Thursday, October 27, 2005

சென்னை – பெங்களூர் ரயில் நிலவரம்.

லால்பாக், சதாப்தி, சென்னை எக்ஸ்பிரஸ் - ரத்து செய்யபட்டுள்ளது.
பெங்களூர் மெயில் - ஐந்து மணி நேரம் தாமதம்.
மைசூர் சென்னை - காவேரி எக்ஸ்பிரஸ் - ரத்துதானது என்று செய்தித்தாளில் போடப்பட்டுள்ளது ஆனால் ரயிவே தகவல் மையத்தில் ரத்தாகவில்லை என்கிறார்கள்.


சென்னை - பெங்களூர் இடையே பழுதுப்பட்ட இனைப்பு இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள். சென்னை பெங்களூர் மழையை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது.


ரயில்வே தகவல் அறிய : 139
மேலும் தொலைபேசி எண்கள்: 22874670,22200971,22200972
தென்னக ரயில்வே தகவல் தளம் :
http://www.indianrail.gov.in/temp.htm
புயல் பற்றிய செயற்கைகோள் படங்கள் : http://www.imd.gov.in/section/satmet/img/sa.htm


[ Update 1 27/05/05]


[%image(20051027-chennai_rain.jpg|360|197|Chennai Rain)%]

 சென்னை மழை படம் உதவி தமிழ் முரசு


[ Update 2 27/10/05]


மேலும் சென்னை படங்கள் : தினமணியில்.


[ Update 3 - 28/10/05 11:30am ]சென்னை மழை நிலவரம் : அருள்,  நாராயணன், பத்ரி
சன் டிவி நிலவரம்: உயிர்மை 


[ Update 4 - 28/10/05 11:50am ]சென்னை - பெங்களூர் KSRTC and TNSTC பேருந்துகள் சித்தூர்-ஓசூர் வழியாக இரண்டு மணிக்கு ஒன்று என்று விடப்பட்டுள்ளது. அட்வான்ஸ் ரிசர்வேஷன் தேவையில்லை.
சென்னையில் மழை நீர் வடிய தொடங்கியுள்ளது. சென்னை - பெங்களூர் ரயில் நிலவரம் இன்னும் சரியாக தெரியவில்லை.


[ Update 5 - 28/10/05 15:30pm ] ஸ்பெஷல் ரயில் தகவல் நம்பர்: 22876288 - நான் விசாரித்துவிட்டேன். நன்றாக தகவல் சொல்கிறார்கள்.


KPN பஸ் தொலைபேசி எண்கள்: 26709911, 26702777, 26700111 ( ஒரு பெங்களூர் - சென்னை டிக்கேட் 600/= என்கிறார்கள் )


[ Update 5 - 28/10/05 17:00pm ]  பெங்களூர் - சென்னை ரயில்கள் எல்லாம் ஓடும் என்கிறது !
http://www.srailway.com/arr_dept/press/pr.asp?sl=253 (நன்றி அலக்ஸ் )

Wednesday, October 26, 2005

ஜோ ஜோ - தீபாவளி

[%image(20051026-jothika_7.jpg|200|149|Jothika_7)%]

நேற்று காலையிலிருந்து பெங்களூரில் 'ஜோ ஜோ'ன்னு நல்ல மழை. சென்னைக்கு போகும் பல ரயில்கள் ரத்தாகியுள்ளது என்று NDTVவில் சொன்னார்கள். தீபாவளிக்கு சென்னைக்கு போக முடியுமா என்று தெரியவில்லை. ஆபிஸிலிருந்து வீட்டுக்கு போவதே கஷ்டமாகயிருக்கிறது. பார்க்கலாம்.


 


 தீபாவளி என்று சொன்னால் நினைவிற்கு வருவது, பட்டாசு, புது துணி மற்றும் திபாவளி ரிலீஸ் படங்கள். ஆனால் இன்று ?


[%image(20051026-jothika_1.jpg|172|216|Jothika_1)%]

தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று படித்த ஞாபகம். நான் ஸ்கூல் படித்த போது இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு.


போன வாரம் சென்னைக்கு போன போது தி.நகரில் எப்போதும் போல் இந்த வருடமும் மக்கள் கூட்டம். ஒரு மாறுதலுக்கு இந்த முறை போலிஸ் போக்குவரத்தை அருமையாக கட்டுப்படுத்தியிருந்தார்கள். பனகல் பார்க் அருகில் இரண்டு புதிய கடைகள் வந்திருக்கிறது - சரவணா ஸ்டோர்ஸ் 'பிரமாண்டமாய்' மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலெக்ஷன்ஸ். இந்த கடைகளில் நிஜமான 'தள்ளு'படியை காணமுடிந்தது.


கூட்டத்தை பார்த்தாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. இந்த ஜோதியில் கலக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் "வேடிக்கை பார்க்காம இந்த தூண் பக்கத்தில் பத்திரமா இந்த பையை பார்த்துக்கோங்க நான் அஞ்சு நிமிஷத்தில வந்திருவேன்" என்று என் மனைவி உள்ளே போனாள். இது எவ்வளவு பெரிய பொய் என்று எலோருக்கும் தெரியும். என் அதிர்ஷ்டம் ஒரு புண்ணியவான் எழுந்துப்போக எனக்கு உக்கார சீட் கிடைத்தது. நான் கல்கியின் சிவகாமி சபதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.


[%image(20051026-jothika_2.jpg|172|216|Jothika_2)%]

ஒரு குழந்தை ஒரு பெண்மணியை "அம்மா, வா" என்று கூப்பிட்டது. அந்த பெண்மணி கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றாள். எனக்கு 'பக்' என்றது. திரும்பவும் "அம்மா வா" என்றது. இப்போது வேறு ஒரு பெண்மணி.


பிறகு தான் தான் தெரிந்தது அந்த குழந்தை போகிற வருகிற எல்லா புடவை கட்டின பெண்களையும் 'அம்மா வா' என்று கூப்பிடுகிறது என்று. அந்த குழந்தையை பார்க்க பாவமாக இருந்தது. என்னிடத்தில் இருந்த ஒரு பிஸ்கேட் பாக்கெட்டை எடுத்து கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சாபிப்பிட தொடங்கிற்று. சாப்பிட்டு முடித்துவிட்டு, மறுமடியும் 'அம்மா வா'. பக்கத்தில் இருந்தவர் "பாவம் சார், ரொம்ப நேரமா குழந்தை அம்மாவை கேட்கிறது உள்ளே கூட்டிண்டு போங்க" என்றார். பிஸ்கேட் பாக்கெட் கொடுத்ததனால் என்னை அந்த குழந்தைக்கு அப்பா என்று நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது அந்த குழந்தை என்னிடத்தில் வந்து நான்கு விரலை மடக்கி ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியது. .


