Monday, July 31, 2006

திருப்பதி

திருப்பதிக்கு போக வேண்டும் என்று மனைவி சொன்ன போது அஜித் படம் என்று நினனத்துக்கொண்டு "அதுக்கு என்ன போயிட்டு வந்தால் போச்சு" என்றேன். "கீழ் திருப்பதியிலிருந்து மேலே நடந்து போகணும்" என்றதும், எனக்கு அடிவயிறு கலங்கியது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் "நான் நடந்துடுவேன் உன்னால் நடக்க முடியுமான்னு பார்த்துக்கோ"அந்த பிரசித்திபெற்ற பயணம் இரண்டு வாரத்துக்கு முன் நடந்தது. பெங்களூரிலிருந்து KSRTC volvo பேருந்தில் இரவு 11:00 மணிக்கு குடும்பத்துடன் கிளம்பினோம். நாலுமணிக்கு நல்லா தூங்கும் போது "கோவிந்தா கோவிந்தா" என்று பின் சீட்டில் இருந்தவர் பக்தி பரவசத்தால் சத்தம் போட திருப்பதி வந்து சேர்ந்தோம்.


திருப்பதிக்கு வரும் கூட்டம் ஒரு நாளைக்கு 100,000 மேல் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ரோம், ஜெருசலம், மெக்கா விட இது அதிகம். நாங்கள் சென்ற தினம் எங்களையும் சேர்ந்து 100,002.5  இருந்திருப்பார்கள் (குழந்தைக்கு அரை டிக்கேட்) 


[%image(20060730-top_view_gopuram.jpg|150|112|Top view)%]

பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு மேல் திருப்பதிக்கு நடந்து செல்லும் இடத்துக்கு சென்றோம். அங்குள்ள கருடன் சிலை எங்களை கைகூப்பி வரவேற்றது. தண்ணீர் பாட்டில் போன்றவற்றை எடுத்துக்கொண்டு மேலே நடக்க ஆரம்பித்த போது காலை ஐந்து மணி.. சுமார் ஐம்பது படிகள் நடந்திருப்பேன். மேல் மூச்சு, கீழ் மூச்சு எல்லாம் சைடு வாங்கியது, அரை லிட்டர் தண்ணீர் தீர்ந்தது, படியெல்லாம் வேர்வையால் நனைந்தது. அடுத்த பஸ் பிடித்து பெங்களூருக்கு வந்துவிடலாம் என்று தோன்றியது. மூஞ்சியில் கலவரத்துடன் உட்கார்ந்தேன். கொஞ்சம் ஓய்விற்கு பிறகு மீண்டும் ஒரு ஐம்பது படி இப்படி அரை மணி நடந்த பின் என் கூட நடந்து வந்தவர் "இன்னும் மூவாயிரம் படிகள் இருக்கு" என்று ஒரு அதிர்ச்சி தகவலை சொல்லிவிட்டு வேகமாக நடந்து போனார்.


[%image(20060730-walking_steps.jpg|90|150|People Walking)%]

எங்களுடன் கூட நடந்தவர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வேண்டுதலுக்காக நடந்தார்கள் - சிலர் ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றினார்கள்; சிலர் ஒவ்வொரு படியிலும் மஞ்சள் குங்குமம் தடவிக்கொண்டு சென்றார்கள். அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என்னை வியப்பில் ஆழ்த்தியது. மூடநம்பிக்கை என்றாலும் உண்மையான நம்பிக்கையாக இருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு பின் செங்குற்றான பாதை போய் கொஞ்சம் சமமான பாதை வந்தது. நடக்கும் வழியெல்லாம் இட்லி/தோசை கடையும், லெமன் சோடா, பேல் பூரி என்று எல்லாம் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் கொய்யா பழம் இனிக்கும் தேன். ஒரு ரூபாய்க்கு ஒன்று.


