Wednesday, June 21, 2006

தஞ்சை பெரியகோயில்

முன்பு சோழர் பற்றி ஒரு பதிவு எழுதியது ஞாபகம் இருக்கலாம். ( படிக்காதவர்கள் இங்கு பார்க்கவும் ) நேற்று குரு சுப்பிரமணியம் அவர்களின் வலைப்பதிவில் இந்திய கோயில்களை பற்றிய ஒரு விவரணப்படம் படம் ஒன்று கிடைத்தது என்று எழுதியிருந்தார். நானும் முன்பு எப்போதோ டிவியில் இதை பார்த்திருக்கிறேன்.


ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கம், தஞ்சை பெரிய கோயில்களள பார்க்க பார்க்க ஒர் வித சந்தோஷம் கிடைக்கிறது.


மூன்று வருடத்திற்கு முன் Birds eye viewவில் நான் வரைந்த ஸ்ரீரங்கம் படமும் ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கமும் ஒத்துப்போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.


[%popup(20060621-srirangam_birds_eye_view.jpg|500|351|படம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்)%]


52 நிமிடம் ஓடும் இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.


Friday, June 16, 2006

பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்

மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை -


பட்டக்காரர் சப்ளை - எஸ்.வி.ராமகிருஷ்ணன்


தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் 'பட்டக்காரர் சப்ளை'.


பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வந்திருக்கவில்லை#. கவுண்டர் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகள் சிலர் பட்டக்காரர் வீட்டிலேயே தங்கி ஹைஸ்கூலில் படித்தார்கள்.


பட்டக்காரரின் ஒரே மகன் தாராபுரம் ஹைஸ்கூலில் படித்துவந்தவன், சில ஆண்டுகளுக்கு முன் (1930களில்) தவறிவிட்டான். இது நடந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும், பட்டக்காரர் அந்தப் பையனின் ஞாபகர்த்தமாக அவனுடைய பிறந்த நாளில் பள்ளி மாணவ, மாணவியர்க்குத் தின்பண்டங்கள் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்று காலையில் பியூன் வெங்கட்டப்பன் எல்லா வகுப்புகளுக்கும் ஒரு சர்குலர் கொண்டு வருவான். பிற்பகல் இரண்டாவது பீரியடில் பட்டக்காரர் சப்ளை இருக்கும் என்றும் அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் இருக்காது என்றும் அதில் கண்டிருக்கும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பீரியடு(2.15 லிருந்து 3 மணி) சுமாராக நடக்கும். அப்போதே பையன்களின் மனதெல்லாம் எதிர்பார்ப்பில் லயித்து இருக்கும்.


இரண்டாவது பீரியடு தொடங்கினவுடனே சாரதா விலாஸ் ஹோட்டல் ஆட்கள் கூடை கூடையாக இனிப்புகளைச் சுமந்துகொண்டு ஒவ்வொரு கிளாஸாக வருவார்கள். அடுத்த வகுப்பிற்கு அவர்கள் வந்தது தெரிந்தவுடனே எங்கள் கிளாஸிலும் கசமுசவென்று சத்தம் தொடங்கிவிடும். இந்த ஒருநாள், வாத்தியார்களும் அதற்க்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தது கூடைகள் எங்கள் வகுப்புக்கும் வந்து விடும். ஆசிரியருக்கு முன்பக்கத்தில் கூடைகளை வைத்துக்கொண்டு ஹோட்டல்காரர்கள் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு லட்டு, ஒரு ஜாங்கிரி, ஒரு மைசூர்பாகு, தவிர பக்கோடா, காராபூந்தி இத்தனையும் விநியோகிப்பார்கள். அவற்றை வாங்கிக்கொண்டு குழந்தைகள் தலை கால் புரியாத சந்தோஷத்துடன் வீட்டுக்கு ஓடுவார்கள். வாத்தியார்களுக்கும் உண்டென்பதால் அவர்களுக்கும் சந்தோஷமே. பட்டக்காரர் இருந்தவரை வருடா வருடம் இதை சிரத்தையுடன் செவ்வனே செய்து நூற்றுக்கணக்கான பிஞ்சு உள்ளங்களில் உவகையை வரவழைத்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக (1952 ல் என்று நினைக்கிறேன்) ,பட்டக்காரர் ஒரு முறை பழனி மலைக்குப் போய் பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கையில் அவருடைய எதிரிகள் யாரோ திடீரென்று அவரை மறித்துக் கத்தியால் வெட்டி விட்டார்கள். அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். அத்துடன் 'பட்டக்காரர் சப்ளை'யும் நின்று போனது.
# வங்காளத்தில் இதனாலேயே கல்கத்தா பூதாகரமாக வளர, மீதி வங்காளம் முழுவதிலும் கோவை, மதுரை போன்ற பட்டணங்கள் வளரவில்லை.


எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள்


மொட்டைக் கடுதாசி
ஐஸூக்கு வந்த மவுஸ்!
உடைந்த கையை ஒட்டின கதை
கல்யாண ஊர்வலம்
பணம் காசின் பரிணாமம்
எண்ணெய்க் குளிப் படலம்
ரயில் பிரயாணத்தின் கதை - ரயில் பயணங்களில்
அது அந்தக் காலம்

Monday, June 12, 2006

நன்றி தேன்கூடு !

 இன்றைய தேன்கூடு'வாசகர் பரிந்துரையில்' என் வலைப்பதிவு பற்றி வந்துள்ளது. தேன்கூடு குழுவிற்கும், வாசகர்களுக்கும் என் நன்றிகள்.

Sunday, June 11, 2006

எஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் – 0 1

கும்பகோணம் சென்ற போது ஒரு ஹோட்டலில் திரு எஸ்.வி.ராமகிருஷ்ணனை எதேச்சையாக சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன்" என்றேன். மறக்காமல் அவைகளை எனக்கு மூன்று கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். என் வலைப்பதிவில் அவைகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  முதலில் 'மொட்டைக் கடுதாசி'மொட்டைக் கடுதாசி - எஸ்.வி.ராமகிருஷ்ணன்


சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் institution. பின்னர் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பதில் இன்னும் வினோதமாக இருக்கிறது. காலம் என்ற பரிமாணமே காலங்காலமாக இருந்தாற்போல் இல்லையாம். காலமே அவசரக் கோலம் கொண்டு சுருங்கிவிட்டதாம். அதாவது எவருக்கும் நேரம் இல்லையாம். பொழுதைப் போக்க வழியில்லாமல் வம்பு பேசி மகிழ்த நாட்கள் போய் இப்போது யாருக்குமே அவகாசம் இல்லாமற் போய்விட்டதாம். மொட்டைக் கடுதாசிகள் தயாரிப்பதற்கு வேண்டிய ஓய்வோ அவகாசமோ இல்லாமற் போய்விட்டதாம். உலகமே அமெரிக்காவாகி இந்தியா முழுவதும் பம்பாய் ஆகிவிட்டதாம். இந்த நிலையில் மறைந்து வரும் மொட்டைக் கடுதாசியைப் பேணி வளர்ப்பதில் எவருக்கும் அக்கறை இல்லையென்றால் அதில் அதிசயமும் ஏமி லேது தான்.


 நூறாண்டு முன் வந்த (அந்தக்காலத்தில் நவீனம் என்று அழைக்கப்பட்ட) தமிழ் நாவல்கள் பலவற்றிலும்  - உதாரணம் : பத்மாவதி சரித்திரம் (1898 -1900)** - ஒரு சோப்ளாங்கி வில்லன் ஒரு மொட்டைக்கடிதம் மூலம் கதை வளர வித்திடுவான். ஐம்பது அறுபது ஆண்டுகள் முன்னால் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளுக்கு கல்யாணம் நிச்சயமானவுடன் மனோகர், நம்பியார் (அல்லது கள்ள பார்ட் நடராஜனாகக் கூட இருக்கலாம்) போன்ற வில்லன்கள் 'டாண்' என்று காரியத்தில் இறங்குவார்கள். அவர்கள் காட்டும் முதல் கைவரிசை அநேகமாக மொட்டைக் கடிதம் எழுதுவதாகத்தானிருக்கும் சில சமயங்களில் அதற்கு நேரம் இல்லாமற் போனால் நேராக முகூர்த்ததில் ஆஜராகி தாலிகட்டும் தருணத்தில் 'நிறுத்து' என்று கூச்சலிட்டுக்கொண்டு போய் வாய்வழியாக அபவாதம் ஏதேனும் சொல்லுவதும் உண்டு. ஆனால் மொட்டைக் கடுதாசி மாதிரி வராது, செலவும் குறைவு. விஷம் மாதிரி வேலை செய்யும். வைத்தவர்கள் பெயர் வெளியே தெரியாமலேயே இருக்கவும் முடியும்.


