Tuesday, August 22, 2006

சக்கரை இனிக்கிற சக்கரை

நாளை எனக்கு முப்பத்தாறு வயது முடிந்து முப்பத்தியேழு வயது ஆரம்பிக்கிறது. ஸ்கூல் படிக்கும் போது பிறந்த நாளிற்கு அம்மா பாயசம் அல்லது சக்கரை பொங்கல் செய்வாள். அதை நான் சாப்பிட மாட்டேன். யாராவது ஃபைவ்ஸ்டார் தருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பேன். பாட்டியை சேவித்து ஆசிர்வாதம் வாங்கியபின் "தேசிகா இந்தா ஏதாவது மிட்டாய் வாங்கிக்கோ" என்று பணம் தருவார். அதில் ஒரு ஃபைஸ்டார் வாங்கிக்கொள்வேன். கல்யாணம் முடிந்த பின் முதல் வருடம் மட்டும் மாமியார் வீட்டில் பாயசம் செய்தார்கள்.இந்த பிறந்த தினதில் யாராவது எனக்கு மிட்டாய் கொடுத்தாலும் சாப்பிடமுடியாது. ஏன் என்று தெரிந்துக்கொள்ள மேலே படிக்கவும்.


போன மாசம் என் மனைவியின் கண் பரிசோதனைக்கு உடன் சென்றிருந்தேன். கண்ணை பரிசோதனை செய்துகொண்ட என் மனைவி


"நீங்களும் உங்க கண்களை செக் செஞ்சிக்கோங்கோ.."


"எனக்கு எல்லாம் நல்லா தான் தெரிகிறது"


"அதை டாக்டர் சொல்லட்டுமே"


டாக்டர் கண்களில் டார்ச் லைட் அடித்து கண்களை கூச வைத்து, நான் இரண்டு சொட்டு கண்ணீர் விட்ட பின், சில எழுத்துக்களை காண்பித்தார்.


"முதல் வரிசையை படியுங்கள்" 


 


 


"இரண்டாவது வரிசை" 


 


 


"அடுத்து ?" 


 


 


"அப்படியே படிச்சுட்டு வாங்க" 


 


 


 


 


"டாக்டர் போர்டில எறும்பு"


"இப்போ தெரியுதானு பாருங்க" என்று சில கண்ணாடிகளை இரண்டு கண்களுக்கும் மாற்றினார். எறும்புகள்


 "NPXTZFH"

என்று தெரிந்தது. சுமாராக இருக்கும் டாக்டர் கூட ஐஸ்வர்யா ராய் போல் காட்சியளித்தார். உலகமே பிரகாசமாக தெரிந்தது.  


"சார் எப்படி இவ்வளவு நாளா சாமாளிச்சீங்க? உங்க இரண்டு கண்களிலும் '-' பவர், உடனே கண்ணாடி மாட்டிக்கொள்ளுங்கள்" என்று ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தார்.


கண்ணாடி போட்டுக்கொண்ட பின் மேலும் இரண்டு வயது கூடியது. ஆபிஸில் எல்லோரும் மரியாதை தந்தார்கள். புதுசாக கண்ணாடி போட்டுக்கொண்டதால் கீழே பார்த்தால் எல்லாம் பள்ளமாக தெரிந்தது. எழுத்துக்கள், லாப்டாப் எல்லாம் கோணலாக தெரிந்தது. நான் ஆபிஸிலிருந்து வந்தவுடன் என் குழந்தை "அம்மா யாரோ வாந்திருக்கா" என்று உள்ளே ஓடியது. "கண்ணாடியை எங்கே வைத்தேன்" என்று தேட ஆரம்பித்து இப்போழுது எல்லாம் பழகிவிட்டது.


எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது அடுத்த மாதம் திரும்பவும் மனைவியை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் போன போது என் மனைவிக்கு ரத்த பரிசோதனை செய்ய சொன்னார்கள்.


"நீங்களும் ஒரு டெஸ்ட் எடுத்துக்கோங்கோ" என்றாள் என் மனைவி


"ஐயம் பர்ஃபெட்லி ஆல்ரைட்"


"இப்படித்தான் போன தடவை சொன்னீர்கள். என்ன ஆச்சு ?"


அதற்கு மேல் ஒண்ணும் பேசாமல் கையை நீட்டி திரும்பவும் இரண்டு இன்ச் ரத்தம்"
கொஞ்ச நேரத்தில் பரிசோதனை செய்தவர் என் பேரை கூப்பிட்டுக்கொண்டு ஓடி வந்தார்.


"சார் உங்க சக்கரை அளவு எகிறி போயிருக்கு எதற்கும் நாளை வெறும் வயத்தோட வந்துடுங்கோ இன்னொரு தடவை டெஸ்ட் எடுத்துவிடலாம்" என்றார்.


இது என்னடா கிணறு வெட்ட பூதம் என்று அடுத்த நாள் காலை வெறும் வயற்றில் சென்று  இரண்டு இன்ச் ரத்தம் பிறகு டிபன் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து திரும்பவும் இரண்டு இன்ச் ரத்ததானம். மாலை எனக்கு டயாபடீஸ் இருக்கு என்று உறுதி செய்தார்கள்.


இன்ஸ்டால்மெண்டில் கவலை படுவதற்கு பதில் ஒட்டுமொத்தமாக கவலை படலாம் என்று இரண்டு நாள் கழித்து உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு மாஸ்டர் செக்கப் செய்துக்கொண்டேன். அரை நாள் என்னை சில டாக்டர்கள் மாற்றி மாற்றி சோதித்துவிட்டு எனக்கு ஒரு சின்ன ஸ்லோகம் புக் போல ஒரு புத்தகம் கொடுத்தார்கள். அதில் நான் தினமும் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று ஒரு அட்டவனை. பூமிக்கடியில் விளையும் எதையும் சாப்பிடக்கூடாது (உருளைக்கிழங்கு, கேரட்..) தினமும் உடற்பயிற்சி/நடைபயிற்சி தவறாமல் செய்ய வேண்டும் (மழை வந்தால் குடைபிடித்துக்கொண்டு) கூடவே உங்களுக்கு கொஞ்சம் கொலஸ்ட்ரால் இருக்கு அதனால் எண்ணையில் பொறித்தது, நெய், எதையும் சாப்பிடக்கூடாது என்று டாக்டர் தன் உரையை இனிதே முடித்துக்கொண்டார்.


டயாபடீஸ் வந்தால் கூடவே வரும் பிரச்சனை நம்மை சந்திப்பவர்கள் "என் மச்சினருக்கு கூட இருக்கு", "நீங்க தினமும் பாகற்காய் ஜூஸ்","காலையில் பல் தேய்த்தபின் வெந்தயம் சாப்பிடுங்கள்", "ராத்திரி சாதத்திற்கு பதில் சப்பாத்தி" போன்ற அட்வைஸ் தான். என் மனைவி கற்பகாம்பாள் மெஸ்ஸில் ( மயிலை) கிடைக்கும் பாகற்காய் பருப்புபொடியை தேடி கண்டுபிடித்து வாங்கிவந்தாள்.


ஒரு மாதம் கழித்து சென்ற வாரம் என் சக்கரை அளவை பரிசோதிக்க சென்றிருந்தேன்.


"என்ன எல்லாம் கண்ட்ரோல்ல தானே இருக்கு?"


"மனைவி, குழந்தையை தவிர எல்லாம் கண்ட்ரோல்ல தான் இருக்கு டாக்டர்"


திரும்பவும் ஒரு இரண்டு இன்ச் ரத்தத்திற்கு பிறகு "சக்கரை அளவு நார்மலுக்கு கொஞ்சம் மேலே இருக்கு, தொடர்ந்து மேல் கூறிய அட்வைஸ் எல்லாம் கடைபிடியுங்கள்" என்றார்.


இப்போது எனக்கு காப்பி/டீக்கு ஷூகர் போட்டுக்கொள்ளுவதில்லை, ஹல்டிராம்ஸ்(Haldirams) ஐட்டங்கள் சாப்பிடுபவர்களை பார்த்தால் கோபம்/எரிச்சல் வருகிறது. தினமும் காலை முக்கால் மணி நேரம் வாக்கிங் போகிறேன். சில சமயம் தூக்ககலக்கத்தில். சில பெயர் தெரியாதவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். முதல் நாள் குரைக்கும் நாய் இரண்டாம் நாள் மூஞ்சியை திருப்பி படுத்துக்கொள்ளும். முதல் நாள் பார்க்கும் நபர், இரண்டாம் நாள் பார்க்கும் போது சிரிப்பார்; மூன்றாம் நாள் 'ஒரு ஹலோ அல்லது, குட்மார்னிங்' என்பார். சிலர் நாயுடன் வருகிறார்கள். சிலர் தங்கள் மனைவியுடன் வருகிறார்கள். சிலர் வாக்கிங் போவதற்கு பர்ஃபியூம் அடித்துக்கொண்டு வருகிறார்கள். நேற்று அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள், ஐபாட் மாட்டிக்கொண்டு போகிறார்கள். பணக்காரர்கள் காரில் வந்து வாக் செய்கிறார்கள். தினமும் இதை தவிர செடி கொடிகள், மரம் என்று எதையாவது பார்த்து ரசிக்க முடிகிறது. அடுத்ததாக வலைப்பதிவில் என்ன கதை எழுதலாம், விக்ரமாதித்தன்/வேதாளம் என்ன செய்ய வைக்கலாம் போன்றவற்றை யோசிக்க முடிகிறது. வாக்கிங் போகும் போது முக்கியமாக செல் போனை எடுத்து செல்வதில்லை.


