Monday, February 27, 2006

பலே பல்வந்த்பூரா

[%image(20060226-Peoplesrailway.jpg|160|160|People's railway station)%]

ரயில்வே பட்ஜட்டில் ரயில் டிக்கேட் எவ்வளவு கம்மியாகியிருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்த போது, NDTVல் பல்வந்த்பூரா ஸ்டேஷனை பற்றி ஒரு கொசுரு செய்தியை கான்பித்தார்கள்.


பல்வந்த்பூரா(Balwantpura) ஜெய்பூரிலிருந்து நூற்றியருபது கி.மீ தூரத்தில் இருக்கிறது.  இந்திய வரைபடத்தில் இந்த மாதிரி ஓர் ஊர் இருக்கா என்று கூட தெரியாது.இந்த 1994 ஆம் ஆண்டு முதலே பல்வந்த்புராவில் வசிப்பவர்கள் தங்கள் ஊருக்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் விரும்பி, ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் போதிய அளவு நிதியில்லை என்று ரயில்வே நிராகரித்தது.


இதனால் சுற்றி உள்ள ஐந்து கிராமங்களில் இருப்பவர்கள் பஞ்சாயத்தில் ஒன்று கூடி தாங்களாகவே ஸ்டேஷன் கட்ட முடிவு செய்தனர். அவர்கள் ரயில்வேயிடம் "நாங்கள் ஸ்டேஷன் கட்டினால் நீங்கள் அட்லீஸ்ட் இந்த வழியாக வரும் ரயிலை நிறுத்துவீர்களா என்றனர்?" ரயில்வே சம்மதிக்கவே 20,000 மக்கள் கொண்ட ஊர் மக்கள், பக்கத்தில் உள்ள பள்ளி, கல்லூரி என்று நன்கொடை வசூலித்து தாங்களாகவே ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள்.  அங்கு டீக்கடை வைத்திருப்பவர் கூட ஸ்டேஷன் கட்டும் பணியாளர்களுக்கு இலவச டீ சப்பளை செய்து தன்னால் ஆன உதவியை செய்துள்ளார்!


ஒரு சின்ன பிளாட்பாரம், நான்கு பென்ச்கள், குடிக்க ஒரு தண்ணீர் குழாய் என்று 8 லட்சம் ரூபாய் செலவில் ஒரு ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள். பின்னர் ரயில்வே அதிகாரிகள் அதை ஸ்டேஷனாக ஏற்றுக்கொண்டு அதன் வழியாக போகும் ரயில்களை ஒரு நிமிடம் நிறுத்த சம்மதித்தனர். இந்த ஸ்டேஷன் கட்டிய ஒரு வருடத்தில் 12,918 பயணிகள் ரயில் ஏறி இறங்கியிருக்கிறார்கள். ரயில்வேக்கு இதனால் கிடைத்த வருவாய் 1.5 லட்சம் ரூபாய்!.


ரயில்வேயிலிருந்து ரிடையர் ஆன பஜ்ரங் லால் இந்த ஸ்டேஷனை தற்போது சம்பளம் எதுவும் வாங்காமல் பார்த்துக்கொள்கிறார். இந்த ஸ்டேஷனில் இன்னும் டிக்கெட் கவுண்டர் இல்லை; பயணிகள் ரயில் வந்தவுடன் காப்பாளரிடம்(Guard) டிக்கெட் வாங்கிக்கொள்கிறார்கள்.


அடுத்த முறை நாம் ரோட்டில் மேடு பள்ளம் என்று புலம்பும் முன், பல்வந்த்பூரா கிராம மக்கள் நம் நினைவில் வர வேண்டும்.