ஆமாம் அரையணா (3 பைசா) கூடப் போதும். மிஞ்சிப் போனால் ஒன்றரையணா (9 பைசா) கவர். இருப்பதையும் இல்லாததையும்  எழுதி அடியில் 'உண்மை விளம்பி' 'உன் நலம் நாடுபவன்' என்று ஏதாவது எழுதினால் வேலை முடிந்து போகும். கும்பகோணத்திலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் கோயம்புத்தூர் வந்து பெண்ணைப் பார்த்திருப்பார்கள். சம்பிரதாயமாக சொஜ்ஜி பஜ்ஜி தின்று சம்மதமும் சொல்லியிருப்பார்கள். பெண்ணுக்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் உள்ளூர்க்கார சோதா ஒருவன் - அவன் பெண்ணுக்கு முறைப் பையனாகவும் இருக்கக்கூடும் - பெண்ணின் நடத்தை சரியில்லை என்றும் அவளுடைய காதலன் ஒருவன் சேலத்தில் இருப்பதாகவும் அவனுக்குக் கொடுக்க இஷ்டப்படாத பெற்றோர்கள் அவசரமாக விவரம் அறியாத தூரதேசப் பார்ட்டியைத் தேடி திருமணம் நிச்சயத்திருப்பதாகவும் ஒரு போடு போடுவான். "தீர விசாரித்தால் உண்மை விளங்கும்" என்று வேறு சேர்த்திருப்பான். சம்பந்திமார்கள் குழம்பிப் போவார்கள். சரி நமக்கெதற்கு வம்பு? இவளை விட்டால் வேறு பெண் இல்லையா என்று பையனின் அம்மா அபிப்பிராயப் படுவாள். கடைசியில் அவ்வாறே தீர்மானிக்கப்பட்டு "எங்கள் குலதெய்வத்துக்கு முன் பூக்கட்டி பார்த்தோம் சரியாக வரவில்லை. மன்னிக்கவும்" என்று ஒரு புருடா விடப்படும். பெண்வீட்டார் நிலை குலைந்து போவார்கள். இரண்டு மூன்று முறை இப்படி நிச்சயமாகி நின்று போனால் அதற்கப்புறம் அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் ஆவதே கஷ்டம்தான். ஏனென்றால் ஊராரே 'கசமுச' வென்று பேசத்தொடங்கி விடுவார்கள். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை முடமுடியுமா?இந்த நிலையில், இதுவரை எட்டாத பழத்துக்கு ஏங்கிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த முறைப்பையனின் மடியிலேயே பழம் விழுவதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு. 


சுவாரசியமான ஒரு இன்ஸ்ட்டியூஷன் நம்மிடையில்  இருந்து மறைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. அது உண்மையில் இழப்புதானா என்பது வேறு விஷயம். முன்னாளில் கதாசிரியர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் ரெடியாக எப்போதும் கைவசம் இருந்த ஒரு ப்ளாட் கை நழுவிப்போனது என்னவோ உண்மை !
 ** மாதவையாவின் இந்த நாவல் முதல் பாகம் 1898 லும் இரண்டாம் பாகம் இரண்டு ஆண்டுகள் கழித்தும் வெளி வந்தது.
மற்ற இரண்டு கட்டுரைகளை வரும் வாரங்களில் படிவு செய்கிறேன்


எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள்


ஐஸூக்கு வந்த மவுஸ்!
உடைந்த கையை ஒட்டின கதை
கல்யாண ஊர்வலம்
பணம் காசின் பரிணாமம்
எண்ணெய்க் குளிப் படலம்
ரயில் பிரயாணத்தின் கதை - ரயில் பயணங்களில்
அது அந்தக் காலம்

Saturday, June 10, 2006

கும்பகோணம்

[%image(20060609-kootani_vans.jpg|175|131|kootani)%]

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் பிரசார வாகனங்கள் இங்கும் அங்கும் சென்றுகொண்டிருந்த நேரத்தில்  குடும்பத்துடன் கும்பகோணம் சென்றிருந்தேன். சென்னையிலிருந்து சுமார் 300 கிமீ தூரம். வீராணம் குழாய், மதுராந்தகம் ஏரி, பண்ருட்டி பலாப்பழம், ரோடில் காயந்துகொண்டிருக்கும் கருப்பு உளுந்து, சுவரில் மாம்பழச் சின்னம் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே போனால் 7 மணி நேரம் ஆகிறது.


