Skip to main content

கல்யாண ஊர்வலம்

கல்யாண ஊர்வலம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்


[%image(20050921-svr_image1.jpg|375|238|கல்யாண ஊர்வலம்-1)%]

ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் கல்யாண ஊர்வலம் என்று ஒரு கண்கொள்ளாக் காட்சி அடிக் கடி காணக் கிடைத்தது, ஆடி மாதம், மார்கழி மாதம் போன்ற சில காலங்களைத் தவிர. கல்யா ணத்துக்கு முன் தினம் ‘மாப் பிள்ளை அழைப்பை’ (ஜான வாசம் என்றும் சொல்வதுண்டு) ஒட்டி மாப்பிள்ளையைத் திறந்த காரில்1  உட்கார வைத்து ஊர்வலமாக (வழக்குச் சொல்லில் இது சில சம யம் ‘ஊர்கோல’மாகவும் திரிந்தது) அழைத்துச் செல்வார்கள்.


நன்றாக இருட்டின பின்னர் தான் ஊர்வலம் நடைபெறும். பெண்கள் கலர்கலரான பட்டுப் புடவைகள் சரசரக்க, அவற்றின் ஜரிகையானது கியாஸ் விளக்கின் ஒளியில் பளபளக்க, மல்லிகைப் பூவின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு காருக்குப் பின் நடப்பார் கள். கார் இரண்டாவது கியரில் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண் டிருக்கும். முன்னாலும் பின்னாலும் கியாஸ் விளக்குகளைச் சுமக்க முடி யாமல் சுமந்துகொண்டு கூலிக்காரர் கள் நடப்பார்கள். அது ஒரு பெரிய சைஸ் பெட்ரோமாக்ஸ் விளக்கே. மிகவும் பிரகாசமான ஒளியையும் மண்ணெண்ணை மணத்தையும் ஒருங்கே பரப்பிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த மண்ணெண்ணை வாசம் மல்லிகை மணத்தோடு இழைந்து சுகந்தமான ஒரு நறு மணமாகவே தோன்றும். அந்த வாசனை இல்லாமல் கல்யாண ஊர்வலங்கள் பரிமளிக்க முடியாது.


அந்தக் காலத்தில் கார் என்பது அபூர்வமான வஸ்து. பல குழந்தை கள் காரிலே ஏறியிருந்திருக்கக்கூட மாட்டார்கள். அதனால் ஊர்வலத்துக்குக் கார் வந்து நின்ற உடனேயே, கல்யாணத்துக்கு வந்த குழந்தைகள், முக்கியமாக மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள்  காணாதது கண்ட மாதிரி ஓடி வந்து அதை ஆக்கிரமித் துக்கொள்வார்கள். அப்புறம் மாப் பிள்ளை வரும்பொழுது அவருக்கு பின் ஸீட்டில் எப்படியோ இடம் பண்ணிக் கொடுப்பார்கள். ஊர் வலம் தொடங்கும்போது அவருக்கு இரண்டு பக்கமும் உறவின வாண்டு கள் பெருமை தலைகொள்ளாமல் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும். முன் ஸீட்டில் டிரைவரின் நிலை நெருக்கடி நிலை தான். பரம்பரை பாத்தியதை என் பது போல இது விஷயத்தில் குழந்தைகளுக்கு ஒரு உரிமை இருந்தது. தீபாவளிக்குப் பட்டாஸ் மாதிரி இந்தக் குழந்தைப் பட்டா ளம் இல்லாது மாப்பிள்ளை ஊர் வலம் கிடையாது; சோபிக்கவும் சோபிக்காது.


[%image(20050921-svr_image2.jpg|375|254|கல்யாண ஊர்வலம்-2)%]

சாதாரணமாக மாப்பிள்ளை வெளியூர்க்காரராக இருப்பார் என் பதால் அவர் எப்படி இருக்கிறார் என்ற ஆவல் ஊர்க்காரர்கள் எல் லோருக்கும் உண்டு. ஆகவே ஊர் வலம் போகும் வீதிகளில் எல்லோர் வீட்டு வாசற்படிகளும் நிறைந்து காணப்படும்.
முதல் நாள் ஊர்வலத்தில் மாப்பிள்ளை மட்டும்தான் என்றால் அடுத்த நாள் திருமணம் ஆன பிறகு ராத்திரி ஊர்வலம் இன்னும் வெகு ஜோராக இருக்கும். இதில் பெண் மாப்பிள்ளை இருவரும் ஜோடியாக அமர்ந்திருப்பார்கள். அநேகமாக அதே காராகத்தான் இருக்கும். புஷ்ப அலங்காரங்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கக்கூடும். ஊர் வலத்துடன் போகும் கூட்டம், வேடிக்கை பார்த்து நிற்கும் கும்பல் இரண்டுமே இன்று கூடுதலாக இருக்கும். “நல்ல ஜோடிப் பொருத் தம்” என்று மகிழ்பவர்களையும் மனதார வாழ்த்துபவர்களையும் தவிர பார்த்து வயிறு எரிபவர்களும் ஊர்க்காரர் கூட்டத்தில் இருப்பர். கல்யாண விருந்தினாலோ அலைச்ச லினாலோ அடுத்த நாள் மணமக்க ளில் யாருக்காவது உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டால் “பொல்லாதவர் களின் கண்கள்தாம் காரணம்” என்று சொல்லப்படுவது வழக்கமா யிருந்தது.


