Saturday, December 31, 2005

மூக்குப்பொடி

கல்லூரி நாட்களில் நடந்த அந்தச் சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் செந்தில் வேலனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லித்தானாக வேண்டும்.செந்தில் வேலன் என் காலேஜ் ; என் வகுப்பு. காலேஜுக்கு ஜீப்பில் தான் வருவான் - மேல்கூரை இல்லாத 'ஓபன்' ஜீப். அவன் அப்பா ஏதோ ஒரு திராவிடக் கட்சியில் மாவட்டத் தலைவரோ செயலாளரோ, சரியாகத் தெரியவில்லை. ஆனால் சென்னையிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் அவன் வீட்டில் தான் தங்கி பிரியாணி சாப்பிடுவார்கள். சமிபத்தில்தினத்தந்தியில் அவன் அப்பா படம் முதல் பக்கத்தில் ஏதோ ஒரு விழாவிற்குத் தலைமை தாங்கினார் என்று வந்திருந்தது. அப்பாவின் செல்வாக்கினால்தான் அவனுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். தினமும் கல்லூரிக்கு வருவான்; வந்தவுடன் நேராக கேண்டினுக்குப் போய் டீ, சமோசா, சிகரேட் முடித்துவிட்டு காலேஜ் மணி அடித்தவுடன் கல்லூரியை விட்டுப் போய்விடுவான். ஒரு காதில் வளையம் போட்டிருப்பான். ரஜினி படம் ரிலீஸ் அன்றைக்கு எல்லோருக்கும் சாக்லேட் தருவான். கல்லூரி வாசலில் இருக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கெல்லாம் இவன் 'அண்ணா' தான்.


அன்று வெள்ளிக்கிழமை. நன்றாக ஞாபகம் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் லேப் இருந்ததால் கொஞ்சம் சீக்கிரம் போனேன். போயிருக்க கூடாது. வகுப்பறைக்குள் செந்தில் வேலனைப் பார்த்துத் திடுக்கிட்டேன். திடுக்கிட்டதற்குக் காரணம் இருக்கிறது. செந்தில் வேலன் கல்லூரிக்கு வருவதே அபூர்வம்; வந்தாலும் இவ்வளவு சீக்கிரம்... ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று உள்மனது ஏனோ அன்று எச்சரிக்கவில்லை. இவனிடமிருந்து எப்படி நழுவுவது என்று யோசிப்பதற்குள்...


"என்ன, ராகுகாலத்துக்கு முன்னாடி வந்துட்ட போல?"


"இன்னிக்கு லேப் இருக்கு. அத்தான்.. "


"சரி, சீக்கிரம் வந்துட்ட, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு!"


"என்ன ?" என்று கேட்பதற்குள் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டினான்.


"எங்கிட்ட சில்லறை இல்லை.."


"ச்சே.. காலெஜுக்கு வெளில இருக்கற பெட்டிக்கடைக்குப் போய் பட்டிணம் பொடி வாங்கி வா!"


"அப்படினா? 1431 பயோரியா பல்பொடியா?"


"ஜோக்கா '...த்தா' இதுகூட தெரியல.. பட்டிணம் பொடினா மூக்குப்பொடி; ஓடு, சீக்கிரம் போய் வாங்கி வா!"


"நான் போக..."


"போக முடியாதுன்னா '...த்தா' ஒரே அப்பு அப்பிப்புடுவேன், ஓடு!" என்று என் ரெகார்ட் நோட்டைப் பிடுங்கிவைத்துக் கொண்டான். "மூக்குப்பொடி வாங்கியாந்தபுறம் இந்த புக்கை வாங்கிக்கோ!" என்றான்.


எனக்கு வேறு வழி தெரியவில்லை. செய்வதறியாமல் நின்றேன். செந்தில் வேலன் விடுவதாக இல்லை. நூறு ரூபாய் நோட்டை என் சட்டைப் பையில் திணித்து, "ஓடு!!" என்று திரும்பவும் விரட்டினான்.


"எவ்வளவுக்கு வாங்கணும்?"


"நூறு ரூபாய்க்கு வாங்கியா! "


"நூறு ரூபாய்க்கா?" என்றேன் ஆச்சரியத்தோடு.


எங்கள் தாத்தாவிற்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் உண்டு. அவருக்குக்கூட நான் மூக்குப்பொடி வாங்கித் தந்ததில்லை. செத்துப்போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புகூட அவரே கோர்ட் எதிரில் இருக்கும் 'சோழியன் கடை' என்று அழைக்கப்படும் பெட்டிக்கடைக்கு நடந்துபோய் டப்பாவில் ரொப்பிக்கொண்டு வந்தார்; ஐம்பது பைசாவுக்கு மூக்குப்பொடியும் எனக்கு ஒரு புளிப்பு மிட்டாயும். என் தாத்தா வாழ்நாளில் போட்ட மூக்குப்பொடியைக் கணக்கு பண்ணினால் கூட நூறு ரூபாய்க்குக் கம்மியாகத்தான் இருக்கும்.