 


[%image(20060730-rock_gopurams.jpg|150|112|rock gopuram)%]

நடந்து போகும் வழியெல்லாம் கற்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். எதற்கு என்று தெரியவில்லை இருந்தாலும் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம். அப்போது ஒருவர் கற்களை அடுக்கிக்கொண்டிருந்தார். அவரிடம் "இதை எதற்காக அடுக்குறீங்க" என்றேன். என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு "எல்லோரும் அடுக்குறாங்க" என்று மீண்டும் அடுக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. அருகில் இருந்த கடையில் ஒரு லெமன் சோடா சாப்பிட்டுவிட்டு பேச்சு கொடுத்தேன்.
"இங்கே நிறைய கல் அடுக்குகிறார்களே எதற்கு"
"ஓ அதுவா, கல் அடுக்கினால் வீடு கட்டுவார்கள் என்பது நம்பிக்கை" என்றார்.
"நானும் ஒரு சின்ன கல்லை எடுத்து யாரோ அடுக்கிவைத்திருந்த கல் கோபுரத்தின் மீது வைத்தேன்"
"நிச்சயம் நீங்க வாட்டர் டேங் தான் கட்ட போகிறீகள்" என்றாள் மனைவி.


[%image(20060730-mss_statue.jpg|105|150|mss)%]

நடக்கும் வழியெல்லாம் எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மி பாடிய அன்னமாச்சாரியா கீர்த்தனைகள் மலையில் முழுவதும் மெலிதாக கேட்கிறது. உண்மையிலேயே அவை காற்றில் வரும் கீதம் தான். ( கீழ் திருப்பதியில் அவருக்கு ஆந்திர அரசாங்கம் சிலை வைத்திருக்கிறது ).


[%image(20060730-deers.jpg|150|112|deers)%]

கொஞ்சம் தூரம் சென்ற பின் பெரிய மான் கூட்டம் இருக்கிறது. அவைகளுக்கு எல்லோரும் டைகர் பிஸ்கேட் கொடுக்கிறார்கள். நான்கு மணி நேரம் நடந்த பின் ஆஞ்சநேயர் சிலை ஒன்று வருகிறது அதை பார்த்த பிறகு ஒரு அரை மணி நேரத்தில் மேல் திருப்பதிக்கு வந்து சேர்ந்த போது பத்து மணி. கீழேயிருந்து மேல நடப்பதற்கு 4.5 மணி நேரம் ஆகிறது.


நாங்கள் போன சமயம் தீபத்திருவிழா நடந்துக்கொண்டிருந்தது அதை சேவித்துவிட்டு, அன்று மாலை ஐந்து மணிக்கு வரிசையில் நின்று பெருமாளை பார்க்க ஏழு மணி ஆனது. 10-15 நொடிகள் பார்க்க எவ்வளவு கூட்டம் என்று பார்க்க வியப்பாக இருக்கிறது. அன்று இரவு மடத்தில் குழம்பு, மோருடன் எண்ணை ததும்ப ரவா உப்புமா சாப்பிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. நடந்ததால் குறைத்த கொலஸ்ட்ரால் எல்லாம் உப்புமா சாப்பிட்ட பின் மீண்டும் வந்து சேர்ந்தது.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே
( 685, பெருமாள் திருமொழி 4-7-8 )


தீர்க்கமுடியாது தெடர்ந்துவரும் பாவங்களை தீர்க்கும் திருமாலே, அடியவரும், தேவாதி தேவர்களும் நாடிவரக்கூடிய நின் கோயிலின்
வாசலில் ஒரு படிக்கல்லாக கிடந்து உன் பவளவாய் கண்டுகொண்டே இருப்பேன் என்று குலசேகர ஆழ்வார் அழகாக பாடியுள்ளார். இதனால் திருவேங்கடமுடையான் முன் இருக்கும் பொற்படிக்கு குலசேகரப்படி என்று பெயர்.


வேங்கடாத்ரி, சேஷாத்ரி, சேஷாச்சலம் வேதாசலம், கருடாசலம், ஸ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்று ஏழு மலைகளுக்கு மத்தியில் இருப்பதால் 'ஏழு மலைவாசா' என்று அழைக்கப்படுகிறது.