நாற்பதுகளுக்கும் முந்தின காலத்தில் ஊர்வலத்திற்காக சாரட்டு வண்டிகளும் நிறைய இருந் திருக்க வேண்டும். சில ஊர்களில் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந் தன. 1950ல் திண்டுக்கல்லில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். பெண்ணின் தந்தையால் “விசாரித் துக் கொண்டு வா” என்று அனுப் பப்பட்டவர் திரும்பி வந்து, “கார் 30 ரூபாய், சாரட்டு (அலங்காரக் குதிரை வண்டி) 12 ரூபாயாம்” என்று ரிப்போர்ட் கொடுத்தார். காதைத் தீட்டிக்கொண்டு ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நான் ‘அழகான சாரட்டை விட்டுவிட்டுக் கூடப் பணமும் கொடுத்து ஓட் டைக் கார் யாராவது வைப்பார் களா’ என்று எண்ணினேன். எங்கள் ஊரில் சாரட்டு கிடையாது. நான் சாரட்டு ஊர்வலத்தைப் பார்த்த தில்லை. ஆகையால் என் சொந்த நலனும் இதில் கலந்திருந்தது என்னவோ உண்மை. பெண்ணைப் பெற்ற தகப்பனார் பிசினஸ் கொஞ்சம் நொடித்துப் போய் பண முடையில் இருந்தார் என்றும் நான் கேள்விப்பட்டிருந்ததனால் பதி னெட்டு ரூபாயை மிச்சம் பண்ணி ராஜாராணி காலம் போல் சாரட்டை ஏற்படுத்துவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன். இரண்டு நிமிஷம் யோசனை செய்த வர் “சரி, காரே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார். எனக்குத் தலை யில் இடி விழுந்தாற் போலிருந்தது. என்ன செய்வது? அன்று நான் இழந்த சாரட்டு ஊர்வலம் காணும் பாக்கியம் அப்புறம் என்றுமே வாய்க் கவில்லை. மத்திய அறுபதுகளில் நடந்த என் கல்யாணத்துக்கு சாரட்டு வர ‘சான்ஸ்’ உண்டா என்று ஜாடைமாடையாக, ஆனால் ரொம்ப நம்பிக்கையில்லாமல்தான் விசாரித்துப் பார்த்தேன். சாரட்டு என்பது சரித்திரம் ஆகிவிட்டது என்று தெரிய வந்தது.


ஊர்வலத்தைப் பற்றிய கதையை ‘மாப்பிள்ளை டிரஸ்’ பற்றி இரண் டொரு வார்த்தைகள் சொல்லாமல் முடிக்க முடியாது. மாப்பிள்ளை அழைப்பு என்றால் கோட்டு, ஸ¨ட்டு, டை (எல்லாம் மாப்பிள் ளைக்கு மாமனாரின் உபயம்) இன்றி யமையாத அயிட்டங்கள். அவற்றை அணிந்துதான் மாப்பிள்ளை முறுக்குடன் பவனி வருவார். சில மாப்பிள்ளைகளுக்கு ஸ¨ட்டும் ‘டை’யும் அணிவது முதல் தடவை யாகவே இருக்கும்.2 பலருக்கும் தெரிந்தவர் யாராவது டை கட்டி விடுவார்கள். அந்தக் காலத்தில் டெரிலீன் டெரிவுல் போன்ற துணி கள் கிடையாது. கசங்காமல் இருக்க வேண்டும் என்றால் உல்லனே உத்த மம். ஸ¨ட் என்பது ‘ஆயுள் பரியந் தம்’ (ஆயுள் முழுவதும்) வைத்துக் கொள்ள வேண்டியதாகவும் கருதப் பட்டது. அதனால் பெரும்பாலும் ‘மாப்பிள்ளை டிரஸ்’ கம்பளி ஆடையால்தான் தைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சீதோஷ்ணத்துக்கு அவ்வளவு ஏற்புடையதில்லைதான். அதுவும் கல்யாணம் சித்திரை மாதத்தில் இருந்தால், மாப்பிள்ளை யானவர் குழந்தைகளின் கும்பலின் நடுவே வியர்க்க வியர்க்க உட்கார்ந் திருப்பது காண்போர் மனத்தைக் கரைக்கக்கூடியதொரு காட்சி.


_________________________________________________________________________________
(1. அதாவது டூரர் டாப் என்ற, கேன்வாஸ் துணியால் ஆன கூரையைக் கொண்ட வண்டி. பழைய மாடல்களில் சகஜமாகக் காணப்பட்ட இது பிற்காலத்தில் ஏனோ அருகிப்போயிற்று. நாற்பதுகளில் இருந்தே வெளிவருவது அபூர்வமாயிற்று. வெயிலையும் வெப்பத்தையும் இன்றைய கார்களை விட அது நன்றாகவே சமாளித்தது என்று தோன்றுகிறது.


2. இதற்கும் முந்தின காலத்தில் கோட்டு அணிவது பரவலாக இருந்திருக்கிறது. ஆனால் ஸ¨ட் அபூர்வம். நாற்பதுகளில் இருந்து கோட்டும் மிகக் குறைந்துவிட்டது.)


நன்றி: உயிர்மை


எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள்

Comments

Post a Comment