 


 [%image(20060609-uppiliappan_gopuram.jpg|175|131|uppiliappan)%]

கும்பகோணம் வந்தடைந்து மதியம் சாப்பிட்டபின் முதல் கோயிலாக திருவிண்ணகர் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோயில் சென்றோம். திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் பாடிய இந்தக் கோயில் கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது. பெருமாள் ஒப்பிலியப்பன் - ஒப்பற்றவன் என்று பொருள். இக்கோயில் தளிகையில்(பிரசாதத்தில்) உப்பு சேர்ப்பதில்லை அதனால் பெருமாள் 'உப்பிலியப்பன்' என்றும் அழைக்கப்படுகின்றார். (கோயிலிக்குள் உப்பையோ உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் சென்றால் நரகத்துக்குச் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது!). திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற தோற்றம். நின்ற திருக்கோலம்.


நம்மாழ்வாருக்கு பெருமாள், தானே மிகவும் உகந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார் அவை - பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என்பது ஐதீகம்.  இந்த ஐந்து பெயர்களில்


 


என்னப்ப னெக்காய்யிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
மின்னப்பொன் மதிழ் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லாப்பன் தந்தனன் தனதாழ் நிழலே


( நம்மாழ்வார் 6-3-9, 3373)


[ எனக்குத் தந்தையாகவும் பெற்ற தாயாகவும் செவிலித் தாயாகவும், உள்ளவன் எம்பெருமானே ஆவான். தங்கம், மணி, முத்து ஆகியன போன்ற என் அப்பன் ஒளிவீசும் மதிள்களுடைய திருவிண்ணகரில் உள்ளான். தன்னை அன்றி வேறு யாரும் ஒப்பாகாத அவன் திருவடி நிழலை எனக்குத் தந்தான் ]


என்று நம்மாழ்வார் மனமுருகப் பாடியுள்ளார். நம்மாழ்வார் 11 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் 34 பாசுரங்கள், பொய்கையாழ்வார் 1 பாசுரம், பேயாழ்வார் 2 பாசுரங்கள் என மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.


கோயிலில் இருக்கும் குளத்தில் மீன்கள் நிறைய இருக்கின்றன. குழந்தைகள் அவைகளுக்கு பொரி போட்டு மகிழ வெளியிலேயே  பொரி விற்கிறார்கள்.


அன்று இரவு, பக்கத்தில் இருக்கும் ஒரு சத்திரத்தில் சூடான வத்தக் குழம்பு, வாழைக்காய் பொடிமாஸ், ரசம் என்று கலக்கியிருந்தார்கள்.


[%image(20060609-sarangapani_gopuram.jpg|175|234|sarangapani)%]

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எழுந்து திருக்குடந்தை என்று அழைக்கப்படும் சாரங்கபாணி சுவாமி கோயில் விஸ்வரூப தரிசனம். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிகவும் முக்கியமான கோயில் என்று இதைச் சொல்லலாம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகள், இப்பெருமானை தரிசித்த போது கோயிலில் 'ஆரா அமுதே அடியேன் உடலன் நின்பால் அன்பாயே' (  3310 , 5-8-1) என்று தொடங்கும் திருவாய்மொழியின் பதினோரு பாசுரங்களைப் பாட கேட்ட நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து,  கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று சுட்டுவதால் அவைகளைச் சொல்லுமாறு கேட்டார். அதற்கு அங்குள்ளவர்கள் நாங்கள் அறிந்தவை இந்த பதினோரு பாசுரங்களே என்றும், ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் அங்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்றனர். ஆழ்வார் திருநகரிக்குச் சென்ற நாதமுனிகள் பிரபந்தத்தின் ஏடுகளைப் பற்றி விசாரித்தார். அங்குள்ளவர்கள் 'பிரபந்தம் மறைந்து வெகுநாள்கள் ஆயின. அதனை அருளிய நம்மாழ்வார் சீடரான மதுரகவிகள், அவரைப் பற்றி பாடிய பதினோரு பாசுரங்களைக் கொண்ட 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்னும் பதிகம் ஒன்று உள்ளது; அதனை பன்னீராயிரம் முறை உருப்போடுகின்றவர்களுக்கு முன் ஆழ்வார் தோன்றியருளுவார்' என்று சொன்னார்கள். நாதமுனிகளும் அவ்வாறே செய்து, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பெற்றார் என்பது குருபரம்பரை வரலாறு. நாதமுனிகள் முதல் தொகுப்பாசிரியர் என்று கூறலாம்.