 வழக்கம் போல் திருப்பதி ஆல்பம் பார்க்க இங்கு செல்லவும்


 

Thursday, July 13, 2006

‘THEENE.eot’ உமர் மறைவு

இன்று தமிழ் தளங்களில் 90% மேலாக THEENE.eot என்ற எழுத்துரு தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. நான் என் 'வீட்டுப்பக்கத்திற்கு' இதை இலவசமாக உபயோகபடுத்தும் முன் அனுமதி கேட்டு உமர் அவர்களுக்கு ஒரு மின்ஞ்சல் அனுப்பினேன். சில நாட்களில் எனக்கு ஒரு பதில் போட்டிருந்தார். கூடவே நான் கேட்ட அச்சுபிச்சு கேள்விகளுக்கு அடக்கத்துடன் பதிலும் எழுதியிருந்தார்.


நேற்று மாலை அவரின் சொந்த ஊரான அதிராம்பட்டனத்தில் இறைவனடி சேர்ந்ததாக சில வலைப்பதிவுகளில் பார்த்தேன். என் தந்தை இறந்ததற்கு பின் இன்று தான் அழுகை வந்தது. இத்தனைக்கும் நான் அவரை பார்த்ததில்லை. இவர் இன்று நம்முடன் இல்லை ஆனால் அவரின் Theene.eot நம்முடன் இருக்கிறது.


அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


உமர் பற்றி மற்றவர்கள்:


யுனிகோடு உமர் அவர்களின் மறைவ http://vettippechu.blogspot.com/2006/07/blog-post_13.html


திரு. உமர் மரணம் http://www4.brinkster.com/shankarkrupa/blog/


 யுனிகோட் உமர் தம்பி மரணம். http://abumuhai.blogspot.com/2006/07/blog-post_115273113453333253.html


 உமருக்கு அஞ்சலி http://manimalar.blogspot.com/2006/07/blog-post_13.html


உமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர் - http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html


 Deep Condolences http://gilli.in/2006/07/13/deep-condolences/

Monday, July 3, 2006

உயிர் நண்பன்

ராஜாராமனுக்கு 'அந்த' நினைவு திரும்பவும் வந்த போது சன் நியூஸ் சிறப்பு பார்வை ஓடிக்கொண்டிருந்தது. 'அந்த' நினைவு அடிக்கடி வருகிறது. இந்த ரகசியத்தை தவிர எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தன் மனைவியிடம் சொல்லியிருக்கிறார் - ஸ்கூல் பஸ்ஸில்  ஒண்ணுக்கை அடக்க முடியாமல் ஜட்டியிலேயே போனது, சிகரெட் குடித்தது, கல்யாணி பீர் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.  இப்போது அவர் மகன் காலேஜில் படிக்கிறான், இன்னும் அவர் மனைவியிடம் சொல்லவில்லை.சன் நியூஸ் சிறப்பு பார்வையின் போது 'அந்த' நினைவுடன் ராஜாராமனுக்கு ஓர் அவஸ்தையும் ஏற்பட்டது. ராஜாராமனுக்கு முன் டாக்டர் தோன்றி "என்னப்பா ஆச்சு?" என்று கேட்டால், அவருக்கு அதை விவரிக்க முடியாது. "கொஞ்சம் uneasy" என்று தான் சொல்லமுடியும். அஜீரணமா, நெஞ்செரிச்சலா, வாய்வு தொல்லையா என்று சொல்ல தெரியாத ஒர் அவஸ்தை. தண்ணீர் குடித்தார். அமிர்தாஞ்சனத்தை தடவிக்கொண்டார். மூச்சை நன்றாக இழுத்து விட்டார். கொஞ்சம் ஜெலுசில் குடித்தார். மத்தியானம் என்ன சாப்பிட்டேன்னு  என்று நினைவு படுத்தி பார்த்துக்கொண்டார். கோலங்கள், செல்வி தொடர்களுடன் அவஸ்தையும் தொடர்ந்து. முதுகுப்பக்கம் கொஞ்சம்  வேர்த்த போது அது ஹார்ட் அட்டாக் என்று அவருக்கு தெரியவில்லை.


"என்னடா உடம்புக்கு ?"