நான் 'ஒன்' என்றேன்.


"அதுக்கு போகவா?" என்றது.


"சரி, என்றவுடன் அங்கேயே .."


[%image(20051026-jothika_3.jpg|172|216|Jothika_3)%]

அந்த குழந்தை இரண்டு விரலையும் நீட்டுவதற்குள் " 'இந்த கலரா'ன்னு அட்வர்டைஸ் பண்றா, ஆனால் நான் கேட்ட கலர் இல்லவேயில்லை, அடுத்த கடைக்கு போகலாம் வாங்க" நல்லவேளை சிவகாமியின் சபதத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது.


நான் திருச்சியில் இருந்த போது. தீபாவளி என்றால் எங்கள் வீட்டு முன் யாராவது வந்து "தீபாவளி இனாம்" கேட்பார்கள். இந்த பழக்கம் நாயக்கர் காலத்தில் தொடங்கியதா என்று தெரியாது. பாட்டி கதவை திறந்து "உங்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லையேபா"


"பாட்டி, எங்களை பார்க்கவே முடியாது, ஏன்னா நாங்கள் வருஷா வருஷம் தீபாவளிக்கு இனாம் வாங்க மட்டும் தான் வருவோம்!. பல இடத்துக்கு போவணும் சீக்கிரம் கொடுங்க பாட்டி"


"சரி, உன் கண் ஏன் சிவந்திருக்கு ராத்திரி சரியா தூங்கலையா ?"


போதைக் கண்ணுக்கும், தூங்காத கண்ணுக்கும் பாட்டிக்கு வித்தியாசம் தெரியாது.


[%image(20051026-jothika_4.jpg|172|216|Jothika_4)%]

இப்படி டெலிபோன், தபால், மின்சாரம், குழாய் ரிப்பேர், எதிர் விட்டில் பால் கறக்கும் கோனார், பூக்காரி, நாதஸ்வரத்தில் "மல்லிகை முல்லை.." வாசிக்கும் கோஷ்டி..


அதேபோல் தீபாவளி என்றால் என் நண்பன் பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் சென்று வான்கோழி பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்து தான் பட்டாசு, புது துணி எல்லாம். கட்டாயம் வானொலி ( தமிழில் ரேடியோ ) "உன்னை கண்டு நான் ஆட" என்ற பாடல் வரும். பிஜிலி வெடி, கொட்டாங் குச்சியில் யானை வெடி, ராக்கேட்டை படுக்க வைத்து விடுவது...  மற்றொன்று தீபாவளி அன்று அட்லீஸ்ட் ஒரு படமாவது பார்க்க வேண்டும். சில சமயம் இரண்டு. "மச்சி நாளைக்கு தலைவர் படம் ரீலிஸ்" என்ற உரையாடல்கள்.


தீபாவளி அன்று பக்கத்திவீட்டு மாமா எங்காத்துக்கு உள்ளே வந்து நான்கு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி "என்னடா ? கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்பார். அவருக்கு அன்று அது ஒரு கடமை. பார்க்கும் எல்லோரிடமும் இதை கேட்பார். போன் அடித்தால் அதே "கங்கா ஸ்நானம் ஆச்சா" விசாரிப்புகள்...


[%image(20051026-jothika_5.jpg|172|216|Jothika_5)%]

என் அப்பா எல்லா தீபாவளி மலர்களையும் வாங்கி விடுவார். ஆனந்த விகடன் கொஞ்சம் சைஸ் சின்னதாக இருக்கும். கல்கி ஒரு மாதத்து நியூஸ் பேப்பர் எல்லாம் பைண்ட் செய்தால் எப்படியிருக்குமோ அந்த சைஸில் இருக்கும். எனக்கு ஆனந்த விகடனில் பின் அட்டை , மற்றும் உள்ளே இருக்கும் தலை தீபாவளி, மைசூர் பாக்கில் மண்டை உடையும் ஜோக்ஸ்.....


"ஏங்க...ஏங்க காஞ்சிபுரம், தர்மாவரம், பனாரஸ் இந்த ஊரெல்லாம் நெனச்சா உங்களுக்கு என்ன ஞாபகம் வருது"


"திருப்பதி, திருச்செந்தூர், பழனி ஞாபகம் வருது"


போன்ற ஜோக்ஸ் எல்லாம் இப்போது கிடையாது.


தீபாவளி ஸ்வீட் எல்லோர் விட்டிலும் ஒரு வாரத்திற்கு முன்பே பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். அதில் நிச்சயம் தீபாவளி லேகியம் இருக்கும்(தீபாவளி மருந்து என்றும் பாடம்). பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, அடுத்த தெரு என்று எல்லோரும் வீட்டிலிருந்தும் தீபாவளி பக்ஷணம் வரும். அதே போல் நானும் எங்க வீட்டு பக்ஷணத்தை அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் கொடுக்கணும். இன்று கிருஷ்ணா ஸ்வீட், அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்னெக்ஸ் என்று மாறிவிட்டோம். "தீபாவளி பக்ஷணமா ? நோ வே, ஆர் யூ கிரேசி ?"


இப்போது தீபாவளி "இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக" காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிக்கு முடிகிறது. நடிகைகளின் அசட்டு பேட்டி, புது பட பாடல்கள், பட்டிமன்றம் என்பது தான் இப்போதைய தீபாவளி மெனு. இந்த சானலை பார்க்கவா அதை பார்க்கவா என்ற நிலையில் நமக்கு நேரம் சரியாக இருக்கிறது.


