிய மஞ்சள் நிற கார் ஒன்று இருந்ததை பார்த்த  என் மகள் "அப்பா எப்போ யெல்லோ கலர் கார் வாங்க போற?" என்றாள்.


[ நந்தி ஹில்ஸ் ஆல்பம் ]

Thursday, November 2, 2006

திண்ணனூர், திருஎவ்வுள்

நீ என்பது ஒரு எழுத்து
நான் என்பது இரண்டு எழுத்து
காதல் என்பது மூன்று எழுத்து
உன் பின்னால் சுற்றுவது என் தலை எழுத்து!
இப்படிக்கு
பிரபு
S/0 ராஜமாணிக்கம் 


[%image(20061102-thirnidavur_gopuram.jpg|200|150|thirunidavur)%]

ஒவ்வொரு முறையும் பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் போதும், திருவள்ளூர், திருநின்றவூர் ஸ்டேஷன்களை கடந்து செல்லும். இந்த இரண்டு திவ்வியதேசங்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். திரும்பவும் பெங்களூர் போகும் போது, தான் திரும்ப நினைவுக்கு வரும். இந்த தீபாவளி விடுமுறையில் இந்த இரண்டு திவ்விய தேசங்களுக்கும் போக முடிந்தது.


காலை 6:30 மணிக்கு சென்னை அரக்கோணம் ரயிலில் ஒரு நியூஸ் பேப்பருடன் ஏறினேன். பேப்பர் படித்து முடித்த போது திருநின்றவூர் வந்தது.


"திருநின்றவூர் கோயில் எந்த பக்கம்?" என்று அங்கு இருந்தவரிடம் கேட்டேன்.


"திண்ணனூர் போகனுங்களா ? இப்படியே ஒரு ஆட்டோ பிடித்து போங்க" என்றார். போனேன். திருநின்றவூர் என்பது காலப்போக்கில் திண்ணனூர் என்று திரிந்திருக்கிறது. கோயிலுக்கு முன் ஒரு பெரிய மரம், மண்டபம், கோயிலை சுற்றி சில திண்ணை வீடுகள் என்று மிக அழகிய இடம். திருமங்கையாழ்வார் இரண்டு பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். அதை பற்றிய ஒரு சுவாரசியமான கதையும் இருக்கிறது. திருமங்கையாழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது இத்தலம் சென்றும் இதை பாடாது சென்றார். இதைக்கண்ட தாயார் பெருமாளிடம், உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு கூறினார். அதற்குள் ஆழ்வார் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடல் மல்லை கோயிலுக்கு சென்றுவிட்டார் விட்டார்.


அங்கு சென்ற பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்றை பாடக் கேட்டார்.


பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
பொய்ந்லை மெய்ந்லென் றென்றுமோதி
மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை
என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே. (2.5.2, 1089 )


[ வீண் செயல்களை மேற்கொண்டு, தாழ்ந்தோர்க்கு அடிமை செய்யாதீர். பொய்யான நூல்களைக் கற்று, மெய் என நம்பி வீணாகாமல், உய்வடய வாருங்கள். ஞானிகளால் துதிக்கப்படும் தந்தையான மேகவண்ணன், திருநின்றவூரில் முத்துத் திரளாய் நிற்கிறான். பூஞ்சோலைக் காண்டவ வனத்தைத் தீயின் வாயில் இட்டு அழித்த எம்மானை, நான் கடல்மல்லைத் தலசயனத்தில் கண்டேன். ]


என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசித்தார்.


பாடல் பெற்று வந்த பெருமாளைப்பார்த்த தாயார், "எல்லா தலங்களுக்கும் பத்து பாடல்களுக்கு மேலிருக்க இத்தலத்திற்கு மட்டும் ஒரு பாட்டு மட்டும் தானா?" என கேட்கிறார். இதைக்கேட்ட பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற சென்றார். அதற்குள் ஆழ்வார் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். அங்கே கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன் ஓரக்கண்ணால் கண்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார். அந்த பாடல்


ஏற்றி னையிம யத்துளெம் மீசனை
இம்மை யைமறு மைக்கு மருந்தினை,
ஆற்ற லை அண்டத் தப்புறத் துய்த்திடும்
ஐய னைக்கையி லாழியொன் றேந்திய
கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை
நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,
காற்றி னைப்புன லைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே (7.10.5, 1642 )


[ காளை போன்றவன்; இமயத்திருப்பதியில் எழுந்தருளிய என் இறைவன்; இம்மை மறுமைக்கு மருந்தானவன்; மிடுக்குடன் உலகங்களையும் பரமபததையும் ஆள்பவன். கையில் சக்கரம் ஏந்திய என் ஐயன் பகைவருக்கு எமன் ஆவான். நீலமணி போல் உள்ள அவன் திருநின்றவூரில் எழுந்தருளினான். முத்துக் குவியல் போன்றவன். காற்றாகவும் நீராகவும் உள்ள இப்பெருமானை நான் சென்று நாடித் திருக்கண்ணமங்கையில் கண்டு கொண்டேன். ]


இந்த தலத்திற்கு பெயர்காரணம் பற்றியும் ஒரு கதை இருக்கிறது  - பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு 'திரு' வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் திருநின்றவூர் ஆனது. அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்தான். (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திரராஜன் தந்தையாகிறான்). அவள் வர மறுத்து விட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டம் சென்று பெருமாளிடம் தாங்கள் வந்து தாயாரை அழைத்து வர வேண்டும் என்று முறையிட,
 அதற்கு பெருமாள், நீ முன்னே செல்,  நான் பின்னால் வருகிறேன் என்கிறார். சமுத்திரராஜன் முன்னால் சென்று மகாலட்சுமியிடம், நான் உனக்கு தந்தையல்ல, நீயே என்னைப்பெற்ற தாயார் எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய்ய வேண்டும் என மன்றாடினான். பெருமாளும் சமாதானம் செய்யவே, மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறாள். அதனால் இந்த தாயர் பெயர் "என்னை பெற்ற தாயார்" என்று அழைக்கப்படுகிறது.


