Skip to main content

மூக்குப்பொடி

கல்லூரி நாட்களில் நடந்த அந்தச் சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் செந்தில் வேலனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லித்தானாக வேண்டும்.



செந்தில் வேலன் என் காலேஜ் ; என் வகுப்பு. காலேஜுக்கு ஜீப்பில் தான் வருவான் - மேல்கூரை இல்லாத 'ஓபன்' ஜீப். அவன் அப்பா ஏதோ ஒரு திராவிடக் கட்சியில் மாவட்டத் தலைவரோ செயலாளரோ, சரியாகத் தெரியவில்லை. ஆனால் சென்னையிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் அவன் வீட்டில் தான் தங்கி பிரியாணி சாப்பிடுவார்கள். சமிபத்தில்தினத்தந்தியில் அவன் அப்பா படம் முதல் பக்கத்தில் ஏதோ ஒரு விழாவிற்குத் தலைமை தாங்கினார் என்று வந்திருந்தது. அப்பாவின் செல்வாக்கினால்தான் அவனுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். தினமும் கல்லூரிக்கு வருவான்; வந்தவுடன் நேராக கேண்டினுக்குப் போய் டீ, சமோசா, சிகரேட் முடித்துவிட்டு காலேஜ் மணி அடித்தவுடன் கல்லூரியை விட்டுப் போய்விடுவான். ஒரு காதில் வளையம் போட்டிருப்பான். ரஜினி படம் ரிலீஸ் அன்றைக்கு எல்லோருக்கும் சாக்லேட் தருவான். கல்லூரி வாசலில் இருக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கெல்லாம் இவன் 'அண்ணா' தான்.


அன்று வெள்ளிக்கிழமை. நன்றாக ஞாபகம் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் லேப் இருந்ததால் கொஞ்சம் சீக்கிரம் போனேன். போயிருக்க கூடாது. வகுப்பறைக்குள் செந்தில் வேலனைப் பார்த்துத் திடுக்கிட்டேன். திடுக்கிட்டதற்குக் காரணம் இருக்கிறது. செந்தில் வேலன் கல்லூரிக்கு வருவதே அபூர்வம்; வந்தாலும் இவ்வளவு சீக்கிரம்... ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று உள்மனது ஏனோ அன்று எச்சரிக்கவில்லை. இவனிடமிருந்து எப்படி நழுவுவது என்று யோசிப்பதற்குள்...


"என்ன, ராகுகாலத்துக்கு முன்னாடி வந்துட்ட போல?"


"இன்னிக்கு லேப் இருக்கு. அத்தான்.. "


"சரி, சீக்கிரம் வந்துட்ட, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு!"


"என்ன ?" என்று கேட்பதற்குள் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டினான்.


"எங்கிட்ட சில்லறை இல்லை.."


"ச்சே.. காலெஜுக்கு வெளில இருக்கற பெட்டிக்கடைக்குப் போய் பட்டிணம் பொடி வாங்கி வா!"


"அப்படினா? 1431 பயோரியா பல்பொடியா?"


"ஜோக்கா '...த்தா' இதுகூட தெரியல.. பட்டிணம் பொடினா மூக்குப்பொடி; ஓடு, சீக்கிரம் போய் வாங்கி வா!"


"நான் போக..."


"போக முடியாதுன்னா '...த்தா' ஒரே அப்பு அப்பிப்புடுவேன், ஓடு!" என்று என் ரெகார்ட் நோட்டைப் பிடுங்கிவைத்துக் கொண்டான். "மூக்குப்பொடி வாங்கியாந்தபுறம் இந்த புக்கை வாங்கிக்கோ!" என்றான்.


எனக்கு வேறு வழி தெரியவில்லை. செய்வதறியாமல் நின்றேன். செந்தில் வேலன் விடுவதாக இல்லை. நூறு ரூபாய் நோட்டை என் சட்டைப் பையில் திணித்து, "ஓடு!!" என்று திரும்பவும் விரட்டினான்.