[%image(20051026-jothika_6.jpg|180|157|Jothika_6)%]

"போனை எடுத்து கீழே வை, நல்ல சீன் பார்க்கிறப்ப எவனாவது உயிரை எடுப்பான்"


"சீக்கிரம் பெட் ரூமில் இன்னொரு டிவி வாங்கனும் எந்த் பிரோகிரமும் சரியா பார்க்க முடியர்தில்லை" என்று பேசிக்கொள்ளும் நாம் வாழ்கை, உறவுகள், நட்பு என்று எல்லாவற்றையும் 29  இன்ச்சில் (டிவியில்) அடக்கிவிட்டோம்.


இன்னும் கொஞ்ச நாளில் "தீபாவளிக்கு நாங்க எல்லாம் வாங்கிவிட்டோம் அப்ப நீங்க ?" என்று டிவியில் விளம்பரத்தில் காலி பையை தூக்கி காண்பிக்கும் குடும்பத்தை மட்டும் தான் நாம் பார்க்க போகிறோம்.


பழசை எல்லாம் யோசித்தால் எதோ 'கருப்பு-வெள்ளை' திரைப்படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சி மாதிரி இருக்கிறது.


எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.[ பிகு1: "ஜோ ஜோ"ன்னு மழை அதான் ஜோதிகா படங்கள்.
  பிகு2: எவ்வளவு நாள் தான் குஷ்பு பற்றியே படித்துக்கொண்டிருப்பது, ஒரு மாறுதலுக்கு ஜோதிகா இருக்கட்டுமே என்று ஹிஹி!]

[படங்கள் உதவி: RMKV] 


 


  

Thursday, October 20, 2005

உடைந்த கையை ஒட்டின கதை

உடைந்த கையை ஒட்டின கதை
(1943)

எஸ்.வி. ராமகிருஷ்ணன்


[%image(20051019-svr_hand_small.gif|142|200|SVR Hand Image)%]

என் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஜனவரி 1943. யுத்தத்தின் தாக்கம் உக்கிரமாக இருந்த காலம். நான் எண்ணும் எழுத்தும் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு ஆனால் பள்ளிக் கூடத் தில் சேராமல் சுதந்திரப் பறவையாக இருந்த கடைசிக் காலம். நாள் முழுக்க விளையாட முடியும் என்றிருந்த நேரம். சென்னையில் இருந்து வந்திருந்த, என் வயதை ஒத்த உறவுக்காரப் பெண் சரோஜா வுடன் மும்முரமாக சிங்க விளை யாட்டு விளையாடிக்கொண்டி ருந்தேன். நான்தான் சிங்கம். அவள் தயைகூர்ந்து ஆடாக இருக்க ஒப்புக் கொண்டிருந்தாள். சிங்கமாகிய நான் ஒரு கட்டிலின் மேல் வீற்றிருக்க, சரோஜா கட்டிலின் கீழ் பயந்து பதுங்கினாள்.சிங்கம் ஒரு கர்ஜனையுடன் கீழே பாய்ந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கட்டிலிலிருந்து தொங்கிக்கொண்டி ருந்த ஒரு நாடாவில் அதன் ஒரு கால் மாட்டிக்கொள்ளவே, சிம்ம கர்ஜனை ஓலத்தில் முடிந்தது. நான் அழுத அழுகையைக் கேட்டு எல் லோரும் ஓடி வந்தார்கள். என்னை அள்ளி எடுத்துக்கொண்டு மாடியிலி ருந்து கீழே கொண்டு போய் பரி சோதித்தார்கள். கீழே விழுவதும் விழுந்தால் அழுவதும் சகஜமான விஷயங்கள்தானே, இது என்ன கொஞ்சம் ஜாஸ்தியாகவே கவனிக் கிறார்கள் என்று எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. என் மரியாதை போய்விடக் கூடாதே என்பதற்காகத் தொடர்ந்து ஓலமிட்டேன்.
“எலும்பு உடைந்துவிட்டாற் போலிருக்கிறது” என்று அப்பா சொன்னது கேட்டது. அதற்கெல் லாம் எனக்கு அர்த்தம் தெரியாத தால் சிராய்ப்பு மாதிரி ஏதோ இன்னொரு காயம் என்று நினைத் துக்கொண்டேன். என்னைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு ‘லேடியாஸ்பத்திரி’ என்று பொது மக்களால் அழைக்கப்பட்ட லேடி டாக்டர் மேரி வர்க்கியிடம் போனார்கள். ‘வர்க்கியம்மா’ எங்கள் குடும்ப டாக்டர் மட்டுமல்ல, எங் கள் வீட்டில் எல்லாப் பிரசவங் களையும் பார்த்து என்னையும் என் சகோதர சகோதரிகளையும் இவ் வுலகிற்கு அறிமுகம் பண்ணி வைத்தவரும் ஆவார். அப்போது பார்த்து பக்கத்து கிராமம் ஒன்றில் பிரசவம் பார்க்க அவர் போயிருந் தார். உடனே பெரியாஸ்பத்திரி என்று பெயர் பெற்ற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கே ஒரு ‘ஆம்பிள்ளை டாக்டரும்’ ஒரு லேடி டாக்டரும் இருந்தனர். முதலாமவர் என்னைப் பரி சோதித்துவிட்டுக் கோயமுத்தூருக்கு எடுத்துப் போகும்படி அறிவுரை கொடுத்தார். அப்புறம் அம்மா சொல்லித் தெரிந்தது : என் இடது முழங்கை எலும்பு ஒடிந்துவிட்ட தாம். மூட்டில் பார்த்து முறிந்து வைத்ததால் எக்ஸ்ரே எடுத்து ரிப்பேர் பண்ண வேண்டிய கேஸாம். தாராபுரம் ‘பெரியாஸ்பத் திரி’யில் எக்ஸ்ரே கிடையாததால் கோயமுத்தூருக்குத்தான் போக வேண்டுமாம்.
எலும்பு முறிந்தால் மிகவும் வலி இருக்குமென்று பின்னால் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நிஜமா கவே அன்று தொடர்ந்து வலி ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒருவேளை எனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், கோயமுத்தூருக்கு, அதுவும் காரில், போகும் வாய்ப்பும் கொடுத்த சந்தோஷத்தில் வலி அமுங்கிப் போயிருக்கக்கூடும். அப்போது கார் என்பது மிக அபூர்வம். எங்கள் வீட்டிலும் கார் கிடையாது. அப்பா அவசரமாகக் கச்சேரிக்கு (கோர்ட்டு) போய் வேலைகளை முடித்துக் கொண்டு சீக்கிரமே திரும்பினார். வழக்குகளுக்கு ‘வாய்தா’ வாங்கி இருக்க வேண்டும். டாக்ஸிக்குச் சொல்லியனுப்பினார்கள். தாரா புரத்தில் அந்த நாளில் டாக்ஸி என்றால் கள்ள டாக்ஸிதான். அதா வது பிரைவேட் கார் என்று பதிவு செய்துகொண்டு கறுப்பு போர்டில் வெள்ளை எண்கள் எழுதியிருப் பார்கள். ஆனாலும் வாடகைக்குத் தான் ஓடும். இந்தக் கார்களின் முக்கியமான உபயோகம் கல்யாண ஊர்வலங்களே. அதனாலோ என் னமோ அவை எல்லாமே கூரையை சுலபமாகத் திறக்கக்கூடிய ‘டூரர் டாப்’ வண்டிகளாகத்தான் இருந் தன. வெயிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்பு கொடுப்பது கேன்வாஸ் துணிதான். (21 வருடங் கள் கழித்து என் கல்யாண ஊர் வலம் நடந்தபோது கூட இவை இருந்தன. பின்னால் காணாமற் போய்விட்டன.)
கிளம்புவதற்குள் ஒரு சிக்கல். கோவை வரை போய்த் திரும்பி வர வேண்டிய பெட்ரோல் இல்லை யாம். அப்போது உலக யுத்தத்தின் காலமாகையால் பெட்ரோலுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு நிலவியது. ரேஷன் என்று கொஞ்சம் கொடுப் பார்கள். கூடுதலாக வேண்டுமா னால் குதிரைக் கொம்புதான். எப்ப டியாவது ‘பிளாக் மார்க்கெட்டில்’ வாங்கிக்கொண்டு ஒரே மணியில் வந்துவிடுவதாகச் சொல்லி தாராள மாகவே பணம் வாங்கிக்கொண்டு போன டாக்ஸி டிரைவர் மூன்று மணி நேரம் ஆகியும் காணாமற் போக என் அம்மாவும் அப்பாவும் தவித்துப்போனார்கள். கடைசியில் கொஞ்சம் பெட்ரோலும் கொஞ்சம் சீமெண்ணையும் (சீமை எண்ணை -வெள்ளைக்காரன் கொண்டுவந்த எண்ணை; அதாவது கிரஸின் ஆயில்) கலந்து குடித்துவிட்டு ஒரு ஹைதர் காலத்து கார் வந்து நின்றது. இதை வைத்துக்கொண்டு கோய முத்தூர் போய்ச் சேர முடியுமா என்று அம்மாவுக்குக் கவலை. ஆனா லும் ஓட்டையோ உடைசலோ எப்படியோ ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துவிட்டோம்.
கோவையில் ராமராவ், லஷ்மண ராவ் என்று இரண்டு டாக்டர்கள். இருவரும் சகோதரர்கள். இதற் கென்று ஆஸ்பத்திரி கட்டி வைத்து ஜில்லாவில் யாருக்காவது எலும்பு முறியாதா என்று காத்துக்கொண்டி ருந்தார்கள். அன்று நான் கிடைத் தேன். ராமராவ் ரொம்ப நல்லவர். தம்பி கொஞ்சம் முசுடு. கோபக் காரர் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ராமராவ்தான் என்னி டம் வந்தார். அன்பாகப் பேசினார். எண்ணத் தெரியுமா என்று கேட் டார். தெரியும் என்று பெருமை யாகச் சொன்னேன் எத்தனை வரை எண்ணுவாய் என்றார். தைரியமாக “நூறு” என்று சொன்ன பிறகு மனதுக்குள் கொஞ்சம் சந்தேகம் எழுந்து உறுத்தியது. ஆனால் என் கவலைக்கு அவசியம் இருக்க வில்லை. அவர் குளோரோபாரம் (அந்தக் காலத்தைய மயக்க மருந்து) கொடுப்பதற்காகத்தான் கேட்டிருக் கிறார். பெரியவர்களைக்கூட அப்படித்தான் எண்ணச் சொல்லி மயக்கம் கொடுப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது. பத்தொன்பது எண்ணிய பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. அதனால் லக்ஷ்மணராவின் முன்கோபம் (அவர்தான் எலும்பை இணைத்தா ராம்) என்னைப் பாதித்திருக்க முடியாது.
நான் விழித்தபோது என் இடது கையை மடக்கி பிளாஸ்டர் போட்டிருந்தது. இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் தாராபுரம் திரும்ப முடி யாது. அடிக்கடி டாக்டரிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்பதால் இரண்டு வாரம் போல் நானும் என் அம்மாவும் கோவை யிலேயே எங்கள் மாமா வீட்டில் தங்கினோம். மாமா என்றாலும் என் அம்மாவின் கூடப்பிறந்த சகோ தரர் அல்ல. பெரியப்பாவின் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது எல்லாம் சொந்த அண்ணன் வீட்டில் போய்த் தங்குவதற்கே யோசனை செய்கிறார் கள். அந்த நாளில் சொந்த பந்தங்கள் எல்லாம் இன்னும் நெருக்கமாக இருந்தன. ஒன்று விட்டாலும் சரி, இரண்டு விட்டாலும்கூட சரியே, தைரியமாக உரிமையோடு போய்  ‘டேரா’ போடலாம்.
மாமா வீடு இருந்தது இப்போது ராம் நகர் என்றழைக்கப்படும் அன்றைய ‘பிராமின் எக்ஸ்டென் ஷன்.’ சுருக்கமாக எக்ஸ்டென்ஷன் என்று சொல்வார்கள். கோவையில் அந்தப் பகுதி அந்தக் காலத்தில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. பிளான் போட்டு அமைத்த ஒழுங்கான, விசாலமான வீதிகள், மரங்கள் அடர்ந்த காம்ப வுண்டு கொண்ட தனித்தனி வீடு கள். மாமா வீட்டில் ஒரு மயில்கூட இருந்தது. ஆனால் அது தோகையை விரித்து ஆடாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதற்கு அம்மா சொன்ன காரணம்: அது பெண் மயிலாம், ஆண் மயில்கள் தான் டான்ஸ் ஆடுமாம்.
கை சீராக முன்னேற்றம் அடைந் ததால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு பிளாஸ்டரை உடைத்து ஒரு பெரிய துணிக்கட்டு போட்டார்கள். இன்னும் சில நாளில் ஊருக்குப் போக அனுமதித்தார்கள். இப்போது மறுபடி ஒரு கார் சவாரி. ஆனால் இம்முறை அது (என் பெற்றோருக்கு) ஒரு பதட்டமில்லாத, சமாதான மான யாத்திரையாக இருந்தது. சில வாரங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை வந்து காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
அடுத்த கோவை விஜயம்தான் கடைசி விசிட் கூட. கை முழு குணமாகிவிட்டது. என்று சொல்லிக் கட்டை எடுத்துவிட்டார்கள். பிறகு ஊருக்குப் போய், ஒட்டின கைக்கு மறுபடியும் பலம் வருவதற்காக தினசரி ஒரு சின்ன பயிற்சி. அதா வது ஒரு டிபன் பாக்ஸில் மணலை நிரப்பி என்னிடம் கொடுப்பார்கள். எங்கள் வீட்டுக் காம்பவுண்டிலேயே நான் முறிந்து ஒட்டின என் இடது கையால் அதைத் தூக்கிக்கொண்டு மேலும் கீழுமாகப் பத்து தடவை நடக்க வேண்டியது. கைக்கு இன்னும் முழு பலம் வராததால் சில சமயம் அது கொஞ்சம் கஷ்ட மாக இருந்தது. அதற்கு நானே ஒரு வழி கண்டுபிடித்தேன். கஷ்ட மாக இருக்கும்போதெல்லாம் டிபன் பாக்ஸை வலது கைக்கு மாற்றி நடந்துகொண்டிருந்தேன். பத்து தடவை என்னவோ கரெக்டாக நடந்துவிடுவேன். ஒரு நாள் அம்மா அதைக் கண்டுபிடித்துக் கொஞ்ச லாகக் கடிந்துகொண்டாள். அப் போதுதான் எனக்கு அந்தப் பயிற் சியே ஒடிந்த கைக்குத்தானே என்பது உறைத்தது!
சீக்கிரம் எலும்பு நன்றாகப் பிடித்துக்கொள்ளவும் பலப்படு வதற்கும் இன்னும் ஒரு உபாயமும் கையாளப்பட்டது. இது நாட்டு வைத்திய முறை. ‘கொசத்தி’ என் றழைக்கப்பட்ட குயவனின் மனை வியை அழைத்து என் கைக்கு மயி லெண்ணை தடவி நீவி விடச் சொல்லுவார்கள். அதற்கு ஏன் மயில் எண்ணை என்று பெயர், அது மயிலில் இருந்து எடுத்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதன் மணம் என்னமோ சுகந்தமாக இருக்கவில்லையே என்பது மட்டும் நினைவிருக்கிறது.
எப்படியோ கை சீக்கிரத்திலேயே குணமாகிவிட்டது. ஐந்தே மாதங் களில் நான் பள்ளியில் சேர்ந்த போது என் இடது கைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எல்லாம் சுபம்!