காலேஜுக்கு வெளியில் இருக்கும் பெட்டிக்கடையில் கூட்டம் என்று சொல்ல முடியாவிட்டாலும் யாராவது கடையில் இருந்துக்கொண்டே இருந்தார்கள். தர்மசங்கடமாக இருந்தது. என்ன என்று கேட்பது? யாராவது பார்த்துவிட்டால்? சிகரெட் என்றால் கூட கொஞ்சம் கவுரவமாக இருக்கும். மூக்குப்பொடி? ச்சே. சரியாக மாட்டிக்கொண்டு விட்டோம் என்று நினைத்தேன். வேறு வழி தெரியவில்லை. கடையில் கூட்டம் இல்லாதபோது வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன்.  - சிகரெட், வெத்திலை, கடலை உருண்டை, ஹமாம் சோப், சோடா, முட்டை, குமுதம், வாழைப்பழம், ஓசிச் சுண்ணாம்பு, சிகரெட் பற்ற வைக்க... என்று ஏதாவது வியாபாரம் ஆகிக்கொண்டு இருந்தபோதும் யாரும் மூக்குப்பொடி மட்டும் வாங்கவில்லை!


கடைக்குப் பக்கத்தில் கொஞ்சநேரம் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த கடைக்காரர், "என்ன தம்பி, என்ன வேணும்? ரொம்ப நேரமா நிக்கிறீங்க?"


"ஒண்ணும் இல்ல சும்மா.."


கடைக்காரர் என் பக்கத்தில் வந்து காதோடு குசுகுசுத்தார், "நிரோத் வேணுமுனா சொல்லுங்க; யாருக்கும் தெரியாம சுருட்டித்தரேன். இது இல்லாம விராலிமலைப் பக்கம் போயிடாதீங்க.."


"ஐயோ, அதெல்லாம் வேண்டாங்க.. கொஞ்சம் மூக்குப்பொடி வேணும்.."


என் மேல் நம்பிக்கையில்லாமல் "என்ன மூக்குப்பொடியா?"


"ஆமா"


"எவ்வளவுக்கு வேணும்?"


"நூறு ரூபாய்க்கு"


"நூறு ரூபாய்க்கா? என்ன தம்பி, நூறு ரூபாய்க்கு வாங்கி என்ன செய்ய போறீங்க? என் கடையிலேயே ஐம்பது ரூபாய்க்கு மேல இருக்காது. அட்வான்ஸ் வேனா கொடுத்துட்டு போங்க நாளைக்கு காந்தி மார்க்கேட்டிலிருந்து வாங்கி வைக்கிறேன்."


"சரி, ஐம்பது ரூபாய்க்குத் தாங்க"


"ஐம்பது ரூபாய்க்கா?  வேணுமுனா ஒரு முப்பது ரூபாய்க்குத் தாரேன், ரெகுலர் கஷ்டமர்களுக்கு கொஞ்சம் வேணும் பாருங்க.."


"சரி, கொடுங்க!"


மூக்குப்பொடி முப்பது ரூபாய்க்குக் கட்டப்பட்டது. வாங்கிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் வகுப்பறைக்குச் சென்றேன்.


"என்ன இவ்வளவு நேரம்" என்று என் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். "முப்பது ரூபாய்க்கு மேல் கடையில் ஸ்டாக் இல்லை.." என்று மீதிச் சில்லறையைக் கொடுத்துவிட்டு ரெகார்ட் நோட்டை எடுத்துக்கொண்டு ஓடினேன்.


லேபிற்குப் பிறகு எங்களுக்கு TC லதா மேடம் வகுப்பு. TC என்பது அவர் இனிஷியல் கிடையாது. சிலரை காலேஜை விட்டு TC கொடுத்து அனுப்பியிருக்கிறார்.  கண்டிப்பானவர்; லேட்டாகப் போனால் உள்ளே விடமாட்டார். எதாவது தப்பாகச் சொன்னால் திட்டுவார். காலேஜ் பிரின்சிபாலுக்குச் சொந்தக்காரர். நாங்கள் லேப் முடித்துவிட்டுப் போனவுடன் வகுப்பில் எங்களுக்கு முன்னரே லதா மேடம் உட்கார்ந்திருந்தார்.


போனவுடனேயே "சீக்கிரம்.. சீக்கிரம்.." என்று கடிந்துகொண்டார். நாங்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். அப்போது சிலர் தங்கள் இருக்கைக்குப் பக்கத்தில் உள்ள ஃபேன் சுவிட்சைப் போட்டார்கள். ஃபேன் சுத்த ஆரம்பித்தவுடன் எல்ல்லோரும் தும்ம ஆரம்பித்தார்கள். கச்சேரியில் தனியாவர்தனம் போல் கொஞ்சம் கொஞ்சமாகத் தும்மி, பிறகு வகுப்பறை முழுக்க ஒரே தும்மல். யாராலும் பேச முடியவில்லை; சைகையும் தும்மலும்தான். லதா மேடம் அழுதார்களா அல்லது தும்மலால் கண்ணீர் விட்டார்களா என்று தெரியவில்லை; வகுப்பறையை விட்டு நேராக பிரின்சிபால் ரூமுக்குப் போனார். ஓடினார் என்றே சொல்லவேண்டும்.


வகுப்பறை முழுக்க மூக்குப்பொடி நெடியும், தும்மலும் பரவியிருக்க வாசகர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பது அவ்வளவு கஷ்டம் கிடையாது என்று நினைக்கிறேன். நான் வாங்கிக்கொண்டு வந்த மூக்குப்பொடியை லேப் போயிருந்த சமயத்தில் எல்லா ஃபேன் இறக்கையிலும் தூவியிருக்கிறான் செந்தில் வேலன். எனக்கு இந்தச் சம்பவத்தில் பங்குண்டு என்று நினைக்கும்போது, அடிவயிற்றில் என்னவோ பண்ணியது. ஒன்னுக்கு அவசரமாக வந்தது.