Saturday, February 25, 2006

IVA

[%image(20060225-iva_kid.jpg|240|180|IVA photo1)%]

நம்மில் பலர் சமூக சேவை என்றால் அமெரிக்காவில் இருந்து $100 அல்லது உள்ளூர் ரூ1000/= கொடுத்து ரசீது வாங்கி வருமான வரி குறைப்புக்கு(80G) உபயோகப்படுத்துவது; CRY கார்ட் வாங்குவது; அலுவலகத்தில் வைத்திருக்கும் அட்டைபெட்டியில் உபயோகபடுத்திய துணிமணிகளை போடுவது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நானும் சமூக சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொள்ளாலாம் அவ்வளவுதான். வயலில் இறங்கி வேலை செய்தால்தான் விவசாயின் கஷ்டம் தெரியும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். அதேபோல் தான் இதுவும். களத்தில் இறங்கி வேலை செய்தால்தான் அது எவ்வளவு கஷ்டமான ஆனந்தமான செயல் என்று தெரியும். IVA பற்றி இந்த பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சிகொள்கிறேன்.


IVA என்பது "Individuals for Voluntary Activities" என்பதின் சுருக்கம்.
முதலில் Infosysல் வேலை செய்யும் சிலரால் 2003ல் ஆரம்பிக்கபட்டது. பிறகு மற்ற நிறுவனங்களின் மென்பொருளார்கள் இதில் சேர்ந்து இன்று 700க்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்!.


முதலில் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தர ஆரம்பித்த இவர்கள் பிறகு கண்தெரியாதவர்கள், முதியோர் போன்றவர்களுக்கு உதவி என்று இவர்கள் பட்டியல் நீள்கிறது.


* ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது.


* கண் தெரியாதவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது; அவர்களுக்கு தேர்வு எழுத உதவுவது.


* மனநலம் குன்றியவர்களுக்கு உதவுவது.


* ரத்த தானம், மருத்துவமூகாம்.


* பாட்டு, நடன வகுப்புகள்.


* ஆதரவற்ற குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வது என்று நிறைய செய்கிறார்கள்.


கோயிலுக்கு சென்று உண்டியிலில் காசு போடுவதற்கு பதில் இவர்களுக்கு உதவுவது மேல்.


வரும் வாரங்களில் இவர்களோடு சேர்ந்து நானும் ஏதாவது செய்யலாம் என்று எண்ணம் இருக்கிறது.


மேல் விபரங்களுக்கு :
www.pureportals.com/iva  http://www.ravixp.net/IVA/

Wednesday, February 22, 2006

முழு வீச்சில் வேதாளம்

விக்கிரமாதித்தன் பத்தாவது மாடியில் ஒரு புது ஃபிளாட் வாங்கியிருந்தான். பால்கனியில் பக்கோடா, டீ சாப்பிட்டுக்கொண்டு குமுதம் நடுப்பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தான், பார்த்துக்கொண்டிருந்தான் என்பது தான் சரியான வார்த்தை பிரயோகமாக இருக்கும்.


வேதாளம் எட்டிப் பார்த்தது."ஐயோ! இங்கேயும் வந்துட்டையா?" என்று அதிர்ச்சியில் விக்கிரமாதித்தன் கத்தினான்.
 
"புது வீடு நன்றாகத் தான் இருக்கிறது!"


"இருக்காதா பின்ன, எல்லாம் மார்பிள், கிரானைட்"


"தமிழில் பேசு, மார்பிள் - சலவைக் கல், கிரானைட் - கருங்கல்"


"ஐயோ!"


"உனக்குத் தெரியுமா ? இந்த மார்பிள், கிரானைட்டில் கதிர் வீச்சு இருக்கிறது!"


"ஆரம்பிச்சுட்டையா உன் வேலையை" என்று விக்கிரமாதித்தன் கடுப்பானான். வேதாளம் வழக்கம் போல் தொடந்தது...


"மார்பிள் ( சலவைக் கல் ), கிரானைட் ( கருங்கல் ) ஆகியவற்றில் கொஞ்சம் கதிரியக்கமுள்ள மூலப் பொருட்கள் (Radioactive elements) வெவ்வேறு விகிதத்தில் இருக்கின்றன. 