நன்றி : உயிர்மை(Oct 2005 )

Wednesday, October 12, 2005

கண்கலங்க வைக்கும் கடிதங்கள்

நேற்றைய அசோகமித்திரன் கட்டுரையை தொடர்ந்து இன்று ரா.கி.ரங்கராஜன் அவர்களுடையது.


சமிபத்தில் எனக்கு பிறந்த நாள் வந்தது. (எத்தனையாவது பிறந்த நாள் என்று கேட்க நினைப்பவர்கள் 'எத்தனையாவது' என்பதற்கு சரியான இங்கலிஷ் வார்த்தையை கண்டுபிடித்துச் சொல்லுங்கள். பார்க்கலாம் ரொம்பப் பேரிடம் கேட்டு வருகிறேன். மகாமகா இங்கிலீஷ் பேராசிரியர்கள்கூட முழிக்கிறார்கள்)


பிறந்த நாள் என்றால், வாழ்த்து வராமலா இருக்கும் ?. வந்தன தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலர் எழுதியிருந்தார்கள், இருந்தாலும்.."என் அன்புள்ள அப்பாவுக்கு உங்களுடைய இந்தப் பிறந்த நாளன்று நீங்கள் என்னை எப்படியெல்லாம் வளர்த்து மனிதனாக்கினீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.


எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, சின்ன பையனாயிருந்தபோது காலில் ஏதோ புண் ஏற்பட்டிருந்தது. தூங்கும் போது என்னை அறியாமல் அதை சொறிந்து சொறிந்து ரத்தக் களரியாக்கிக் கொண்டிருந்தேன். அதற்காகவே முரட்டுக் கதர்த்துணையில் க்ளவுஸ் மாதிரி உறை தைத்துப் போட்டு அது கழன்றுவிழுந்து விடாமலிருக்க முடிச்சுப் போட்டு வைத்தீர்கள். தினம் ராத்திரி உங்களுடைய கடைசி வேலை அது.


அந்த நாளில் ஹாவாய் செருப்பு, சிங்கப்பூர் செருப்பு என்று சொல்லப்பட்ட ரப்பர் செருப்பு வாங்கித்தந்தீர்கள். தீடீர் தீடீரென்று அதன் 'வார்' அறுந்து போய்விடும். நான் கஷ்டபடக் கூடாது என்பதற்காக, செட் செட்டாக வார்கள் வாங்கி வைத்திருப்பீர்கள். ஒன்றின் வார் அறுந்ததும் உடனே புதிதாகப் போட்டு விடுவீர்கள்.


தீபாவளி சமயத்தில் நான் கடை கடையாகப் போய், வாசலில் தொங்க விட்டிருக்கும் சட்டைத் துணியைப் பார்த்து எனக்குப் பிடித்தது எது, அது எந்தக் கடையில் தொங்குகிறது என்பதை உங்களிடம் சொல்வேன். அந்தத் துணியை வாங்கி வந்து டெய்லரிடம் கொடுக்கும்படி சொல்வேன். அதற்கு இரண்டு மூன்று நாளாகும். "சீக்கிரமா வாங்கி வாங்க. இல்லாட்டி அந்தத் துணி கடையில் தீர்ந்து போயிடும்' என்று நான் நச்சரிப்பேன். நீங்கள் கோபப்பட மாட்டீர்கள்.