லதா மேடமுடன் பிரின்சிபாலும் எங்கள் வகுப்புக்கு வந்தார்கள். வந்தபோது தும்மல் கொஞ்சம் கம்மியாகியிருந்தது. இதை யார் செய்தது என்று மீண்டும் மீண்டும் கேட்டார்கள். யாரும் வாயைத் திறக்கவில்லை. நாங்கள் லேபில் இருந்தோம், எங்களுக்குத் தெரியாது என்று கோரஸாகச் சொன்னதை அவர் நம்பவில்லை.


அப்போது அந்த வழியாக வந்த பியூனை பிரின்சிபால் சைகையால் வரச்சொன்னார்.
"காலேஜுக்கு வெளியில இருக்கும் கடையில் போய் நம்ம பசங்க யாராவது மூக்குப்பொடி வாங்கினாங்களானு கேளு..."


மாட்டிக்கொண்டால் நிச்சயம் TC தான் என்று உள்மனம் எச்சரிக்கவே, சின்ன வயதிலிருந்து சேர்ந்து வைத்த தைரியத்தை எல்லாம் வரவைத்துக்கொண்டு, "சார், மூக்குப்பொடி வாங்கிக்கொண்டு வந்தது நான்தான்....ஆனா நான் இந்த வேலையை செய்யவில்லை" என்றேன். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள், ஆச்சரியமாக.


"நீயா? வா என்னுடன் என் ரூமுக்கு!" என்று அழைத்துக்கொண்டு போனார் பிரின்சிபால்.


அதன் பின் நடந்ததைச் சுருக்கமாகத் தருகிறேன்.


நடந்தவற்றை பிரின்சிபாலிடம் சொன்னேன். செந்தில் வேலன் தான் இதற்குக் காரணம் என்று எவ்வளவு சொல்லியும் அதை அவ்ர் நம்பவில்லை. செந்தில் வேலன் அன்று காலேஜுக்கு வரவேயில்லை, இது எப்படி நடக்கும் என்றார். அடுத்த நாள் செந்தில் வேலன், தான் செய்யவேயில்லை என்று சாதித்தான். என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். மன்னிப்புக் கடிதம் எழுதித்தரச் சொன்னார்கள். அந்த செமெஸ்டரில் எனக்கு 'இண்டர்னல்' மார்க் ரொம்ப கம்மியாகக் கிடைத்தது.


அதன் பின் எங்கள் வகுப்பிற்கு மூக்குப்பொடி வகுப்பு என்று பெயர் கிடைத்தது.


"நீ எந்த பேட்ச்? "


"சார், இவனைத் தெரியாது? அந்த மூக்குப்பொடி..." போன்ற சம்பாஷணைகள் நான் கல்லூரி முடிக்கும் வரை இருந்தது.


செந்தில் வேலன் அட்டண்டன்ஸ் இல்லாமல், பரிட்சை எழுதமுடியவில்லை. கல்லூரியில் ஒரு பெண்ணுடன்..... அதல்லாம் இந்தக் கதைக்கு அவசியம் இல்லை. சுருக்கமாக - காலேஜிலிருந்து அனுப்பபட்டான்.


- - - -


இரண்டு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு திருச்சிக்குச் சென்றபோது சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடாக நடந்துகொண்டிருந்து. போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஓட்டுக்கேட்டு கதவை தட்டியவர்களில் செந்தில் வேலனும் ஒருவன். கரை வேட்டி, கதர் சட்டை, வேர்வை கலந்த ஜவ்வாது வாசனை என்று செந்தில் வேலன் மாறிப்போயிருந்தான்.


"மச்சி நீயா? உங்க தொகுதியில் நான் தான் நிக்கிறேன், கண்டிப்பாக உன் ஓட்டு எனக்குதானே?" என்று எங்கள் பெயர், வார்ட் அச்சிட்ட கார்டைக் கொடுத்துவிட்டு, "உனக்கே தெரியும், இப்போ கொஞ்சம் பிசியா இருக்கேன்; இன்னும் ஐநூறு வீடு முடிக்கணும். உங்க பூத் சேவாசங்கம். கட்டாயம் ஓட்டுப் போட வந்துடு. அம்மா, அப்பா கிட்டேயும் சொல்லிடு.." என்று கட்சியின் சின்னத்தை கையால் காண்பித்துவிட்டுச் சென்றான்.


அம்மா, "உனக்கு இவனை தெரியுமா ? யாருடா?"  என்றாள்


"என் காலேஜ் கிளாஸ்மேட் மா, இந்த எலெக்ஷன்ல நிக்கிறான்."


"அப்படியா? இவனுக்கே நம்ம ஓட்டு போடலாம்!"


நீங்க என்ன சொல்றீங்க? இவனுக்கு ஓட்டுப் போடலாமா?

Tuesday, December 20, 2005

மூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை

 அப்பாடா ஒரு வழியாக இன்று முடித்துவிட்டேன்!.