"யுரேனியம்(uranium), தோரியம்(Thorium) இவற்றில் தான் இருக்குன்னு நினைச்சேன்"


"அது ஜேம்ஸ் பாண்ட் படத்தோட பாதிப்பு" என்று வேதாளம் சிரித்து மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தது..


"ஒரு கிலோ கருங்கல்லில் சுமார் அறுபதிலிருந்து எழுபது அணுக்கள் யுரோனியமும் பத்து அணுக்கள் தொரேனியமும் இருக்கின்றன. அதில் கதிர்வீச்சு விநாடிக்கு விநாடி இருக்கிறது.  இந்தக் கதிர்வீச்சுகளிலிருந்து ராடான் என்ற வாயு உற்பத்தியாகிறது. சலவைக் கல்லில் கருங்கல்லில் இருக்கும் அளவைவிட பத்தில் ஒரு பங்கு தான் கதிர்வீச்சு இருக்கிறது. நம் திசு(tissue) கதிர்வீச்சினால் உறுஞ்சும் சக்தியை(energy) மில்லிரெம்ஸில்(millirems) என்று அளக்கிறார்கள். காற்று, தண்ணீரில் கூட கதிர்வீச்சு இருக்கிறது. ஏன் உன் மனைவியிடம் கூட இருக்கிறது!"


"என்ன?"


"ஆமாம். சண்டைபோடாமல், எட்டு மணி நேரம் மனைவி பக்கத்தில் படுத்துத் தூங்கினால் 2 mrems கதிர்வீச்சு இருக்கும். இது நம் உடலில் இருக்கும் பொடாஸியத்தால் (சாம்பலச்சி) வருகிறது. அணுமின் நிலையத்திலிருந்து ஐம்பது மைல் தூரத்தில் இருப்பவர் 0.009mrems அளவிற்கு கதிர்வீச்சுக்கு ஆளாக்கபடுகிறார்; புகைபிடிப்பவருக்கு 16,000 mrems; சொத்தைப் பற்களுக்குப் போடும் மூடி(cap) மற்றும் பற்களை வெண்மையாக்கக் காண்பிக்கும்(whitening agents) மருத்துவப் பொருட்களில் யுரேனியம் கலந்திருக்கிறது. நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்தால் ஒவ்வொரு 1000 மைல்களுக்கு 1 mrem; நியூயார்க் கிராண்ட் செண்ட்ரல் ஸ்டேஷன் 120 mrem - அங்கு உபயோகப் படுத்தியுள்ள கருங்கற்களில் நிறைய யுரேனியம் இருக்கிறது. 


"வயத்தில புளியக் கரைக்கிற" என்று விக்கிரமாதித்தன் முகத்தில் கலவரம் தெரிந்தது.


"பயப்படத் தேவையில்லை. இதனால் நமக்கு பாதிப்பு இல்லை. சரி கம்மியாகக் கதிர்வீச்சு உள்ள கருங்கல் எங்கு கிடைக்கிறது தெரியுமா ? எகிப்து மற்றும் இந்தியாவில் தான் கிடைக்கிறது" என்றது வேதாளம்.


"சீக்கிரம் கிளம்பு; இல்லை, உன்னை பால்கனியிலிருந்து தள்ளிவிட்டுவேன்!" என்று விக்கிரமாதித்தன் வேதாளத்தை எச்சரித்தான்.


"இது என்ன உயரம், ஒரு ஆயிரம் அடி இருக்குமா ?"


"தெரியாது, என்கிட்டே அவ்வளவு பெரிய ஸ்கேல் கிடையாது" விக்கிரமாதித்தன் கடுப்படித்தான்.


"சரி ஒரு பாரோ மீட்டர்(Baro Meter - வாயு பாராமனி) இருந்தால் கொடு, நான் எவ்வளவு என்று அளந்து சொல்லுகிறேன்,ம்" என்றது வேதாளம்.