"எவ்வளவுக்கு வாங்கணும்?"


"நூறு ரூபாய்க்கு வாங்கியா! "


"நூறு ரூபாய்க்கா?" என்றேன் ஆச்சரியத்தோடு.


எங்கள் தாத்தாவிற்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் உண்டு. அவருக்குக்கூட நான் மூக்குப்பொடி வாங்கித் தந்ததில்லை. செத்துப்போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புகூட அவரே கோர்ட் எதிரில் இருக்கும் 'சோழியன் கடை' என்று அழைக்கப்படும் பெட்டிக்கடைக்கு நடந்துபோய் டப்பாவில் ரொப்பிக்கொண்டு வந்தார்; ஐம்பது பைசாவுக்கு மூக்குப்பொடியும் எனக்கு ஒரு புளிப்பு மிட்டாயும். என் தாத்தா வாழ்நாளில் போட்ட மூக்குப்பொடியைக் கணக்கு பண்ணினால் கூட நூறு ரூபாய்க்குக் கம்மியாகத்தான் இருக்கும்.


காலேஜுக்கு வெளியில் இருக்கும் பெட்டிக்கடையில் கூட்டம் என்று சொல்ல முடியாவிட்டாலும் யாராவது கடையில் இருந்துக்கொண்டே இருந்தார்கள். தர்மசங்கடமாக இருந்தது. என்ன என்று கேட்பது? யாராவது பார்த்துவிட்டால்? சிகரெட் என்றால் கூட கொஞ்சம் கவுரவமாக இருக்கும். மூக்குப்பொடி? ச்சே. சரியாக மாட்டிக்கொண்டு விட்டோம் என்று நினைத்தேன். வேறு வழி தெரியவில்லை. கடையில் கூட்டம் இல்லாதபோது வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன்.  - சிகரெட், வெத்திலை, கடலை உருண்டை, ஹமாம் சோப், சோடா, முட்டை, குமுதம், வாழைப்பழம், ஓசிச் சுண்ணாம்பு, சிகரெட் பற்ற வைக்க... என்று ஏதாவது வியாபாரம் ஆகிக்கொண்டு இருந்தபோதும் யாரும் மூக்குப்பொடி மட்டும் வாங்கவில்லை!


கடைக்குப் பக்கத்தில் கொஞ்சநேரம் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த கடைக்காரர், "என்ன தம்பி, என்ன வேணும்? ரொம்ப நேரமா நிக்கிறீங்க?"


"ஒண்ணும் இல்ல சும்மா.."


கடைக்காரர் என் பக்கத்தில் வந்து காதோடு குசுகுசுத்தார், "நிரோத் வேணுமுனா சொல்லுங்க; யாருக்கும் தெரியாம சுருட்டித்தரேன். இது இல்லாம விராலிமலைப் பக்கம் போயிடாதீங்க.."


"ஐயோ, அதெல்லாம் வேண்டாங்க.. கொஞ்சம் மூக்குப்பொடி வேணும்.."


என் மேல் நம்பிக்கையில்லாமல் "என்ன மூக்குப்பொடியா?"


"ஆமா"


"எவ்வளவுக்கு வேணும்?"


"நூறு ரூபாய்க்கு"


"நூறு ரூபாய்க்கா? என்ன தம்பி, நூறு ரூபாய்க்கு வாங்கி என்ன செய்ய போறீங்க? என் கடையிலேயே ஐம்பது ரூபாய்க்கு மேல இருக்காது. அட்வான்ஸ் வேனா கொடுத்துட்டு போங்க நாளைக்கு காந்தி மார்க்கேட்டிலிருந்து வாங்கி வைக்கிறேன்."


"சரி, ஐம்பது ரூபாய்க்குத் தாங்க"


"ஐம்பது ரூபாய்க்கா?  வேணுமுனா ஒரு முப்பது ரூபாய்க்குத் தாரேன், ரெகுலர் கஷ்டமர்களுக்கு கொஞ்சம் வேணும் பாருங்க.."