IIM இந்தோர் (Indore) தங்கள் ஆண்டு விழா (IRIS 2005) கொண்டாட்டமாக ஒரு puzzle விளையாட்டு போட்டியை இந்த ஆண்டு வைத்துள்ளார்கள்.


கிட்டத்தட்ட ஒரு வாரம் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் முயன்று ( சில சமயம் நண்பர்களிடம் கேட்டு ) இன்று காலைதான் முடிக்க முடிந்தது. ( மொத்தம் 29 நிலை(level) ).


 [%image(20051219-KluelessFinal.jpg|507|250|Final Page of KlueLess)%]


முடித்த பின் மூளையை வாட்டர் வாஷ் சர்விஸ் செய்த உணர்வு :-) . நீங்களும் முயன்று பாருங்களேன்.


விளையாட்டுக்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும் (  http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/  )


தயவு செய்து விடை தெரிந்தவர்கள் விடைகளை இங்கு பின்னூட்டமிடாதீர்கள். மற்றவர்களும் முயன்று பார்த்து அனுபவிக்கட்டுமே!. (Clue, மறைமுக குறிப்பு கொடுப்பதற்கு தடையில்லை)


கேம் ரூல்ஸ் - http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/game.asp

Friday, December 16, 2005

இந்த மார்கழி

இன்று மார்கழி ஆரம்பம். போன வருடம் தினமும் அந்தந்த திருப்பாவை பாடலுக்கு, படம், தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறு விளக்கம், கோலம் என்று பதிவுகள் போட்டேன். இந்த வருடம் வேறு மாதிரி செய்யலாம் என்று யோசித்தேன். ஏனோ முடியவில்லை. போன வருடம் செய்ததை பார்பதற்கு வலது பக்கத்தில் 'இன்றைய திருப்பாவை' படத்தை கிளிக் செய்யவும்


 

Monday, December 12, 2005

E=ஹிஹி2

சுஹாசினி, குஷ்பு விவகாரத்தை படித்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனை எரிச்சலாக பார்த்தது வேதாளம்.


"எவ்வளவு நாள் தான் இந்த விஷயத்தை படித்துக்கொண்டிருப்ப?"  என்றது வேதாளம்.
"உன்னோடு பெரிய தொந்தரவு, கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடு" என்று விக்கிரமாதித்தன் திரும்பவும் படிக்க ஆரம்பித்தான்.


வேதாளம் விடுவதாக இல்லை "இன்னிக்கு உன்னை எங்க வேதாள உலகத்திற்கு அழைத்து போகலாம் என்று இருக்கேன்"


"உன்னோட தொந்தரவே தாங்கல..வேதாள உலகம் வேறயா?"


"சீக்கிரம் கிளம்பு, வெங்கட் நாராயணா ரோட்டில் ரத்தனா புதுசா கபே திரந்திருக்காங்க, ஒரு சாம்பார் இட்லி சாப்பிட்டு போகலாம்" என்றது.


விக்கிரமாதித்தனும், வேதாளமும் சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு வேதாள உலகத்திற்கு கிளம்பினார்கள். இந்த முறை வேதாளம் விக்கிரமாதித்தனை தோளில் தூக்கிக்கொண்டு வேகமாக பறந்தது."இவ்வளவு வேகமாக பறக்காதே எனக்கு பயமாக இருக்கிறது"


"பயமா? என்னது இது சின்னபுள்ள தனமா இருக்கு ? " என்றது வேதாளம் வடிவேலு ஸ்டைலில்.


"இன்னும் கொஞ்சம் வேகமா போனா என் வேஷ்டி அவுந்துடும் அப்புறம் நீ பயந்துடுவ"
"ஐயோ! நான் வேகமா போகலை, இது தான் என் நார்மல் ஸ்பீடு. உனக்கு ஒண்ணு தெரியுமா ? யாராலையும் ஒளியின் வேகத்தை விட வேகமாக போக முடியாது"


"ஆரம்பிச்சுட்டையா உன் வேலையை"


"எதாவது சொன்னா கேட்டுக்கோ. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 300,000 கீமீ"


"அப்படியா?"


"ஒளியின் வேகத்தால் ஒரு நொடிக்கு பூமியை ஏழு முறை சுற்றி வரலாம்"


"அந்த வேகத்தில் சென்றால் என்ன ஆகும் ?"


"அந்த வேகத்தில் செல்ல முடியாது ஆனால் அந்த வேகத்தில் சென்றால், முதலில் உன் வேஷ்டி அவுரும், உன் நீளம் கம்மியாகும், கடிகாரம் மெதுவாக ஓடும் ..." என்று அடிக்கிக்கொண்டு போனது வேதாளம்.


விக்கிரமாதித்தனுக்கு ஒண்ணும் புரியவில்லை. "என்ன ? இதெல்லாம் பகுத்தறிவுக்கு முரண்பாடாக இருக்கிறதே" என்றான்.


வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்தது. அப்போது வேதாளத்தின் ஒன்றுவிட்ட சித்தப்பா அவர்களை ஓவர் டேக் செய்து கொண்டு வேகமாக போனார். விக்கிரமாதித்தனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.


ஒ.வி.சித்தப்பா வேகமாக போகப்போக அவர் சின்னதாக, ரஜினி பட கட்டவுட் போல் தெரிந்தார்.


"என்ன உங்க சித்தப்பா தட்டையாக தெரிகிறார்?"