"ஒளராத! பாரோ மீட்டரை வெச்சு எப்படி உயரத்தை அளக்க முடியும் ?" என்றான் விக்கிரமாதித்தன்.


வேதாளம் சிரித்துக்கொண்டு "ஒரு பெரிய கயிரை எடுத்துக்கொள்; ஒரு பக்கத்தில் பாரோ மீட்டரைக் கட்ட வேண்டும், இப்போது கயிற்றை கட்டிடத்தின் மேலிருந்து கீழே இறக்க வேண்டும், முனை தரையைத் தொட்டவுடன் கயிற்றின் அளவை அளக்க வேண்டும்"


"என்ன நக்கலா ?"


"இதைவிட ஒரு சுலபமான வழி இருக்கிறது. பாரோ மீட்டரை பால்கனியிலிருந்து கீழே போடு. ஒரு ஸ்டாப் வாட்சைக் கொண்டு அது கீழே விழ எவ்வளவு நேரம் ஆகிறது என்று பார்க்க வேண்டும் பிறகு S=1/2at 2 என்ற சூத்திரத்தை(formula) வைத்துக் கண்டுபிடிக்கலாம்"


"அப்படியா ?" விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. வேதாளம் விடுவதாக இல்லை


"இன்னொரு முறை இருக்கிறது. பாரோ மீட்டரை மொட்டைமாடியில் எடுத்துக்கொண்டு போய் நிற்க வை, கீழே விழும் நிழலை அளந்து பார். பிறகு உன் வீட்டின் நிழலை அளந்து பார். பிறகு ஒன்றுக்கொன்றுள்ள தராதரம் (proportion)வைத்து சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்"


"o o" என்று விக்கிரமாதித்தன் முழித்தான். வேதாளம் தொடர்ந்தது..


"ஒரு கயிற்றை பாரோமீட்டரில் கட்டி, கடிகாரத்தின் பெண்டுலம் போல் ஆட்ட வேண்டும். அதிலிருந்து 'g' ( புவியீர்ப்பு ) கண்டுபிடிக்க வேண்டும். அதிலிருந்து வீட்டின் உயரத்தைக் கண்டுபிடிக்கலாம்"


இதற்கு மேலும் விட்டால் வேதாளம் ஏதாவது பேசிக்கொண்டு இருக்கும் என்று நினைத்து, விக்கிரமாதித்தன் வேதாளத்தை பால்கனியிலிருந்து தூக்கிப் போட்டான்.  வேதாளம் பறந்து கொண்டே சொன்னது...


"கீழ் மாடியில் பாரோமீட்டரில் காற்றழுத்தம் எவ்வளவு என்று பார். பின் மேல்மாடிக்குப் போய்ப் பார். காற்றழுத்தம் மேலே போகப் போக கம்மியாகும்; அதை வைத்து வீட்டின் உயரத்தைக் கண்டுபிடிக்கலாம்" என்று சொல்லிப் பறந்தது.


விக்கிரமாதித்தன் மீதி பக்கோடாவைச் சாப்பிட ஆரம்பித்தான்.


மற்ற விக்கிரமாதித்தன் வேதாளம் பதிவுகள் ]

Tuesday, February 21, 2006

ஐந்து புத்தகங்கள்

வாரயிறுதியில் சென்னை செல்லும் போது 'நியூ புக் லெண்டஸ்'  செல்வது வழக்கம். அங்கு நண்பர் ஸ்ரீநிவாசனிடம்  'எந்த புத்தகம் நன்றாக போகிறது?' என்று விசாரிப்பேன். சென்ற வாரம் விசாரித்ததில் முதல் ஐந்து புத்தகங்கள் என்று அவர் சொன்னதை வலது பக்கம் தந்துள்ளேன்.


மாதம் ஒரு முறை புதுபிக்கலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம்.


தகவல் சொன்ன ஸ்ரீநிவாசனுக்கு நன்றி

Thursday, February 16, 2006

அறிவிப்பு

www.desikan.com  தளம் இயங்கும வழங்கி (சர்வர்) சில தடங்கல்களை நேற்று சந்திக்க நேர்ந்தது. இதனால் நேர்மை என்ற பதிவை பலர் படிக்கமுடியாமல் போய்விட்டது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தடங்கலுக்கு மன்னிக்கவும்.
என்னை தனி அஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி.


நேர்மை என்ற பதிவை தொடர்ந்து படிக்க இங்கு சுட்டியை கிளிக் செய்யவும்.


 

Wednesday, February 15, 2006

நேர்மை

சமிபத்தில் படித்த நல்ல பதிவு நண்பர் பிரதீப் எழுதியது.தலைப்பு நேர்மை. இதை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்ததா என்று தெரியவில்லை. இதை இங்கு பிரசுரிக்கிறேன். அனுமதி தந்த பிரதீபுக்கு நன்றி. இப்போது கூட லேட் இல்லை நாம் மாறலாம்.


Rental Reciept, Medical Bill, Savings proof என்று எல்லா officeகளிலும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இடத்திலும் மார்ச் 15க்குள் எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனங்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையான நிறுவனம் ஆகத் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அத்தாட்சிகளைப் பெறும் முறையையும் ஒழுங்கையும் வைத்துத் தான் சொல்கிறேன். மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் HRA, Medical Allowanceக்காக ஒரு நயா பைசா வரி கட்டாமல் அனைத்தையும் அடைய நடத்தும் நாடகங்கள் இருக்கிறதே..7 பேர் சேர்ந்து ஒரு வீட்டில் 6,000 வாடகைக்கு தங்கிக் கொண்டு, rent reciept என்றவுடன் ஆளாளுக்கு 6,000 போட்டுக் கொள்வதும், இவனுக்கு அவன் கையெழுத்து இடுவதும், அவனுக்கு இவன் கையெழுத்து இடுவதும் சர்வ சாதாரணம். அப்படி ஒரு 12 மாதத்திற்கான குப்பையையும் அள்ளி ஆபிஸில் சமர்ப்பித்து விட்டால் போதும், கொஞ்சம் வரியை விலக்கி விடலாம். இந்த மாதிரி நாடகங்களில் நடித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் அது கமலஹாசனையோ, ஓம்பூரியையோ சிவகாசி, ஆதி போன்ற படங்களில் நடிக்க வைத்தால் அவர்களுக்கு எப்படிக் கசக்குமோ அதே கசப்புணர்ச்சியுடன் தான் நடித்தேன்..அதற்காக இன்றும் வருந்துகிறேன். இன்னும் வருந்துவேன். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்று என்னை நீங்கள் வியப்பாய் பார்ப்பது எனக்குப் புரிகிறது...
என் அலுவலகத்தில் அவர்கள் இந்த அத்தாட்சிகளை சமர்ப்பிக்க சொன்ன விதம் இந்த மாதிரி சால்ஜாப்புகளை கொஞ்சம் குறைக்கும் போலிருக்கிறது. HRA விலும், Medical Bill லும் வரி விலக்கு வேண்டுபவர்கள் செய்ய வேண்டியவை:


 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வாடகை ஒப்பந்தப் பத்திரம்.


2,500 க்கு வாடகை செலுத்தினால் செக்கில் செலுத்தி இருக்க வேண்டும். அந்த செக் நம்பரை வாடகை ரசீதில் குறிப்பிட வேண்டும்.


மருந்து ரசீது 500 ரூபாய்க்கு மேல் தாண்டினால் டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


கண்ணாடி, லென்ஸ் போன்ற செலவுகள் 1,500 ரூபாயை தாண்டக்கூடாது.


ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற வஸ்துக்கள் மருத்துவச் செலவில் காட்டக் கூடாது.