பரீட்சை சமயத்தில், ராத்திரி அம்மா மறந்து போய்த் தூங்கி விட்டால் நீங்கள் டீ போட்டு எடுத்து வந்து எனக்காக ஆற்றிக் கொடுப்பீர்கள். இன்ஜினியரிங் காலேஜில் சீட் கிடைப்பதற்காக ஒரு லட்ச ரூபாய் கஷ்டப்பட்டு கொடுத்தீர்கள். நான் கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். மேலும் பத்தாயிரம்தந்தால்தான் அந்த குரூப் தருவோம் என்றார்கள். அதையும் எப்படியோ சமாளித்துக் கொடுத்தீர்கள். இன்றைக்கு நான் நல்ல நிலைமையில் இருப்பது உங்களால் தான் அப்பா !


இப்படிக்கு உங்கள் பிரியமுள்ள..."


"அன்புள்ள அப்பாவிற்கு அநேக நமஸ்காரம். இங்கு நான் மாப்பிள்ளை மாமியார் அனைவரும் சவுக்கியம். இன்றைக்கு உங்க்ள் பிறந்த நாள். என்னை எப்படியெல்லாம் அன்போடும் அக்கரையோடும் வளர்த்தீர்கள் என்பதை நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்.


நான் வீணை கற்றுக் கொண்டேன், ஞாபகம் இருக்கிறதா ? வாசித்து வாசித்து வலதுகை விரல்களில் கோடு விழுந்து எரிச்சலாக எரியும். தினம் தினம் நீங்கள் தேங்காய் எண்ணெயில் பஞ்சைத் தேய்த்துத் தடவி விடுவீர்கள்.


நான் தூங்கும்போது மேலே துணி விலகயிருக்கும். நீங்கள் மெதுவாக, என் தூக்கம் கொடாமல் போர்வையை போர்த்திவிட்டுப் போவீர்கள்.


எனக்காக ஒரு முறை தாவணி வாங்கி வந்தீர்கள். அது ப்ளூ கலர். ஸ்கூல் யுனிபாரமும் ப்ளூ கலர்தான். வேறே கலர் வாங்கியிருக்கக் கூடாதாவென்று நான் அம்மாவிடம் முனகிக் கொண்டிருந்தது உங்களுக்கு கேட்டுவிட்டது. அதற்குள் நான் அதைக் கட்டிக் கொண்டுவிட்டேன். இருந்தாலும் பரவாயில்லை என்று அந்த தாவணியைக் கழற்றித் தரச் சொல்லி, நீட்டாக மடித்துக் கடைக்கு எடுத்துப் போனீர்கள். அதை எடுத்துக்கொண்டு வேறே கலரில் தரச் சொல்லி கேட்டீர்கள். உடுத்திக் கசங்கிப் போன துணியைக் கடைக்காரன் வாங்கிக் கொள்வானா ? மாட்டேன் என்று சொல்லிவிட்டான். நீங்கள் மறுபடி பணம் கொடுத்து, புதிதாக வேறு கலரில் ஒரு தாவணி வாங்கி வந்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா, அப்பா ?


என் சினேகிதன் எல்லோரும் அப்போது சல்வார் கமீஸ் போட ஆரம்பித்தார்கள் நானும் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டேன் அம்மா முடியவே முடியாது, தாவணி தான் போட வேண்டுமென்று சொன்னாள். நீங்கள் என்னை ஆதரித்து, சல்வார் கமீஸ் துணி வாங்கித் தந்தீர்கள். தைத்துப் போட்டுக் கொண்டேன். எனக்கு ரொம்ப அழகாயிருக்கிறதென்று என் சிநேகிதிகள் எல்லாரும் சொன்னார்கள்.


என்னை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எத்தனை பாடுபட்டீர்கள்! பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று சும்மா சும்மா வந்து கொண்டிருந்தால் எனக்கு என்னவோ போலிருக்கும் என்பதற்காக, எவ்வளவு பேரை வடிகட்டி வீட்டுக்கே வராமல் பண்ணினீர்கள்! மகாலிங்கபுரம் கோயிலில் எனக்காக எழுதி வைத்துவிட்டு, எத்தனை நடை நடந்திருப்பீர்கள்!.


நாலு மாசம் முன்பு நான் அங்கே வந்திருந்த சமயம், மாப்பிள்ளை மதுரைக்குப் பறப்பட்டாரே, நினைவு இருக்கிறதா அப்பா ?


மதுரைக்கு நாலு ஸ்டேஷன் முன்பு ரயில் தடம் புரண்டதென்று டி.வி.யில் நியுஸ் சொன்னதும் எல்லாரும் எப்படிப் பதறிப் போனோம் ? நீங்கள் மதுரையில் இருக்கும் உங்கள் சிநேகிதருக்கு ஃபோன் போட்டு, அந்த இடத்துக்குப் போய் பார்த்து உடனே தகவல் தெரிவிக்கும்படி ராத்திரியோடு ராத்திரியாகச் சொன்னீர்கள். மாப்பிளை பத்திரமாக இருக்கிறார் என்று சேதி வருவதற்குள் என்னைக் காட்டிலும் நீங்கள்தானே அதிகம் தவித்தீகள்!


என் நாத்தனார் புருஷன் வேளச்சேரியில் வீடு கட்ட ஆரம்பித்து, சொஸைட்டியில் போட்ட லோன் அப்ளிகேஷன் லேசில் சாங்ஷன் ஆகாமல் திண்டாடியபோது, அந்த சொஸைட்டியின் மேலதிகாரிக்கு எப்படியோ சிபாரிசு பிடித்து, ஆறு மாதத்துக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய லோனை இரண்டே மாதத்தில் வாங்கித்தந்தீர்களே. அந்த ஒரு காரியத்தில் இந்த வீட்டில் என் மதிப்பும் கவுரவமும் எவ்வளவு கும்மென்று உயர்ந்த்து தெரியுமா ?


இப்படி ஒவ்வொன்றையும் இன்றைக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கண்ணில் ஜலம் வருகிறது அப்பா.


இப்படிக்கு உங்கள் அன்புள்ள.. ."