"அதுவா, அவர் கொஞ்சம் வேகமாக போகிறார் அதனால் அப்படி தெரிகிறார்"


"எப்படி ?"


"இந்த எஃபெக்டுக்கு பேர் தான் Contraction of moving bodies!"


 


[%image(20051211-street1.jpg|300|225|street 1)%]

(விக்கிரமாதித்தன் முதலில் பார்த்தது ) 


   


 


 


 


 


 


 


[%image(20051211-street2.jpg|108|225|Street 2)%]

சரி உன் வேஷ்டியையும், என்னையும் கொஞ்சம் கெட்டியா புடிச்சிக்கொ என்றது வேதாளம்.  இப்போ கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் போகப்போகிறோம்.
'ஜூட்' என்று சொல்லி வேகமாக பறந்தது. விக்கிரமாதித்தனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவனை சுற்றி எல்லாம் சுருங்கி தட்டையாக கட்டவுட் போல் இருந்தது. ஜன்னல், கதவு, பெட்டிக்கடை, மாடு எல்லாம் சுருங்கி தெரிந்தது! ( பார்க்க படம்) ஆனால் ஒன்று விட்ட சித்த்ப்பா பக்கத்தில் போனவுடன் அவர் சாதாரணமாக தெரிந்தார்.


"என்னப்பா இது?"


"இதுதாம்பா relativity(சார்நிலை). இது சிறப்பு சார்நிலை(Special theory of relativity) என்று பெயரிடப்பட்டது. அதாவது காலம் ( time), வெளி(space) இவற்றுக்கிடையேயான தொடர்பு சக்தி ( energy) பெருண்மை(matter) இவற்றுக்கு இடையேயான தொடர்பும்..."


"போதும்பா எனக்கு தலைசுற்றுகிறது" என்றான் விக்கிரமாதித்தன்


"சரி அங்கே தெரியும் மணிக்கூண்டில் என்ன மணி"  என்றது கேட்டது வேதாளம்


விக்கிரமாதித்தன் மணிக்கூண்டில் பார்த்து "நாலு" என்றான்.


"உன் கைகடிகாரத்தில் ?"


"அதுவும் சரியாக நாலு"


[%image(20051211-clock.gif|180|248|clock)%]

"சரி இப்போ திரும்பவும் கொஞ்சம் வேகமா போகப்போறோம்" என்ற வேதாளம். திரும்பவும் விக்கிரமாதித்தனை தூக்கிக்கொண்டு வேகமாக பறந்து சென்றது. கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் மணிக்கூண்டு பக்கத்தில் வந்தது. இப்போ மணி என்ன என்றது.


விக்கிரமாதித்தன் மணிக்கூண்டில் மணியை பார்த்தான். அது "நான்கு மணி முப்பது நிமிடம்" என்றது. கைகெடிகாரத்தில் நான்கு மணி பத்து நிமிடம் என்றது.


விக்கிரமாதித்தனுக்கு தலை சுற்றியது.


"என்னப்பா இது, மணி கூண்டு கடிகாரம் கொஞ்சம் வேகமாக ஓடுகிறது என்று நினைக்கிறேன்" என்றான் விக்கிரமாதித்தன்.


வேதாளம் "அதெல்லாம் இல்லை இதற்கு பேர் தான் Dilatation of Time " என்றது.


விக்கிரமாதித்தன் மேலும் குழம்பினான். போய் ஒரு காப்பி சாப்பிடலாம் என்று ஒரு கடைக்கு போனார்கள். கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு மேஜையில் இரண்டு இடம் காலியக இருந்தது. உட்கார்ந்தார்கள். பக்கத்தில் ஒரு பாட்டியும் ஒரு முப்பது நாற்பது வயது மதிக்கதக்க இளைஞனும் உட்கார்திருந்தார்கள்.
பாட்டி அந்த இளைஞனிடம் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தார். விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. இளைஞன் பாட்டியின் உதட்டில் ஒரு இங்கிலிஷ் கிஸ் கொடுத்தான். 'கலிகாலம்' என்றான் விக்கிரமாதித்தன்.


இளைஞன் சிரித்துக்கொண்டு "சார், இது என் மனைவி" என்றான்.


விக்கிரமாதித்தனுக்கு தலை நிஜமாகவே சுற்றியது. இளைஞன் மேலும் தொடர்ந்தான்.


"எனக்கு சேல்ஸ் வேலை. அதனால் நிறைய இடங்களுக்கு போகவேண்டும். இங்கு உள்ள பிளைட் எல்லாம் ரொம்ப வேகமாக போகிறது. பாதி நேரம் பிளைட்டிலேயே போவதால் எனக்கு முதிர்ச்சி மெதுவாகத்தான் வருகிறது.அதானால் இவளைவிட நான் இளமையாக இருக்கிறேன்"


அப்போது வேதாளம் "அங்கே தூரத்தில் கட்டத்தின் மீது என்ன தெரிகிறது?" என்றது.


"சிகப்பு விளக்கு எரிகிறது" என்றான் விக்கிரமாதித்தன்.


"சரி என்னை கெட்டியாக பிடித்துக்கொள்" என்று வேதாளம் விக்கிரமாதித்தனை தூக்கிக்கொண்டு சிகப்பு விளக்கை நோக்கி பறந்தது.