"வயத்த வலி"


"அதனால தான் நேத்திக்கு ஸ்கூலுக்கு வரலையா ?" என்றான் ஜெயராமன்


ஜெயராமன், ராஜாராமன் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள். பக்கத்து பக்கத்து வீடு.  ஒரே ஸ்கூல். ஒரே வகுப்பு. ஒன்பதாவது படிக்கிறார்கள். இரண்டு பேருக்கும் ராமன் என்று முடிகிற பேர்.  ஒன்றாக தான் விளையாடுவார்கள். கிரிக்கேட், கமல், நன்னாரி சர்பத் பிடிக்கும்; கணக்கு  டீச்சரை பிடிக்காது. மீசை வளரலாமா என்று யோசிக்கும் அதிகம் சிக்கலில்லாத பருவம். ஆனால் சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள்.


சிக்கல் இல்லாத சந்தில் அந்த ஆஸ்பத்திரி அமைந்திருந்தது. வரவேற்பு பகுதியில் ஃபைபர் நாற்காலிகள் வரிசைகள்.  கவலையா, தூக்கமா என்று கண்டுபிடிக்க முடியாத பார்வையாளர்கள். கிரானைட் தரையில் பிள்ளையார் பிசியாக எல்லோருடைய கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டிருந்தார். பணிப்பெண்கள் ஒரே மாதிரி சேலை அணிந்திருந்தார்கள். ஆயாக்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரி ஒரு மினி தொழிற்ச்சாலை போல இயங்கிக்கொண்டிருந்தது.


ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரியில் ராஜாராமன் முதல் மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு செல்லப்பட்டார்.  எல்லோருக்கும் ஆக்ஸிஜன்,. மானிட்டரில் இதயத்தின் துடிப்புகள் என்று அமைதியான இடம். ஆனால் எல்லோரிடமும்  பயம் இருந்தது.


"டாக்டர் பயப்பட ஒண்ணுமில்லையே?"


".."


"நீங்க தான் டாக்டர் எப்படியாவது.. "


ராஜாராமனுக்கு நாக்குக்கு கீழே அடக்கிக்கொள்ள மாத்திரை தரப்பட்டது. சில நிமிடங்களில் ராஜாராமனுக்கு un-easy, easy ஆனது.


அங்கிருந்த ஒரு டியூட்டி டாக்டர் ரத்த அழுத்தம். பல்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே செல்போனில் தன் தலைமை டாக்டரிடம் பேசினார்.


"இதோ பாருங்க முதல்ல ஒரு இ.சி.ஜி அப்புறம் அன்ஜியோகிராம் எடுக்கணும். அன்ஜியோப்ளாஸ்டியா அல்லது பைபாஸா என்று சீஃப் டாக்டர் தான் முடிவு செய்யணும்"


ராஜாராமன் கலவரமாக "டாக்டர் எனக்கு ஒண்ணும் இல்லை, எனக்கு எந்த ஆபரேஷனும் வேண்டாம்"


"என்ன இப்படி குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்கிறீங்க. இது ஒரு எக்ஸ்ரே மாதிரி பயப்பட வேண்டாம். திரும்ப திரும்ப தப்பு  பண்ணாதீங்க"


"டேய் வேண்டாண்டா, அதெல்லாம் தப்பு"


"ஒண்ணும் ஆகாது"


"யாராவது பார்த்தா..அசிங்கம்"


"லைட் தான் அணச்சிருக்கே"


"வேண்டாம்டா.."


ஹார்மோன்கள் ஓவர் டைமில் வேலை செய்ய, தோல் இல்லாத இரட்டை வாழைப்பழம் போல் இருந்தார்கள். இதற்கு மேல் என்ன  நடந்தது என்று விவரிப்பது நாகரிகமாக இருக்காது.


"வேண்டாம்டா .. இதெல்லாம்.. தப்பு..பயமா இருக்கு"


"பயப்படாதடா ஒண்ணும் ஆகாது"


ராஜாராமனுக்கு ஆஸ்பத்திரியில் பயம் வந்தது. மரண பயம்.