[%image(20060609-sarangapani_chariot.jpg|175|131|chariot)%]

பெருமாளின் கருவறையைச் சுற்றிச் செல்லும் போது அந்த அழகான காட்சி நம் கண்களைக் கவர்கிறது. பெருமாளின் கருவறையே தேர்வடிவில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்ட சக்கரங்கள் கொண்ட திருத்தேர்- யானை குதிரைகளுடன் மிகவும் அழகு. இதைப் பார்த்துதான் திருமங்கை ஆழ்வார் திருவெழு கூற்றிருக்கை என்னும் பிரபந்ததை அருளிச்செய்தாரோ என்று தோன்றுகிறது.
[ திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. ஒன்று முதல் ஏழு முடிய ஏறி ஏறி இறங்கி, இறுதியில், ஒன்றாய் விரிந்து நின்றனை என்று அமைத்திருக்கிறார். தேரின் உருவமைப்பை ஒத்ததான பாடல்களைக் கொண்ட இத்திருவெழு கூற்றிருக்கை 'ரதபந்தம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ]


மொத்தம் 52 பாசுரங்களில் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 7 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். ஸ்ரீரங்கம், திருமலைக்கு அடுத்து இங்குதான் ஆழ்வார்கள் மங்களாசாசனம் அதிகம். அதே போல் 150 அடி உயரமுள்ள இங்குள்ள ராஜகோபுரம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. கோபுரத்தில் பல சிற்பங்களை மனைவியின் முறைப்புக்கு ஊடே ரசித்தேன். இந்தக் கோயிலின் குளமும் மிகவும் அழகு. கும்பகோணத்தில் சுற்றி உள்ள மற்ற கோயில்களின் குளங்களும் அழகு மிகுந்தவை.


ஆராவமுதனுக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு திருநறையூர் என்னும் நாச்சியார் கோயிலுக்குச் சென்றோம். கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 9 கிமீ தூரத்தில் இருக்கிறது. 'நாச்சியார் கோயில்' என்று சொன்னால்தான் தெரிகிறது.


அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும்
அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்
கொம்பமரும்  வடமத்தினிலை மேல் பள்ளி
கூடினான் செண்பகத்தின் வாசமுண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கொச் செங்கணான் சோந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே


( 1498 ) ( பெரிய திருமொழி 6-6-1)


[ ஆகாயம், நிலம், எட்டு திசைகள், அலைகடல், மலைகளுடன் புவிமுழுவதையும் விழுங்கி வடமரம் என்னும் ஆலமரத்தின் இலைமேல் பள்ளிக்கொள்ளக் கூடிய எம்பெருமானின் திருவடியில் கூடுங்கள். செண்பக மலர்களின் வாசனையோடு மணம்மிக்க வகுள மலர்கள் மேல் வண்டுகள் ரீங்காரம் செய்யக்கூடிய திருநறையூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம் சோழ வேந்தன் கோச்செங்கண் தொழுதிறைஞ்சிச் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேருமின்கள் என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் நூறு பாசுரங்கள் இத்தலத்திற்கே பாடியுள்ளார். ]


இந்தக் கோயிலில் மூலவர் சன்னதியில் திருநறையூர் நம்பி- ஸ்ரீநிவாசன், வாசுதேவன் என்ற திருநாமங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தாயாரை மணம்புரிந்து கொள்ளும் நிலை. தாயார் வஞ்ஜுளவல்லி ( நம்பிக்கை நச்சியார் ). பெருமாளுக்கு வலப் பக்கத்தில் நான்முகப் பிரமன். இடப் பக்கத்தில் குட்டையான திருமேனியுடன் அநிருத்தன் எழுந்தருளியுள்ளார். பக்கத்தில் புருஷோத்தமன் ஷோக்காக நின்ற திருக்கோலத்தில். இது வரை நான் பார்த்த திவ்வியதேசங்களிலேயே இந்தக் கூட்டணி தான் மிகவும் அழகான ஒரு கூட்டணி. நிச்சயம் பார்க்க வேண்டிய கோயில். இந்தச் சிற்பங்கள் சாளக்கிராமக் கல்லினால் ஆனது என்று சொல்கிறார்கள்.


