Skip to main content

சொடக்கு


[%image(20051003-stretching.jpg|144|99|stretching)%]

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனை அடிக்கும் முன் கழுத்தை 180 டிகிரி சுழட்டி, பின் இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து மடக்கி 'Warm-up' செய்யும் போது பின்னனியில் DTS எப்பெக்டில் 'படக் படக்' என்று சொடுக்கும் சத்தம் வரும். இந்த சொடுக்கும் சத்தம் சிலருக்கு கை, கால் மடக்கினால் வரும். சிலருக்கு மாடிப்படி ஏறி இறங்கினால்; சலூனில் முடி திருத்துபவர் கழுத்தை திருப்பி காதை இழுத்து மசாஜ் செய்யும் போது; என் பாட்டிக்கு கொட்டாவி விட்டால் வரும்.



 



இரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசுவதால் வருகிறது என்று நேற்று காலை டிபன் சாப்பிடும் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இல்லை என்று கூகிளில் தேடிப் படித்ததில் புரிந்து கொண்டேன். சரி சத்தம் எப்படி வருகிறது என்று தெரிந்துக்கொள்ள நம்முடைய எலும்புகள், மூட்டு, கணுக்களின் அமைப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.


[%image(20051003-knuckles.jpg|222|216|Knuckles)%]

படத்தில் ( படம் உபயம் howstuffworks ) மஞ்சள் கலரில் பார்ப்பது தசைநார்/நரம்பு(ligament). நீல கலரில் பார்ப்பது 'சைனோவியுல் திரவம்' ( Synovial - suh-No-vee-ul). கொஞ்சம் தெளிவான அதேசமயம் கெட்டியான திரவம். இயந்திரத்தினுள் உராய்தலைத் தடுத்து மென்மையாக ஓடுவதற்கு பயன்படுத்தப்படும் கிறீஸ் போன்ற ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சொடக்குவதற்கு உங்கள் கை/கால்களை இழுக்கும் போது எலும்பு மூட்டுக்கள் விரிவடைகின்றது. இதனால் எலும்பு சுற்றியிருக்கும் இடத்தின் கொள்ளளவு(volume) கூடி, ஒரு சிறு வெற்றிடம்(vacuum) உண்டாகி, காற்றழுத்தம் குறைகிறது (decrease in pressure).  



[%image(20051003-joint.gif|235|165|joint)%]

காற்றழுத்தம் குறைவதால் சைனோவியுல் திரவத்தில் இருக்கும் வாய்வுக்களின்1 கரைத்திறன் கம்மியாகி (becomes less soluble) நீர்க்குமிழிகள் (air bubbles) உருவாகிறது இதற்கு பெயர் Cavitation. இந்த நீர்க்குழுமிகள் வெடிப்பது தான் நாம் கேட்கும் சொடுக்கு சத்தம்!

கொஞ்சம் ஈஸியா விளக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். ஒரு (பெட் பாட்டில்) பெப்ஸி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குலுக்கு குலுக்குங்கள். உள்ளே 'உஸ்' கிளம்பும். 'உஸ்' சத்தம் நிற்கும் வரை காத்திருங்கள். நின்றவுடன் மூடியை மெதுவாக ஒரு இரண்டு சுற்று திறங்கள். திறக்கும் போது பாட்டிலை பாருங்கள் அதில் இருக்கும் வாயு 'உஸ்' என்று மேலே கிளம்பும். பாட்டிலின் மூடியை திறக்கும் போது கொள்ளளவு கூடி, காற்றழுத்தம் குறைந்து உள்ளிருக்கும் வாயு வெளியே வருகிறது. இது தான் Cavitation!. 

 சரி இப்போது ஒரு 'பபுள் கம்' எடுத்து மென்று, நாக்கால் தட்டையாக செய்து ஒரு சின்ன பலூன் போல் செய்து 'பட்' என்று உடையுங்கள்.

மேலே சொன்ன பெப்ஸியையும், 'பபுள் கம்' மையும் சேர்த்து பாருங்கள் சொடக்கு சத்தம்  எப்படி வருகிறது என்று புரியும்


இருபது வருடத்திற்கு முன் விஞ்ஞானிகள் சொடுக்கும் போது x-ray எடுத்து வாயு குமிழ்கள்(gas bubbles) இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். சொடுக்கும் போது 0.1 milli-joule per cubic millimeter சக்தி ( energy) உண்டு பண்ணுகிறது.

சொடுக்கு எடுத்தவுடன், திரும்பவும் எலும்புகள் பழைய நிலைக்கு வருவதற்கு 10-15 நிமிடமும், வாயுக்கள் திரவத்தில் மீண்டும் கரைய (அல்லது உறிஞ்சிக்கொள்ள) 20-30 நிமிடம் எடுத்துக்கொள்கிறது, இதனால் தான் சொடுக்கு வந்த விரல்களில் திரும்ப உடனே சொடுக்கு வருவதில்லை.


சொடுக்குவதால் கை/கால்களுக்கு பிற்காலத்தில் மூட்டு வலி (arthritis - "arthro" - மூட்டு, "-itis" -வீக்கம்) வரும் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. என்ன எலும்பை சுற்றி உள்ள மெல்லிய தசைநார்(soft tissues) உடையும் சாத்தியம் இருக்கிறது.

அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சொடுக்கு பழக்கம் உள்ளவர்களின் கை பிடிமானம்(Grip) மற்றவர்களை காட்டிலும் 75% கம்மியாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. அடுத்த முறை மனைவியிடம் சொடுக்கு இழுத்துவிட சொல்லும் போது 'DTS' எப்பெக்டில் சத்தம் வந்தால் பக்கத்தில் இருக்கும் டாக்டரை பார்ப்பது உத்தமம்.

 (1) பிராண வாயு (oxygen), ஜட வாயு(nitrogen),கரியமில வாயு(carbon dioxide). 

உதவிய நூல்கள்/தளங்கள்:
கூகிள் - சொடுக்கு பற்றி நிறைய தகவல்கள்.
10ஆம் வகுப்பு அறிவியல் புத்தகம்.









Comments

Post a Comment