Skip to main content

சித்திர நாலாயிரம்


நேற்று ஸ்ரீரங்கம் பெருமாளை ஓசி பாஸ் மூலம் தரிசித்து விட்டு வரும் வழியில் வடக்கு சித்திர வீதியில் திரு S.R.ஸ்ரீநிவாசன் அவர்களின் ஓவிய கண்காட்சிக்கு சென்றது ஒர் இனிய அனுபவம்.



[%image(20060529-srinivasan.jpg|200|267|S.R.Srinivasan)%]

நான் போன சமயம், சிலர் கையில் ஒரு பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு ஓவியத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்.


மிக எளிமையாக ஒரு மேல்துண்டுடன் வந்தவர்களுக்கு எல்லாம் தான் வரைந்தவற்றை விளக்கிக்கொண்டிருந்தார். சித்திர கவி பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு, அதாவது கவிதையை சித்திர வடிவில் எழுதுவது. ஆனால் திரு ஸ்ரீநிவாசன், கவிதையால் சித்திரத்தை வரைந்துள்ளார். ஆம், கோடு, புள்ளி எதுவும் இல்லாமல், நாலாயிர திவ்வியப்பிரபந்ததைக் கொண்டு 108 திவ்விய தேச பெருமாளை அந்தந்த நிலைகளிலேயே வரைந்துள்ளார்.


[%image(20060529-srinivasan_and_others.jpg|200|150|Srinivasan + crowd)%]

உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் பெருமாளை 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 247 பாட்டுக்களால் வரைந்துள்ளார்.


அதுவும் எப்படி, திருப்பாணாழ்வார் பாடிய 'அமலனாதிப்பிரான்' என்ற பாட்டில் வரும் திருவரங்கனின் அழகை அவர் அங்கங்களுக்கு கச்சிதமாக பொருத்தியுள்ளார். ( 'திருக் கமல பாதம்வந்தென்கண்ணி' என்ற வரியை- பாதத்திற்கும், நீள்முடியன்.. என்ற வரி தலைக்கும்; திரு வார மார்பதன்.. - மார்புக்கும் அழகாக பொருத்தியுள்ளார்) பிரபந்தத்தை அனுபவித்தால் தான் இது போல் செய்யமுடியும்.


இதே போல் ராமாநுஜ நூற்றந்தாதியைக் கொண்டு ராமானுஜர், குலசேகர ஆழ்வார் பாடிய 10ஆம் திருமொழியை கொண்டு ராமர் பட்டாபிஷேகம்; விஷ்ணுசகஸ்ரநாமம் கொண்டு விஷ்ணு; மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பைக் கொண்டு நம்மாழ்வார்; திருப்பாவையை கொண்டு ஆண்டாள், 4000 திவ்வியபிரபந்த அடிவரவை கொண்டு ஸ்ரீநிவாச பெருமாள்; என்று எல்லா படங்களும் வியப்பை தருகின்றன.


ஸ்டேட் பாங்கில் வேலை பார்த்துக்கொண்டு, வீட்டில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சுமார் 60 நாட்கள் கஷ்டப்பட்டு இந்த ஓவியங்களை வரைந்துள்ளார். இந்த ஓவியம் அனைத்தும் புத்தகமாக வந்துள்ளது.
ஓவியம் பார்க்க வந்த ஒருவர் "சார் புத்தகம் என்ன விலை?" என்றார்.
"இந்த புத்தகத்துக்கு விலை நிர்ணயம் செய்யவில்லை, ஆனால் ஒரு திவ்விய தேசத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும்" என்றார் ஸ்ரீநிவாசன் தன்னடக்கத்துடன்.


இந்த செய்தி பற்றி
TheHindu
தினத்தந்தி


[%image(20060529-cucum.jpg|200|150|cucum fruit)%]

* ஸ்ரீரங்கத்தை கடந்து வந்த போது "பாபி" திரைப்படம் ஊர்வசி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்ற மிகப் பெரிய போஸ்டர். அதற்கு கீழே "நான் ரெடி, நீங்க ரெடியா" என்று ஒரு பெண் சொல்லுவதாக... காவிரி பாலத்திற்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் எவ்வளவு வித்தியாசம் !


 * திருச்சி வெயிலுக்கு வெள்ளரி பழம் கிடைக்கிறது. அழகாக வாழை மட்டையில் சுற்றி....ஒரு பெரிய பழத்தின் விலை ரூ10. சக்கரை, ஐஸ் கட்டியும் போட்டு சாப்பிட்டால் ... ஆஹா


சில படங்கள்:


[%popup(20060530-4000_1.jpg|224|300|1)%][%popup(20060530-4000_2.jpg|300|224|2)%][%popup(20060530-4000_3.jpg|300|224|3)%][%popup(20060530-4000_4.jpg|300|224|4)%]

திரு S.R.ஸ்ரீநிவாசனின் முகவரி
149, ஸ்ரீரங்க பாதுகா,
கீழச்சித்திர வீதி,
ஸ்ரீரங்கம்,
திருச்சி - 620006
Phone: 0431-2437835
Mobile: 94437 37321
srirangasri1960@yahoo.co.in

Comments