அப்போது விக்கிரமாதித்தன் அந்த சிகப்பு விளக்கு பச்சை நிறமாக மாறுவதை பார்த்து திடுக்கிட்டான்.


வேதாளம் கண்ணடித்துவிட்டு விளக்க ஆரம்பித்தது. சிகப்பு ஒளியை ( =650nm)  நோக்கி  நாம் போன போது நம்முடைய வேகம் 0.17c1 ( c என்பது ஒளியின் வேகத்தை குறிக்கிறது2) . சிகப்பு நிறம் நமக்கு பச்சை நிறமாக( = 550 nm) தெரிவதற்கு காரணம் Relativistic Doppler Effect என்றது.


விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. .


சரி, குஷ்பு பேசியது சிலருக்கு தப்பாக தெரிகிறது சிலருக்கு சரியாக தெரிகிறது. இதுவும் ரிலேட்டிவிட்டி தானே என்றான் விக்கிரமாதித்தன்.


"உன்னை திருத்தவே முடியாது" என்று விக்கிரமாதித்தனை தோளிலிருந்து இறக்கிவிட்டது.


 
 [%image(20051212-einstein.gif|140|198|einstien)%]

இந்த வருடம் முழுக்க ஐன்ஸ்டினைப் பற்றி உலகமே பேசிக் கொண்டிருந்தது. ஏன் தெரியுமா ? ஐ.நா.சபை இந்த வருடத்தை உலக இயற்பியல் ஆண்டாக அறிவித்திருந்திருந்தது.


* "உங்க பையனைப் போல ஒரு மக்கை நான் இதுவரை பார்த்ததில்லை, என்னால் இவனுக்கு பாடம் எடுக்க முடியது. தயவு செய்து இவனைல் கூப்பிட்டுக் கொண்டு போய்விடுங்கள்" - ஐன்ஸ்டினின் பெற்றொரை அழைத்து அவரது ஆசிரியர் கூறியிருக்கார். "இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் நேரம், பணம் எல்லாம் வேஸ்ட்" என்றும் கூறியிருக்கார்.


* ஜாலியாக பாட்டு கேட்பது, சைக்கிளில் ரவுண்ட் அடிப்பது இவை அவரது இளமைக்கால பொழுதுபோக்குகள். உயர் நிலைப் பள்ளியில் படித்த போது, தத்துபித்தென்று இவர் எழுதிய கட்டுரைக்கு ஏதோ போனால் போகட்டுமென்று வெறும் பாதி மார்க் போட்டிருக்கிறார்கள்.


* "யுனிவர்சிட்டிக்கெல்லாம் போய் படிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு கிடையாது" என்று தன் கைபட எழுதி வைத்திருந்தார் ஐன்ஸ்டின்.


 


[%image(20051212-WYP2005_small_logo.gif|125|113|wyp)%]

இந்த ஆண்டு(2005) இயற்பியல் ஆண்டு. இந்த பதிவு விசேடச் சார்நிலைக் கோட்பாடை (Special Theory of Relativity) கொடுத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின்க்கு சமர்ப்பணம்.


Coinciding with the 100th anniversary of Albert Einstein's "Miraculous Year", the events of the World Year of Physics 2005 aim to raise the worldwide public awareness of physics and more generally for physical sciences.


இயற்பியல் பற்றிய பல கட்டுரைகள், தகவல்களுக்கு  http://iyarpiyal.org/
அனிமேஷன், ஐன்ஸ்டின் படம்  உதவி : http://nobelprize.org/ 

 1. 0.17c என்பது குத்துமதிப்பாக 5.0 10^7 m/s
2. ஒளியின் வேகம் 299792458 m/s 
  

Wednesday, December 7, 2005

மதுரை திவ்வியதேசங்கள் மூன்று

நவதிருப்பதிக்கு அடுத்த நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்விய தேசங்களுக்கு செல்வதாக திட்டம். முன்னாள் இரவு சாப்பிட்ட மதுரை பரோட்டாவின் உதவியால் காலை சீக்கிரம் எழ முடிந்தது. மதுரையிலிருந்து 21 கீமீ தூரத்தில் இருக்கும் அழகர் கோயிலுக்கு புறப்பட்டோம்.[%image(20051206-small_azhgar_kovil_front_vi.jpg|250|172|அழகர் கோயில் முகப்பு தோற்றம்)%]

இக்கோயிலுக்கு மற்றொரு அருமையான பெயர் இருக்கிறது - திருமாலிருஞ்சோலை. கிழக்கு மேற்காக 10 மையில் தூரம் 1000 அடி உயரமும் உள்ள இந்த மலை சுனைகளும், அரிய மூலிகைகளைகளும் நிறைந்ததாக திகழ்கிறது என்று கூட வந்தவர் சொன்னார். பெயருக்கு ஏற்றவாறு எழிலார்ந்த பசுமையான மலையடிவாரத்தில் அமைந்த அமைதியான இடம். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,நம்மாழ்வார் என்று 6 ஆழ்வார்கள் 123 பாடல்களில் பாடப் பெற்ற இடம். பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் குறிப்பு இருக்கிறது.