"டாக்டர் அவருக்கு சரியா போய்டுமா"


"இப்போ ஓண்ணும் சொல்ல முடியாதம்மா அன்ஜியோகிராம் எடுத்தப்புறம் தான் சொல்லமுடியும். எந்த ரத்தகுழாயில் எவ்வளவு அடைப்பு  என்று"


"ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா அவருக்கு"


"இல்லை டாக்டர், பொய் கூட சரியா சொல்ல வராது"


"பொய் சொல்லாதே. ஏண்டா என்ன பார்த்தா பயந்து ஓடர"


ராஜாராமன் தரையை பார்த்துக்கொண்டு "அதெல்லாம் ஓண்ணுமில்லையே"


"இன்னிக்கு ராத்திரி எங்க வீட்டுக்கு வா யாருமில்ல. என்ன ?"


ராஜாராமன் பதில் சொல்லவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமா, குற்ற உணர்ச்சியா?. யாரிடம் கேட்பது, என்ன செய்வது. உளவியல் ரீதியாக ஒரு பெரும் மனச்சிக்கல் ஏற்பட்டது.  அருவருப்பா, பயமா, வெட்கமா?. இந்த நினைப்பு வரும்போது எல்லாம் வேர்த்து கொட்டியது.


"ஏம்மா வேர்த்து விட்ட போதே உடனே கொண்டு வந்திருக்க வேண்டாமா ?"


இசிஜி எடுத்தபோது இதயத்தில் மிக சமீபத்தில் ஒரு தாக்கம் தாக்கியிருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. தலைமை டாக்டரிடம் திரும்பவும் போனில் பேசிவிட்டு தான் செய்ய வேண்டியதை குறித்துக்கொண்டார்.


"நாளைக்கு மார்னிங் உடனே அன்ஜியோகிராம் எடுக்கணும். அதுவரைக்கு ICUல் அப்சர்வேஷனில் இருக்கணும். ஸுகர், பி.பி எதாவது இருக்கா? " என்றார்


"இதுவரைக்கும் இல்லை"


அடுத்த நாள் காலை டாக்டர், பளிச்சென்று வந்தார். இசிஜி, ரிப்போர்ட் எல்லாவற்றையும் வேகமாக பார்த்தார்.


"உடனே அவருக்கு ஒரு அன்ஜியோகிராம் எடுக்கவேண்டும்  தேவைப்பட்டால் உடனே பைபாஸ் செய்யவேண்டும்" என்று சொல்லிவிட்டு அடுத்த பேஷண்டிடம் "என்ன பசி எடுக்கிறதா?" என்று விசாரித்துக்கொண்டிருந்தார்.


அந்த தனியார் ஆஸ்பத்திரியில் ராஜாராமனுக்கு அன்ஜியோகிராம் செய்யபட்டு, அவர் மனைவியிடம் ஒரு சிடியில் எவ்வளவு அடைப்பு என்பதை போட்டு காண்பித்து விளக்கினார்.


"ரொம்ப சிக்கலாகிவிட்டது, நீங்க முன்பே இவரை ஆஸ்பெட்டலுக்கு கொண்டு வந்திருக்கணும். இப்ப பாருங்க ரொம்ப  காம்பிளிக்கேட்டடாக இருக்கு அவருடைய ஹார்ட் ஐம்பது சதவிகிதம் தான் வேலை செய்கிறது. சீஃப் டாக்டர் கே.ஜெ அமெரிக்கா போயிருக்கார் வரும் புதன் கிழமை வந்துடுவார். வந்த அடுத்த நாள், இவருக்கு உடனே பைபாஸ் செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. திறமையுள்ள சர்ஜன் தான் கைய வைக்கணும். ஆர்ட்டரியெல்லாம் எழுவது,  எண்பது சதவிகிதம் அடைச்சுக்கிடக்கு. அதில் ஒண்ணு 'விடேஸ் ஆர்ட்டரி'. இவர் பொழைச்சதே பெரிய ஆச்சரியம்"


" ஆப்பரேஷன் பண்ணித்தான் ஆகணுமா ?"


"ஏம்மா இவ்வளவு சீரியஸாக இருக்கு இப்படி கேக்கிறீங்க?"