இந்த கெடுபிடிகளை அனுசரித்து, இந்த முறையாவது நேர்மையாய் நடந்து கொள்வோம் என்று அதற்கேற்ப நான் நடந்து கொண்டேன். உரிய வாடகைக்கு வீட்டுக்காரரிடம் சொல்லி பத்திரம் தயாரித்தேன்.எல்லோரும் இப்படித் தானே மாறி இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் கொஞ்சம் மெதுவாக உங்கள் தலையில் கொட்டிக் கொள்ளுங்கள். கள்ளன் பெருசா, காப்பான் பெருசா என்று ஒரு பழமொழி இருக்கிறது..நீ இவ்வளவு கெடுபிடி பண்றியா, இதோ எனக்கு வேற ரூட் இருக்கு என்று சாதாரண மக்களே அரசாங்கத்தை ஏமாற்றும் போது, சாப்·ட்வேர் இன்சினியர்கள் எந்த விதத்தில் குறைச்சல்னேன்? உள்ள போன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க; வெளியே உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க என்று தலைவர் பாட்டு சரியாகத் தான் இருக்கிறது..யாரும் எதற்கும் சலைத்தவர்கள் இல்லை. பெங்களூரிலாவது வாடகை விஷ ஜுரம் வந்தது மாதிரி ஏறி கிடக்கிறது. சென்னையில் அவ்வளவு இல்லை தான்..கொடுப்பது 4000 இருந்தும் ஆளாளுக்கு 6,000, 7000 என்று வாடகை போட்டாயிற்று [அதில் 7 பேர் வாழ்வது வேறு விஷயம்!]சரி! இனி போலி பத்திரம் தயாரிக்க வேண்டும். பத்திரத்தில் எழுதிக் கொண்டால் வீட்டுக்காரர் அதை வருமானமாய் காட்டி அதற்கு வேறு வரி கட்ட வேண்டும். அதற்கு அவர் சம்மதிப்பாரா? இதில் கொடுக்கும் பணத்தை செக்கில் வேறு தர வேண்டும், இதெல்லாம் ஆவுறதில்லை. சரி 7 பேர் இருக்கோம், பாங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒருத்தனை புடி..மாப்ளே நீ தாண்டா ஹவுஸ் ஓனர். பத்திரத்துல கையெழுத்து போட்றா. நான் உனக்கு 7000 ரூபாய்க்கு ஒரு செக் தர்றேன். அவ்வளவு தான். மேட்டர் ஓவர்.


ஏமாற்றுவது என்பது எவ்வளவு சுலபமாகி விட்டது. தப்பு என்பது எந்த அளவுக்கு நம் உடம்பில் ஊறி விட்டது. நேர்மை என்பதை நாம் மறந்து போய் பல நூற்றாண்டுகள் ஆகி விட்டதோ? அரசியல்வாதிகளை குறை சொல்வதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்களுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஒரு சில ஆயிரங்களை காப்பாற்றுவதற்காக சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் எந்த தைரியத்தில் இப்படி செய்கிறோம்? சுய ஒழுக்கம், நேர்மை, ஒழுக்கம் என்பது நம்மிடம் எப்போது வரும்? அது இல்லாமல் நாட்டின் முன்னேற்றத்தை பற்றிய கனவு வெறும் பகல் கனவு தானே? இவ்வளவு தப்புகளை செய்து கொண்டு நம்மால் எப்படி நிம்மதியாய் தூங்க முடிகிறது? இயக்கம், கொள்கை என்று ஆயிரம் பேசுபவர்கள் கூட தங்களுக்கு என்று வரும்போது சந்தர்ப்பவாதிகளாய் மாறி விடும் கொடுமை இந்த நாட்டில் தான் நடக்கிறது. அவன் சரியாக இல்லை, நான் ஏன் இருக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?


ஒரு ·பார்வேர்ட் மெயில் வந்தது. அப்துல் கலாமின் உருக்கமான பேச்சு, இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றிய அவர் கனவு என்று..அனுப்பியவனிடம் கேட்டேன்..நீ இந்த முறை சரியான rent reciept submit செய்தியா என்று? பதிலே இல்லை; வேலை அதிகம் போலும்.