மகாவிஷ்ணுவிற்கு இராம, கிருஷ்ண அவர்தாரங்களுக்கு அழகர் என்னும் சொல் சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெருமாளுக்கு கூடலழகர், கள்ளழகர் என்று திருநாமங்கள் உண்டு. ஆண்டாள் - வாயழகர், குழலழகர், கொப்பூழில் எழுகமலப்பூவழகர் என்று வர்ணித்துள்ளார். அச்சோஓரழகியவர் என்கிறார் திருமங்கையாழ்வார். சோலைமலைக்கரசர் என்று திவ்வியபிரபந்தம் உற்சவர் சுந்தரராஜ பெருமாளை வர்ணிக்கிறது. இந்த கோயிலில் இருக்கும் உற்சவர் முழுவதும் தங்கத்தாலானது என்று நம்பப்படுகிறது.


நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?


என்று ஆண்டாள் பாடினாள். இதை அறிந்த ஸ்ரீ இராமனுஜர், ஆண்டாளின் விருப்பம் போல் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசலும், வெண்ணையும் சமர்பித்தார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தான் பாடியதை செயல் படுத்திய இராமனுஜரின் செயலுக்கு உகந்து “வாரும் என் அண்ணலே” என்றார். இராமனுஜர் பல நூற்றாண்டு இளையவர் என்றாலும் அவர் ஆண்டாளுக்கு அண்ணனார்.
மேலும் விரிவான விளக்கத்திற்கு இங்கே பார்க்கவும்.


ஆண்டாள் 'நூறு' என்று ஆரம்பிக்கும் பாடல் பாடியது போல் திருமங்கையாழ்வார் 'ஆயிரம்' என்று பாடியுள்ளார்.


ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிரம் யாறுகளுஞ் சுனைகள் பலவாயிரம்
ஆயிரம் பூம்பொழிலுடைய மாலிருஞ்சோலையதே


பெரியாழ்வார்


...கூர்வேல் கோனெடு
மாறன் தென்கூடற் கோன்
தென்னன் கொண்டாடிய தென்
திருமாலிருஞ்சோலையே" என்கிறார். பாண்டிய மன்னர்கள் இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.


கள்ளழகர் சித்திரை மாதத்தில் ஆற்றில் இறங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புராதன ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், சைவ ஸ்ரீவைஷ்ணவ பேதம் நீங்கி ஒற்றுமை வளர்க்க இப்படியொரு விழாவை உண்டாக்கினார்கள் என்று கருதலாம்.


[%image(20051206-small_azhagar_kovil_mantapa.jpg|200|150|அழக்ர் கோயில் மண்டபம்)%]

கோயிலுக்கு வெளியில் பல மண்டபங்கள் பாழடைந்த நிலையிலும் அழகாக இருக்கிறது. படத்தில் உள்ள மண்டபம் என்னை மிகவும் கவர்ந்தது. என்ன மண்டபம் என்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா ?


கோயிலில் உள்ள கோபுரத்தில் பல அழகிய சிற்பங்கள் இருக்கிறது.சில சிற்பங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும். அதில் ஒரு சிற்பம் குழந்தை பிறப்பதை சித்தரிக்கிறது. கோயில் உள் மண்டபங்களில் பாண்டியர்கள், நாயக்கர்கள் கைவண்னத்தை காணலாம்.  


[%image(20051206-small_azhagar_kovil_monkeys.jpg|250|188|குரங்குகள்)%]

இந்த கோயிலில் பெரிய வடை போன்ற ஒன்று பிரசாதமாக விற்கிறார்கள். வாங்கி பிழிந்தால் அரை லிட்டர் எண்ணை இலவசம். நிச்சயமாக G-for-H கிடையாது. இந்த கோயிலின் மற்றொரு விசேஷம் குரங்குகள். திரும்பிய இடத்தில் எல்லாம் பார்க்கலாம். காமிரா எடுத்துச் சென்றால் கவனமாக இருக்க வேண்டும், இல்லை குரங்குகள் பிடிங்கி உங்களை படம்பிடிக்கும். நீங்கள் கார் அல்லது வேனில் சென்றால், கோயிலுக்கு போகும் போது அதில் யாரையாவது விட்டுசெல்ல வேண்டும். பல குரங்குகள் ஸ்கூரு டிரைவருடன்(screw driver) அலைகிறது.


 


கள்ளழகருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு திருமோகூருக்கு கிளம்பினோம்.


நாமடைந்தால் நல்வரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிக் சென்றடந்தால்
காமரூபங் கொண்டு எழுத்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்றென்னுமின் ஏத்துமின் நமர்காள்


என்று நம்மாழ்வார் பாடபெற்ற இத்தலம் மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் யாணை மலைக்கு பக்கத்தில் உள்ளது. திருமங்கையாழ்வாரும் இந்த இடத்தை பாடியுள்ளார். மிகவும் அழகான, அமைதியான கிராமத்தில் நெல் வயல்களுடே காணப்படும் இத்தலம் எல்லோரையும் மோகிக்கும் என்பதுல் ஐயமில்லை.
அகம்(251) பாடலில் இந்த ஊர்பற்றி சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியுள்ளார்.