மேற்கண்டவாறு நிஜமாகவே எனக்கு கடிதங்கள் வந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் ? ஊகூம். இயந்திரத்தனமாக இண்டர்நெட்டில் இரண்டு வரி வாழ்த்து. அதிலேயே ஒரு க்ரீட்டிங்ஸ் கார்டு ( என்னுடைய கம்ப்யூட்டரில் அதை வரவழைப்பதற்குள் அடுத்த பிறந்த நாள் வந்துவிடும் போலிருக்கிறது )..


[ நாலு மூலை, 208 பக்கம், ரா.கி.ரங்கராஜன், கிழக்கு பதிப்பகம், விலை 80/= ), பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் சென்னை வருவதற்குள் படித்து முடித்து ஒரு சின்ன் தூக்கம் போடலாம் ]

Tuesday, October 11, 2005

இரண்டு கட்டுரைகள்

சமிபத்தில் இரண்டு கட்டுரைகளை இரண்டு முறை படித்தேன். ஒன்று அசோகமித்திரன், மற்றொன்று ர.கி.ரங்கராஜன். யோசித்து பார்த்தால் இரண்டிலும் உள்ள நகைச்சுவைதான் காரணம் என்பது புலப்படும்.


முதலில் அசோகமித்திரன்.


இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆர். காலமான தினம், யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்தவேண்டியவர்கள் திண்டாடிப் போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கில் யாரும் முன்கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்கமாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச் சின்னங்கள். எம்.ஜி.ஆர். இறந்த தினம் இந்தத் துக்கச் சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது. தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால் பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச் சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது.


ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது. வண்டி கிடைத்தாலும் தெருவில் திரண்டிருக்கும் ஜனத்திலிருந்து அதைக் கொண்டு செல்ல அனுமதி கிடைக்காது. யாரிடம் எதற்கு அனுமதி?


"என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க."


"எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது."


"அதுக்குள்ளே எடுத்துப் போயிடறோம்."


"எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம்தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு."


அப்பா பிணவறையிலிருந்து எழுந்து நடந்து போனார்.


( நன்றி: Samachar.com )


 [ நாளை ரா.கி.ரங்கராஜன். ]

Saturday, October 8, 2005

சென்ற வாரம் சென்ற இடம்!

கல்யாணத்திற்கு முன் வாராவாரம் பைக் எடுத்துக்கொண்டு ஒரு திவ்விய தேசம் சென்று வந்துக்கொண்டிருந்தேன். வந்த பிறகு அந்த கோயிலை பற்றி ஒரு சிறு குறிப்பை ஒரு நோட்டு புத்தகத்தில் "சென்ற வாரம் சென்ற இடம்" என்ற தலைப்பில் எழுதியும் வைப்பேன்.
அவ்வாறு எழுதியதில் இரண்டை இங்கு தந்துள்ளேன்.திருநீர் மலை !இந்த ஞாயிற்றுகிழமை சினிமாவிற்கு சென்று ஷெரன் ஸ்டோனை(sharon stone) பார்ப்பதற்கு பதில். திருநீர் மலைக்குச் சென்று திருமங்கை ஆழ்வார் வர்ணித்த


"அன்றயர்குலக்கொடியோடு அமாமலர்மங்கையொடுஅன்பளவி அவுணர்
எந்தானும்இரக்கமிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும்பொழில்சூழ்
நன்றயபுனல்நறையூர்திருவாலிகுடந்தை தடம்திகழ்கோவல்நகர்
நின்றான்இருந்தன்கிடந்தான்நடந்தாற்குஇடம் மாமலையாவதுநீர்மலையே."


[%image(20051007-THIRUNEER-MALAI--A.jpg|192|144|ThiruneerMalai)%]

இந்த நான்கு கோலங்களை கொண்ட நீலவண்ணனை பார்ப்பது என்று முடிவு செய்தேன்!.


திருநீர் மலை சென்னை தாம்பரம் ரயில் பாதையில் பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் "ponds" தொழிற்சாலை நறுமணம் கமவழ அமைந்த அமைதியான இடம். இந்த மலையை நீர்சூழ்ந்திருந்ததால் ஆறு மாத காலம் திருமங்கை ஆழ்வார் ஊருக்கு வெளியே காத்திருந்ததாகவும் இதனால் இம்மலைக்கு நீர்மலை என்ற பெயர் உண்டானதாகவும் வரலாறு.


300 அடி உயரத்தில் இருக்கும் இம்மலையை சுற்றி பசுமையான புல்வெளிகள், அதன் மேல் தவழ்ந்துவரும் மிகமெல்லிய காற்று - இனிமை


கோயிலுக்கு செல்லும் சாலைகளில் மாட்டுவண்டிகளில் மாட்டுத்தோல் ஏற்றி செல்வது விந்தை.


 


திருப்பதி


[%image(20051007-venkateshwara-temple-tirupati-india.jpg|226|150|thirupathi)%]

இந்த வாரம் 30ரூ டிக்கேட் வாங்கி 12 மணி நேரம் "க்யூ"வில் நின்று ஒரு செல்வந்தரை சந்திக்க சென்றிருந்தேன்!.


பணக்காரர்கள் லாபத்தில் 10% காணிக்கை செலுத்தவும், மத்தியமர் லட்டு வாங்கவும், ஏழைகள் மொட்டை போடவும், ஆந்திரவா(அ)தமிழ்நாடா என்று அறிந்துக்கொள்ள முடியாத வினோத இடம் - திருப்பதி. இங்கு எல்லாவற்றுக்கும் "க்யூ" வரிசை. கோபுரங்களை பித்தளை (தங்கம் ?) தகடுகளால் உண்மையான வேலைப்பாடுகளை மறைத்திருக்கிறார்கள். திருவள்ளரை,அன்பில் ஆகிய இடங்களில் கோபுரம் இடிந்த நிலையில் அரச மரம் முளைத்திருப்பதை பார்த்திருந்தால் முரண்பாட்டைக் கவனித்திருப்பீர்கள்!.


பெருமாள் சன்னதியிலிருந்து தள்ளப்பட்டு, மலைமேலிருந்து ஜீப்பில் கீழே இறங்கி வரும் பொழுது ,இரவு 1 மணி,மழை,அக்ஸிலேட்டர் உடைந்து போய், காப்பாத்த யாரும் இல்லாமல், நியுட்டிரலில் இறங்கும் பொழுது பொய்கையாழ்வார் பாடிய


"உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவருள்ளத்து-உளன்கண்டாய் வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தினுள்ளானென்று ஓர்"


என்ற பசுரம் நினைவுக்கு வந்தது.


 

Tuesday, October 4, 2005

சொடக்கு


[%image(20051003-stretching.jpg|144|99|stretching)%]

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனை அடிக்கும் முன் கழுத்தை 180 டிகிரி சுழட்டி, பின் இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து மடக்கி 'Warm-up' செய்யும் போது பின்னனியில் DTS எப்பெக்டில் 'படக் படக்' என்று சொடுக்கும் சத்தம் வரும். இந்த சொடுக்கும் சத்தம் சிலருக்கு கை, கால் மடக்கினால் வரும். சிலருக்கு மாடிப்படி ஏறி இறங்கினால்; சலூனில் முடி திருத்துபவர் கழுத்தை திருப்பி காதை இழுத்து மசாஜ் செய்யும் போது; என் பாட்டிக்கு கொட்டாவி விட்டால் வரும். இரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசுவதால் வருகிறது என்று நேற்று காலை டிபன் சாப்பிடும் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இல்லை என்று கூகிளில் தேடிப் படித்ததில் புரிந்து கொண்டேன். சரி சத்தம் எப்படி வருகிறது என்று தெரிந்துக்கொள்ள நம்முடைய எலும்புகள், மூட்டு, கணுக்களின் அமைப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.


[%image(20051003-knuckles.jpg|222|216|Knuckles)%]

படத்தில் ( படம் உபயம் howstuffworks ) மஞ்சள் கலரில் பார்ப்பது தசைநார்/நரம்பு(ligament). நீல கலரில் பார்ப்பது 'சைனோவியுல் திரவம்' ( Synovial - suh-No-vee-ul). கொஞ்சம் தெளிவான அதேசமயம் கெட்டியான திரவம். இயந்திரத்தினுள் உராய்தலைத் தடுத்து மென்மையாக ஓடுவதற்கு பயன்படுத்தப்படும் கிறீஸ் போன்ற ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சொடக்குவதற்கு உங்கள் கை/கால்களை இழுக்கும் போது எலும்பு மூட்டுக்கள் விரிவடைகின்றது. இதனால் எலும்பு சுற்றியிருக்கும் இடத்தின் கொள்ளளவு(volume) கூடி, ஒரு சிறு வெற்றிடம்(vacuum) உண்டாகி, காற்றழுத்தம் குறைகிறது (decrease in pressure).  [%image(20051003-joint.gif|235|165|joint)%]

காற்றழுத்தம் குறைவதால் சைனோவியுல் திரவத்தில் இருக்கும் வாய்வுக்களின்1 கரைத்திறன் கம்மியாகி (becomes less soluble) நீர்க்குமிழிகள் (air bubbles) உருவாகிறது இதற்கு பெயர் Cavitation. இந்த நீர்க்குழுமிகள் வெடிப்பது தான் நாம் கேட்கும் சொடுக்கு சத்தம்!

கொஞ்சம் ஈஸியா விளக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். ஒரு (பெட் பாட்டில்) பெப்ஸி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குலுக்கு குலுக்குங்கள். உள்ளே 'உஸ்' கிளம்பும். 'உஸ்' சத்தம் நிற்கும் வரை காத்திருங்கள். நின்றவுடன் மூடியை மெதுவாக ஒரு இரண்டு சுற்று திறங்கள். திறக்கும் போது பாட்டிலை பாருங்கள் அதில் இருக்கும் வாயு 'உஸ்' என்று மேலே கிளம்பும். பாட்டிலின் மூடியை திறக்கும் போது கொள்ளளவு கூடி, காற்றழுத்தம் குறைந்து உள்ளிருக்கும் வாயு வெளியே வருகிறது. இது தான் Cavitation!. 

 சரி இப்போது ஒரு 'பபுள் கம்' எடுத்து மென்று, நாக்கால் தட்டையாக செய்து ஒரு சின்ன பலூன் போல் செய்து 'பட்' என்று உடையுங்கள்.

மேலே சொன்ன பெப்ஸியையும், 'பபுள் கம்' மையும் சேர்த்து பாருங்கள் சொடக்கு சத்தம்  எப்படி வருகிறது என்று புரியும்


இருபது வருடத்திற்கு முன் விஞ்ஞானிகள் சொடுக்கும் போது x-ray எடுத்து வாயு குமிழ்கள்(gas bubbles) இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். சொடுக்கும் போது 0.1 milli-joule per cubic millimeter சக்தி ( energy) உண்டு பண்ணுகிறது.

சொடுக்கு எடுத்தவுடன், திரும்பவும் எலும்புகள் பழைய நிலைக்கு வருவதற்கு 10-15 நிமிடமும், வாயுக்கள் திரவத்தில் மீண்டும் கரைய (அல்லது உறிஞ்சிக்கொள்ள) 20-30 நிமிடம் எடுத்துக்கொள்கிறது, இதனால் தான் சொடுக்கு வந்த விரல்களில் திரும்ப உடனே சொடுக்கு வருவதில்லை.


சொடுக்குவதால் கை/கால்களுக்கு பிற்காலத்தில் மூட்டு வலி (arthritis - "arthro" - மூட்டு, "-itis" -வீக்கம்) வரும் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. என்ன எலும்பை சுற்றி உள்ள மெல்லிய தசைநார்(soft tissues) உடையும் சாத்தியம் இருக்கிறது.

அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சொடுக்கு பழக்கம் உள்ளவர்களின் கை பிடிமானம்(Grip) மற்றவர்களை காட்டிலும் 75% கம்மியாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. அடுத்த முறை மனைவியிடம் சொடுக்கு இழுத்துவிட சொல்லும் போது 'DTS' எப்பெக்டில் சத்தம் வந்தால் பக்கத்தில் இருக்கும் டாக்டரை பார்ப்பது உத்தமம்.

 (1) பிராண வாயு (oxygen), ஜட வாயு(nitrogen),கரியமில வாயு(carbon dioxide). 

உதவிய நூல்கள்/தளங்கள்:
கூகிள் - சொடுக்கு பற்றி நிறைய தகவல்கள்.
10ஆம் வகுப்பு அறிவியல் புத்தகம்.