இதை படிக்கும் உங்களுக்கு 35-40 வயதாகியிருந்து, நீங்கள் சாப்ஃவேர் தொழிலில்  பத்து மணி நேரம் வேலை செய்பவர் என்றால் ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது உத்தமம். உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி... யாருக்காவது இருந்தால், உங்களுக்கு வர வாய்ப்பு உள்ளது.  அதனால் அடுத்த இரண்டு வரிகளை படித்துவிட்டு உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


பிறந்த நாளுக்கு இந்த மாற்றங்களை தவிர காது பக்கம், இடது பக்க மீசையில் மூன்று இடங்களில் நறை, இளம் பெண்கள் 'அங்கிள்' என்று கூறிவதும் கொஞ்சம் வருத்த பட வைப்பவை.


 

Friday, August 11, 2006

ஆடித் தள்ளுபடியில் வேதாளம்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஆடி மாசத்தில் தோசை வார்க்க ஆரம்பித்தான். அப்போது எக்ஸ்சாஸ்ட் ஃபேன் வழியாக வேதாளம் வந்தது.


"என்ன விக்ரமா, வைஃப் வீட்ல இல்லையா, நீ தோசை வார்க்கற ?""ரொம்ப நாளா உன்னைத்தான் ஆளக் காணோமேன்னு பாத்தேன், வந்துட்டியா ?" விக்கிரமாதித்தன் அலுத்துக்கொண்டான்.


"நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாதே. சரி சரி எனக்கும் ஒரு ஸ்பெஷல் நெய் ரோஸ்ட் போடு, சாப்டுட்டுப் போறேன்."
 
"தோடாஆஆ.. இதுல ஒன்னும் குறைச்சலில்லை!" பேசிக்கொண்டே தோசைக்கல்லில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கல் சூடாகிவிட்டதா என்று பார்த்தான் விக்கிரமாதித்தன். தோசைக்கல்லில் பட்ட தண்ணீர் "ஸ்ஸ்ஸ்.." என்ற சத்தத்தோடு அதில் குதித்தது.


வேதாளம், "தண்ணி ஏன் குதிக்றது தெரியுமா ?" கேட்டது.


"கல் சூடா இருக்கில்ல, அதனால!"


"இது சரியான பதில் இல்லையே!"


"ஆரம்பிச்சுட்டயா உன் வேலையை? சரி, சொல்லித் தொலை!"


வேதாளம் தொடர்ந்தது. "நீ தோசைக்கல்லுல தெளிக்கற தண்ணி இந்த அறையோட தட்ப வெப்ப நிலையில இருக்கும். ( 30 டிகிரின்னு வெச்சுக்க!) தோசைக்கல்லுல விழும் போது தண்ணி திடீர்னு 100 டிகிரிக்கு சூடாறது. அப்போ தண்ணிக்கும் தேசைக்கல்லுக்கும் நடுவுல நீராவி உருவாகறது. நீராவி உஷ்ணத்தை நல்லாக் கடத்தாது. அதனால தோசைக்கல்லுல இருக்கற வெப்பம் தண்ணீருக்குள்ள போகாது. அதனால தண்ணீரோட அடிப்பாகம் 100 டிகிரியாவும் மேலே போகப் போக சூடு குறைவாவும் இருக்கும். அதாவது நீராவிக்கு மேல இருக்கற தண்ணியோட பகுதி கொதிக்கற சூட்லயும் மேல் பகுதி மிதமான சூடாவும் இருக்கும். தண்ணீருக்கும் தோசை கல்லுக்கும் நடுவுல நீராவி ஒரு குஷன் மாதிரி இருக்கும். அதனாலதான் தண்ணி குதிச்சு டான்ஸ் ஆடறது!"