... வேல் கொடித்
துனைக்காலன்ன புனைதேர் கோசர்
தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர்


நந்தர்கள் மீது வெற்றி கொண்ட மெளரியர்கள் படையெடுப்பவர்களாக விளங்கி பெரியதோர் பேரரசை நிறுவினர். படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர். பொதியமலைவரை சென்றனர் என்கிறது பாடல்.
இந்த கோயில் பக்கத்தில் அழகிய குளத்தில் சைகிள், வண்டிகளை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


[%image(20051206-small_thirumookur_leaves.jpg|250|188|முடிச்சு போட்ட தென்னை ஓலை)%]

மூலவர் காளமேகப் பெருமாள்(நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன் கருணை மழைபொழிவதால்) நின்ற திருக்கோலம். உற்சவர் பெயர் ஆப்தன். இங்குள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதி சிறப்புடையது. கோயிலில் தென்னை ஓலைகளை முடிச்சுப்போட்டிருக்கிறார்கள். ஒரு அறிவிப்பு முடிச்சு போட கூடாது என்று இருக்கிறது!. இங்கேயும் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. நிச்சயம் ராமர் கோயிலாக இருந்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். அருகில் அனுமார் சந்நதி இருக்கிறது.


அடுத்ததாக கூடல் அழகர் கோயிலுக்கு சென்றோம்.


 


[%image(20051207-koodal_periyazhavar.jpg|250|165|கூடலழகர் கோவில் - பல்லாண்டு விளக்கப்படம்)%]

பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததை சுருக்கமாக கீழே தந்துள்ளேன்.
'வல்லபதேவன்' என்ற அரசன் மதுரையை தலைநகராக கொண்ட பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஒரு நாள் இரவில் அவன் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி யாரென்று விசாரித்தான். அதற்கு அவன் 'நான் திவ்யதேச யாத்திரை செய்து விட்டு வடநாடெங்கிலும் சுற்றி, கங்கை நீராடி வரும் அந்தணர்' என்றான். அதுகேட்ட அரசன் அவனிடம் 'உனக்கு தெரிந்த நீதி ஒன்றைச் சொல்லு' என்றான். அந்தணனும், 'மழைக்காலத்துக்கு வேண்டியதை வெயில் காலத்திலும், இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக' என்னும் பொருளுடைய சுலோகத்தைச் சொன்னார். இது வல்லபதேவனின் சிந்தனையை கிளறியது. கடைசியக சொன்ன மறுமையை பற்றிய கருத்துக்கு 'அதன் பொருட்டு இதுவரையிலும் நாம் என்ன முயற்சி செய்தோம்?' என்று இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தான். மறுநாள் அரசவையில் உள்ள தன் குரு செல்வநம்பியை அழைத்து 'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்னவழி?' என்று வினவினான். உடனே நாடெங்கிலும் உள்ள அறிஞர்களைக் கூட்டி 'பரதத்துவநிர்ணயம்' ( பரம்பொருள் பற்றிய முடிவு ) செய்தால் இவ்வினாவுக்கு எளிதில் விடை கிடைக்கும் என்று யோசனை தந்தார் செல்லநம்பி. அவரது அறிவுரையை ஏற்ற பாண்டியனும் பரதத்துவ நிர்ணயம் செய்வார்க்கு பொற்கிழியளிப்பதாக பறைசாற்றிடச் செய்தான். விஷ்ணுசித்தர் 'மால்நெறியே மேல் ஒருநெறியும் இல்லா மெய்ந்நெறி' என்றும் அந்நெறியில் நிற்பவரே வீடுபேற்றிற்கு உரியவர் என்றும் ஸ்ரீமந்நாராயணனே பிரபஞ்ச காரணமான பரமாத்மாவென்றும் அவனை சரணடைவதே சகல விருப்பங்களையும் அடையும் உபாயம் என்றும் அவனே அறுமுதலான உறுதிப்பொருள்களை அளிக்கவல்லவன் என்று பரதத்துவத்தை பாண்டியன் சபையில் நிலைநாட்டினார். அப்போது கம்பத்தில் கட்டப்படிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லபதேவன் மகிழ்ந்து 'பட்டபிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரசெய்தான். இந்த காட்சியை பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து விஷ்ணுசித்தருக்கு காட்சி தந்தார். அதை கண்ட பெரியாழ்வார் உன் அழகுக்கு கண்பட்டுவிடாதோ என்று நினைத்து எம்பெருமானை பல்லாண்டு வாழ்க என்று பாடிய இடம் இந்த திருக்கூடல்.


[%image(20051206-small_koodal_azhagar_vimana.jpg|250|271|)%]

மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும், இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் என்றும், அதே போல் 'கிருதமாலா' என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரையை அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று. இந்த கோயிலில் இருக்கும் அஷ்டாங்க விமானம் ( அஷ்ட அங்கம் ) மூன்று தளங்களும் ஐந்து சிகரங்களும் கொண்டு மிக அழகாக இருக்கிறது. மேல் தளத்திற்கு சென்று அங்குள்ள பெருமாளை பார்த்தோம். இதே போல் திருக்கோட்டியூரிலும் பார்த்திருக்கிறேன்.


மதுரை பேருந்து நிலையத்தில் மதுரை மல்லி அழகாக தொடுக்கப்பட்டு 100 பூ ஐந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். மதுரையில் தாவணி போட்ட பெண்களை பார்க்கமுடிகிறது. மதுரை பேருந்து நிலையமே தாவணி போட்டிருக்கிறது -  மாட்டுத்தாவணி.


திருமாலிருஞ்சோலை ( படங்கள்)
திருமோகூர் ( படங்கள்)
திருகூடல் ( படங்கள்)


சிலபடங்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி.