Skip to main content

திருப்பதி

திருப்பதிக்கு போக வேண்டும் என்று மனைவி சொன்ன போது அஜித் படம் என்று நினனத்துக்கொண்டு "அதுக்கு என்ன போயிட்டு வந்தால் போச்சு" என்றேன். "கீழ் திருப்பதியிலிருந்து மேலே நடந்து போகணும்" என்றதும், எனக்கு அடிவயிறு கலங்கியது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் "நான் நடந்துடுவேன் உன்னால் நடக்க முடியுமான்னு பார்த்துக்கோ"



அந்த பிரசித்திபெற்ற பயணம் இரண்டு வாரத்துக்கு முன் நடந்தது. பெங்களூரிலிருந்து KSRTC volvo பேருந்தில் இரவு 11:00 மணிக்கு குடும்பத்துடன் கிளம்பினோம். நாலுமணிக்கு நல்லா தூங்கும் போது "கோவிந்தா கோவிந்தா" என்று பின் சீட்டில் இருந்தவர் பக்தி பரவசத்தால் சத்தம் போட திருப்பதி வந்து சேர்ந்தோம்.


திருப்பதிக்கு வரும் கூட்டம் ஒரு நாளைக்கு 100,000 மேல் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ரோம், ஜெருசலம், மெக்கா விட இது அதிகம். நாங்கள் சென்ற தினம் எங்களையும் சேர்ந்து 100,002.5  இருந்திருப்பார்கள் (குழந்தைக்கு அரை டிக்கேட்) 


[%image(20060730-top_view_gopuram.jpg|150|112|Top view)%]

பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு மேல் திருப்பதிக்கு நடந்து செல்லும் இடத்துக்கு சென்றோம். அங்குள்ள கருடன் சிலை எங்களை கைகூப்பி வரவேற்றது. தண்ணீர் பாட்டில் போன்றவற்றை எடுத்துக்கொண்டு மேலே நடக்க ஆரம்பித்த போது காலை ஐந்து மணி.. சுமார் ஐம்பது படிகள் நடந்திருப்பேன். மேல் மூச்சு, கீழ் மூச்சு எல்லாம் சைடு வாங்கியது, அரை லிட்டர் தண்ணீர் தீர்ந்தது, படியெல்லாம் வேர்வையால் நனைந்தது. அடுத்த பஸ் பிடித்து பெங்களூருக்கு வந்துவிடலாம் என்று தோன்றியது. மூஞ்சியில் கலவரத்துடன் உட்கார்ந்தேன். கொஞ்சம் ஓய்விற்கு பிறகு மீண்டும் ஒரு ஐம்பது படி இப்படி அரை மணி நடந்த பின் என் கூட நடந்து வந்தவர் "இன்னும் மூவாயிரம் படிகள் இருக்கு" என்று ஒரு அதிர்ச்சி தகவலை சொல்லிவிட்டு வேகமாக நடந்து போனார்.


[%image(20060730-walking_steps.jpg|90|150|People Walking)%]

எங்களுடன் கூட நடந்தவர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வேண்டுதலுக்காக நடந்தார்கள் - சிலர் ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றினார்கள்; சிலர் ஒவ்வொரு படியிலும் மஞ்சள் குங்குமம் தடவிக்கொண்டு சென்றார்கள். அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என்னை வியப்பில் ஆழ்த்தியது. மூடநம்பிக்கை என்றாலும் உண்மையான நம்பிக்கையாக இருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு பின் செங்குற்றான பாதை போய் கொஞ்சம் சமமான பாதை வந்தது. நடக்கும் வழியெல்லாம் இட்லி/தோசை கடையும், லெமன் சோடா, பேல் பூரி என்று எல்லாம் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் கொய்யா பழம் இனிக்கும் தேன். ஒரு ரூபாய்க்கு ஒன்று.