இதுவரை ஜலத்திலேயே ஸமுத்திர ராஜனுக்கு காட்சிகொடுத்த எம்பெருமானும் பிராட்டியும் இப்போது முதன்முதலாக நிலத்திலும் திருமணக்கோலத்தில் ஸமுத்திரராஜன் ஆசைக்கு காட்சி கொடுத்ததால் இவருக்கு பக்தவத்ஸலன் ( பக்தனுக்காக அவன்பால் வாத்சல்யம்(பேரன்பு) ஏற்பட்டு தன்னைவிட்டுப் பிரிந்த தேவியை அழைத்துவர பக்தனுக்காகத் தான் புறப்பட்டு வந்ததால் )


நான் போன சமயம் கோயிலில் யாரும் இல்லை. அங்கு இருந்தவரிடம் பேச்சு கொடுத்த போது "தீபாவளியன்று கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை என்றார்" ஏன் என்றும் அவரே சொன்னார்.


தீபாவளி அன்று வந்த தினமலரில் இத்தலம் பற்றி வந்த குறிப்பில் திருநின்றவூர் குபேரன் வழிப்பட்ட ஸ்தலம், தீபாவளி அன்று குபேர பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் பெருகும் என்றதால் கூட்டம் அலைமோதியது.


திருநின்றவூர் பெருமாளை சேவித்துவிட்டு இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் எவ்வுள்ளில் இருக்கிறாரென்று திருமங்கையாழ்வாரால் பாடபெற்ற திருஎவ்வுள் என்ற திருவள்ளூர் சென்றேன். திருநின்றவூரிலிருந்து ரயிலில் 15 நிமிடங்கள் ஆகிறது. திருநின்றவூர் போல் அல்லாமல் திருவள்ளூரில் தானியியங்கி சிக்னல், ஒரு வழிப்பாதை என்று திருவள்ளூர் நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது.


[%image(20061102-thiruvalur_gopuram.jpg|200|150|thiruvalur)%]

இங்கு உள்ள பெருமாள், ஸ்ரீ வீரராகவன். திருஎவ்வுள்கிடந்தான் என்றும் திருநாமம் உண்டு. இந்த பெருமாள் தீராத வியாதிகளையும் தீர்த்துவைப்பதால் இவருக்கு 'வைத்திய வீரராகவன்' என்னும் பெயர் மிக பிரஸித்தம். ராமலிங்க அடிகளார் தன் வயிற்று வலியால் அவதிப்பட்ட போது, இப்பெருமாளை ஸேவித்து திருபஞ்சகம் என்கிற 5 பதிகங்களை பாடின மாத்திரத்தில் வயிற்றுவலி நீங்கியதாக சரித்திர வரலாறு.


இங்குள்ள கோயில் குளத்தில் தீர்த்தம் வற்றிப்போய் 45 வருடங்களுக்கும் மேலாகிறது. குளத்தின் ஒரு பகுதியை குழந்தைகள் பூங்காவாக மாற்றியுள்ளார்கள். இன்னும் கொஞ்சம் நாளில் மிச்சம் உள்ள இடத்தில்  ஃபிளாட் கட்டி விடுவார்கள் என்று தோன்றுகிறது.


திருமழிசையாழ்வாரால் ஒரு பாடலாலும், திருமங்கையாழ்வாரால் பத்து பாசுரங்களாலும் பாடப்பெற்ற ஸ்தலம். 'என்னுடைய  இன்னமுதை எவ்வுள் பெருமலையை' என்று திருமங்கையாழ்வார் பெரிய திருமடலில் மயங்கி நிற்கிறார்.


பெரிய திருமொழியில் ஒரு பாட்டை பார்க்கலாம்:


சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்fபி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.2.6 (1063 )


[ அடியார்கள் நெருங்கி, 'உன்னை வணங்குகிறோம்' என்று துதிக்கும்படியானவன். நண்பனாகவும் உள்ளான். சிவந்த கண்ணழகுடைய இவன், தேவர்களுக்கெல்லாம் மூத்தவன். மூன்று கண்களுடைய சிவனும் வணங்கும் பெருமையுடைய இந்நம்பி, திருஎவ்வுளூரில் பள்ளி கொண்டான் ].


கோயிலுக்கு வெளியில் உள்ள பிரசாத கடையில் மிளகு வடை, புளியோதரை, சூடான தயிர்சாதத்தை, கோயிலுக்கு வெளியில் லெமன் சோடாவையும் நினைத்தால் திரும்ப ஒரு முறை வரவேண்டும் என்று தோன்றும்.


முதலில் குறிப்பிட்டுள்ள கவிதை(?) நான் போன ரயிலில் எழுதியிருந்தது.


 [ கோயில் ஆல்பம் பார்க்க இங்கே செல்லவும் ]