[%image(20060609-nachiyar_garuda.jpg|175|115|kal garudan)%]

கோயிலின் கருவறைக்கு கீழே மண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ள சன்னதியில் பிரசித்தி பெற்ற கல் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் என்றால் கரு(சிறகுகளைக் கொண்டு) + ட (பறப்பவர்).
கருடஸேவையின் போது, சன்னதியிலிருந்து கிளம்பும்போது 4 பேர்கள் மட்டுமே ஏலப்பண்ணி (தூக்கி) வருவார்கள். அவ்வளவு எடைகுறைவாக இருப்பது, பின் 16 பேர் என்று மேலும் மேலும் ஏறத் துவங்கி முடிவில் கோயில் வாசலில் 64 பேர்களும் பிறகு படிகளில் இறங்கும் தருவாயில் பலபேர்கள் தாங்க வேண்டிய அளவுக்கு அதன் கனம் ஏறிக்கொண்டே போக, இந்தக் காட்சி பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அடுத்த முறை பார்க்கவேண்டும்.


இந்தத் தலத்தில் நீண்ட காலமாக நந்தவனத்தில் வசித்துக்கொண்டு பூஜை நேரங்களில் வந்து காட்சி கொடுத்த இரண்டு கருட பட்சிகள், 1999 ஜனவரி மாதம் 18ஆம் தேதி (தை-சிரவணத்தன்று) கோயில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே ஒன்றை ஒன்று அணைத்தவாறு மோட்சம் அடைந்தது என்று குறிப்பு இருக்கிறது. இந்தப் பட்சிகளுக்கு ஒரு சன்னதியும் இப்போது வந்துள்ளது.


கல்கருடன் சன்னதியின் எதிர்ப்புறம் பழைய பஞ்சலோக விக்கிரகங்கள் பல இருக்கின்றன. பார்க்கவேண்டியவை.


திருமங்கையாழ்வார் மட்டும் 13 பாடல்களால் மங்களாசாசனம் செய்த திருச்சேறை என்ற இடத்திற்கு அடுத்து சென்றோம். நாச்சியார் கோயிலிருந்து 10 கிமீ தூரத்தில் இருக்கிறது. பிரளய காலத்தில் பிரம்மா மண்ணால் ஒரு குடம் செய்து அதில் சகல வேதங்களையும் மறைத்து வைத்துக் காப்பாற்ற எண்ணினார். பல இடங்களில் மண் எடுத்துக் குடம் செய்ய, எல்லாம் உடைந்து போக, கடைசியாக இங்கு வந்து மண் எடுத்துக் குடம் செய்தபோது அது உடையாமல் இருந்தது என்பது புராண வரலாறு. ஆகவே இத்தளம் திருச்சேறை என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில் பெருமாள் 5 தாயார்களுடன் காட்சி கொடுப்பது இங்கு மட்டும்தான்.


[%image(20060609-thirucherai_small_girl.jpg|175|234|small girl)%]

கோயிலுக்குள் நுழையும் போது ஆறு வயதுக் குழந்தை, ஐந்து ரூபாய்க்கு துளசி வாங்கிக் கொள்ளுங்கள் என்றது. கோயிலில் மூலவர் ஸாரநாதன், தாயார் ஸார நாயகி. கோயிலிருந்து வெளியே வரும் போது அங்குள்ள குளம் கண்களைக் கவர்கிறது. பெருமாளை சேவித்துவிட்டு வரும் போது, துளசி விற்ற சின்னப் பெண் பெயர் என்ன என்று கேட்டேன் - ஸார நாயகி என்றாள் மூக்கொழுகிக்கொண்டு!.


