Skip to main content

சுடு தேங்காய்

தேங்காயை பார்த்தால் எனக்கு 'சுடு தேங்காய்' ஞாபகம் தான் வரும். சின்ன வயசில் என் தாத்தா (தற்போது அவருக்கு வயது 96)  வீட்டுக்கு போன போது, இதை எனக்கு எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்தார். அதை உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன்.


தேவையான பொருட்கள்:
1. குடுமியுடன் ஒரு நல்ல முற்றிய தேங்காய்.
2. பொட்டுக்கடலை( உடைத்த கடலை ) - ஒரு பிடி
3. வெல்லம் - - ஒரு பிடி
4. கற்கண்டு - அரை பிடி
5. அவல் - ஒரு பிடி
6. முந்திரி பருப்பு - அரை பிடி
7. ஒரு டம்ளர், ஒரு ஸ்பூன்
8. நெருப்பு பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி.


செய்முறை:முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். அதை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள்.  மேற் சொன்ன தேவையான பொருட்கள் ( கடைசி இரண்டைத் தவிர ) எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங்கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேருங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின் குடுமியை திருப்பி அதன் துளையை நன்றாக அடையுங்கள்.


ராத்திரி ஆனவுடன், நண்பர்களுடன் மரத்தடிக்கு போய் கொஞ்சம் காய்ந்த இலை, குச்சிகள் போன்றவற்றை பற்றவைத்து அதில் தேங்காயை தலைகீழாக போடவும். கொஞ்ச நேரத்தில் ஒர் அருமையான வாசனை வரும். பொறுங்கள். சிறிது நேரம் கழித்து தேங்காய் மேல் ஓடு கருப்பாகிவிடும். மெதுவாக அதை ஒரு குச்சியில் தட்டி நெருப்பிலிருந்து எடுத்து விடுங்கள். சூடு தணிந்த பின் எல்லோரும் உடைத்து சாப்பிடவேண்டியதுதான். அந்த சுவையை வர்ணிக்க முடியாது.


பிகு: கியாஸ் அடுப்பு, மைக்ரோ வேவ் போன்றவற்றில் சமைக்க முடியாது.

Comments