விக்கிரமாதித்தன் ஒன்றும் பேசாமல் சில தோசைகளை வார்த்து வேதாளத்திற்குக் கொடுத்துவிட்டு ஹாலுக்குச் சென்று சமீபத்தில் 'ரஜினி'ராம்கி எழுதிய 'மு.க' புத்தகத்தை வைத்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தான்; படித்துக்கொண்டே தூங்கிவிட்டான். தோசைகளைக் காலி செய்துவிட்டு  வேதாளம் வந்த போது விக்கிரமாதித்தன் விரிந்த புத்தகத்தை மார்மேல் கவிழ்த்து வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான்.


"என்ன அதுக்குள்ள தூக்கமா ?"


விக்கிரமாதித்தன் கொட்டாவி விட்டுக்கொண்டே "புஸ்தகத்தை எடுத்துப் படிச்சாலே தூக்கம்தான் வருது!"


"ஏன் படுத்துண்டு படிக்கும் போது தூக்கம் வருது தெரியுமா ?"


"தெரியாது.  என்னவாவது சொல்லித் தொலை!!" மேலும் ஒரு கொட்டாஆஆவி..


"படுத்துண்டே படிக்கும் போது அசையாம ஒரு இடத்தில இருக்கோம். இதனால நம்ப தசைகளுக்கு ரத்த ஓட்டம் கம்மியாறது. ரத்த ஓட்டம் கம்மியாறதால லாக்டிக் ( lactic ) அமிலம் சுரக்கிறது. இந்த லாக்டிக் அமிலம் பிராணவாயுவை(ஆக்ஸிஜனை) அதிகமா உறுஞ்சற தன்மை கொண்டது. இதனால நம்ப மூளைக்குப் போற ரத்த ஓட்டத்துல இருக்கற ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சு தூக்கம் வருது. இதனால் தான் நடந்துண்டே சிலர் படிக்கிறாங்க."


விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் கொட்டாவி விட்டான். வேதாளம் நான் கிளம்புகிறேன் என்று வெளியில் போனது.


"சுவாரசியமா வேற ஒன்னும் இல்லையா ?" என்றான் விக்கிரமாதித்தன்.


"எதிர்வீட்டு வாசல்ல கொட்டியிருக்ற இந்த ஆரத்தி பத்தி சொல்லட்டுமா ?"


விக்கிரமாதித்தனுக்கு ஏண்டா கேட்டோம் என்றாகிவிட்டது. வேதாளம் தொடர்ந்தது.


"மஞ்சள், இஞ்சி எல்லாம் ஒரே குடும்ப வகையைச் சேர்ந்தது. மஞ்சள்ல இருக்கற மஞ்சள் தன்மை 'curcumin' சேர்மத்தினால கிடைக்றது. இந்தச் சேர்மத்துல ஐதரொட்சிற் கூட்டத்தினால (hydroxyl group) கொஞ்சம் அமிலத்தன்மை இருக்கு. இதோட கொஞ்சம் கார குணமுள்ள (basic in nature ) சுண்ணாம்பு(calcium hydroxide - கல்சியமைத்ரொட்சைட்டு) கலக்கும் போது இந்தக் கரைசல்ல உள்ள மூலக்கூறுல ( Molecule ) எந்த மாற்றமும் இருக்காது. ஆனா அதுல இருக்கற அடிப்படை ஊடகத்துல (Basic Medium) மாற்றம் நடக்கறது. இதனால சிகப்பு நிறமா மாறுது."


விக்கிரமாதித்தன், "சரி இந்தச் சிகப்பை எப்படி மறுபடி மஞ்சளா மாத்தறது ?" தான் கவனிப்பதாகக் காட்டிக்கொள்ளவும், வந்த கொட்டாவியை மறைக்கவும் சும்மா ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான்.


"விக்கிரமாதித்தன்! வேதாளத்துகிட்ட கேள்வி கேட்கக் கூடாதுன்னு எழுதப்படாத விதி!. உனக்குத் தெரியாதா ? சரி, அடுத்த வேதாளம் பதிவுல பதில் சொல்றேன். இல்லை யாராவது பின்னூட்டத்துல சொல்றாங்களான்னு பார்த்துண்டிரு. தூங்கிடாத!!"


வேதாளம் பறந்து சென்றது.