Friday, February 10, 2006

பெண்களூர்-0 6

நேற்று தான் பெங்களூர் வந்தது போல் இருக்கிறது, அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி வாரயிறுதி ஏதாவது ஒரு காரணம் வைத்துக்கொண்டு சென்னை சென்றிருக்கிறேன்.  போன ஜென்மத்தில் ரயில்வேக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த ஒரு வருடத்தில் இரண்டு வீடு மாத்த வேண்டியிருந்தது. தற்போது புதிதாக குடிபெயர்ந்த வீட்டின் பால்கனியில் வாழைப்பழம் சாப்பிட்டால் ஆபத்து. காரணம் கடைசியில்.பெங்களூரில் வீடு தேடுவது அவ்வளவு சுலபம் இல்லை.


வீடு தேடும் போது முதல் முதலில் இவரைதான் சந்தித்தேன்.
"சார், உங்கள் வீடு காலி என கேள்விப்பட்டேன் .."
"ஆமாம், நீங்கள் எவ்வளவு பேர்?"
"நான், என் மனைவி, குழந்தை, வீட்டை பார்க்கலாமா ?"
"அப்படியா? வாடகை 14,000/= அதைத்தவிர மெயிண்டெனஸ், EB...எல்லாம் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்"
"சார் விட்டை பார்க்கலாமா..."
"ஆணி அடிக்க கூடாது, நாய் வளர்க்க கூடாது..."
"சார் வீட்டை பார்க்கலாமா..."
"பால்கனியில் பூத்தொட்டி வைக்கக் கூடாது"
"அப்புறம் கடைசியாக ஒரு கண்டிஷன். நான் கொடுக்கும் சாய்பாபா படத்தை ஹாலில் மாட்ட வேண்டும்"


"சரி சார், இன்னும் கொஞ்சம் கண்டிஷன்களை யோசித்து வையுங்க நான் அப்புறம் வரேன்"
என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லவில்லை.


அடுத்ததாக FreeAds பேப்பரில் வந்த நபரை போனில் அழைத்தேன்.
"சார், FreeAds  பேப்பரை பார்த்து போன் செய்கிறேன், ஐ வாண்டு டாக் டு ராஜேஷ்"
"எஸ். ராஜேஷ் ஸ்பீக்கிங்"
"உங்க வீட்டோட விளம்பரம்.. "
"2BHK, ஈஸ்ட் ஃபேசிங், பூஜா ரூம், பால்கனி..." என்று அடுக்கிக்கொண்டு போனார்
"சார் வீட்டை எப்போ பார்க்கலாம்"
"இப்பவே, எனி டையம் ஐயம் ரெடி, Where are you put up now"
"சாந்தி சாகர் பக்கத்தில இருக்கேன்"
"ஓ, குட், நானும் அது பக்கத்துலதான் இருக்கேன், பக்கத்துல ஒரு பச்சை லைட் கம்பம் தெரியுதா ?"
"ஆமாம்"
"அது பக்கத்துல தான் நான் இருக்கேன் என்னை தெரியலை"
"அப்படியா ?, அந்த லைட் கம்பத்து பக்கத்துல ஒரு கருப்பு மாடு தான் இருக்கு"
எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்து
"சார் நீங்க எந்த ஏரியாவுல இருக்கிங்க?"
"நான் ஜே.பி நகரிலிருந்து பேசரேன்"
"நான் குந்தனஹல்லியிலிருந்து பேசரேன்"
பிறகு தான் தெரிந்தது அவர் கொடுத்த ஜே.பி நகர் விளம்பரம் தவறுதலாக குந்தனஹல்லியில் பகுதியில் வந்திருக்கிறது!"
கருப்பு மாடு தான் என்னை காப்பாத்தியது.