 


[%image(20060730-rock_gopurams.jpg|150|112|rock gopuram)%]

நடந்து போகும் வழியெல்லாம் கற்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். எதற்கு என்று தெரியவில்லை இருந்தாலும் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம். அப்போது ஒருவர் கற்களை அடுக்கிக்கொண்டிருந்தார். அவரிடம் "இதை எதற்காக அடுக்குறீங்க" என்றேன். என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு "எல்லோரும் அடுக்குறாங்க" என்று மீண்டும் அடுக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. அருகில் இருந்த கடையில் ஒரு லெமன் சோடா சாப்பிட்டுவிட்டு பேச்சு கொடுத்தேன்.
"இங்கே நிறைய கல் அடுக்குகிறார்களே எதற்கு"
"ஓ அதுவா, கல் அடுக்கினால் வீடு கட்டுவார்கள் என்பது நம்பிக்கை" என்றார்.
"நானும் ஒரு சின்ன கல்லை எடுத்து யாரோ அடுக்கிவைத்திருந்த கல் கோபுரத்தின் மீது வைத்தேன்"
"நிச்சயம் நீங்க வாட்டர் டேங் தான் கட்ட போகிறீகள்" என்றாள் மனைவி.


[%image(20060730-mss_statue.jpg|105|150|mss)%]

நடக்கும் வழியெல்லாம் எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மி பாடிய அன்னமாச்சாரியா கீர்த்தனைகள் மலையில் முழுவதும் மெலிதாக கேட்கிறது. உண்மையிலேயே அவை காற்றில் வரும் கீதம் தான். ( கீழ் திருப்பதியில் அவருக்கு ஆந்திர அரசாங்கம் சிலை வைத்திருக்கிறது ).


[%image(20060730-deers.jpg|150|112|deers)%]

கொஞ்சம் தூரம் சென்ற பின் பெரிய மான் கூட்டம் இருக்கிறது. அவைகளுக்கு எல்லோரும் டைகர் பிஸ்கேட் கொடுக்கிறார்கள். நான்கு மணி நேரம் நடந்த பின் ஆஞ்சநேயர் சிலை ஒன்று வருகிறது அதை பார்த்த பிறகு ஒரு அரை மணி நேரத்தில் மேல் திருப்பதிக்கு வந்து சேர்ந்த போது பத்து மணி. கீழேயிருந்து மேல நடப்பதற்கு 4.5 மணி நேரம் ஆகிறது.


நாங்கள் போன சமயம் தீபத்திருவிழா நடந்துக்கொண்டிருந்தது அதை சேவித்துவிட்டு, அன்று மாலை ஐந்து மணிக்கு வரிசையில் நின்று பெருமாளை பார்க்க ஏழு மணி ஆனது. 10-15 நொடிகள் பார்க்க எவ்வளவு கூட்டம் என்று பார்க்க வியப்பாக இருக்கிறது. அன்று இரவு மடத்தில் குழம்பு, மோருடன் எண்ணை ததும்ப ரவா உப்புமா சாப்பிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. நடந்ததால் குறைத்த கொலஸ்ட்ரால் எல்லாம் உப்புமா சாப்பிட்ட பின் மீண்டும் வந்து சேர்ந்தது.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே
( 685, பெருமாள் திருமொழி 4-7-8 )


தீர்க்கமுடியாது தெடர்ந்துவரும் பாவங்களை தீர்க்கும் திருமாலே, அடியவரும், தேவாதி தேவர்களும் நாடிவரக்கூடிய நின் கோயிலின்
வாசலில் ஒரு படிக்கல்லாக கிடந்து உன் பவளவாய் கண்டுகொண்டே இருப்பேன் என்று குலசேகர ஆழ்வார் அழகாக பாடியுள்ளார். இதனால் திருவேங்கடமுடையான் முன் இருக்கும் பொற்படிக்கு குலசேகரப்படி என்று பெயர்.


வேங்கடாத்ரி, சேஷாத்ரி, சேஷாச்சலம் வேதாசலம், கருடாசலம், ஸ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்று ஏழு மலைகளுக்கு மத்தியில் இருப்பதால் 'ஏழு மலைவாசா' என்று அழைக்கப்படுகிறது.


 வழக்கம் போல் திருப்பதி ஆல்பம் பார்க்க இங்கு செல்லவும்


 

Comments

  1. i do like to read travelloges---they transport me into that place---BUT these kshetra travel stories, apart from making me visualise the kshetram & perumal there, also make me laugh!!! 2-in-1 benefit for me!!!
    Thanks( my kids are looking strangely at their mom sitting before the comp & laughing away to glory!!!)

    ReplyDelete

Post a Comment