  


[%image(20060609-pasumai_pics.jpg|175|131|pasumai)%]

அடுத்ததாக அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் திருப்புள்ளம்பூதங்குடி மற்றும் திருஆதனூர். சுவாமிமலைக்குப் போகும் வழியில் இருக்கிறது. போகும் வழியெல்லாம் பசுமையான காட்சிகள், வாய்க்கால் என்று  அக்மார்க் கிராமம். சமீபத்தில் விஜயகாந்த் கட்சி நுழைந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நான் போன சமயம் கோயிலில் யாரும் இல்லாமல் புன்னை விருட்சப் பூக்கள் மட்டும் அமைதியாக ஆடிக்கொண்டிருந்தன. உள்ளே இருந்த காவலர்( நாராயண சாமி) எல்லா சன்னதிகளையும் திறந்து காண்பித்து தள புராணத்தையும் விளக்கினார் - ஜடாயுவுக்கு மோட்சமளித்துவிட்டு இறுதிக்கடன் செய்த ஸ்தலம் என்று சொன்னர்.


திருஆதனூர் செல்லும் முன் இந்த ஸ்தலம் பற்றி திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றை பார்க்கலாம்.


அறிவதறியா னனைத்துலகும்
உடையானென்னை யாளுடையான்
குறியமானி யுருவாய
கூத்தன் மன்னி யாமருடம்
நறிய மலர்மேல் சுரும் பார்க்க
எழிலார் மஞ்ஞை நடமாட
பொறிகொள் சிறை வண்டிசை பாடும்
புள்ளம் பூதங்குடிதானே.


( 1348, 5--1-1 பெரியதிருமொழி )


[ எல்லா உலகங்களில் உள் உயிராய் ஆளும் இறைவன், எவராலும் தன் முயற்சி கொண்டு அறிய முடியாதவன். அவன் அடியேனை அடிமை கொண்டான். குள்ள வடிவில் பிரம்மசாரியாய் வந்த வாமன பகவானும் அவனே. இப்பெருமான் எழுந்தருளிய திருத்தலம் திருப்புள்ளம் பூதங்குடி ஆகும். இவ்வூரில், மணம் மிகுந்த பூக்களில் தேனீக்கள் அமர்ந்து ரீங்காரம் செய்யும்; மயில்கள் ஆடும்; பொறி வண்டுகள் இசை பாடும். ]


புள்ளம்பூதகுடியிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது திருஆதனூர். காமதேனு இங்கு தவமிருந்து பாடியதால் இத்தலத்திற்கு திரு ஆதனூர்( ஆ - பசு ) என்று பெயர். நான் போன சமயம் கோயில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. மூலவர் ஆண்டளக்குமையன். ரங்கநாதர் போல் பள்ளிக்கொண்டுள்ளார். தலையின் கீழ் மரக்காலும் இடது கையில் ஓலையும் எழுத்தாணியும் இருக்கிறது. திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். கோயில் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது, நிச்சயம் அங்குள்ள தேர் பழுதுப் பார்க்கப்படும் என்று நம்புவோம்.


[%image(20060609-old_temple_1.jpg|175|131|old temple)%]

திரும்பி வரும் போது, இரட்டை இலை, உதய சூரியன் சின்னங்களுக்கு இடையில் பாழடைந்த கோயில் ஒன்று புதருக்குள் இருந்தது. பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் அதை பற்றி யாருக்கும் தெரியவில்லை. என்ன கோயில், யார் கட்டியது என்று யாருக்கும் தெரியாமல் புதருக்குள் ஒரு புதிராகவே இருந்தது.


 கும்பகோணம் ஆல்பம்


திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்)
திருக்குடந்தை (சாரங்கபாணி சுவாமி )
திருநறையூர் (நாச்சியார் கோயில்)
திருச்சேறை
திருப்புள்ளம்பூதங்குடி
திருஆதனூர்
புதருக்குள் கோயில், பசுமை காட்சிகள், கூட்டணி வண்டிகள்


[ Most of the pictures were taken by me during my trip, some pictures like moolavar's are from my albums/archives ]
<hr>
என் மற்ற பயணங்கள்
நவதிருப்பதி
மதுரை திவ்வியதேசங்கள் மூன்று
ஸ்ரீவில்லிப்புத்தூர்
திருமெய்யம்
திருநீர் மலை, திருப்பதி