இன்னும் ஒன்று சொல்ல வேண்டும், பெங்களூர் பிரோகர்கள் ரொம்ப நல்லவர்கள் ( அல்லது நான் பார்த்தவரை). உங்களுக்கு வீடு கிடைக்கும் வரை உங்களிடமிருந்து காலணா வாங்க மாட்டார்கள்.  அவர்களுடைய பெட்ரோல் செவில் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள்.


கார் வாங்கிய பின் பொறுமைசாலி என்று பட்டம் எடுத்துவிட்டேன். நன்றி பொங்களூர் டிராபிக் நெரிசல்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் பெங்களூர் டிராபிக் ஜாம் பற்றி எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்த கார்டூன்கள் இங்கே ...


[%popup(20060210-traffic_1.jpg|414|521|பெங்களூர் டிராபிக் - 1 )%],[%popup(20060210-traffic_2.jpg|437|521|- 2)%],[%popup(20060210-traffic_3.jpg|500|318|- 3)%],[%popup(20060210-traffic_4.jpg|500|279|- 4)%]


போன வருடம் தவற விட்ட மலர் கண்காட்சியை இந்த முறை தவற விடவில்லை. நானும் போய் வந்தேன் என்பதற்கு சாட்சியாக சில படங்கள்.


[%popup(20060210-flower_ex1.jpg|300|221|மலர்கள் - 1)%], [%popup(20060210-flower_ex2.jpg|300|201|மலர்கள் - 2)%], [%popup(20060210-flower_ex3.jpg|300|201|மலர்கள் - 3)%], [%popup(20060210-flower_ex4.jpg|300|201|மலர்கள் - 4)%]


 வீட்டில் பால்கனியில் வாழைப்பழம் சாப்பிட்டால் (சாப்பிடாவிட்டாலும்) குரங்கு வரும் :-)

பெண்களூர் 1 , 2,  3, 4, 5

Thursday, February 2, 2006

சுடு தேங்காய்

தேங்காயை பார்த்தால் எனக்கு 'சுடு தேங்காய்' ஞாபகம் தான் வரும். சின்ன வயசில் என் தாத்தா (தற்போது அவருக்கு வயது 96)  வீட்டுக்கு போன போது, இதை எனக்கு எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்தார். அதை உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன்.


தேவையான பொருட்கள்:
1. குடுமியுடன் ஒரு நல்ல முற்றிய தேங்காய்.
2. பொட்டுக்கடலை( உடைத்த கடலை ) - ஒரு பிடி
3. வெல்லம் - - ஒரு பிடி
4. கற்கண்டு - அரை பிடி
5. அவல் - ஒரு பிடி
6. முந்திரி பருப்பு - அரை பிடி
7. ஒரு டம்ளர், ஒரு ஸ்பூன்
8. நெருப்பு பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி.


செய்முறை:முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். அதை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள்.  மேற் சொன்ன தேவையான பொருட்கள் ( கடைசி இரண்டைத் தவிர ) எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங்கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேருங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின் குடுமியை திருப்பி அதன் துளையை நன்றாக அடையுங்கள்.


ராத்திரி ஆனவுடன், நண்பர்களுடன் மரத்தடிக்கு போய் கொஞ்சம் காய்ந்த இலை, குச்சிகள் போன்றவற்றை பற்றவைத்து அதில் தேங்காயை தலைகீழாக போடவும். கொஞ்ச நேரத்தில் ஒர் அருமையான வாசனை வரும். பொறுங்கள். சிறிது நேரம் கழித்து தேங்காய் மேல் ஓடு கருப்பாகிவிடும். மெதுவாக அதை ஒரு குச்சியில் தட்டி நெருப்பிலிருந்து எடுத்து விடுங்கள். சூடு தணிந்த பின் எல்லோரும் உடைத்து சாப்பிடவேண்டியதுதான். அந்த சுவையை வர்ணிக்க முடியாது.


பிகு: கியாஸ் அடுப்பு, மைக்ரோ வேவ் போன்றவற்றில் சமைக்க முடியாது.