"சரி, கொடுங்க!"


மூக்குப்பொடி முப்பது ரூபாய்க்குக் கட்டப்பட்டது. வாங்கிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் வகுப்பறைக்குச் சென்றேன்.


"என்ன இவ்வளவு நேரம்" என்று என் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். "முப்பது ரூபாய்க்கு மேல் கடையில் ஸ்டாக் இல்லை.." என்று மீதிச் சில்லறையைக் கொடுத்துவிட்டு ரெகார்ட் நோட்டை எடுத்துக்கொண்டு ஓடினேன்.


லேபிற்குப் பிறகு எங்களுக்கு TC லதா மேடம் வகுப்பு. TC என்பது அவர் இனிஷியல் கிடையாது. சிலரை காலேஜை விட்டு TC கொடுத்து அனுப்பியிருக்கிறார்.  கண்டிப்பானவர்; லேட்டாகப் போனால் உள்ளே விடமாட்டார். எதாவது தப்பாகச் சொன்னால் திட்டுவார். காலேஜ் பிரின்சிபாலுக்குச் சொந்தக்காரர். நாங்கள் லேப் முடித்துவிட்டுப் போனவுடன் வகுப்பில் எங்களுக்கு முன்னரே லதா மேடம் உட்கார்ந்திருந்தார்.


போனவுடனேயே "சீக்கிரம்.. சீக்கிரம்.." என்று கடிந்துகொண்டார். நாங்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். அப்போது சிலர் தங்கள் இருக்கைக்குப் பக்கத்தில் உள்ள ஃபேன் சுவிட்சைப் போட்டார்கள். ஃபேன் சுத்த ஆரம்பித்தவுடன் எல்ல்லோரும் தும்ம ஆரம்பித்தார்கள். கச்சேரியில் தனியாவர்தனம் போல் கொஞ்சம் கொஞ்சமாகத் தும்மி, பிறகு வகுப்பறை முழுக்க ஒரே தும்மல். யாராலும் பேச முடியவில்லை; சைகையும் தும்மலும்தான். லதா மேடம் அழுதார்களா அல்லது தும்மலால் கண்ணீர் விட்டார்களா என்று தெரியவில்லை; வகுப்பறையை விட்டு நேராக பிரின்சிபால் ரூமுக்குப் போனார். ஓடினார் என்றே சொல்லவேண்டும்.


வகுப்பறை முழுக்க மூக்குப்பொடி நெடியும், தும்மலும் பரவியிருக்க வாசகர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பது அவ்வளவு கஷ்டம் கிடையாது என்று நினைக்கிறேன். நான் வாங்கிக்கொண்டு வந்த மூக்குப்பொடியை லேப் போயிருந்த சமயத்தில் எல்லா ஃபேன் இறக்கையிலும் தூவியிருக்கிறான் செந்தில் வேலன். எனக்கு இந்தச் சம்பவத்தில் பங்குண்டு என்று நினைக்கும்போது, அடிவயிற்றில் என்னவோ பண்ணியது. ஒன்னுக்கு அவசரமாக வந்தது.


லதா மேடமுடன் பிரின்சிபாலும் எங்கள் வகுப்புக்கு வந்தார்கள். வந்தபோது தும்மல் கொஞ்சம் கம்மியாகியிருந்தது. இதை யார் செய்தது என்று மீண்டும் மீண்டும் கேட்டார்கள். யாரும் வாயைத் திறக்கவில்லை. நாங்கள் லேபில் இருந்தோம், எங்களுக்குத் தெரியாது என்று கோரஸாகச் சொன்னதை அவர் நம்பவில்லை.


அப்போது அந்த வழியாக வந்த பியூனை பிரின்சிபால் சைகையால் வரச்சொன்னார்.
"காலேஜுக்கு வெளியில இருக்கும் கடையில் போய் நம்ம பசங்க யாராவது மூக்குப்பொடி வாங்கினாங்களானு கேளு..."


மாட்டிக்கொண்டால் நிச்சயம் TC தான் என்று உள்மனம் எச்சரிக்கவே, சின்ன வயதிலிருந்து சேர்ந்து வைத்த தைரியத்தை எல்லாம் வரவைத்துக்கொண்டு, "சார், மூக்குப்பொடி வாங்கிக்கொண்டு வந்தது நான்தான்....ஆனா நான் இந்த வேலையை செய்யவில்லை" என்றேன். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள், ஆச்சரியமாக.


"நீயா? வா என்னுடன் என் ரூமுக்கு!" என்று அழைத்துக்கொண்டு போனார் பிரின்சிபால்.


அதன் பின் நடந்ததைச் சுருக்கமாகத் தருகிறேன்.


நடந்தவற்றை பிரின்சிபாலிடம் சொன்னேன். செந்தில் வேலன் தான் இதற்குக் காரணம் என்று எவ்வளவு சொல்லியும் அதை அவ்ர் நம்பவில்லை. செந்தில் வேலன் அன்று காலேஜுக்கு வரவேயில்லை, இது எப்படி நடக்கும் என்றார். அடுத்த நாள் செந்தில் வேலன், தான் செய்யவேயில்லை என்று சாதித்தான். என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். மன்னிப்புக் கடிதம் எழுதித்தரச் சொன்னார்கள். அந்த செமெஸ்டரில் எனக்கு 'இண்டர்னல்' மார்க் ரொம்ப கம்மியாகக் கிடைத்தது.


அதன் பின் எங்கள் வகுப்பிற்கு மூக்குப்பொடி வகுப்பு என்று பெயர் கிடைத்தது.


"நீ எந்த பேட்ச்? "


"சார், இவனைத் தெரியாது? அந்த மூக்குப்பொடி..." போன்ற சம்பாஷணைகள் நான் கல்லூரி முடிக்கும் வரை இருந்தது.


செந்தில் வேலன் அட்டண்டன்ஸ் இல்லாமல், பரிட்சை எழுதமுடியவில்லை. கல்லூரியில் ஒரு பெண்ணுடன்..... அதல்லாம் இந்தக் கதைக்கு அவசியம் இல்லை. சுருக்கமாக - காலேஜிலிருந்து அனுப்பபட்டான்.


- - - -


இரண்டு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு திருச்சிக்குச் சென்றபோது சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடாக நடந்துகொண்டிருந்து. போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஓட்டுக்கேட்டு கதவை தட்டியவர்களில் செந்தில் வேலனும் ஒருவன். கரை வேட்டி, கதர் சட்டை, வேர்வை கலந்த ஜவ்வாது வாசனை என்று செந்தில் வேலன் மாறிப்போயிருந்தான்.


"மச்சி நீயா? உங்க தொகுதியில் நான் தான் நிக்கிறேன், கண்டிப்பாக உன் ஓட்டு எனக்குதானே?" என்று எங்கள் பெயர், வார்ட் அச்சிட்ட கார்டைக் கொடுத்துவிட்டு, "உனக்கே தெரியும், இப்போ கொஞ்சம் பிசியா இருக்கேன்; இன்னும் ஐநூறு வீடு முடிக்கணும். உங்க பூத் சேவாசங்கம். கட்டாயம் ஓட்டுப் போட வந்துடு. அம்மா, அப்பா கிட்டேயும் சொல்லிடு.." என்று கட்சியின் சின்னத்தை கையால் காண்பித்துவிட்டுச் சென்றான்.


அம்மா, "உனக்கு இவனை தெரியுமா ? யாருடா?"  என்றாள்


"என் காலேஜ் கிளாஸ்மேட் மா, இந்த எலெக்ஷன்ல நிக்கிறான்."


"அப்படியா? இவனுக்கே நம்ம ஓட்டு போடலாம்!"


நீங்க என்ன சொல்றீங்க? இவனுக்கு ஓட்டுப் போடலாமா?

Comments

Post a Comment