"சரி டாக்டர், அஷ்டமிலெ வேண்டாம்"


"அதெல்லாம் எனக்கு தெரியாதுமா, வியாழக்கிழமை இவருக்கு பைபாஸ் செய்யணும். இவர் பிளட் குரூப்புக்கு பிளட் ஏற்பாடு செய்யுங்க. . ரொம்ப எக்சைட் ஆகாம பார்த்துக்கோங்க. ஆஸ்பத்திரி டையட் தான் சாப்பிடணும்"


ராஜாராமனுக்கு பசித்தது ஆனால் சாப்பிட முடியவில்லை.  தூக்கம் வரவில்லை. வந்தாலும் கனவு வந்து எழுப்பிவிட்டது. யாரை பார்த்தாலும் பிடிக்கவில்லை. கண்ணாடியில் முகம் பார்க்கும் போது ஏனோ கோபம் வந்தது.
அம்மா தான் கவனித்து "ஏண்டா ஒரு மாதிரியா இருக்கே உடம்புக்கு என்ன?"


"ஓண்ணுமில்லமா நான் நல்லா தான் இருக்கேன்"


"அடிக்கடி தூக்கத்தில உளர..எதையாவது பார்த்து பயந்துட்டையா ?"


தரையை பார்த்துக்கொண்டு "இல்லமா"


அரையாண்டு தேர்வில் மிக கம்மியான மார்க் தான் வாங்கியிருந்தான். "குழந்தைக்கு ஏதோ திருஷ்ட்டி" என்று அவன் அம்மா அவனுக்கு சுடு மோர் கொடுத்தாள். சமயபுரத்துக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்தாள். சில மாதங்களில் ராஜாராமன் அப்பாவிற்கு டிரான்ஸ்பராகி சென்னைக்கு சென்றார்கள்.


ஜெயராமனை பார்க்காதது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.  நாளடைவில் அந்த நினைவு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து பிறகு எப்போதாவது வரும். 


ராஜாராமனுக்கு மயக்க மருந்து கொடுக்கபட்டு கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்தார். பிரபல கார்டியாலஜிஸ்ட் டாக்டர் கே.ஜெ வரவைக்கபட்டு இந்த ஆப்பரேஷன் செய்து முடிக்கப்பட்டது.  ராஜாராமனின் அடைபட்டிருக்கும் முக்கியமான இரத்தகுழாய்களுக்கு மாற்று வழி செய்து முடிக்க ஐந்து மணி நேரம் ஆனது. முடித்தவுடன் டாக்டர் செரியன் அழைத்ததால் ஒரு சின்ன பெண் குழந்தைக்கு பைபாஸ் செய்ய அவசரமாக செல்லும் போது...


"ரத்த அழுத்தம், பல்ஸ் எல்லாம் நார்மல். சீக்கிரமே கண்விழிப்பார். இன்னும் ஒரு மாசத்தில ஆபிசுக்கு போகலாம்"


"நீங்க தான் டாக்டர் தெய்வம்"


"அதெல்லாம் பெரிய வார்த்தை. நான் சாயங்காலம் நினைவு வந்தவுடன் வந்து பார்க்கிறேன்"


நினைவு வந்தவுடன் ராஜாராமனுக்கு கொஞ்சம் பசித்தது. சீக்கிரம் வீட்டுக்கு போனால் தேவலை என்று தோன்றியது.


டாக்டர் கே.ஜெ அடுத்த நாள் காலை ராஜாராமனை பார்க்க பத்து மணிக்கு வந்த போது ராஜாராமனுக்கு நேற்று கொடுத்த மருந்தினால் பாதி தூக்கத்தில் இருந்தார்.


"ராஜாராமன் இப்ப இப்படி இருக்கீங்க?"


"நல்லா இருக்கேன் டாக்டர். கொஞ்சம் அசதியா இருக்கு"


"ரொம்ப வொரி பண்ணீக்காதீங்க. டேக் ரெஸ்ட்.உங்க சொந்த ஊர் திருச்சியா ?"


"ஆமாம்"


"டேய் என்ன தெரியலை நான் தான் ஜெயராமன்"


ராஜாராமன் கண்சிமிட்டாமல் ஜெயராமனையே பார்த்துக்கொண்டிருந்தார்.